“நியாயம்”

 தருணாதித்தன்

 

மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது.

“அன்புள்ள அய்யா,

தங்களுக்கு ” ராமசந்த்ரா பவன்” தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே உடுப்பி க்ருஷ்ணன் பூஜையும், சண்பகப்பூ மணமும், புல்லாங்குழல் இசையும், தீவிர பக்திமான் உடுப்பி ராம ராவும் நினைவுக்கு வந்தால், நீங்களும் பெங்களூர் நகரத்தின் லட்சக் கணக்கான ராமசந்த்ரா ரசிகர்களுள் ஒருவர் என்பது உறுதியாகிறது. இவை எல்லாமே திட்டமிட்டுச் உருவாக்கப்படும் மாய பிம்பம். உத்தமராக காட்சிதரும் உடுப்பி ராமராவ் வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதில் நிபுணர். விற்பனை வரியில் மட்டும் அரசாங்கத்துக்கு ஒவ்வொரு மாதமும் சில கோடிகள் நஷ்டம். விசாரித்துப் பாருங்கள் ”

இப்படிக்குத் தங்கள் உண்மையான,

அரசாங்க நண்பன்

மூர்த்தி வருமான வரி அலுவலகத்தில் புலன் விசாரணைப் பிரிவில் உயர் அதிகாரி. இந்த மாதிரி அடிக்கடி மொட்டைக் கடிதங்கள், அனேகமாக தொழில் எதிரிகள் இல்லை குடும்ப விரோதிகள், சில சமயம் நெருங்கிய உறவினரே கூட அனுப்புவது உண்டு. கடிதம் வந்திருந்த உறையைத் திருப்பிப் பார்த்தான். பஸவன்குடி தபால் அலுவலகத்தின் முத்திரை இருந்தது. கடிதம் பெரிய எழுத்துக்களில் நிதானமாக, சற்றே குழந்தைத்தனமாக இருந்தது. வேறு எந்தக் குறிப்பும் தெரியவில்லை. யார் எழுதியது என்பதை விட, விஷயம் உண்மையா என்று கண்டு பிடிக்க வேண்டும்.

ராமராவ் பார்த்தாலே மரியாதை தோன்றும். சற்று குள்ளமான உருவம், வழுக்கைத் தலை, நெற்றியில் கறுப்புத் தீற்றல் , எப்போதும் புன்னகை,பணிவு, வெள்ளைக் கதரில் கம்பீரமாக சாப்பிடுபவர்களை கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் அவர் சகோதரர் க்ருஷ்ண ராவும் அதே அச்சு, ராம லக்ஷ்மணர்கள் போல என்று சொல்லும் படியாக எப்போதும் உடனிருப்பார்கள், எத்தனை நாட்கள் காலையில் பார்த்திருப்பான், ராம ராவ் உடுப்பி க்ருஷ்ணனுக்கு தானே பூஜை செய்து, பாயசம் நைவேத்தியம் செய்து, தன் கையாலேயே வந்திருக்கும் எல்லோருக்கும் கொடுப்பார், அவரா ? ராம நவமி சமயத்தில் தினமும் மாலையில் கச்சேரிப் பந்தலில் முதல் வரிசையில் பார்க்கலாம். க்ருஷ்ணன் கோவில் உற்சவத்தில் முதல் நாள் பூஜை அவர் தான். பெங்களூரில் அய்ம்பது வருடங்களுக்கு மேலாக அதே தரத்தில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரே ஆள் ராம ராவ்தான். ராமசந்த்ரா பெங்களூரின் டூரிஸ்ட் தலங்களில் ஒன்றாகி இருந்தது. இப்படியாக கடிதம் வந்த பிறகு, விசாரிக்காமல் இருக்க முடியாது.

