பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

நன்றி கெட்ட மனிதன்

 

ரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு  நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

 

தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் பிராமணன், ஒரு நாள் தூரப் பயணம் புறப்பட்டான். கொஞ்ச நாட்களிலேயே ஒரு காட்டுக்குள் புகுந்தான். பசியால் வாடி தண்ணீர் தேடியபடி திரிந்தான். அப்படித் திரிகிற நேரத்தில் ஒரு இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருக்கக் கண்டான். அந்தக் கிணற்றைச் சுற்றிப் புல் புதர்கள் செறிந்து வளர்ந்து கிடந்தன. கிணற்றை நெருங்கி எட்டிப் பார்த்தான். ஒரு புலியும், குரங்கும், பாம்பும், மனிதனும் கிணற்றில் இருப்பதைக் கண்டான். அவையும் இவனைப் பார்த்து விட்டன.

‘இவன் மனிதன்தான்’ என்று உணர்ந்த புலி, ”நல்லவனே! உயிர் காப்பது ஒரு பெரிய தர்மம். அதை எண்ணி என்னை வெளியே தூக்கிவிடு. அன்புள்ள மனைவி மக்கள் சிநேகிதர்களோடு நான் மீண்டும் கூடி வாழ்வேன்” என்றது.

 

”உன் பெயரைக் கேட்டாலே எல்லா ஜீவராசிகளும் நடுங்ப் போகின்றனவே! எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது” என்றான் யக்ஞதத்தன்.

 

புலி சொல்லிற்று: ”கேள்!

 

பிராம்மணனைக் கொன்றவனுக்கும் குடிகாரனுக்கும், நபும்சகனுக்கும், விரதம் மீறியவனுக்கும், சதிகாரனுக்கும், பெரியவர்கள் பிராயச்சித்ம் விதித்திருக்கிறார்கள். ஆனால் செய்ந்நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தம் எதுவும் கிடையாது.

 

என்னால் உனக்கு அபாயம் வராது என்று முக்காலும் சத்தியம் செய்கிறேன். இரக்கம் காட்டு: வெளியே தூக்கிவிடு!” என்று கேட்டுக் கொண்டது.

 

பிராமணன் யோசித்துவிட்டு, கடைசியில் ‘ஜீவராசிகளின் உயிரைக் காப்பதில் ஆபத்து ஏற்பட்டால் அதுவும் நன்மைக்கே’ என்று முடிவு செய்தான். புலியை வெளியே தூக்கிவிட்டான்.

 

பிறகு குரங்கும் அவனைப் பார்த்து, ”சாதுவே, என்னையும் தூக்கிவிடு” என்றது. அதையும் வெளியே தூக்கிவிட்டான்.

பாம்பு, ”பிராமணனே, என்னையும் தூக்கிவிடு” என்றது.

 

”உன் பெயரைக் கேட்டாலே உடல் நடுங்குகிறது. பிறகு தொடுகிறதைப் பற்றிக் கேட்கவேண்டுமா?” என்றான் பிராமணன்.

 

”கடிக்கிறதா வேண்டாமா என்பது எங்கள் கையில் இல்லை. யாருக்கு அப்படி விதி இருக்கிறதோ அவர்களைத்தான் கடிக்கிறோம். உன்னைக் கடிப்பதில்லை என்று மூன்று தரம் சத்தியம் செய்கிறேன். நீ பயப்படாதே!” என்றது பாம்பு. பிராமணன் பாம்பையும் தூக்கித் தரைமீது விட்டான்.

 

பிறகு அவையெல்லாம் அவனைப் பார்த்து, ”அதோ கிணற்றுக்குள் இருக்கிறானே, அந்த மனிதன்! அவன் சகல பாபங்களும் செய்யத் துணிந்தவன். சர்வ ஜாக்கிரதையாக இரு! அவனை மட்டும் வெளியே தூக்கி விடாதே, நம்பவே  நம்பாதே!” என்று சொல்லின.

