பசி

This entry is part 9 of 21 in the series 16 அக்டோபர் 2016

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்

 

இரவு பத்து மணி.

அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை.

மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர் நோயாளி மனதில் இருக்கும் விரக்தியைப் போல் அந்த அறையில் இருள் பரவி இருந்தது. மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. எரியும் சிதையைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் வைராக்கியத்தை போல் நிசப்தம் அந்த அறையில் குடி இருந்தது. எலி ஒன்று இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடியது. அப்படியும் கண்ணனுக்கு பயமாக இருக்கவில்லை. தாயின் அணைப்பில் இருக்கும்போது பயம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை.

வயிறார சாப்பிட்டு படுத்தவனுக்கு விழிப்பு வந்தால் பயம் தோன்றும். வயிற்றில் எதுவும் இல்லாதவனுக்கு விழிப்பு வந்தால் பசிதான் எடுக்கும்.

கண்ணன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்! அவற்றுக்குத் தெளிவான உருவம் கொடுக்கும் அளவுக்கு அவனுக்கு வயதாகவில்லை. பக்கத்தில் திரும்பி அம்மாவின் பக்கம் பார்த்தான்.

சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்து அசிங்கமாக இருந்தாலும் இருள் போர்வை அவற்றை மறைத்து விட்டது. குளிர் அதிகமாக இருந்தது. தரையில் விரிக்கப்பட்ட பாயின் வழியாய் குளிர் உடலைத் தாக்கியது. இருபது வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களை, அறுபது வயது தாண்டிய கிழவர்களைத் தூங்க விடாமல் படுத்தும் குளிர்! கண்ணனுக்கு வயது ஏழுதான். அவன் உறங்காமல் இருந்ததற்குக் காரணம் குளிர் இல்லை. அம்மாவின் கதகதப்பான அரவணைப்பு இருக்கும் வரையில் குளிர் அவனை நெருங்க முடியாது. அவனுக்கு விலா எலும்பில் திடீரென்று வலித்தது. அங்கிருந்து நெஞ்சு வரை வலி பரவியது.

கண்ணனுக்கு அபெண்டிசைடிஸ் இல்லை. அது இருந்தாலாவது அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வைத்திருந்து பால், ரொட்டியைக் கொடுத்து அறுவைச்சிகிச்சை செய்திருப்பார்கள்.

எதுவும் சாப்பிடாமல் இருந்தால், முதல் நாள் பசி தீவிரமாக இருக்கும். இரண்டாவது நாள் அடங்கிப் போய் விடும். மூன்றாவது நாள் விலா எலும்பில் புகுந்து பிசாசாக மாறி பிடுங்கி எடுக்கும். நேற்று முதல் பசி கண்ணனின் விலா எலும்பில் பிசாசாக குடி புகுந்து விட்டது.

ஈட்டியால் குத்துவது போல் இருந்தது. மல்லாக்கப் படுத்திருந்தவன் ஒருக்களித்துப் படுத்தான். அப்படியும் வலி குறையவில்லை. வாயைத் திறந்து மெதுவாய், “அம்மா!” என்று அழைத்தான்.

ராஜேஸ்வரி பதில் பேசவில்லை. விழித்துக் கொண்டுதான் இருந்தாள். எதையோ யோசித்தபடி இருந்தாள். அந்த அறைக்குள் நுழைவதா வேண்டாமா என்று தயங்கி கொண்டிருந்த ஒளிக்கீற்றுகளை ஓலையின் இடுக்கு வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுற்றிலும் நான்கு சுவர்கள், மேலே கூரை இருந்தால் “அறை” என்று அழைக்க முடியும் என்றால் அது அறைதான். அதை ஒட்டினாற்போல் பின்னால் தாவாரம். அதற்கு கூரை இருந்தாலும் சில இடங்களில் ஓலைகள் இருக்கவில்லை. அதுதான் சமையல் அறை. அந்த அறையில்தான் அடுப்பு இருந்தது. ராஜேஸ்வரியின் நெஞ்சில் தீ எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

போன மாதம் வரையில் அந்த குடிசையில் ராஜேஸ்வரி, கண்ணன், கண்ணனின் தந்தை இருந்து வந்தார்கள். தற்போது ராஜேஸ்வரியும், கண்ணன் மட்டும்தான் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் போனால் அவர்களும் இருக்க மாட்டார்கள், வீட்டு வாடகை கொடுக்காமல் போனால்.