எத்தனயோ முறை ராமசந்த்ராவுக்குப் போயிருந்தாலும், இந்த முறை காரணம் வேறு. மூர்த்திக்கு சிறிது படபடப்பாக இருந்தது, ஏதோ தான் குற்றம் செய்யப் போவது போல. பழைய கால கட்டிடம். மேலே மாடி சந்தனப் பேலா கைப்பிடிச் சுவர். நடுவே 1957 என்ற சரித்திரக் குறிப்பு. வாசலிலேயெ நீள கம்பி ஜன்னலுடன் முன்னறை. மழ மழ என்று ரெட் ஆக்ஸைடுத் தரை. வழக்கம்போல கூட்டம். பெஞ்சுகளில் வயசானவர்களும், வெளியில் நின்றவர்களுமாக முறுகல் தோசையின் நெய் மணத்தை அனுபவித்தபடி காத்திருந்தார்கள்.

சிறுவர்களுக்காக வாசலில் பலூன், ஊதல் விற்பவன். ஒரே சத்தமாக அங்கும் இங்கும் ஓடுபவர்களுடன் கல்யாண வீடு போல களையாக இருந்தது. குறைந்தது இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். வந்தவுடன் பெயர் கொடுக்க வேண்டும். பழைய காலங்களில் பரிட்சைக்கு எடுத்துச் செல்லும் பழுப்பு நிற கார்ட் போர்டு அட்டையும் ஃபவுன்டன் பேனாவுமாக வேட்டியை மடித்துக் கட்டிய ஒருவர் நின்றிருப்பார். அதில் கிளிப்புக்கு சிக்கிய நீண்ட கோடு போட்ட தாளில் வரிசையாக அழகாக பெயர்கள் எழுதப்படும். அவ்வப்போது அவர் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு பெயரை உரக்க அழைப்பார். இரண்டாம் முறையும் பதில் இல்லா விட்டால் , அவ்வளவுதான் பெயர் பட்டியலிலிருந்து அடிக்கப்படும். பக்கத்திலேயே பெரிய பிள்ளையார் கோயில். பொடி நடையாக காத்திருக்கும் நேரத்தில் போய் வரலாம். மூர்த்தி யோசித்து பெயரை மாற்றிக் கொடுத்தான். சுமாராக எவ்வளவு வியாபாரம் என்று கண்டு பிடிக்க வேண்டும். வேண்டுமானால் கடைசியில் ஸ்குவாடுக்கு ஃபோன் செய்தால் அரை மணியில் வந்து விடுவார்கள்.

உள்ளே பெரிய ஹால், கடைசியாக சமையல் அறை. பெயர் அழைக்கப்பட்டவர்கள் பெருமிதத்துடன் நுழைந்தார்கள். பெரிதாக மெனு கார்ட் எல்லாம் கிடையாது. பாதாம் ஹல்வா, தோசை – மசால் இல்லை ப்ளெயின், வெள்ளி தம்ளரில் நல்ல ஃபில்டர் காபி இவை மட்டும்தான் கிடைக்கும். ராமசந்த்ராவின் தேங்காய் சட்னி உலகப் பிரசித்தம், எல்லோரும் அதிகம் கேட்பார்கள் என்பதால், “எக்ஸ்ட்ரா சட்னி கிடையாது” என்று அங்கங்கே போர்டு இருக்கும். வேண்டுமானால், மேலும் பத்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். சட்னி அவ்வளவு நன்றாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் பேசப்பட்டன. ஒன்று அருகில் இருக்கும் பெரிய பிள்ளையார் கோவிலிலிருந்து உடைக்கப்படும் தேங்காய்கள் நேராக இங்கேதான் வந்து சேரும். இரண்டு ராமசந்த்ராவில் சில ஹோட்டல்களில் செய்வது போல பொட்டுக் கடலை சரி பாதிக்கு சேர்த்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த சட்னி இல்லை. ஒரு மணிக்கு ஒரு முறை புதிதாக அரைப்பார்கள்.

