நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்

குரு அரவிந்தன். 

புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்துப் பார்த்தேன். ‘வேட் இன்ஸ்’ என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. ஆர்வம் காரணமாக வாசித்தேன்.

சற்றுத்தள்ளி இருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் மெல்ல அவதானித்தேன். ஆபிரிக்கக் கறுப்பு இனத்தவராக இருக்கலாம்.

‘என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்ததா?’ என்று அங்கிருந்தபடியே ஆங்கிலத்தில் கேட்டார்

‘ஓம்’ என்று நான் தலை அசைத்தேன்.

‘அதில் தண்ணீரில் நீந்தப் போய்ப் போலீசாரால் கைதானவர்கள் என்று போட்டிருக்கே, அந்த நால்வரில் நானும் ஒருத்தன்’ என்றார்.

‘அப்படியா?’ ஆர்வம் காரணமாக நான் அவருக்கு அருகே சென்று அமர்ந்தேன், சுமார் எண்பது வயதைத் தொட்டிருக்கலாம், ஆனாலும் ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்.

‘ஐயாம் குரு, உங்க பெயரைச் சொல்லலையே’ என்றேன்.

‘ஏப்ரஹாம்’ என்று சொல்லி, இருந்தபடியே படியே கை குலுக்கியவர் தொடர்ந்தார்,

‘எங்கள் பெற்றோர்களுக்கு நீந்தத் தெரியாத படியால் தண்ணீரைவிட்டு எட்வே விலத்தி இரு என்று அடிக்கடி எங்களுக்குப் போதிப்பார்கள்.’ என்றார்.

‘ஏன் உங்களுக்கு நீந்தத் தெரியாதா?’

‘தெரியாது, எப்படி நீந்துவது தண்ணீரில் இறங்காமல்..?’ என்றார்

‘ஏன் நீந்தப் பழகவில்லையா, தண்ணீருக்குப் பயமா?’

‘இங்கே உள்ள நீச்சல் தடாகத்திலேயோ அல்லது கடலிலேயோதான் நீந்தப் பழகலாம், இவர்கள்தான் எங்களைத் தண்ணீரில் இறங்க விடவில்லையே’

‘என்ன சொல்றீங்க, இவர்கள் என்று யாரைச் சொல்லுறீங்க?’

‘இங்கே அப்போது இருந்த சில வெள்ளையர்களைத்தான்’

‘இனவெறியா..?’

‘அப்படியே எடுத்துக் கொள்ளலாம், எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள், அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள்’

‘அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’

‘எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது.’

‘அதற்காக என்ன செய்தீர்கள்?’

‘அப்போதுதான் நாங்கள் அல்வின் அலி டான்ஸ் தியேட்டரில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்தோம். நான் நினைக்கின்றேன் 1960 ஆம் ஆண்டாக இருக்கலாம், அந்த நாடகம் எங்களுக்குள் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.’

‘எப்படியான நாடகம், அதிலே என்ன சொல்லியிருந்தார்கள்?’

‘உண்மையைச் சொல்லப் போனால், அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. ‘வேட் இன் த வாட்டர்’ என்ற வரிகள் எங்களை ரொம்பவும் கவர்ந்தது மட்டுமல்ல, எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்களை அறியாமலே நாங்கள் அந்த வரிகளுக்குள் மூழ்கிப் போயிருந்தோம்.’

‘ஆர்வமாக இருக்கிறது, அது என்னவென்று சொல்;ல முடியுமா?’ என்று கேட்டேன்.

‘எனக்கு வயசு போயிடிச்சு, அதனாலே சரியாக அந்த வரிகள் இப்போது ஞாபகமில்லை, ஆனால் தண்ணீருக்குள் இறங்கினால் அடிமைகளைத் தேடும் வேட்டைநாய்களால் எங்களை மோப்பம் பிடிக்க முடியாது என்று கறுப்பினத்தவரின் விடுதலை பற்றி மறைமுகமாகச் சொல்லியது அந்தப்பாடல்.’

எனக்கு ஓரளவு புரிந்தது. 1600 களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள். ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். 

தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதைத்தான் அந்தப் பாடல் மறைமுகமாகச் சொன்னது. 1865 இல் அமெரிக்க ஜனாதிபதியான ஏப்ரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை இயற்றினாலும், நடைமுறையில் தொடர்ந்தும் அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது.

‘ஒருநாள் ஜோன்சன் எங்களைச் சந்தித்தார். கடலிலே இறங்கிக் குளிக்கப் போகிறோம், நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டார்.

