நிமோனியா

டாக்டர் ஜி. ஜான்சன்
ww5r032t-8col-jpg

நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதுதான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம்.

பேக்டீரியா வகையில் முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ( Streptococcus Pneumoniae ) , நீமோகாக்கஸ் ( Pneumococcus ) , ஹீமோபிளுஸ் இன்ஃப்ளுயென்சே ( Haemophilus Influenzae ) என்பவை.

வைரஸ் வகையில் ரைனோவைரஸ் ( Rhinovirus ) , ஹெர்ப்பீஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் ( Herpes Simplex Virus ) போன்றவை சில உதாரணங்கள்.

காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி ( Pneumocystis Carinii ) ஆபத்தானது. உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை இது தாக்கவல்லது .

நமது நுரையீரல் வலதுபக்கத்தில் மூன்று பகுதிகளாகவும் , இடது பக்கம் இரண்டு பகுதிகளாகவும் ( lobes ) அமைந்துள்ளன. நிமோனியா இவற்றில் ஒரு பகுதியை மட்டும் அல்லது ஒரு நுரையீரலின் எல்லா பகுதியையும், அல்லது இரண்டு பக்கத்திலும் கூட தாக்கலாம். இவ்வாறு நுரையீரலின் காற்றுப் பைகள் பாதிக்கப் பட்டால், அவை செயல் இழந்துபோய் மூச்சுத் திணறல் உண்டாகிறது.

வைரஸ் கிருமியால் உண்டாகும் நிமோனியா உண்டாக சில நாட்கள் ஆகலாம். ஆனால் பெக்ட்டீரியாவால் உண்டாவது ஓரிரு நாட்களில் துரிதமாக ஏற்படலாம்.

நிமோனியா யாரைவேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால் கீழ்க்கண்டவர்களுக்கு இது எளிதில் உண்டாகலாம்.

* குழந்தைகள்.

* சளி, காய்ச்சல் உண்டானவர்கள்

* முன்பே நுரையீரலில் குறைபாடு உள்ளவர்கள்

* உடல் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

*மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்

* அதிகம் புகைப்பவர்கள்

* அதிகம் குடிப்பவர்கள்

* பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

சுவாசிக்கும் போது கிருமிகள் நுரையீரலுக்குள் நேரடியாகப் புகுவதின் மூலமும், வாய், தொண்டை , மூக்கிலிருந்து கிருமிகள் நுழைவதின் மூலமும் நிமோனியா உண்டாகலாம்.

நோய் அறிகுறிகள்

* அதிக வெப்பமுள்ள காய்ச்சல்

* குளிர், நடுக்கம்

*மூச்சுத் திணறல்

*விரைவாக சுவாசித்தல்

* கடுமையான இருமல்

* சளியில் நிறமாற்றம் அல்லது இரத்தம்

* சுளீர் எனும் நெஞ்சு வலி

* குழந்தைகள் சுறுசுறுப்பு குன்றிய நிலையில் உணவு உண்ணாமல் சுணங்கி காணப்படுவர்

* குழந்தைகள் மூச்சு விடும் போது மேல்லியதாகவோ அல்லது இரைச்சலுடனோ ஒருவிதே ஓசை ( grunting ) எழுதல்.

நோயை நிர்ணயம் செய்தல் ( Diagnosis )

நிமோனியா என்ற சந்தேகம் எழுந்தால் உடன் மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதுபோன்றே சாதாரண சளிக் காய்ச்சல் 3 நாட்களைத் தாண்டினாலும் உடன் மருத்துவமனை செல்லவேண்டும். மருத்துவர் பரிசோதனை செய்யும் பொது ஸ்டேத்தஸ்கோப் மூலம் சுவாச ஓசையைக் கேட்டாலே நிமோனியாவா என்பதைக் கூறிவிடலாம். ஆனால் கட்டாயமாக நெஞ்சை எக்ஸ் -ரே படம் எடுத்தாகவேண்டும். அதோடு இரத்தப் பரிசோதனையும், சளி பரிசோதனையும் தேவைப்படும்.

சிகிச்சை முறை

நிமோனியாவுக்கு மருத்துவமனையில் தங்கிதான் சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. சிகிச்சை வருமாறு:

* காய்ச்சல் குறைக்க மருந்துகள்

* இருமலுக்கான மருந்துகள்

* பிராண வாயு தரப்படும் ( தேவையெனில் )

* இரத்தக் குழாய் வழியாக குளுக்கோஸ் – சேலைன் ஏற்றப்படும் ( glucose -saline drip )

* என்டிபையோட்டிக் மருந்து கூடு மாத்திரையாகவோ ( antibiotic capsules ) அல்லது ஊசிமூலமாகவோ தரப்படும்.

* படுக்கையில் ஓய்வு

நிமோனியாவில் வேறொரு வகையும் உள்ளது. இதை புரையேறி நிமோனியா ( aspiration pneumonia ) என்பர்.

உணவு, நீர் .வாந்தி அல்லது இதர பொருட்கள் தவறாக சுவாசக் குழாயினுள் புகுந்து நுரையீரலில் வீக்கத்தையும், அடைப்பையும் ,கிருமித் தொற்றையும் உண்டுபண்ணுவதால் இந்த வகையான நிமோனியா உண்டாகிறது.

இதற்கு உடனடி சிகிச்சை தேவை.

குறிப்பாக கைக் குழந்தைகளுக்கு பாலூட்டியவுடன் படுக்க வைத்தால் பால் புரையேறி நுரையீரலுக்குள் புக நேரலாம். இது நிமோனியாவை உண்டுபண்ணி குழந்தையின் உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணலாம். இதன் முக்கிய அறிகுறிகள் மூச்சுத் திணறலும் , குழந்தையின் தோல் நீல நிறமாகுதலும் .

இதனால்தான் கைக்குழந்தைக்குப் பாலூட்டியபின் அதன் முதுகைத் தட்டிக் கொடுத்து சிறிது நேரம் நடந்தபின் படுக்க வைக்க வேண்டும். படுத்திருக்கும்போது குழந்தை வாந்தி எடுத்தால் அதன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இல்லையேல் வாந்தி புரையேறி நுரையீரலில் புகுந்து விடும்.

இருமல், சளி, காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அது என்ன காய்ச்சல் என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வது நல்லது. அது இத்தகைய ஆபத்தான நிமோனியா காய்ச்சலாகவும் இருக்கலாம்.

( முடிந்தது )

Series Navigationகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வைமழை