 

மேலும் புலி, ”அதோ, அங்கே பல சிகரங்களுடன் ஒரு மலை தெரிகிறதே, அந்த மலைக்கு வடபுறத்தில் ஒரு அடர்ந்த காட்டில் என் குகை இருக்கிறது. அங்கே ஒருநாள் நீ வந்து என்னைக் கௌரவிக்க வேண்டும். உனக்குப் பிரதியுபகாரம்  செய்ய விரும்புகிறேன். அதனால் இந்த ஜன்மத் தோடு இந்தக் கடன் தீர்ந்து போகட்டும்” என்று சொல்லிவிட்டுக் குகையை நோக்கிப் போய்விட்டது.

 

பிறகு குரங்கு, ”அந்தப் புலியின் குகைக்கு எதிரேயுள்ள நீர் வீழ்ச்சிக்குப் பக்கத்திலே என் ஜாகை. வந்துவிட்டுப்போக வேண்டும் நீ!” என்று அழைத்து விட்டுச் சென்று விட்டது.

 

அதன்பிறகு பாம்பும் ”அவசியமேற்படுகிறபோது என்னை நினைத்துக் கொள், உடனே வந்துவிடுவேன்!” என்று சொல்லிவிட்டு வழியே போயிற்று.

 

பிறகு கிணற்றிலிருந்து மனிதன், ”ஏ பிராமணா! என்னையும் தூக்கிவிடு” என்று கூவினான். திரும்ப திரும்பக் கத்திக் கொண்டே இருந்தான். பிராமணனுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. ‘அவனும் நம்மைப்போல் ஒரு மனிதன்தானே’ என்று எண்ணி அவனை வெளியே தூக்கிவிட்டான். வெளி வந்ததும் அந்த  மனிதன், ”நான் ஒரு தட்டான். பிருகுகச்சம் என்கிற நகரில் இருக்கிறேன். தங்கத்தில் ஏதாவது செய்ய வேண்டியதிருந்தாலும் என்னிடம் வா!” என்று சொல்லிவிட்டு வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போய்விட்டான்.

பிறகு பிராமணன் எங்கெங்கெல்லாமோ சுற்றிப் பார்த்தான். சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி நடந்துகொண்டே போகையில் குரங்கு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அதன் ஜாகைக்குப் போய் குரங்கைக் கண்டான். அமிர்தத்துக்கு ஈடான நல்ல பழங்களைக் குரங்கு கொடுத்து உபசரித்தது. களைப்புத் தீர்ந்து உட்கார்ந்திருந்த அவனிடம், ”பழங்கள் வேண்டுமென்றால் இஷ்டப்பட்டபொழுது வந்துவிட்டுப்போ!” என்று சொல்லிற்று.

 

”ஒரு நண்பன் செய்ய வேண்டியதையெல்லாம் நீ செய்துவிட்டாய். எனக்கு இப்பொழுது புலியைக் காட்டு!” என்றான் பிராமணன்.

 

குரங்கு அவனை அழைத்துப்போய் புலியைக் காட்டியது. புலியும் அவனை அடையாளம் கண்டுகொண்டு, தங்கத்தாலான மாலை முதலிய நகைகளைப் பிரதியுபகாரமாகக் கொண்டுத்து, ”யாரோ ஒரு அரசகுமாரன் இவற்றை அணிந்துகொண்டு குதிரை மேலேறி வந்தான். குதிரை வழிதவறித் தனியே இந்தத் திசையில் ஓடி வந்தது. என் அருகில் வந்ததும் அரச குமாரனைக் கொன்று விட்டேன். அவன் அணிந்திருந்த இந்த நகைகளை யெல்லாம் எடுத்து உனக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எடுத்துக் கொண்டு, விரும்பிய திசையில் போ” என்றது.

