பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]

Spread the love

வளவ. துரையன்
ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது அனுபவத்தை உள்வாங்கி எழுதுவது. இந்த இரண்டாவது வழியில் பயணம் செய்வது கொஞ்சம் கடினம். ஆனால் தேர்ந்த படைப்பாளன் எல்லாவழிகளையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான். இரு வழிகளிலும் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற படைப்பாளர்கள் பலர் உண்டு. ஆனால் வாசகனுக்குப் படைப்பாளன் நன்கு அறிமுகமாகி இருந்தால் மட்டுமே படைப்பாளனின் வழியை அறிய முடியும். வாசகன் ஒரு படைப்பை அணுகி உள்வாங்க இந்த இரண்டு வழிகளில் எந்த வழி என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை என்பதும் உண்மைதான்.
அதிகம் சந்தித்துப் பேசியதில்லை என்றாலும் கண்மணி குணசேகரனை நான் ஒரு சில ஆண்டுகளாக அறிவேன். பெரும்பாலும் அவரது படைப்புகள் நாவலாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி அவை அவரது அனுபவத்தின் வெளிப்பாடுகள்தாம். அவரது முதல் நாவல் “அஞ்சலை”யின் நாயகி அவர் நன்கு அறிந்த பெண்மணிதான். அதுபோல ”கோரை” நாவலும் அவர் பழகும் களத்தின் அனுபவ வெளிப்பாடுதான். அண்மையில் அவரது சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு அவரிடம் தொலைப்பேசியில் உரையாடும்போது அக்கதை பற்றிக் கேட்டேன்.
அவர் சொன்னார் “ஆமாண்ண! நம்ம தெருவில் இருக்கற பொண்ணுதாண்ண அது”
எனவேதான் அவரின் ”நெடுஞ்சாலை” நாவலைப் படிக்கும்பொழுது அவர் பணி புரியும் தளத்தில் படைத்திருப்பதை உணர முடிந்தது. பெரும்பாலும் நாவலின் நிகழ்வுகள் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனையிலேயே நடக்கின்றன. ஆனால் ஒன்று. “பாத்தியா? கை நீட்டினா நிக்காம போறான்; அவனுக்கு என்னாப்பா? டெப்போ கேட்டை வண்டி தாண்டிட்டா சம்பளம் உண்டுப்பா; சீட்டு ஏறினா அவனுக்கென்ன ஏறாட்டா அவனுக்கென்ன? இந்த கொழந்தைக்குக் கூடவா சீட்டு வாங்கணும்? இதுக்கு ஏம்பா லக்கேஜு? கவர்மெண்டுக்கு நீதான் சேர்த்துக் குடுக்கப் போறியா?” என்றெல்லாம் வாய் ஜாலம் அடிப்பவர்கள் ஓட்டுநரும் நடத்துனரும் பணிமனை மேலாளரிடமும், பொதுமக்களிடமும் படும் பாட்டை இந்தப் புதினத்தில் அறிந்தால் சற்றுத் தங்கள் பேச்சை அடக்கிக் கொள்வார்கள் என்பது நிச்சயம். தனியார் பேருந்தில் பணிபுரிபவர்களும் முதலாளி வீட்டில் அனுபவிக்கும் வேதனைகளும் இதில் உண்டு
இந்த நாவலின் மையம் என்று ஒன்றையுமே சொல்ல முடியா விட்டாலும் முக்கியமான மூன்று பேரைக் குறிப்பிட்டு இவர்களைச் சுற்றியே நாவல் பின்னிப் பிணைந்திருப்பதைச் சொல்லலாம். அவர்கள்தாம் அய்யனார், ஏழைமுத்து, தமிழரசன் ஆகியோர். இவர்கள் எல்லாருமே விளிம்பு நிலையில் வாழ்பவர்கள். எப்படியாவது உழைத்துத் தானும் முன்னேறித் தம் குடும்பத்தையும் முன்னுக்குக் கொண்டு வரத்துடிப்பவர்கள். தாம் மேற்கொண்ட பணியில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்கள். ஆனால் வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர்களைச் சுழன்று சுழன்று அடிக்கிறது. மூவருமே ஒருவர்க்கொருவர் துன்பம் நேர்கையில் ஆறுதல் சொல்லிக் கொண்டு இந்த வாழ்க்கையை ஓட்டுபவர்கள். மூவருக்குமே பணி நிரந்தரமாகவில்லை. அதன் காரணமாகவே அவர்களது பணியிலும் ஏகப்பட்ட இடைஞ்சல் அவமானங்களும் சந்திக்க நேரிடுகிறது.
