பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

வில்லவன் கோதை

வர்த்தகநோக்கத்தோடு இந்த மண்ணில் ஊடுருவிய வெள்ளையர்களிடம் இந்த மண்ணையே ஆளுகின்ற பெரும்பொறுப்பை அவர்கள் காலடியில் சமர்ப்பித்தோம். அன்று நம்மிடையே நிலவிய ஒற்றுமையின்மை இந்த அறியவாய்ப்பை அவர்களுக்கு நல்கிற்று..
அவர்களுடைய வருகை இந்தமண்ணின் வளங்களையெல்லாம் சுரண்டிக்கொழுப்பதாய் இருந்தாலும் அவர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கைக்கேற்ப அவ்வப்போது இந்த மண்ணை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்
கல்விக்கூடங்கள் முதல் காப்பீடு நிறுவனங்கள் வரை அவர்கள் வசதிக்காகவே இந்த நாட்டில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் இந்த மண்ணைவிட்டு அகன்று ஆண்டுகள் அறுபதைக்கடந்தபோதும் அவர்கள் நடந்துபோன காலடித்தடங்கள் இன்னும் கலைந்து போய் விடவில்லை. அந்த அடிச்சுவட்டை விட்டு அகலமுடியாமல் இன்றும் உலகளாவிய ஆங்கிலத்தை அகற்று அகற்று என்று கோஷமிட்டுக்கொண்டு தானிருக்கிறோம்.
இந்த தேசத்தின் வளங்களாகவும் பாதுகாப்புமிக்க அரண்களாகவும் வரலாறு பேசுகிற கிழக்குத் தொடர்ச்சிமலை பழம்பெரும் சேலம் மாநகரை நெருங்கித்தான் செல்கிறது. பரபரப்பான இந்த நகரிலிருந்து பத்து கிலோமீட்டரளவில் பரந்துகிடக்கும் நெருக்கமான வனப்பகுதி சேர்வராயன் மலை என்று சொல்லப்படுகிறது.
நானூறு சதுரஅடிக்கு மேல் நெருக்கமான காடுகளும் நாற்புறமும் பல்வேறு உயரங்களில் குன்றுகளும் ஆங்காங்கே நீர் நிலைகளும் நிறைந்து காணக்கிடக்கிறது இந்த வனப்பிரதேசம்.
இயல்பாகவே ஏரிகளும் காடுகளும் நிறைந்து காணப்பட்டதால் ஏரிக்காடு என்றழைக்கப்பட்டு பின்நாளில் இது ஏற்காடாயிருக்கக்கூடும். இதுவும் இங்கே ஆளவந்தவர்களின் அறிய கண்டுபிடிப்புத்தான். இந்த மண்ணின் பெரும்பாலான வளங்களை நமக்கே தொட்டுக்காட்டியவர்கள் அவர்கள்தாம்.
ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டுகளில் எப்போதோ ஒருசமயம் சென்னை ஆளுனராயிருந்த சர் தாமஸ் மன்றோவின் பார்வையில் படுகிறது இந்த காட்டுப்பிரதேசம். கடல் மட்டத்தில் இருந்து 5500 அடிகள் உயரத்தில் காணப்பட்ட இந்த பிரதேசம் தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு முற்றிலும் உகந்தது என்று உணர்ந்தார் சர் தாமஸ் மன்றோ. இந்தக்காட்டுப்பகுதியின் வெப்பநிலை ஆண்டுமுழுதும் ஒரு கட்டுக்குள் காணப்பட்டது அவருக்கு பெரும் வியப்பை அளித்தது.
அப்போது அவர் ஆளுமைக்குட்பட்ட சேலம் ஆட்சியாளராயிருந்த டேவிட் காக் பர்ன் இந்த வனப்பிரதேசத்தை சிறப்பாக வடிவமைக்கிறார். 1820 லிருந்து 1830 வரை பத்தாண்டுகள் நீடித்த அந்த ஸ்காட்டிஷ் அதிகாரி உயர்ந்து நின்ற குன்றுகளையும் சிதறிக்கிடந்த ஏரிகளையும் சீரமைத்து வெள்ளையர்களின் சொகுசு வாழ்க்கைக்கு அடித்தளமிடுகிறார்.
???????????????????????????????

9

DSC00111

DSC00113

???????????????????????????????

???????????????????????????????