அந்த அறையின் வாடகை பத்து ரூபாய்தான். மாதம் முடிவதற்குள் வீட்டு வாடகையைக் கட்டாயமாக கொடுத்து விட வேண்டும். வீடு இடிந்த விழாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. வீடு இடிந்து விடுமோ என்ற கவலையை விட, நாளை என்ன செய்வது என்ற கவலைதான் அதிகமாக இருந்தது. இறந்து போன கணவனுக்குண்டான நஷ்ட ஈடு கொடுக்காமல் ஏமாற்றிய தொழிற்சாலையின் முதலாளியைப் பற்றியும் அவள் யோசிக்கவில்லை.

அந்த வீட்டிற்கு குடி வந்தது முதல், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னைப் பார்த்து பல்லைக் காட்டும் எதிர்வீட்டு சுவாமிநாதனைப் பற்றி கூட அவள் யோசிக்கவில்லை.

பத்து நாட்களில் வீட்டைக் காலி செய்ய வேண்டும். நிலைமை அது வரையில் போகப் போவதில்லை. இன்னும் இரண்டு நாட்கள் போனால் உயிர் போய் விடப் போகிறது. இந்தப் புடவைக் கிழிந்து போனால் உடுத்திக் கொள்ள மாற்றுப் புடவையும் இல்லை. மானம் போய் விடும். உயிரும், மானமும் ஒரே சமயத்தில் போனால் பரவாயில்லை. ஆனால் உயிர் போகவில்லை என்றால்?

ஓலைக்கீற்றின் இடுக்கு வழியாக மழைத்துளி உடல் மீது பட்டது. கொஞ்சம் நகர்ந்தாள்.

“தூக்கம் வரவில்லையம்மா!” என்றான்.

ராஜேஸ்வரி பதில் சொல்லவில்லை. கண்ணன் பக்கம் திரும்பி அவன் மீது கையைப் போட்டாள். தொலைவில் எங்கேயோ இடி இடித்தது. கண்ணனை மேலும் இழுத்துக்கொண்டே, “பயமாக இருக்கிறதா கண்ணா?” என்றாள்.

“பயம் இல்லை அம்மா, பசி” என்றான்.

ராஜேஸ்வரிக்கு அழுகை வரவில்லை. கடந்த நான்கு நாட்களுக்குள் பத்து தடவையாவது அந்த வார்த்தையைச் சொல்லி இருப்பான்.

“பானையில் தண்ணி இருக்கும். டம்ளரால் மொண்டு குடி கண்ணா. நள்ளிரவில் சாப்பிட என்ன இருக்கும்?”

கண்ணன் உடனே எழுந்துகொள்ள வில்லை. மறுபடியும் என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. எழுந்து போய் தண்ணீரைக் குடித்து விட்டு வந்து படுத்துக் கொண்டான். உலகம் முழுவதும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது போல் எங்கும் நிசப்தம். ராஜேஸ்வரி மேற்கூரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்ணன் லேசாக தலையை உயர்த்திக் கேட்டான்.

“நாளை காலையில் சமையல் செய்வாயா அம்மா?”

ராஜேஸ்வரி திடுக்கிட்டது போல் பார்த்தாள். கண்ணனின் கண்களில் லேசாக எதிர்பார்ப்பு தென்பட்டது.

“நாளை காலையிலேயே சமையல் செய்கிறேன் கண்ணா.”

கண்ணன் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, “சத்தியமா?” என்றான்.

சட்டென்று மகனின் தோள்களைச் சுற்றி கையைப் போட்டு அருகில் இழுத்து அணைத்துக்கொண்டாள்.

வேகமாக விம்மி தணிந்து கொண்டிருந்த மார்புகளுக்கு இடையில் ஒரு நிமிடம் கதகதப்பை உணர்ந்த பிறகு தலையை உயர்த்திய கண்ணன் வியப்புடன் கேட்டான்.

“அம்மா! அழுதுகொண்டு இருக்கிறாயா?”

*****

அடுத்த நாள் மாலை ராஜேஸ்வரி சமையல் செய்தாள்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கண்ணன் சாப்பிட்டான். வயிறு நிரம்பியதும் தூக்கம் கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது. முன் அறையில் வந்து படுத்துக்கொண்டான். ராஜேஸ்வரியும் உண்டு முடித்தாள். தட்டை அலம்பாமலேயே வந்து கண்ணன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.

அம்மா அருகில் இருக்கும் கண்ணனுக்கு பயமாக இருக்காது.

தூக்கத்தில் புரண்டு படுத்தான்.

தட்டை சுற்றிலும் கீழே விழுந்த படுக்கைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த எலி சத்தம் கேட்டு பயந்து துள்ளிக் குதித்துவிட்டு கண்ணன் மீது விழுந்து ஓடியது.

திடீரென்று கண்ணனுக்கு விழிப்பு வந்தது. கண்களைத் திறந்து பார்த்தான். அந்த நிமிடம் ஏனோ பயமாக இருந்தது.