பணிமனையைப் பொருத்தவரை மூவருமே சி.எல் எனப்படும் [Casual Labour ] தினக் கூலி ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்த சி. எல்லிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று நிர்வாகமே ஆளெடுத்துப் போடுவது. மற்றொன்று கிளை மேலாளர் எனப்படும் பி.எம்மே பார்த்துப் போடுவது. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்தான் தமிழரசன். நடத்துனராக அவன் முதல் நாள் வேலை பார்க்கும் போதே பேருந்தில் ஒரு சீட்டு குறைய எல்லாரையும் எடுத்தீர்களா என்று கேட்டு எரிச்சலடைந்துபோய்க் கடைசியில் அதில் பயணம் செய்யும் அய்யனாரைக் கண்டு பிடிக்கிறான். அய்யனாரோ அவன் பணிமனையில் வேலை செய்வதால் சீட்டு எடுக்க வில்லை. இந்த சிறு மோதலில் தொடங்கும் இருவரின் சந்திப்பு நாவலின் கடைசிப் பக்கத்தில் ஐயனாரைத் தங்கள் துயர் துடைக்க வந்த கடவுளாகவே கருதும் அளவிற்குக் கருதும் அளவிற்கு நெருக்கத்தைக் கொடுக்கிறது.
அய்யனார் பணிமனையில் பேருந்தின் பழுது நீக்கும் தொழில் நுட்பப்பணியாளராக இருக்கிறான். ஆனால் அவன் பெயர் சொல்லி யாரும் பெரும்பாலும் அழைப்பதில்லை. எல்லார்க்குமே அவன் ’டெக்னிக்கலு’ தான். நடத்துநரான தமிழரசனும் ஓட்டுநரான ஏழைமுத்துவும் எல்லார்க்கும் ’சி.எல்’ லுதான். தற்காலிகப் பணியாளர் எவ்வளவுதான் நேர்மையாக கடுமையாக உழைத்தாலும் நிரந்தரத் தொழிலாளரோ அல்லது மேலதிகாரிகளோ அவர்களைப் பாராட்டுவதில்லை என்பது எல்லாத்துறைகளிலும் இருக்கும் தேசியகீதம்தான். பாராட்டாவிட்டாலும் கூடப்பரவாயில்லை. இன்னும் கடுமையான பணிகளைத் தருவதும் அதுவும் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்யச் சொல்வதும் வழக்கமான சில நடைமுறைகளாகும். இதற்காக அவர்கள் கூச்சப்படுவதில்லை. கண்மணி ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளைச் சொல்லி அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை நம் மனத்தில் பதிய வைக்கிறார்.
தினக் கூலிகளாக இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பணிகளும் தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை. நிரந்தரத் தொழிலாளர் இல்லாதபோதுதான் இவர்களுக்கு வேலை போடுவார்கள். அதற்காக இவர்கள் சில சமாதானங்களும் செய்து கொள்ள வேண்டி உள்ளது. இப்படி யாருமே இதுவரை அறிந்திராத ஒரு களத்தைக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
மூவர் வாழ்க்கையிலும் பெண்கள் வந்து போகிறார்கள். அவர்களால் மூவர் நிம்மதியும் குலைகிறது. பேருந்தில் வந்துபோகும் கலைச்செல்வியைக் காதலிக்கிறான் நடத்துநர் தமிழரசன். ஒரு கட்டத்தில் இவனைத் தவிர்க்கிறாள். அவள் பயணம் செய்த பேருந்தில் அவன் பணிபுரிகையில் அவள் பேசாமலிருக்க அந்த நினைப்பில் நான்கு பேருக்கு சீட்டு போடாமல் விட்டுவிட அதனால் பணிபோகிறது.