மூர்த்தியின் பெயர் அழைக்கப் பட்டது. சற்று தாமதித்து நுழைந்து சமையல் அறை வாசலுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். அங்கிருந்து பார்த்தாலே சர்வர்கள் வந்து போவதும், வாசலிலிருந்து உள்ளே வருபவர்கள் எல்லாம் தெரியும். உள்ளே இருந்து நீண்ட தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்த ஓசை அவ்வப்போது வந்தது. ராமசந்த்ராவில் எல்லாமே சீராக நடக்கும். ஒவ்வொரு வரிசை மேஜைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் இருந்தாலும், கல்யாணப் பந்தி மாதிரி ஒரே சமயத்தில் உள்ளே விடுவார்கள், எல்லோரும் சாப்பிட்டு மேஜைகளையும் சுத்தம் செய்த பிறகுதான் அடுத்த பந்தி. அதுவும் சரியாக அரை மணியில் ஒரு பந்தி முடியும். சர்வர்கள் சமையல் பகுதிக்கு கோணல் மாணலாக போவதும் வருவதுமாக இருக்க மாட்டார்கள். அங்கிருந்து பார்த்தாலே ஒரு நீள மேஜையில் வரிசையாக தட்டுகள், சட்னியுடன். தோசைகள் தயாரானவுடன் ஒருவர் பெரிய தாம்பளத்தில் எடுத்து வந்து வரிசையாக தட்டுகளில் வைப்பார்.
மூர்த்தி எல்லோரும் என்ன சாப்பிடுகிறார்கள் என்று சுற்றிலும் பார்த்தான்.அனேகமாக எல்லோரும் பாதாம் ஹல்வா ஆரம்பித்திருந்தார்கள். மூர்த்தியும் அழகாக ஏதோ நகை போல மடித்து வைத்திருந்த பேப்பரைப் பிரித்து ஹல்வாவை ஸ்பூனால் எடுத்து வாயில் வைத்துச் சப்பினான். வேறு சில ஹோட்டல்களில் செய்வது போல ராமசந்த்ராவில் பால் கோவா கலக்க மாட்டார்கள். முழுக்க முழுக்க பாதாம் பருப்புதான் என்று கேள்வி.

மூர்த்தி கணக்கை ஆரம்பித்தான். அறையில் சுமார் அய்ம்பது பேர், ராமசந்த்ரா காலை ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை, மாலை நாலு முதல் பத்து வரை. அப்படியானால் அரை மணிக்கு ஒரு பந்தியாக ஒரு நாளுக்கு 24 பந்திகள், எல்லோரும் ஹல்வா சாப்பிடுவதில்லை. மூர்த்தி காபிக்குப் பிறகு, வெள்ளித்தட்டில் வைக்கப் பட்ட பாக்குத்தூள் சிறிது எடுத்துக் கொண்டு, வாசலுக்கு வந்தான். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமாராக ஒன்றரை லட்சம் வருமானம். வருவதற்கு முன் ராமசந்த்ரா பவன் ஃபைலை வரவழைத்துப் பார்த்திருந்தான். அவர்கள் சராசரியாக நாளுக்கு ஒரு லட்சம் தான் வருமானமாக காண்பித்திருந்தார்கள். சில கோடிகள் இல்லா விட்டாலும், கடிதம் உண்மைதான் என்று தோன்றியது.

நேரே ராம ராவை கேட்டு விடுவது என்று முடிவு செய்தான். வழக்கமான இடத்தில் ராம ராவ் அமர்ந்திருந்தார். அதே பழைய புன்னகை, அதே கவனிப்பு. பக்கத்தில் அவர் தம்பி க்ருஷ்ண ராவைக் காணவில்லை.

“நமஸ்காரம், அருமையான ஹல்வா, தோசை. எத்தனை முறை வந்தாலும், அலுக்காத ருசி, அனுபவம்” என்று ஆரம்பித்தான்.

” நன்றி, உங்களைப் போல விசுவாசமான ரசிகர்களால்தான் ஏதோ இத்தனை வருஷங்களாக நடந்து கொண்டிருக்கிறது, எல்லாம் க்ருஷ்ணன் க்ருபை”

ராமராவ் கை குவித்து புன்னகைத்து ” வாருங்கள், சந்தோஷம்” என்றார்.

