நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

 


         டாக்டர் ஜி. ஜான்சன்            

நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு
முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். சாதியை நம்பி வாழ்பவர்கள் ஒரே சாதியில்தான் பெண் எடுப்பார்கள்.இதனால் இந்த நோய் போன்று இன்னும் பல நோய்கள் சில குடும்பங்களில் தொற்று நோய்போல் தொடர்ந்து வருகின்றது.
இரண்டாவதாக நமது உணவு பழக்க வழக்கங்கள். நாம் தொன்றுதொட்டு சோறு, தோசை, இட்டிலி சாப்பிட்டு வந்தவர்கள்.தற்போது இட்டிலி தோசை நமது வீடுகளில் குறைந்து வந்தாலும் சோறு சாப்பிட்டால்தான் வயிறு நிறைந்த திருப்தி உண்டாகிறது.ஆனால் இந்த மூன்றிலும் மாவுச் சத்து அதிகம் இருப்பதால் இனிப்பு அதிகமாகிறது.
மூன்றாவதாக குறைவான உடற்பயிற்சி. அதிலும் பெண்களுக்கு இது மிகவும் குறைவு. வீட்டு வேலைகள் செய்வது கூட குறைந்துபோய் எல்லாவற்றுக்கும் இயந்திரங்களை நம்பியுள்ள காலம் இது.முன்புபோல் மிளகாய் அரைப்பது, மாவு ஆட்டுவது, துணி துவைப்பது எதுவும் இப்போது இல்லை.
நம் இனத்தில் நீரிழிவு நோய் பெருகி வருவற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறிவிட்டேன். இனி நீரிழிவு நோய் சிறுநீரகங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சிறுநீரகங்கள் இரண்டும் இடுப்புப் பகுதியில் முதுகுத் தண்டின் இருபுறமும் உள்ளன. ஆரோக்கியமான ஒரு சிறுநீரகமே போதும் என்றபோதிலும் பாதுகாப்புக்காக நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன.
சிறுநீரகம் நமக்கு சுத்திகரிக்கும் இயந்திரம் போல் பயன்படுகிறது.அதனுள் 2 மில்லியன் நெப்ரோன் ( Nephron )எனும் நுண்ணிய சல்லடை போன்றவை உள்ளன. அதனுள் குளோமெருலஸ் (Glomerulus ) என்ற இன்னும் சிறிய உறுப்புகள் உள்ளன.இது இரத்தக் குழாய்களால் ஆனது. இதனுள் இரத்தம் அதிகமான அழுத்தத்துடன் ஓடும்போது யூரியா, நச்சு, மற்றும் இதர கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்திகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உடலுக்குள் செல்கிறது வெளியேற்றப்பட்டவை சிறுநீர் வழியாக வெளியில் தள்ளப்படுகிறது. இதனால்தான் சிறுநீரகங்கள் இரண்டும் நாம் உயிர் வாழ மிகவும் முக்கியமான உறுப்புகள்.
துரதிர்ஷ்டவசமாக 20 முதல் 40 சதவிகித நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரககங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சிறுநீரகங்கள் 4 விதத்தில் படிப்படியாகக் கெடுகிறது.

* முதலாவதாக அதிகமான இனிப்பை சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் துரிதமாக செயல்படுகின்றன.இதனால் அதனுள் உள்ள உறுப்புகள் பெரிதாகி வீக்கமுறுகின்றன. இதனால் அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு சுத்திகரிக்கும் வேலையைச் செய்கின்றன. இது முதலாவது பாதிப்பு.

* இரண்டாவதாக சுமார் ஒரு வருடம் ஆனபின்பு சிறுநீரகத்தின் சுத்திகரிக்கும் பணி குறைகிறது. வெளியேற்ற வேண்டிய கழிவுப் பொருள்களை வெளியேற்ற முடியாமலும், அல்புமின் போன்ற சத்துப் பொருட்களை சேகரிக்க முடியாமலும் போய்விடுகிறது. அல்புமின் என்பது புரோதச் சத்து  சிறுநீரகம் சரிவர இயங்காதபோது இந்த புரோதச் சத்து சிறுநீரில் வெளியேறுகிறது. இது இரண்டாவது பாதிப்பு.

* மூன்றாவதாக சிறுநீரகம் தொடர்ந்து பாதிக்கப்படும்போது அதிகமான அல்புமின் சிறுநீரில் வெளியேறுகிறது. இது ஆபத்தானது, காரணம் இந்த அல்புமின்தான் உடலின் நீரை இரத்தத்தில் இருக்கச் செய்வது. இது குறைவுபட்டால் நீர் திசுக்களுக்குள் புகுந்து முகம், கைகள், கால்கள் வீக்கமுறுகின்றன. உடலில் அல்புமின் குறைந்துபோன நிலையில் அதை ஈடு செய்யும் வகையில் கல்லீரல் அதிகமான கொலஸ்டராலையும், இதர கொழுப்புகளையும் இரத்தத்தில் வெளியேற்றுகிறது. காரணம் இவை அல்புமின் உற்பத்திக்கு உதவுகின்றன. இவை அதிகமானால் இருதயம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது மூன்றாவது பாதிப்பு.

* நான்காவதாக சிறுநீரகங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு முற்றிலுமாகக் கெட்டு இறுதிக் கட்ட சிறுநீரகச் செயலிழப்பு ( End- Stage Renal Failure ) உண்டாகிறது.இந்த நிலையில் உயிரைப் பாதுகாக்க டயாலிசிஸ் அல்லது சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை தவிர வேறொன்றும் பயன் தராது.

                                                                          சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் வழிவகைகள்

          நீரிழிவு நோயாளிகளும் அது இல்லதவவர்களும்கூட சிறுநீரகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இனிப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இன்றியமையாதது.அதோடு இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களும் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும். சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் சில வழிமுறைகள்:

          * முகம்,கைகால்கள் வீக்கம், களைப்பு, இடுப்பு வலி போன்ற அறிகுறிகள் சிறுநீரகங்கள் 80 சதவிகிதம் பாதித்த பின்பு தோன்றும் அறிகுறிகள். அதற்கு முன் துவக்கத்திலேயே சிறுநீர் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். அது சிறுநீரில் மைக்ரோஅல்புமின் ( Microalbumin ) உள்ளதா என்பதைப் பார்க்கும் பரிசோதனை. அதோடு இரத்தத்தில் கிரியேடினின் ( Creatinine ) எனும் கழிவுப் பொருள் அதிகரித்துள்ளதா என்பதைப் பார்க்கும் இரத்தப் பரிசோதனை.

          * இரத்தக் கொதிப்பு பராமரிப்பு.- இரத்தக் கொதிப்பில் சிறுநீரகத்திலுள்ள சிறு இரத்தக் குழாய்கள் அதிகமான அழுத்தம் காரணமாக தடித்து வீங்கி கெடுகின்றன.இதைத் தடுத்து அவற்றை விரிவடையச் செய்யும் ACE குறைக்கும் மருந்துகள் ( ACE Inhibitors ) பயன்படுத்த வேண்டும்.அப்போது சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படும்.

          * புரோதச் சத்தைக் குறைத்தல் – உணவில் உள்ள புரோதச் சத்து அதன் கலோரி அளவில் 10 சதவிகிதம் இருந்தால் போதுமானது.அதிகமான புரோதம் உட்கொண்டால், தேவைக்கு மீதமானதை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு சுமை உண்டாகும். அதனால் அது மேலும் கெடும்.

          * கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்தல்.- நீரிழிவு நோயில் சிறுநீரகப்பையின் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகி, சிறுநீர் முழுதும் வெளியேறாமல் தேக்கமுறும் நிலை உண்டாகும். அப்போது அங்கு கிருமித் தொற்று உண்டாகும். அதை உடனடியாக அண்டிபையாட்டிக் மருந்துகளால் குணமாக்க வேண்டும். சிறுநீரக கிருமித் தொற்று தடுக்க கிரேன்பெரி சாறு ( Cranberry Juice ) குடிப்பது நல்லது.
           * மருந்துகள் உட்கொள்வது – நாம் சில வேளைகளில் சுயமாக மருந்துகள் பார்மசியில் வாங்கி உட்கொள்கிறோம்.இது ஆபத்தானது.சில வலி குறைக்கும் மருந்துகளும், அண்டிபையாட்டிக் மருந்துகளும் சிறுநீரகங்களைக் கெடுக்கும் தன்மையுடையவை.  ஆகவே இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

( முடிந்தது )

Series Navigationபுத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்புஜன்னல் கம்பிகள்