DSC00154

???????????????????????????????
இயற்கையின் இயல்பிற்கேற்ப மண்டிக்கிடந்த காடுகளில் மிளகு ஆரஞ்சு ஆப்பிள் காபி ஏலம் போன்ற அன்னிய தாவரங்களை முதன்முதலாக அறிமுகப்படத்தியதும் டேவிட் காக் பர்ன்தான். இன்றும் ஏற்காட்டின் தந்தையென்று பேசப்படுபவர் இந்த ஸ்காடிஷ் அதிகாரியே.
ஏறத்தாழ 3000 அடி உயரம் வளரக்கூடிய மூங்கில் மரங்களும் தேக்கு போன்ற பணப்பயிர்களும் காலப்போக்கில் ஏற்காட்டில் நுழைந்தன. மலைச்சரிவுகளில் மிகுதியான காப்பி பயிர்களும் சில்வர் ஓக் மரங்களும் ஏற்பட்டன.
1840 ல் மலையுச்சியில் முதன் முதலாக ஐரோப்பிய பங்ளா ஒன்று கட்டப்பட்டதாம் . நாமெல்லாம் அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனியின் அன்னாளைய கவர்னர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் அவ்வப்போது இங்கே ஓய்வெடுத்ததாக இப்போதும் சொல்கிறார்கள்
ஒவ்வொரு திசையிலும் நிமிர்ந்து நின்ற குன்றுகளின் உச்சியில் அமர்ந்து அடிவாரங்களை ஆழ்ந்து ரசிக்க இருக்கைகள் ஏற்பட்டன. தென் திசையில் ஒரு குன்றின் உச்சியில் செதுக்கப்பட்ட பாறையிலிருந்து மாட்சிமை பொருந்திய ஆங்கிலேய பெண்மணி சேலத்தில் இருந்து வரும் சாரட் வண்டியின் நகர்வை கண்டு களித்தாளாம். அந்த அறிய இடம்தான் காலப்போக்கில் லேடீஸ் சீட் ஆயிற்று அதே போல் ஆண்கள் இருக்கை குழந்தைகள் இருக்கை என்றெல்லாம் பார்வை இடங்கள் ஏற்பட்டன.
இவைகள் எல்லாமே ஏற்காட்டின் உயரத்தில் இருந்து கீழே கொட்டிக்கிடக்கும் பேரழகை கண்களால் பருகுதற்குதான்.
இந்த லேடீஸ் சீட் என்ற இருக்கையிலிருந்து சேலம் நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தையே காணமுடியும். இரவு நேரங்களில் மின்னொளியில் மூழ்கிக்கிடக்கும் நகரைக்காண்பது கண்கொள்ளா காட்சியாம். தென்மேற்குதிசையில் மேகங்கள் அற்ற காலங்களில் கிருஷ்ண கிரி , ஓசூர் சாலைகளைக்கூட காணமுடியுமாம். ஏற்காட்டை எட்ட மலைவழியே மூன்றுவழிகள் இருப்பதாக சொன்னார்கள்.
நாற்புறமும் நெருக்கமாக குன்றுகள் சூழ நடுவிலே ஒரு ஏரி ஒய்யார படகு சவாரிக்குப்பயன்பட்டது.
பெரிதாகப் பேசப்படும் இந்த ஏற்காடு ஏரி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகாமையில்தான் இருந்தது . அங்கிருந்துதான் எங்கள் உலா தொடரத்துவங்கிற்று.
வண்டிகள் இரண்டும் ஏரியின் படகுத்துறை கரையோரங்களில் நிறுத்தப்பட்டு நாங்கள் இறங்கியபோது ஒரு குளிர் பிரதேத்தின் சுற்றுலா சூழலை முதன்முதலாக உணர்ந்தோம். ஏற்காட்டின் வெப்பம் உடலுக்கு இதமாக இருந்தது. ஏரியை ஒட்டிய அந்த படகுத்துறை சற்று சுறுசுறுபாய் காணப்பட்டது .எதிர் சாரியில் காணப்பட்ட மலைச்சரிவை ஒட்டி வரிசையாக நடமாடும் வண்டிகளில் தீனிக்கடைகள் அணிவகுத்திருந்தன.
சூடாக வருக்கப்பட்ட கடலைகள் , வேகவைக்கப்பெற்ற மசாலா கடலைகள் , குழம்பில் ஊறிய கடலைகள் ,
சூடான மிளகாய் வாழைக்காய் வெங்காயம் வகை பஜ்ஜிகள்
பூப்போல வேகவைத்து காரம் தெளிக்கப்பெற்ற கிழங்கு வகைகள்
பதமாக வேகவைக்கப்பெற்ற சோளக்கதிர்கள்
காரம் கலந்த மாங்காய் பத்தைகள்
நவீன குளிர் பானங்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ .அத்தனையும் எளிமையான நொறுக்குத்தீனிகள்.
முன்னதாகவே ஏரியில் படகுச்சவாரிக்கென ஒருகூட்டம் படகுத் துறையில் காத்திருந்தது. பெரும்பாலும் சிக்கனமான உடைகளுடன் வண்ணவண்ண ஆடைகளில் இளம் பெண்களும் இளைஞர்களும் பரவலாக காணப்பட்டனர்.
நண்பர் ஜெகநாதனும் பழநிச்சாமியும் கால்களால் உதைத்து இயக்கும் படகொன்றில் உலா வந்தனர். நானும் தாமோதரசாமியும் நகர்ந்து கரையோரக்காட்சிகளில் திளைத்தோம். வாய்ப்பு கிடைத்தபோது இந்த குளிர் பிரதேசத்தின் அடித்தளங்களை ஆங்காங்கே சேகரித்தேன்.
மற்ற ஐவரும் துடுப்புகளால் இயக்கும் படகுகளில் மிதந்தனர். படகுகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக்காலான உயிர் காக்க உதவும் ஆரஞ்சுவண்ண பட்டைகளை அணியவேண்டியிருந்தது.
மழை நேரங்களில் சுற்றிலும் உயரமாக சூழ்ந்திருந்த மலைச் சரிவுகளில் இருந்து வடியும் நீர்தான் இந்த ஏரிக்கு ஆதாரம். உயரமான பாறை விளிம்புகளிலிருந்து ஏறத்தாழ முன்னூறு அடி அதளபாதாளத்தில் இந்த உபரித்தண்ணீர் விழுவது பார்ப்பதற்கு வியப்பூட்டும். அந்த கிள்ளியூர் நீர் விழ்ச்சி ஏற்காடு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கண்கொள்ளா காட்சியாம். சமீப காலத்தில் மழைப்பொழிவு இல்லாததால் ஏற்காடு ஏரியும் உயரம் குறைந்து இருக்கும் நீரும் பச்சைவண்ணம் பெற்றிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரில்தான் இந்தபடகுகள் உலா வந்தன.
இப்போது கிள்ளியூர் நீர்வீழ்ச்சியிலும் அத்தனை நீர் வழிந்திருக்கமுடியாது .ஏரியின் வடக்குக்கரையோரம் காணப்படும் அண்ணா பூங்கா சுற்றுலா வாசிகள் பார்க்கத்தகுந்தது. ஜப்பானியர்களின் அறியபூங்கா ஒன்றும் அண்ணா பூங்காவில் அடக்கம்.
மிகமிக அருகிலேயே காணப்படும் விதம் விதமான மலர்கள் பூத்து குலுங்கும் ரோஸ் தோட்டமும், வித்தியாசமான தாவரங்கள் நிறைந்து காணப்படும் பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா தோட்டமும் பார்க்கத் தகுந்தது. பல்வேறு விதமான ரோஜா செடிகளையும் மூவாயிரத்துக்கு மேலான தாவர வகைகளையும் ஒருங்கிணைத்திருப்பது ஒரு அற்புதம்.
பல்வேறு வகையான வாசனைத் திரவியங்கள் ,தோல் பராமரிப்பு எண்ணைகள் வெவ்வேறு வகையான மிளகு ஏலம் ரகங்கள், வகை வகையான பழவகைகள் விற்பனைக்கு ஏற்காட்டில் கிடைக்கின்றன.
மாதத்தில் ஒருமுறை இங்கேயுள்ள உறைவிடப் பள்ளிக்குழந்தைகள் சுற்றுச்சுவர்களுக்கு வெளியே அனுமதிக்கப்படும்போது நோட்டு புத்தகங்கள் போன்ற எழுது பொருள்களின் விற்பனை உச்சத்தை எட்டுமாம்
பிரதான கடைவீதியிலிருந்து கிழக்கு திசையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பெரிதாக பேசப்படும் ( PAGODA POINT ) பகோடா பாயிண்ட் இருந்தது. இந்த பகோடாவைக்கேட்டதும் எங்களில் பலருக்கு எப்போதாவது நாம் சாப்பிடும் பக்கோடா நினைவுக்கு வந்திருக்கவேண்டும்.
ஏற்காடு பிரதான சாலையில் இருந்த ஒரு தற்காலிக கடையொன்றில் சூடாக கிடைத்த சின்னச்சின்ன மசால் வடைகளையும் சுவையான தேனீரையும் பருகிவிட்டு பகோடா முனைக்கு விரைந்தோம்.
ஒரு காலத்தில் ஐந்தாவது ஆறாவது வகுப்புகளில் மாமல்லபுர கடற்கோயில்களை பைவ் பக்கோடாஸ் செவன் பக்கோடாஸ் என்றெல்லாம் படித்த ஞாபகம். பிரமீடு போன்ற கூரான வடிவங்களில் அமைந்த அந்த கடற்கரை கோயில்களை பகோடா என்று சொல்லுகிறார்கள்.
அதற்கான சாட்சிகளை இங்கே காணமுடிகிறது. சின்னஞ்சிறு உடைந்த கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கி இந்த பக்கத்தைச் சார்ந்த பழங்குடிமக்கள் வழிபட்ட அடையாளங்கள் இன்னும் இங்கே காணக்கிடைக்கிறது. இந்த உயர்ந்த முனையிலிருந்த அடிவாரங்களையும் அபூர்வமான நேரங்களில் மேட்டூர் நீர்த்தேக்கத்தை கூட காணமுடியும் என்பது வியக்கத்தக்கது. அடிவாரத்தின் ஒருசில இடங்களில் திட்டு திட்டாக ஒருசில குடியிருப்புகளையும் பார்த்தோம். அடர்ந்த காட்டுக்குள் காணப்படும் அந்த திகில் குடியிருப்புகளைப்பற்றிச்சொல்ல அங்கு எவரும் இல்லாமல் போயிற்று
( அடுத்தவாரம் பார்க்கலாம் ! )

Series Navigation