நிழல் தேடும் வெயில்

Spread the love

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.

நம் வாழ்க்கையில் பல பேரைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒரு சிலர்தாம் அவர்கள் மறைந்த பின்னரும் நம் மனத்தில் நிற்கின்றனர். திடீர் திடீர் என அவர்களின் நினைவு வந்து மனத்தில் சத்தம் போடுகிறது. நல்ல நிகழ்வோ அல்லது சோக எண்ணங்களோ வரும்போது கூடவே அவர்களும் வருகிறார்கள். இதை ஓர் உவமையாக இக்கவிதை சொல்கிறது. மரத்திலிருந்து காலத்தால் முதிர்வடைந்த சருகுகள் கீழே உதிர்கின்றன. அவை காற்றினால் புரட்டிப் போகும்போது தங்கள் இருப்பைச் சத்தமிட்டுத் தெரிவிக்கின்றன.

”மரணித்த பிறகும் கூட/மௌனம் காப்பதேயில்லை/சருகுகள்”

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலமாறுபாட்டின் இயல்பு. இருந்தாலும் இல்லத்தில் இப்போதும் கிடக்கும் கையால் மாவரைக்கும் இயந்திரம். கல்லாலான ஆட்டு உரல், மரக்குந்தாணி போன்றவற்றைப் பார்க்கும்போது அவற்றின் பயன்பாடும் அப்போது நாள்தோறும் அவை உதவி செய்ததும் நினைவுக்கு வருகின்றன. நெகிழியால் நாற்காலிகள் வந்த பின்னர் மரநாற்காலிகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. அதிலும் உடைந்த நாற்காலி என்றால் அது கவனிப்பாரற்று வீட்டின் மூலையில் கிடத்தப் படுகிறது. அதைப் பழுதுபார்க்க ஆகும் செலவில் ஒரு நெகிழி நாற்காலியே வாங்கி விடலாம் என்னும் எண்ணமே இதற்குக் காரணமாக அமைகிறது. இருந்தாலும் மரநாற்காலியின் உறுதித்தன்மை இதற்கு இல்லை. மேலும் அந்த மரநாற்காலி வீட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் சாட்சியாய் இருந்தது. இன்னமும் கூட தன்னைப் பழுது பார்த்து வைத்துக் கொள்வார்களா என்னும் கனவோடுதான் அது கிடக்கிறது.இது போன்ற எண்ணங்களை எழுப்பும் கவிதை இது.

      ”மூலையில் கிடக்கிறது/உடைந்த நாற்காலி/ நிறைய கனவுகளோடு”  

மழை பெய்யும்போதும் மழை விட்ட பின்பும் செடிகளைக் கொடிகளை, மரங்களை அவற்றில் இருக்கும் பூக்களைக் காண்பது மிக அழகாக இருக்கும். மழை பெய்கையில் தலையாட்டி வரவேற்கும் அவை மழை பெய்து முடிந்தபின் அம்மழையில் குதித்துத் தலை துவட்டாமல் இருப்பதாக லேனாவிற்குத் தோன்றுகிறது.

      ”மழை விட்டது/தோட்டம் முழுதும் ஈரம்/தலைதுட்டாமல் ரோஜாக்கள்”

கையூட்டைப் பொருத்தவரையில் காலம் காலமாக சொல்லப்படுவது கொடுப்பவர்கள் இருப்பதால்தான் வாங்குகிறார்கள். வாங்குகிறவர்கள் இருப்பதால்தான் கொடுக்கிறார்கள் என்பதுதான். அதுபோலவே வாக்குக்கும் நாம் வாங்குவதால்தான் கொடுக்கிறார்கள் இவர்களில் யார் யோக்கியன் என்று கேட்கும் கவிதை இது. “ஓட்டுக்குக் காசு/காசுக்கு ஓட்டு/யோக்கியன் யாரிங்கே

இயல்பான மொழியில் தன் இருப்பை அமைதியாய்க் காட்டுகிறது இது.

      [நிழல் தேடும் வெயில்—வலம்புரிலேனா—ஹைக்கூ கவிதைகள்—வெளியீடு: எழில்மீனா பதிப்பகம்—200, காளியம்மன் கோயில் தெரு, திருவாலம்பொழில்—613 103; பக்: 64; விலை; ரூ 30]

Series Navigationபொடியா