மூர்த்தி தொண்டையை செருமிக் கொண்டான், தன்னுடைய விஸிடிங் கார்டை எடுத்துக் கொடுத்தான்.

“உங்களிடம் தனியாகச் சற்று பேச வேண்டுமே”

ராமராவ் சட்டைப் பையிலிருந்து கண்ணாடியை எடுத்து பொருத்திக் கொண்டு பார்த்தார். முகம் சற்று வாடியது, ஒரு பெரு மூச்சுடன் எழுந்தார்.

” மாடிக்குப் போகலாமா ? ”

பழைய காலத்து வழவழத்த கைப்பிடியுடன் கூடிய அகலமான படிகளில் ஏறி மேலே பால்கனிக்கு வந்து சேர்ந்தனர். இளம் காற்று தழுவிச் சென்றது. மல்லிகை மணம். நிறைய பூக்களுடன்ஒரு ஜாதி மல்லிகைக் கொடி, வயதின் சுருக்கங்கள் தெரியும் தண்டுகளுடன் கீழிருந்து மாடி வரை படர்ந்திருந்தது.

“சொல்லுங்கள்” என்றார், தூரத்து நட்சத்திரங்களை பார்த்தபடி. மூர்த்தி தயக்கத்துடன் ஆரம்பித்தான்.

“நீங்கள் வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதாகத் தெரிகிறது. சுமாராக ஒரு நாளுக்கு ஒன்றரை வரும் என்று நினைக்கிறேன், நீங்கள் காண்பிப்பது ஒன்றுதான்”

ராமராவ் முடிவுக்கு வந்தவர் போல இருந்தார் ” உங்கள் கணக்கு ஏறக்குறைய சரிதான், ஒன்றரை வரும் ”

வழக்கமாக முதலில் மறுப்பார்கள், கணக்குப் புத்தகத்தை எடுத்துக் காண்பிப்பார்கள், அடியாட்களை அழைப்பார்கள், யாராவது அரசியல் கட்சித் தலைவர் பெயரை எடுத்து, அவருக்கு நெருக்கம் என்பார்கள். இந்த மாதிரி கேட்ட உடனே யாருமே தானாக ஒத்துக் கொண்டது இல்லை.

மூர்த்தி அடுத்தது என்ன கேட்கலாம் என்று தடுமாறினான். ராமராவ் தொடர்ந்தார். “ஏன் இப்படி செய்யறேன்னு உங்களுக்குத் தோணும். இதோ இப்படி வந்து பாருங்க”

மாடியிலேயே பின்பக்கத்துக்கு அழைத்துச் சென்றார், கீழே காண்பித்தார். அங்கே பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது. வரிசையாக வேன்கள், நிறைய ஆட்கள் பெரிய பாத்திரங்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

“இத்தனையும் எங்கே போகிறது தெரியுமா? கேடரிங் இல்லை, அநாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு. அந்த இல்லத்தின் பெயரைச் சொன்னார்- நீங்கள் கூட கேட்டிருப்பீர்களே ” மூர்த்தி கேள்விப் பட்டிருக்கிறான், சமீபத்தில் கூட குழந்தைகள் படிப்புக்கு உதவி கேட்டு பத்திரிகைகளில் வந்திருந்த்து.

“ தினமும் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல், மூன்று வேளையும் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் அங்கே போயிருந்த போது பார்த்தேன். எல்லாம் புழுத்த அரிசி, அழுகிய காய்கறிகள் அதைக் குழந்தைகள் எப்படி சாப்பிட முடியும் ? ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. சரி நம்மால் முடிந்தது என்று நானே அனுப்புகிறேன், இருபத்தேழு வருஷமாக. எல்லாம் க்ருஷ்ணன் க்ருபை. சரி பாதி நான் என்னுடைய பணத்தைப் போடுகிறேன். இதெல்லாம் அரசாங்கம் அல்லவா சரியாகச் செய்ய வேண்டும் ? அதானால் மீதிப் பணத்துக்கு வரியைக் கட்டாமல், வருமானத்தைக் குறைத்துக் காண்பிக்கிறேன். இதற்கென்றே தனிக் கணக்கு வைத்திருக்கிறேன். வேண்டுமானால் எல்லாம் காண்பிக்கிறேன் நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள். ” ராமராவ் புன்னகையுடன் நேராகப் பார்த்தார்.