ஜோன்சனை எனக்கு ஏற்கனவே தெரியும், எங்கள் இனவிடுதலைக்காகப் பாடுபட்டவர். அவருடன் நின்ற இன்னுமொருவரை ‘டாக்டர் மிசெல்’ என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பகுதியில் உள்ள மருத்துமனைக்குச் சேவையாற்ற முதன் முதலாக வந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதைப் பின்பு தெரிந்து கொண்டேன்.

‘கடலில் குளிப்பதற்கு ஏன் நீங்க தயங்கினீங்க?’

‘எங்களைத்தான் கடலிலே இறங்க விட மாட்டாங்களே’ என்று சொன்னேன். அதற்கு அவர்,

‘உண்மைதான், ஆனால் எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும். குறிப்பாக மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும். அதனால்தான் துணிச்சல் உள்ள உங்களைக் கேட்டேன்’ என்றார் ஜோன்சன்.

எனக்கு ஒரு அசட்டுத் துணிவு ஏற்பட்டது. சரி என்று அவரிடம் ஒப்புக் கொண்டேன்.

என்னுடன் சேர்ந்து இன்னும் மூன்று கூட்டாளிகள் இணைந்து கொண்டார்கள். நீந்தத் தெரியாவிட்டாலும் வருவது வரட்டும் என்று துணிந்து கடலில் இறங்கி விட்டோம்.

கடலிலே சில வெள்ளையர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பாய்ந்து விழுந்து வெளியேறிவிட்டார்கள்.

‘ஏன், அவர்களுக்கு என்ன நடந்தது?’

‘அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை, தண்ணீரில் தீட்டுப் பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படித்தான் அவர்களை அவர்களது பெற்றோர்கள் வளர்த்திருந்தார்கள்.’

‘அப்புறம் என்னாச்சு?’

‘போலீசை அழைத்ததும் அவர்கள் வந்து எங்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைத்தார்கள்.’

‘இது எப்ப நடந்தது, எவ்வளவு காலமிருக்கும்?’

‘சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்கரையில்தான் நடந்தது, அப்போதெல்லாம் இந்த வசதிகள் ஒன்றும் இங்கே கிடைக்கவில்லை, ஏன், இங்கே வருவதற்குச் சரியான வீதிகளே இருக்கவில்லை. நான் நினைக்கிறேன் இது நடந்தது 1961 ஆம் ஆண்டாக இருக்கலாம், இன்னும் நினைவில் நிற்கிறது.’

அவர் பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க முனைந்தார்.

‘நான் மணவனாக இருக்கும் போது, தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்.’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அவர் சொன்னது உண்மைதான், காலமெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ்தவர்களின் பரம்பரையில் வந்த சாதாரண பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இதைவிட வேறு என்னதான் செய்ய முடியும்?

‘போராட்டம் வலுவடைந்ததால், தினமும் எம்மவர்கள் கடலில் குளிக்கத் தொடங்கினார்கள். சுமார் 200 மேற்பட்ட எம்மவர்களை இந்தக் கடலில் குளித்ததற்காகத் தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒருகட்டத்தில் சிறைச்சாலை நிரம்பி வழிந்ததால், இந்த வழக்கை விசாரனைக்கு எடுத்தார்கள்.’

‘1962 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, ரெட் காபோட் என்பவர்தான் பிறோவாட் கவுண்டி நீதிபதியாக இருந்தார். அவரும் வெள்ளை இனத்தவர்தான்;, என்ன நடக்குமோ என்று நாங்கள் பயந்து போயிருந்தோம். எங்கள் படிப்பும் தடைப்பட்டதால், பெற்றோரும் இதை நினைத்து மனம் கலங்கிப் போயிருந்தார்கள்.’

‘கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது’ என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது. 1966 ஆம் ஆண்டுவரை 

அவர் இங்கேதான் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவருடைய நல்ல மனசால்தான் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. அவரைப் பற்றிய ஒரு நூலும் ‘பீட்டாஸ்கிரிப் பப்பிளிஸிங்’ என்ற பதிப்பகத்தால் வெளிவந்தது.’ என்றார்.

அதாவது 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று ‘பிறவுண்’ நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்.

‘எங்கு சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், எமக்காக யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான், இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது’ என்பதையும் அவரோடு உரையாடியபோது, நான் புரிந்து கொண்டு, அவரைப் பாராட்டி அவரிடம் இருந்து விடை பெற்றேன்.

Series Navigationஹேப்பி நியூ இயர்