 

அவற்றைப் பெற்றுக்கொண்ட பிராமணனுக்குத் தட்டான் ஞாபகம் வந்தது. ‘இதை விற்பதற்கு அவன் உதவுவான்’ என்று நினைத்து அவனிடம் போனான் தட்டான் மரியாதையோடு அவனுக்கு கை கால் கழுவ நீர் கொடுத்து அர்க்கியம் ஆசனம் தந்து கௌரவித்தான். உணவும் நீரும் அளித்தான். இன்னும் பல நற்செய்கைகளையும் செய்துவிட்டு, ”உங்கள் கட்டளைப்படி செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

 

”நான் பொன் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீ விற்க வேண்டும்” என்று சொன்னான் பிராமணன்.

 

”எங்கே, அதைக் காட்டு, பார்க்கலாம்” என்று தட்டான் சொன்னதும், பிராமணன் தங்க நகைகளை எடுத்துக் காட்டினான். அவற்றைப் பார்த்ததும் தட்டான், ‘இவற்றை நான்தானே அரசகுமாரனுக்காகச் செய்து கொடுத்தது’ என்று தனக்குள்ளாகவே சிந்தித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தான். ”இவற்றை யாரிடமாவது காட்டி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று பிராமணனிடம் சொல்லிவிட்டு நேராக அரண்மனைக்குப் போனான். அரசனிடம் அந்த நகைகளைக் காட்டினான். அவற்றைக் கண்ட அரசன், ”இவை உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்டான்.

 

”என் வீட்டில் ஒரு பிராம்மணன் இருக்கிறான். அவன்தான் இவற்றைக் கொண்டு வந்தான்” என்று தட்டான் பதில் சொன்னான்.

 

இதைக் கேள்விப்பட்டதும், நிச்சயமாக அந்தத்  துராத்மாதான் என் மகனைக் கொன்றிருக்க வேண்டும்; அதன் பலனை அவன் அனுபவிக்கட்டும்’ என்று அரசன் தீர்மானித்து, உடனே காவலாளிகளைப் பார்த்து, ”அந்தப் பிராம்மணப் பதரைக் கைது செய்து இரவு கழிந்தவுடன் கழுவில் ஏற்றுங்கள்” என்று உத்தரவிட்டான்.

 

காவலாளிகள் பிராம்மணனைக் கட்டிப்போட்டார்கள். அவன் பாம்பை நினைத்துக் கொண்டதும், பாம்பு அவனிடம் வந்து, ”என்னை இந்தக் கட்டிலிருந்து விடுவி” என்றான் பிராமணன். அதற்கு அந்தப்பாம்பு, ”நான் போய் அரசன் அன்பு வைத்துள்ள ராணியைக் கடிக்கிறேன். பெரிய பெரிய மந்திரவாதிகள் எல்லோரும் வந்து மந்திரம் ஓதுவார்கள். மற்ற வைத்தியர்களும் வந்து விஷத்தை முறிக்கும் மருந்துகள் தடவுவார்கள். ஒன்றுக்கும் மசியாமல் விஷத்தை எடுக்காமல்  இருந்து கொள்கிறேன். நீ வந்து ராணியைத் தொடு உடனே விஷம் நீங்கிவிடும். உன்னை விடுதலை செய்து விடுவார்கள்” என்று கூறி, சத்தியம் செய்து கொடுத்துவிட்டுப் போய் பட்டத்து ராணியைக் கடித்தது. உடனே அரண்மனையெங்கும் கூக்குரல் எழுந்தது. ஊரெங்கும் கவலை பரவியது. கருட மந்திரம் அறிந்தவர்கள் என்ன, மந்திரவாதிகள் என்ன, தந்திரவாதிகள் என்ன, எல்லோரும் வந்தார்கள். வைத்தியர்களும், மற்ற நாட்டினரும் வரவழைக்கப்பட்டார்கள். எல்லோரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பார்த்தார்கள். என்ன செய்தும் விஷம் இறங்கவில்லை. பிறகு ஊரெங்கும் முரசறைவித்தனர். அதைக்கேட்ட பிராமணன், ‘நான் விஷத்தை இறக்குகிறேன்’ என்று தெரிவித்தான். உடனே காவலாளிகள் அவனைக் கட்டவிழ்த்து அரசனிடம் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். ‘விஷத்தைத் தாங்கள் இறக்குங்கள்’ என்று அரசன் அவனைக் கேட்டுக் கொண்டான். பிராமணன் ராணியருகில் சென்று தொட்ட மாத்திரத்தில் விஷம் நீங்கிவிட்டது.

 

புத்துயிர் பெற்ற ராணியைக் கண்டான் அரசன். பிராம்மணனுக்குப் பூஜை முதலிய கௌரவங்கள் செய்தான். கொடை வழங்கினான். எலாம் ஆனபிறகு ”உண்மையைச் சொல்லுங்கள். அந்த நகைகள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று பிராமணனைக் கேட்டான்.

 

பிராமணன் தனது அனுபவங்களை ஆதியோடந்தமாய், நடந்தது நடந்தபடி, விவரித்தான். விவரமறிந்ததும் அரசன் அந்தத் தட்டானைக் கைது செய்து சிறையிலிட்டான். பிராமணனுக்கு ஆயிரம் கிராமங்கள் தானம் அளித்தான். தன் மந்திரியாகவும் நியமித்துக் கொண்டான். அந்தப் பிராமணன் போய் தன் குடும்பத்தை அழைத்து வந்து, உற்றாரும், கற்றாரும் சூழ இருந்து, உண்டு களித்தான். பல யாகங்கள் செய்து புண்ணியம் தேடிக் கொண்டு, எல்லா ராஜ்ய அலுவல்களையும் சீராகக் கவனித்துச் சுகமாக வாழ்ந்தான்.

 

ஆகையால்தான், ‘புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன  பேச்சை…’ என்றெல்லாம் சொல்லலானேன்.

 

சுற்றத்தான், சிநேகிதன், அரசன், குரு  இவர்கள் அத்துமீறி நடந்தால், அவர்களைத் தடுக்க வேண்டும். தடுக்க முடியாமற்போனால், பிறகு அவர்கள் போகிற போக்கிலே நீயும் போகவேண்டி நேரிடும்

 

என்றது தமனகன். மேலும் தொடர்ந்து, ”அரசே! (சஞ்சீவகன்) துரோகி, ஏனென்றால்,

 

நற்செய்கையுடையவனுக்கு ஆசைகள் இருக்கக்கூடாது; நண்பன் என்கிறவன் இடுக்கண்களை களைந்தெறிய வேண்டும். இதுதான் நன்னடத்தை என்று சான்றோர் சொல்கின்றனர். மற்றதெல்லாம் தீய நடத்தையே.

 

பாவம் செய்யாதபடி யார் தடுக்கிறானோ அவனே உண்மையான அன்பன்; நல்ல காரியம் என்பது குற்றமற்றிருக்கும்; எவள் கணவன் மனமறிந்து நடக்கிறாளோ அவளே  நல்ல மனைவி; யார் பெரியோர்களால் புகழப் படுகிறானோ அவனே புத்திமான்; யார் கர்வம் கொள்வதில்லையோ அவனே புகழ் பெறுவான்: யார் பேராசை கொள்வதில்லையோ அவனே சுகம் பெறுவான்; யார் தயக்கமின்றி உதவிக்கு வருகிறானோ அவன் நண்பன்; யார் ஆபத்துக்காலத்திலும் மனச்சஞ்சலம் அடைவதில்லையோ அவனே மனிதன்.

 

நெருப்பில் தலைவைத்துப் படுத்தாலும் படுத்துக் கொள்; பாம்புகளைத் தலையணையாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்! ஆனால், தவறான வழியில் செல்கிறவன் உயிர் நண்பனாயிருந்தாலும் அவனை ஆதரிக்காதே.

