நிர்மால்ய‌ம்

அந்த
நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள்
வீட்டு வாசல் த‌ரையில்
சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு
ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய்
ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌.
எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து
நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின்
க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌.
வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம்
த‌ன் கிளையை
கார்ப்ப‌ரேஷ‌னுக்கு அறிவிக்காம‌ல்
விதி மீறி வெளியே நீட்டியிருந்த‌து.
அது விரித்த‌ பாய்
அங்கு “வாச‌ங்க‌ளின்”பிர‌வாக‌ம்.
அந்த‌ ப‌வ‌ள‌ப் பூ ம‌ழை பெய்த‌
அந்த‌ வாச‌லுக்கு
இணையாய்
எத்த‌னை வைகுண்டங்கள்
வாச‌ம் செய்தாலும்
பெருமாளே வேண்டாம் என்று
இங்கே வ‌ந்து ப‌ள்ளி கொண்டுவிட்டார்.
அவ‌ருக்கும் பிரம‌னை தாங்கிய‌
தொப்பூள் கொடியின்
பிர‌ச‌வ‌ நாற்ற‌ம் மூக்கைத்துளைக்கிற‌து.
ப‌வ‌ள‌ப்பூக்க‌ளின் அமுத‌ வாச‌மே
அவ‌ருக்கு இப்போது பிர‌ம்ம‌ சுவாச‌ம்.
வீட்டுக்குள்ளிருந்து
த‌டிம‌னாய் ஒரு குர‌ல்.
“முனிய‌ம்மா இன்னுமா நீ
வாச‌ல் பெருக்க‌லே?”
எஜ‌மானிய‌ம்மாவுக்கு
ல‌ட்சுமி உள்ளே வ‌ர‌வேண்டுமாம்.
வேலைக்காரி
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் நீர் தெளித்து
துடைப்ப‌த்தால்
ப‌வ‌ள‌ம‌ல்லிகைக்குப்பையை
பெருக்கித்த‌ள்ளினாள்.
முக‌த்தில் ப‌ட்ட‌
துடைப்ப‌க்குஞ்ச‌ங்க‌ள்
செய்யும் கிச்சு கிச்சு மூட்ட‌ல்க‌ளைத்
தாங்காம‌ல்
பெருமாளும் பாம்புப்ப‌டுக்கைக்கு
எழுந்து ஓடினார்.

==ருத்ரா

Series Navigationமழைபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா