காரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல் வயிற்றினுள் குடலேறி கீழிறங்கும் பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல் ஒவ்வொரு பேரலையும் ஏதாவதொன்றை உடைத்தெறியும் நாங்கள் சாமான்யர்களல்ல சமுத்திர சாமுராய்கள் எனத் தோன்றும்... ஆடும் கப்பல், வீசியாட்டும் தொட்டிலின் நினைவைத் தரும் மாபெரும் ஆழியில் நாம் வெறும் துரும்பென உறைக்கும் நாட்களிவை கடற் பயணத்தின் களையே இது தான் வெளிமனம் சொல்லும் வழக்கம் போலவே கடந்து போய்விடுவோம் உள்மன நினைவிலோ வந்து உறையும் குடும்ப முகங்கள்..…