ஏழைமுத்துவிற்கோ வேறுவிதம். அவனுக்கும் பார்வதிக்கும் மணமாகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதைக்குத்திக்காட்டிப் பேசும் ஏழைமுத்துவின் அம்மாவிற்கும் பார்வதிக்கும் எப்பவும் சண்டைதான். வீட்டில் அவ்னுக்கு நிம்மதி இல்லை. அவன் காதலித்த கனகா இப்போது வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுகிறாள். அவள் கணவனோ அவளைப் போட்டுக் கொடுமைப் படுத்துகிறான். ஒருநாள் ஏழை முத்து பணிநேரத்தில் கனகாவின் கணவன் கனகாவை அடிப்பதைப் பார்த்து போய்த் தடுக்க முயல அவள் கணவன் கீழே விழுந்து அடிபடுகிறான். அடிபட்டவன் துணை மேலாளர்க்குச் சொந்தக்காரன் வேறு. எனவே ஏழைக்குப் பணி போய்விடுகிறது. இப்படி இருவர்க்கும் வேலை போனதை “இப்படி அடுத்தடுத்து இருவர்க்கும் டூட்டி இல்லாமல் போனது அய்யனாருக்கு இரண்டு கைகளும் இல்லாமல் போனது மாதிரி போய்விட்டது” என்று கூறி அவர்களின் நெருக்கத்தை நமக்குப் புரிய வைக்கிறார் கண்மணி குணசேகரன்.
பணிமனையில் பழுது பார்த்து அனுப்பிய வண்டி மீண்டும் வழியில் பழுதானால் அதைக் காரணம் காட்டி முதலில் பணி நீக்கம் செய்யப்படுவது இந்த சி. எல் லுகள்தாம். அதேதான் அய்யனாருக்கு நேரிடுகிறது. வேலை இல்லாதபோது அவன் பழைய கொத்தனார் வேலைக்குச் செல்ல அங்கே முன்பு அவனுடன் உறவு வைத்திருந்த பழைய சித்தாளான சந்திராவின் தொடர்பு ஏற்படுகிறது. அவளும் அய்யனாரும் மீண்டும் உறவு கொள்வதுதான் நாவலின் அழகியல். சுமார் 27 பக்கங்களில் நாவலாசிரியர் கம்பிமேல் நடப்பதுபோல் அதை எழுதிச் செல்கிறார்.
நாவலின் இறுதிக்கட்டம் மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. எப்படி குதிரைப் பந்தயத்தில் ஓடும் குதிரை தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கி போகப் போக வேகமெடுக்கிறதோ அதேபோல் இப்புதினம் செல்கிறது. இன்மேல் இந்தப் போகுவரத்துக்கழக அரசுப்பணியே வேண்டாம் என முடிவெடுத்து ஏழைமுத்துவும், தமிழரசனும் தங்கள் உரிமங்களை வாங்கப் பணிமனை செல்கிறார்கள். அங்கே ”வேறு வழியே இல்லை. நீங்களிருவரும் இந்தப் பேருந்தைக் கோணான்குப்பம் திருவிழாவிற்கு ஓட்டிட்டுப் போயிட்டு வந்திருங்க” என்று கிளைமேலாளர் என்று இவர்கள் தலையில் ஒரு பேருந்தைக் கட்டினார். அதுவோ சாகக்க்கிடக்கிற கிழவன் கதியில் நின்று கொண்டிருந்தது. கிழிந்த ஓட்டுநர் இருக்கை, தள்ளிக் கிளப்ப வேண்டிய நிலை, முன் விளக்குகள் சரியாய் எரியாத நிலை,சத்தமாய் ஒலிக்காத ஒலிப்பான், குறைவான பிரேக், இறுகப்பிடிக்கும் ஸ்டிரியங் இத்த்னை நோய்களுடன் இருந்தது. அதிகாரிகள் எப்படியும் திருவிழாக்களுக்கு சிறப்பு வண்டிகள் ஓட்டிக் காட்டவேண்டிய நிலை; அவர்களுக்கு நெருக்கடி இப்படி;
எவ்வளவோ சொல்லி மறுத்தும் இவர்கள் அனுப்பப்படுகிறார்கள். ஆனால் அங்கே போனால் விதி மீண்டும் தொடர்கிறது. அதே வண்டி அப்படியே சென்னைக்கு சிறப்பு வண்டியாக மாற்றப்படுகிறது. அளவுக்கு மீறிய பயணிகள் ஏற ஏழைமுத்து தன் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓட்டுகிறான். வழியில் விழுப்புரத்தில் டயர் பஞ்சர்; ஒருவாறு சென்னை போய்ச் சேர்வானா மாட்டானா என நாம் கதிகலங்கும் அளவிற்கு அதே நேரத்தில் அப்பேருந்தில் செல்லும் பயணிகளைப் பயன்படுத்தி மிக யதார்த்தமாகக் கதையைச் சொல்கிறார் கண்மணி. சென்னையையே பார்த்திராத தமிழும் ஏழையும் ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்து வழியில் பல விபத்துகளைக்கண்டு மனம் பதைத்துத் திரும்பி மடப்பட்டு வரை வந்து விடுகிறார்கள். அங்கே பேருந்தின் ’ரியர் ஜாயிண்ட்’ கழன்றுவிட வண்டி நின்றுபோகிறது. தகவல் போய் அய்யனாரே பணிமனையிலிருந்து பழுது பார்க்க சாமன்களுடன் வந்து சேர மூவரும் ஒன்று சேரப் பேருந்து பரிதாபமாய் நின்றுகொண்டிருக்க கருப்பு நதிபோல நெடுஞ்சாலை ஓடிக்கொண்டிருக்கிறது. நாவலும் முடிகிறது.
இங்கே கண்மணி ஒரு வரி எழுதி இருக்கிறார். “ஏழை தனது தோளில் இருக்கும் கனத்த இரும்புத் தண்டான ரியர் ஜாயிண்டால், சரிந்து கிடக்கும் இந்த நாட்டையே நெம்பித் தூக்கி நிறுத்திவிடுகிற மாதிரியான உற்சாகத்தில் ரோட்டை நோக்கித் திரும்பினான்.’ ஆமாம். இதுபோன்ற கடுமையான நேர்மையான குறைந்த ஊதியம் வாங்கும் கருமமே கண்ணான தொழிலாளர்கள்தாம் இந்த உலகைத் தூக்கி நிறுத்தமுடியும். அவன் தோளில் இருக்கும் கனத்த இருய்புத் துண்டுதான் அவன் நம்பிக்கை. அதுதான் வேண்டும். ஆனால் அவர்கள் அர்ப்பணிக்கும் உழைப்பு யாருக்கும் தெரியாது. அவர்கள் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காதவர்கள்.
நாவலின் நடை கண்மணிக்கே உரியது. ஓரிடத்தில் “தொலம்பரமா” என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார். பொருள் தெரியாவிட்டால் கூட சூழலை வைத்து என்ன சொல்கிறார் என்பதை உணரலாம். தொழில் நுட்பச்சொற்களான சில ஆங்கிலச் சொற்களுக்கு நூலின் இறுதியில் விளக்கம் கொடுத்திருப்பது உதவியாய் உள்ளது. இன்னும் சில ஆங்கிலச் சொற்களுக்கு அடுத்த பதிப்பில் விளக்கம் போட வேண்டும். [உ-ம்] டி.சி செய்தல்.
கண்மணி குணசேகரனுக்கே பழக்கமான தளமும் தெளிவான கிராமத்து உவமைகளும் நாவல் வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன.
[ நெடுஞ்சாலை—நாவல்—கண்மணிகுணசேகரன்; பக் : 384; விலை ரூ ; 230; வெளியீடு “ தமிழினி; 67, பீட்டர்ஸ் சாலை; ரயப்ப்பேட்டை; சென்னை 600 014 ]

Series Navigationசாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சிசுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி