நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து

Spread the love

நன்றி பிபிசி நேபாளி

புதிய சிவில் சட்டம் நிறைய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. மதபிரச்சாரம் செய்வது யாராகிலும் அவருக்கு ஐந்து வருடம் சிறைதண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புது சிவில் சட்டம் சொல்லுகிறது. பிபிஸியின் ஷரத் கே.சி அவர்கள் கேபி ரோகாயா அவர்களிடம் பேசினார். கே.பி. ரோகாயா அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரகர். நேபாள தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர், இவரிடமிருந்து எதிர்பாராதவிதமான பதில்கள் கிடைத்தன.

பிபிஸி நேபாளி: புது சிவில் சட்டம் மதமாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கேபி ரோகாயா: நேபாளிகள் மதசார்பின்மை என்பதை எந்த விதமான புரிதலும் இல்லாமல் ஏற்றுகொண்டுவிட்டனர். கிறிஸ்துவர்களான நாங்களும் மதசார்பற்ற நாடு வேண்டும் என்று தெருக்களுக்கு வந்து போராடினோம். ஆனால், இரண்டாவது சட்ட உருவாக்க சபை தேர்தலுக்கு பிறகும், புதிய அரசியலமைப்பு சட்டம் உருவான பிறகு இது பெரிய தவறு என்று உணர்கிறேன். இதன் விளைவை பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாமல் குருட்டுத்தனமாக இந்த சட்டத்தை ஆதரித்துவிட்டோம். அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதசார்பற்ற கருத்துக்களை நீக்கியே ஆகவேண்டும். ஏனெனில் அரசாங்கம் மதத்தை உதாசீனப்படுத்திகொண்டு இருக்கமுடியாது. நேபாளத்தை பொறுத்தமட்டில், நாம் திரும்பவும் இந்து மன்னராட்சிக்கு திரும்ப செல்லவேண்டும்.

பிபிஸி நேபாளி:
நேபாளத்தில் கிறிஸ்துவ மதத்தின் முன்னோடியாக கருதப்படும் நீங்கள் இந்த நாடு நேபாளம் திரும்பவும் இந்து மன்னராட்சிக்கு செல்லவேண்டும் என்று கருதுகிறீர்களா?
கேபி ரோகாயா:
நான் எல்லா மதங்களுக்கும் ஆதரவானவன். இந்த புதிய சட்டம் எல்லா மத நம்பிக்கைகளுக்கும் பொதுவானது. கிறிஸ்துவ மதத்துக்கு மட்டும் அல்ல. ஆகவே இது எல்லா மதத்தினரையும் கட்டுப்படுத்துகிறது. புதிய சட்டம், யாரும் எவருடைய மத நம்பிக்கையையும் சொல்லிலோ, செயலிலோ எழுத்திலோ புண்படுத்துவதையும் அனுமதிப்பதில்லை.
இப்படிப்பட்ட மதச்சார்பின்மை, ஒரு சமூகத்தை ஒழுக்கமற்றதாகவும், ஊழல் நிறைந்ததாகவும் ஆக்குகிறது. அரசாங்கம் எல்லா மத செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. மதநம்பிக்கையாளர்களுக்கு குரல் இல்லை. மதத்தலைவர்களுக்கு பேச அனுமதி இல்லை. அரசாங்கத்தின் சட்டங்களை மதத்தின் அடிப்படையிலோ அல்லது மத புத்தகங்களின் அடிப்படையிலோ எதிர்க்க முடியாது.

பிபிஸி நேபாளி:
நீங்கள் உங்கள் பள்ளி நாட்களிலேயே கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிவிட்டீர்கள். இப்போது நீங்கள் பேசுவது ஒரு அடிப்படைவாத இந்து போல உள்ளது. உங்களுக்கு வயதாகிவிட்டதால், இப்படி பேசுகிறீர்களா?

கேபி ரோகாயா:
நான் இன்னமும் கிறிஸ்துவன் தான். என்னுடைய ஒரே மத நம்பிக்கையும் இயேசு கிறிஸ்து மீதுதான். மூன்று வருடங்களுக்கு முன்னால், நான் நமது நாட்டை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது நேபாளத்துக்கு அடையாளம் கொடுப்பது மூன்று விஷயங்களை தான் என்று அறிந்தேன். ஷா வம்சம் நேபாளத்தை உருவாக்கியது, நேபாள ராணுவம், மூன்றாவது இந்து மதம். இந்த நாட்டை காற்ற வேண்டுமென்றாலோ, அல்லதுநேபாளத்தில் நேபாளிகளாக வாழ வேண்டுமென்றாலோ நாம் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வந்து மதசார்பின்மையை நிராகரிக்க வேண்டும். நேபாள ராணுவம் அதனை சாதிக்க உதவ வேண்டும்.

பிபிஸி நேபாளி:
நீங்கள் மாவோயிஸ்டாக இருந்தீர்கள், இப்போது மன்னராட்சி வேண்டும் என்கிறீர்கள்?
கேபி ரோகாயா:
ஆமாம். நான் மன்னராட்சி திரும்ப வரவேண்டும் என்கிறேன். மதசார்பின்மை என்ற திட்டம் மேற்கத்திய நாடுகளால் நேபாளத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. நான் அவர்களின் ஏஜெண்டாக கடந்த காலத்தில் இருந்திருக்கிறேன். நான் எதையும் புரிந்துகொள்ளாமல் அவ்வாறு இருந்தேன் என்று இன்று அதனை ஒப்புகொள்கிறேன். மீண்டும் இந்து மன்னராட்சியை திரும்ப கொண்டுவருவது முடியாத காரியம் அல்ல. உலகத்தில் எதுவும் முடியாத விசயம் அல்ல. முக்கியமாக நம்மை போன்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு முடியாத காரியம் அல்ல.

பிபிஸி நேபாளி:
நாம் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்களா?
கேபி ரோகாயா:
இல்லை. நாம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நேபாளத்தின் அடையாளத்தை எப்படி தேர்தலில் வாக்கு போட்டு தீர்மானிக்க முடியும்? சுஷீல் கொய்ராலா, கிரிஜா கொய்ராலா போன்றவர்கள் எப்படி மதசார்பற்ற கருத்துக்கள் எப்படி அரசியலமைப்பு சட்டத்துக்குள் வந்தன என்று அவர்களுக்கே தெரியவில்லை என்கிறார்கள். மதசார்பற்ற அமைப்பு, குடியரசு கொள்கைகள், கூட்டாட்சி முறை ஆகியவை நேபாளத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இன்று அதன் விளைவுகளை பார்த்துகொண்டிருக்கிறோம்.

https://www.nepalitimes.com/from-the-nepali-press/back-to/

Series Navigationஇடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவுதுணைவியின் இறுதிப் பயணம் – 3