 

ஆகையால், சஞ்சீவகனோடு தாங்கள் உறவு கொள்வதால் அறம், பொருள், இன்பம் மூன்றுக்கும் பாதகம் விளைக்கும் மூன்றுவித தவறுகள் செய்கிறீர்கள். பலவிதங்களிலும் சொல்லிப்பார்த்தேன்! என்ன வார்த்தையைக் கேட்காமல் இஷ்டம்போல் நடந்துவருகிறீர்கள். அதனால் எதிர்காலத்தில் கஷ்டங்கள்தான் வந்து சேரும். அப்போது என்னை நிந்தித்துப் பலனில்லை.

 

மமதை கொண்ட மன்னன் தான் செய்யும் காரியங்களையும், அவற்றின் நன்மை தீமைகளையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மதயானைபோல் தன்னிச்சையாக நடக்கிறான். பின்னால் மானபங்கம் அடைந்து, சோகக் குழியில் விழும்போது, வேலைக்காரன்மேல் பழி சுமத்துகிறான். தன் மண்டைக் கனத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை என்கிற பழமொழியைத் தாங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

 

”சரி, நிலைமை அப்படியென்றால், அதனை எச்சரிக்கட்டுமா என்றது சிங்கம்.

 

”என்ன, எச்சரிக்கிறீரா? அதென்ன கொள்கை?

 

எச்சரிக்கப்பட்டவன், பயந்துபோய், கெடுதி செய்வதற்கோ தாக்கு வதற்கோ முந்திக்கொள்கிறான். ஆகவே பகைவனைக் காரியத்தால் எச்சரிக்க வேண்டுமே யல்லாமல் வார்த்தையால் எச்சரிக்கக்கூடாது” என்றது தமனகன்.

 

”கேவலம் புல் தின்கிற பிராணிதானே அது! மாமிச பக்ஷ¢ணியாகிய எனக்கு அது என்ன கெடுதி செய்ய முடியும்?” என்றது பிங்களகன்.

 

”வாஸ்தவந்தான். அது புல் தின்பது;  நீங்கள் மாமிசம் தின்பவன். அது சாப்பாடு; நீங்கள் சாப்பிடுகிறவர். அப்படியிருந்தபோதிலும், தன்னால் கெடுதல் செய்ய முடியாமற் போனாலும் மற்றவர்களைக் கொண்டு அது கேடு விளைவிக்கலாம்.

 

வலிமையற்ற மூடன் தீமை செய்வதற்கு இன்னொருவனை ஏவிவிடுகிறான். சாணைக்கல் தானாகவே எதையும் வெட்டுவதற்குச் சக்தியில்லாமலிருக்கிறது. என்றாலும், அது கத்தியைக் கூர்மையாகத் தீட்டித் தருகிறது அல்லவா?

 

என்கிற பழமொழயைத் தாங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்றது பிங்களகன்.

 

”உங்கள் உடம்பைப் பாருங்கள், கணக்கற்ற மதயானைகள், எருதுகள், காட்டெருமைகள், பன்றிகள், புலிகள், சிறுத்தைகளோடு சண்டைசெய்து நகங்களும் பற்களும் உண்டாக்கிய காயங்களின் வடுக்கள் உங்கள் உடம்பெல்லாம் இருக்கின்றன. சஞ்சீவகனோ எப்பொழுது பார்த்தாலும் தாங்கள் பக்கத்திலேயே இருந்து கொண்டு சாணமும் மூத்திரமும் கழித்து சுற்றிலும் அசுத்தம் செய்கிறது. அவற்றிலிருந்து கிருமிகள் உற்பத்தியாகும். அந்தக் கிருமிகள் பக்கத்திலிருக்கும் உங்கள் உடம்பிலே வடுக்கள் வாயிலாகப் புகுந்து குடைந்து கொண்டே போய்விடும். அதனால் தாங்கள் செத்த மாதிரி தான். இந்தப் பழமொழியைக் கேளுங்கள்:

முன்பின் தெரியாதவனுக்கு ஜாகை தராதே; டுண்டுகம் என்கிற தெள்ளுப் பூச்சியின் குற்றத்தால் மந்தவிசர்ப்பிணி என்ற என்கிற சீலைப்பேன் உயிர்விட்டது

 

ஒரு பழமொழி உண்டு” என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்