நுனிப்புல் மேய்ச்சல்

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

எங்கள் வீட்டுக்கால்நடைகள்

எப்போதும் பார்த்தது

வைக்கோல்தான்

 

தும்பை அவிழ்த்து

கட்டுத்தறியைவிட்டு

சுதந்தரமாய் மேய

பச்சைப்புல்வெளிநோக்கி

ஓட்டினேன்

 

வரப்பிலிருந்து இறங்கி

ஒன்றும்

ஒழுங்காய் மேயவில்லை

 

பச்சைப்புல்வெளி

கண்களைக்கவர்ந்தும்

இச்சையின்றிக் கால்நடைகள்

இங்கும் அங்கும் திரிந்தன

 

சுற்றிச்சுற்றி

வந்தன

இறங்கிமேயவில்லை

 

அடித்து விறட்டி

இறக்கிப்பார்த்தேன்

இம்மிகூட அசையவில்லை

 

அப்போதும்

நுனிப்புல்லையே மேய்ந்தன

 

பசும்புல் பார்த்தும்

நுனிப்புல் மேயும்

கால்நடைகளை

வைத்துக்கொண்டு

புல்வளர்த்து என்ன பயன்?

புல்வெளியால் ஏதுபயன்?

 

மேயத்தெரியாத

கால்நடைகளோடு

கழிகிறது காலம்

பசும்புல்வெளி

பாழாய்ப்போகிறது

 

பசியாறமட்டுமே

தெரிந்துவைத்திருக்கிறது

 

ருசிபார்த்துமேயும்

நோக்கமும் இல்லை

நுட்பமும் இல்லை

 

அவசியம் இல்லையென

அறிந்துவைத்திருக்கிறது

அலட்சியமும் செய்கிறது

 

நான் வளர்க்கும்

புற்களெல்லாம்

மேயத்தெரியாத

கால்நடைகளுக்கல்ல

என்ற

உறுதிபிறக்கிறது

நிம்மதி மிஞ்சுகிறது

 

தேடிமேயும்

காலம்வரும்போது

கால்நடைகள் வரும்போது

நான் வளர்த்த புல்வெளிகள்

பசி போக்கும்

ருசிகூட்டும்

 

அதுவரை

என்கவனம்

புல்வளர்ப்பில் தொடர்ந்திருக்கும்

அது

தொடரும்

புல்

வளரும்

 

(20.08.2014 பின்னிரவு 2 மணி)

Series Navigation