மூர்த்திக்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. யோசிக்க வேண்டும். ஏதாவது பேச வேண்டுமே என்று

“எங்கே உங்கள் தம்பி கிருஷ்ண ராவைக் காணவில்லை?” என்றான்.

” சத்யவந்தருக்கு இது காலம் இல்லை அப்படின்னு தாசரே சொல்லி இருக்கார். யார் யாரையோ நம்பி எத்தனையோ கொடுத்திருக்கேன், எத்தனையோ செஞ்சிருக்கேன். இருந்தாலும் உடன் பிறந்தவனே துரோகம் செய்தா, மனசுல ஆறல, என்ன செய்வது கலி காலம், அதோ பாருங்கள் “- எதிர்ப்புறம் சற்று தூரத்தில் காண்பித்தார்.

அப்போதுதான் மூர்த்தி கவனித்தான். அங்கே உடுப்பி ந்யூ ராமா பவன் என்ற பெரிய நியான் மின்னல். நிறைய அலங்கார விளக்குகள், கண்ணாடி முகப்பு, கார்களை வழிப்படுத்திக் கொண்டிருந்த வெள்ளை உடை சேவகர்கள் . நிறையக் கார்கள்.

“அய்ம்பது வருஷமா ஒன்றாக இருந்தோம்.அவனுக்கு என்னமோ இன்னும் வேணும்னு ஆசை. அனாதை இல்லத்துக்கு சாப்பாடு அனுப்பறதை நிறுத்தலாம்னான். நான் முடியாதுன்னுட்டேன். தனியாப் போறேன்னான். போடான்னு பிரிச்சுக் கொடுத்துட்டேன். 101 தோசை வகையாம். காலிஃளவர் தோசை, மஷ்ரூம் தோசைன்னு ஜனங்களும் ஒரே கூட்டம். இங்கிருந்து முக்கிய சமையல் மாஸ்டர், மானேஜர்கள் எல்லோரையும் கூடவே இழுத்துட்டுப் போயிட்டான். நான் இங்கே கொடுப்பதைப் போல இரட்டிப்புச் சம்பளமாம். எல்லாமே இங்கிருந்து அப்படியே காப்பிதான்”. நிறுத்தி விட்டு கீழே பார்த்தார். நிரம்பிய வேன்கள் வரிசையாக வெளியே செல்ல ஆரம்பித்தன.

” ஒரே ஒரு விஷயத்தைத் தவிர” மூர்த்தி கேள்விக்குறியாக அவரைப் பார்த்தான்.

“அந்தக் கதை எல்லாம் எதுக்கு, ஏதோ என்னால முடிந்த வரை இதே போல குழந்தைகளுக்கு சாப்பாடு போடணும்னு ஆசை, எனக்கு என்னமோ இது நியாயம் என்று தோன்றுகிறது, பிறகு உங்கள் இஷ்டம். உங்கள் முடிவு என்னவாக இருந்தாலும், இதே மாதிரி அடிக்கடி வந்து சாப்பிடணும், நமஸ்காரம்” என்று கீழே வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

மூர்த்தி வாசலில் சற்று நின்றான். ஸ்குவாடுக்கு ஃபோன் செய்தான், அரை மணியில் வரச் சொன்னான். அருகே வந்தவுடன் எந்த இடம் என்று சொல்லலாம். முன்பாகவே சொன்னால் தகவல் போய்விட சாத்தியம் உண்டு.

மூர்த்தி உடுப்பி ந்யூ ராமா பவனுக்கு நடந்தான்.

Series Navigationசி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமைஒத்திகைகள்