“அம்மா!” முணுமுணுப்பது போல் அழைத்தான்.

கீற்றுக்கள் இல்லாத இடத்தில் வானம் தெளிவாக தென்பட்டது.

கீழே பாய் இருக்கவில்லை. சட்டென்று எழுந்து சுற்றிலும் கையால் துழாவினான். தரையின் ஈரம் பட்டு கை பிசுபிசுத்தது. விரலில் பருக்கை ஒட்டிக்கொண்டது. தான் படுத்திருக்கும் இடத்தைப் பற்றி சந்தேகம் வந்தும், “அம்மா!” என்று அழைத்தான்.

ராஜேஸ்வரி பதில் குரல் கொடுக்கவில்லை. அவள் அங்கு இருக்கவில்லை.

சுவர்கள் இடிந்து விழுவது போல், வானம் கீழே இறங்கி தான் அந்தப் பள்ளத்தாக்கில் விழுவது போல் கண்ணனுக்குத் தோன்றியது. சுவற்றின்மீது விகாரமாய் நாட்டியமாடிக் கொண்டிருந்த நிழல்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு! எழுந்து ஒரு அடி முன்னால் வைத்தான். கால் கட்டை விரல் வாசற்படியில் இடித்து தாங்க முடியாத வலி ஏற்பட்டது. ஆனால் அழுகை வரவில்லை.

தனக்கேதோ அநியாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். தான் இல்லாமல் இரவு கழிந்து கொண்டிருக்கிறது. தன்னை விட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கிறாள். கண்ணனுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

வாசற்கதவைத் தாங்கிக்கொண்டு, “அம்மா!” என்று அழைத்தான்.

அந்தக் குரலில் வேதனை இருக்கவில்லை. பயம் இருந்தது. வாசற்படி அருகில் நின்றிருந்த கண்ணனைத் தாண்டிக்கொண்டு சுவாமிநாதன் வேகமாக வெளியேறினான். கண்ணனும் ராஜேஸ்வரியும் தனியாக இருந்தார்கள்.

இரண்டடி முன்னால் வைத்து உள்ளே சென்றான். எண்ணெய் தீர்ந்து விட்டது போலும். விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது.

கண்ணன் இன்னும் ஒரு அடி முன்னால் வைத்து தாயின் அருகில் சென்று முழங்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தான். லேசாக நடுங்கும் குரலில், “அம்மா! பயமாக இருக்கிறது” என்றான்.

ராஜேஸ்வரி கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுத்தாள். “இப்படி வந்து படுத்துக்கொள் கண்ணா” என்றாள்.

கண்ணன் தாயின் அருகில் படுத்துக்கொண்டு நிம்மதியாக மூச்சை விட்டான். தூக்கம் வரவில்லை. தண்ணீரில் தத்தளிக்கும் மீனை போல்  எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன.

எதுவுமே இல்லாத சூனியத்தில் வேகமாய் சுழன்று கொண்டிருந்த, கணக்கில் அடங்காத எண்ணற்ற கோளங்களுக்கு நடுவில் பூமி! அதன் மீது வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவராசிகள். வாழ்க்கையே ஒரு போராட்டம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் அந்த இரண்டு உயிர்கள். காலத்தால் அடையாளம் காண முடியாத ஜீவன்கள்.

கண்ணன் சொன்னான். “அம்மா! நீ இல்லாத போது எனக்கு பயமாக இருக்கு. இன்மேல் என்னை இப்படி தனியாக விட்டுவிட்டுப் போக மாட்டாயே?”

ராஜேஸ்வரி பதில் பேசவில்லை. இதயம் வெடித்து சுக்கு நூறாகாமல் வைராக்கியம் தடுப்புச் சுவராகச் செயல்பட்டது.

“சொல்லும்மா.” மீண்டும் கேட்டான்.

கடல் அலைகளை போல் வேதனை பொங்கி வந்தது. அதைத் தடுக்கத்தான் முடியுமா!

கண்ணனை அருகில் இழுத்துக்கொண்டு, “உன்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயும் போக மாட்டேன் கண்ணா. இனி தூங்கு” என்றாள்.

கண்ணன் கண்களை மூடிக்கொண்டான். தொலைவிலிருந்து கூர்க்காவின் விசில் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கரிச்சான் குஞ்சு ஒன்று விகாரமாய் கத்திக்கொண்டே பறந்து போயிற்று. கண்ணன் கண்களைத் திறந்து தாயின் பக்கம் திரும்பிக் கேட்டான்.

“நாளைக்கு சமையல் செய்வாயா அம்மா.”

 

Series Navigationதொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .பாசத்தின் விலை
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *