நெய்தல்

தோழிக்கு உரைத்த பத்து—1
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே
[கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில் இரை வைத்து; முயலல்=செய்தல்]

NEIYesஆவன் அடிக்கடி அவளைச் சந்திக்க வந்து போறான்; ஆனா கல்யாணம் கட்டற நெனப்பே இல்ல; ஊருக்குத் தெரிஞ்சிட்டா அவனும் வர முடியாது; அவனுக்கும் ஆபத்து; தனக்கும் கெட்ட பேருன்னு நெனக்கறா அவ; அப்ப அவன் வந்து மறைஞ்சு நின்னுக்கிட்டு அதை அவளுக்குத் தெரிவிக்கறான். அப்ப அவனுக்குக் கேக்கற மாதிரி தோழிக்குச் சொல்ற பாட்டு இது.

“தோழி இதைக் கேளு; அவன் நாட்டுல தூண்டில் கயித்துல இரையை மாட்டி அதன் மூலம் மீன் பிடிக்கறது உண்டு. அப்ப வர்ற செனப் பட்ட மீன்களையும் பிடிச்சுக் கொல்லுவாங்க; அப்படிப்பட்ட துறையைச் சேந்தவன் அவன் வராம போனா நாம உயிர் வாழ்வோமா? இல்ல உயிர் வாழ்வதுக்கு ஏத்த வலுவான மன இருக்கறதுக்குக்காக தவம் செய்வோமா? மாட்டோமில்ல.”
தூண்டில்ல இரையை மாட்டி மீன்பிடித்துக் கொல்லறவன்னு சொல்றது இப்படி இரக்கமில்லாம இருக்கானேன்னு மறைவா சொல்றதாம். இதைக் கேட்டாவது அவன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வான்னு அவ நெனக்கறா.
============================================================================= தோழிக்கு உரைத்த பத்து—2
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே
[பாசிலை=பசுமையான இலை; செருந்தி= நெய்தலில் வளரும் ஒரு வகை மரம்; இருங்கழி=கரிய சுழி]

அவன் மறுபடி மறுபடி வந்து இவளைப் பாத்துட்டுப் போறானே தவிர கல்யாணம் செஞ்சுக்கற மாதிரியே தெரியலயேன்னு தோழி பயப்படுறா; அது அவனுக்குத் தெரிஞ்சிடுத்து; அவன் கல்யாணத்துக்கு ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டுதான் வரேன்னு தலைவிகிட்ட சொல்றான்; அதால, “நீ பயப்படாதே”ன்னு தோழிகிட்ட அவ சொல்ற பாட்டு இது.
”ஏண்டி தோழி இதைக் கேளு. பச்சையான இலையெல்லாம் இருக்கற செருந்தின்ற மரம் நல்லா பெரிசா பரந்திருக்கற எடத்தைச் சேந்தவண்டி அவன்; பயப்படவேண்டாம்னு அவன் சொன்னதை எல்லாம் நாம மனசில நாணம் இருந்ததால மறந்துட்டோம்; அதால மனசு கலங்கிப் போயி பயந்துட்டோம். ஆனா அவன் வர்றதை இனிமே நாம பாப்போம் பாருடி”
மறந்துட்டோம்னு சொல்றது நாமதான் மறந்துட்டோம்; ஆனா அவன் மறக்கலன்னு குறிப்பா சொல்றாளாம்; மனசில நாணம்றது அவன்கிட்ட கூடற போது சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கன்னு சொல்ல முடியாம வெக்கம் தடுத்ததைச் சொல்றா
தோழிக்கு உரைத்த பத்து—3
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார், ‘பெண்’டென மொழிய ,என்னை
அதுகேட்டு ‘அன்னாய்’ என்றனள், அன்னை;
பைய ‘எம்மை’ என்றனென் யானே

சீக்கிரம் வந்து என்னைக் கல்யாணம் செஞ்சுக்கன்னு அவ மறைவா வந்து நிக்கற அவன் கேக்கற மாதிரி தோழிக்குச் சொல்ற பாட்டு இது. இதுல முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்லிக் காட்டறா.
”தோழி இதைகேளு; ”நேத்திக்கு ஒசரமா அலையெல்லாம் வந்து உழற வெள்ளையான மணலை உடைய எடத்திலிருக்கற அவனுக்கு இவ பொண்டாட்டியாயிட்டான்னு ஊராரெல்லாம் சொன்னாங்க; அதைக் கேட்ட என் செவிலித்தாய்க்குக் கோபம் வந்துடுச்சு; அவ என்னைப் பாத்து, ‘அன்னாய்’ னு சொன்னா; நானும் பதிலுக்கு, ‘எம்மை’ ன்னு சொன்னேன்”
அலைவந்து அடைக்கறமாதிரி ஊராரெல்லாம் பேசறாங்கன்னு மறைவா சொல்றா; தாய் அவகிட்ட கேள்வி கேக்கற மாதிரி அன்னாய்னு கூப்பிடறா. இவளும் பதிலுக்கு எம்மைப் பத்தியா சொன்னாங்க? நீயும் அதை நம்பறியான்னு கேக்கற மாதிரி எம்மைனு பதில் சொல்றா; எம்மைன்றதை வெம்மைன்னு வச்சுக்கிட்டு அவங்க சொல்ற சொல்லு ரொம்ப கொடியதுன்னு நெனச்சுக்கலாம்; எம்மைன்றதை எம் ஐன்னு பிரிச்சுப் பாத்தா ஆமாம். அவன்தான் என் தலைவன்னு சொல்றான்னும் வச்சுக்கலாம்
தோழிக்கு உரைத்த பத்து—4
அம்ம வாழி, தோழி! கொண்கண்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே
[நேரேம்=நேராக வருதலைக் காண்கிலோம்; செல்குவோம் கொல்லோ=செல்வோமா?; இரற்றும்=பெருங்குரலில் ஒலிக்கும்;

இத்தனை நாளா வந்து போய்க்கிட்டிருந்த அவன் ரொம்ப நாளா வரவே இல்ல; அவளும் தோழியும் வந்துவந்து பாத்து ஏமாந்து போறாங்க; அப்ப ஒரு நாள் அவன் வரான்; தோழியைப் போகச் சொல்லி ரகசிய ஒலி எழுப்பறான்; வந்தவனும் கேக்கற மாதிரி அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது:
”தோழி! இதைக் கேளுடி; அவன் வரவே இல்ல; அதால நாம அவனைப் பாக்க முடியல; அவன் நாட்டுல கடல் நாரையானது பனைமரத்துல இருந்துகிட்டு கத்திக் கொண்டே இருக்கும்; அந்த நாட்டுக்கு நாம வாணா போயி நேரா அவனைப் பாத்து நம்ம துன்பத்தைச் சொல்லிவிட்டு வருவோமா?”
இதுல அவளோட ஏக்கம் தெரியுது; காதல் தெரியுது; அவனைப் பிரிஞ்சு உயிர் வாழ முடியாது; அதால போயிப் பாப்பமோன்னு கேக்கறா;
நாரை அதோட துணையை நெனச்சுக் கத்திகிட்டே இருக்கும்; அதேபோல அவனும் இப்ப வந்து குரல் குடுக்குறான்னு மறைவா சொல்றா.
தோழிக்கு உரைத்த பத்து—5
அம்ம வாழி, தோழி! பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே!
[அடைகரை=கடற்கரை; அருங்கடி=அரிய காவல்]

ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சாங்க; ஊருக்கும் தெரிஞ்சு போச்சு; அவ ஒடம்பு நெலயிப் பார்த்து அம்மாவும் தெரிஞ்சுகிட்டா; அப்பறம் என்ன? கல்யாணம்தான? அதைச் செய்யாது அவன் வராமலே காலம் கடத்தி வந்தான்; அவளுக்கோ மனசில ரொமபத் துயரம் வந்துடுச்சு; அப்ப ஒரு நாளு அவன் வந்தான்; தான் வந்து மறைஞ்சிருக்கறதை குறிப்பா தெரிவிச்சான்; அவளும் அதைக் கேட்டு அங்க வந்தா; அப்ப அவனுக்குத் தன் மனசில இருக்கறதைத் தெரிவிக்கற மாதிரி அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.
”தோழி! நீ வாழ்வாயாக; இதைக் கொஞ்சம் கேளு; மெலிசான மணல் இருக்கற கடற்கரையில அன்னிக்கு நம்மோட அவன் கூடி ஆடினானே! குளிர்ச்சியான துறையெல்லாம் இருக்கற நாட்டைச் சேர்ந்தவனான அவன் இப்ப அம்மாவோட பலமான காவல் இருக்கற நாம் ஊட்டுக்குக் கூட வந்து நிக்கறானே”
தான் அங்க போக முடியாது; ஏன்னா அம்மாவோட காவல் பலமாயிருக்குனு மறைவா சொல்றா; அதால சீக்கிரம் கல்யாணம் செஞ்சாதான் தன்னைச் சேத்துக்க முடியும்னு சொல்லிக் காட்டறா; அப்படி ஆடினானேன்னு சொல்றதுக்குக்காரணம் அன்னிக்கு அவ்வளவு அன்புள்ளவனா இருந்தவன் இன்னிக்கு இன்னும் கல்யாணம் கட்டத் தாமதிக்கறானேன்னு சொல்ற மாதிரிதான்.
தோழிக்கு உரைத்த பத்து—6
அம்ம, வாழி தோழி! நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற—
காலை அன்ன காலைமுந் துறுத்தே
[காலையன்ன=காலனைப் போன்ற; காலை முந்துறுத்து=தென்றற் காற்றை வர விட்டு]

தோழீ! நீ வாழ்வாயாக; மாலைப் பொழுது வந்திடுச்சுடி; எப்படி வருது தெரியுமா? நீல நெறமான கடற்கரையில நீலப் பூக்கள் எல்லாம் குவிஞ்சு போற மாலைப்பொழுது வருது; எப்படிப்பட்டது அது? நம்மெல்லாரையும் அழ வைக்கறது; அதுவும் காலனா யமனைப் போல இருக்கற தென்றல் காத்தை முன்ன விட்டு அது வருது;
பூக்கள் எல்லாம் குவுயுதுன்னு சொல்றது பொறமையாலயாம்; அதுங்க குவியுதே; ஆனா நம்ம காணு தூக்கத்தாலே மூட மாட்டேன்னுதேன்னு நெனக்கறாளாம்; மாலையை எமன்னு சொல்றது அவன் சீக்கிரம் வந்து இவளைக் கல்யாணம் செய்யாட்டி இவ செத்துப் போயிடுவா; அப்பறம் அவன் இவளை இழக்கத்தான் வேணும்னு சொல்றா.
தோழிக்கு உரைத்த பத்து—7
அம்ம வாழி, தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே –புன்னை
அணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே
[வரிக்கும்=ஒழுங்குபட உதிர்க்கும்; மணிநீர்=நீலமணி போலும் நீர்]

”தோழி! நீ நல்லா இருக்கணும்; இதைக் கொஞ்சம் கேளு; நாம அவனை எப்பவும் நெனச்சிருக்கோம்; அவனுடைய துறையில புன்னைப் பூவெல்லாம் உதிர்ந்து கெடக்கும்; அது பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்; அங்கக் கடல் தண்ணியும் நீலமா அழகா இருக்கும்; அவனை நெனச்சு நெனச்சு நம்ம அழகு இப்படிக் கெட்டுபோகுதே இது ரொம்பக் கொடுமை இல்லியா?’
தோழிக்கு உரைத்த பத்து—8
அம்ம வாழி தோழி! யானின்று
அறநி லாளற் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின்நினைந் திரங்கிப் பெயர்ந் தேனே!
[அறநிலாளன்=அறமே அறியதவன்; தகைப்பேன்=தடுப்பேன்]

அவன் மறுபடி மறுபடி வரானே தவிர கல்யாணம் கட்டிக்க எதுவும் செய்யல; அதால தோழி அவனை வராதேன்னு மறுத்தா; மறுபடியும் அவன் வரான்; தோழி போகாதேன்னு சொல்லியும் அவ போறா; அவனைப் போய்ப் பாத்துட்டு வந்து தோழிகிட்டச் சமாதானம் சொல்ற பாட்டு இது

தோழியே! நியாயம், தருமம் தெரியாத அவனைப் போய்ப் பார்த்து கோபம் வரணும்; அத்தோட இனிமே நீ இங்க வராதேன்னு சொல்லி அவனையும் தடுக்கணும்னுதான் நான் போனேன்; ஆனா அவனை வெறுத்து ஒதுக்கினா எனக்கு அது உயிரே வாழ முடியாத அளவுக்குத் துன்பம் குடுக்குமேன்னு இரக்கப்பட்டு சும்மா அவன்கிட்ட ஒண்ணும் சொல்லாமயே வந்துட்டேன்; அதால இதைப் பொறுத்துக்க.

தோழிக்கு உரைத்த பத்து—9
அம்ம வாழ, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கண் வாராதோனே
மென்புலம்=நெய்தல் நிலம்; நன்றும்=நல்ல ஒழுக்கங்களையும்; எய்யாமை=அறியாமை; ஏதில=அயலான ஒழுக்கங்கள்]

போனதடவை வந்தவன் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லிட்டுத்தான் போனான்; ஆனா இதுவரை எந்த ஏற்பாடும் செய்யல; திரும்பவும் இப்ப வந்திருக்கான்; அவன் காதுல விழறமாதிரி அவ சொல்றா.
தோழி நீ வாழ்வாயாக; இதைக் கேளு; நெய்தல் நிலத்துல இருக்கற நம்ம ஆளு இன்னும் என்னைக் கல்யாணம் கட்டிக்கணும்னு தெரியாதனவாகவே இருக்கான்; அதால வேற எதையோ பத்திதான் பேசறான்’ அதால நாமும் அவன் நம்ம மேல அன்பில்லாதவன்னுதான் நெனக்க வேண்டியிருக்கு; என்னா செய்யறது சொல்லு?
கல்யாணம் கட்டிக்காம இதுமாதிரி வந்து வந்து போயிட்டு இருக்கறதே நல்லதுன்னு அவன் நெனக்கறான்னு மறைவா சொலறா; இதைக் கேட்டு அவன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வான்னு நெனக்கறா.

தோழிக்கு உரைத்த பத்து—10
அம்ம வாழி, தோழி! நலமிக
நல்ல வாயின; அளியமென் தோளே-
மல்லல் இருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே

போன பாட்டு மாதிரிதான் இதுவும்; இன்னும் கல்யாணத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யாம வந்து மறைவா நிக்கறவன் காதுல கேக்கற மாதிரி அவ சொல்றா.
தோழி இதைக்கேளு; குளிர்ச்சியான வளமான கடற்கரை இருக்கற நெய்தல் நெலத்துல இருக்கறவன் அவன்; இப்ப வந்து நிக்கறான்; அதால அழகில்லாம இருந்த என் தோளும் அழகாயிடுச்சு பாரு

இதக் கேட்டாவது அவன் குளிர்ச்சியான எடத்துல இருக்கறவன் இனிமே நமக்கு வெப்பமான பிரிவைத் தரமாட்டான்னு அவ மறைமுகமா சொல்றா

இத்துடன் நெய்தல் தோழிக்குரைத்த பத்து நிறைவடைந்தது.

Series Navigationஇழக்கப் போறாய் நீ அவளை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்தொடுவானம் 189. திருமணம்