பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

Spread the love
நழுவிப் போனவைகள்
                       
அரைத் தூக்க இரவில்
தானாய்த் தவழ்ந்து
கருத்தும்,கோர்வையுமாய்
வார்த்தைகள் பிசகற்று
உதித்து வரும் ஒரு கவிதை
எழுந்தெழுதும் சோம்பலினால்
மறக்காதென்ற நம்பிக்கையில்
தூக்கத்துள் புதையுண்டு
காலையில் யோசித்தால்
ஒரு வார்த்தை கூட நினைவின்றி
தவறி நழுவி எனைவிட்டுப்
போயிருக்கும் என் கவிதை
அக்கவிதை பிறிதொருநாள்
வெளிவந்து விழுந்திருக்கும் அதில் 
வேறெவரோப் பெயரிருக்கும்..
 கிளிமரம்

                       
உச்சிக் கிளைகளில் 
வசித்தன கிளிகள்
தூரம் பறந்து தேடித் தின்ன
தேவையற்றிருந்தது
அவற்றிற்கென்றும்
வேண்டிய நேரம்
அம்மரக் கனிகள்
பறத்தலென்பது
மரம் சுற்றி மட்டும்
ஆட்டமும், பாட்டமும்
காதலும் கூடலும்
சகலமும் அங்கே
 
கட்டியக் கூட்டுள்
முட்டையும் பொரிப்பும்
வளரும் குஞ்சும்
 மரம் சுற்றி வாழும்..
 
காலங்கள் மாறியும்
கிளிகள் மாறவில்லை
மரமும் மாறவில்லை
 
அக்கிளிகள் ஒருநாள்
சிறகடித்துக் கதறின..
திக்குதிசையறியாமல்
சுற்றிப் பறந்தன…
 
கிளிகள் வாழ்ந்த மரம்
பிணமாகிக் கிடந்தது..

Series Navigation