பயம்

 

 

பரதேசிகள் பயப்படுவதில்லை

மடியில் கனமில்லை

 

அந்த மலரை இழப்போமோ

செடிக்கு பயம்

உதிக்கும் இன்னொன்றென்று

ஏன் புரியவில்லை ?

 

வலக்கை இடக்கைக்குப் பயந்தால்

வணங்குவது எப்படி

 

பட்டுப்புழுவென்றால் பயம்

பட்டுச்சேலை பிடிக்குமாம்

 

ஆயுதபாணிகள் பயப்பட்ட்டும்

நாம் நிராயுதபாணிகள்

 

நெருக்கடிகள் பல வாழ்வில்

செருப்புக்கடிக்கு பயப்படலாமா?

 

முள்ளுக்குப் பயந்தே அவள்

ரோஜா பறிப்பதில்லையாம்

 

அம்மாவுக்கு கரப்பான் பயம்

கரப்பானுக்கு அம்மா பயம்

 

மின்னலுக்கு பயந்துதான்

மேகம் இடியென அழுகிறதோ?

 

இமைகள் இருக்கும்போது

தூசுக்கு அஞ்சலாமா விழிகள்?

 

பயம் சேதாரம்

சேதாரம் விலையானாலும்

சேதாரம் சேதாரமே

 

பதினாறும் பெற்று

பெருவாழ்வு வாழ்பவளுக்கு

இடுப்புவலிக்கு பயமாம்?

 

நெற்றிக்கண்ணுக்கே அஞ்சாத

நக்கீரன் பரம்பரை

நரியின் கண்களுக்கு அஞ்சலாமா?

 

நிழலுக்கு பயந்தா

இருட்டில் வாழ்வது?

 

புள்ளிகளுக்கு பயம்

கோலம் சிறையாம்

 

ஊரே பயப்படுகிறது

அந்த மரத்தில் பேயாம்

 

காக்கையைக் கண்டால்

குயிலுக்கு பயம்

அதுதான் தாயென்று

யார் சொல்வது?

 

வறுமைக் கோட்டுக்குக் கீழே

இதோ! தாண்டப் பயந்தவர்கள்

 

முதுமையில்தான் புரிகிறது

பயங்காட்டிய ஒன்றுமே

இன்றுவரை நடக்கவில்லை

 

அமீதாம்மாள்

 

 

 

 

Series Navigationஅதிரசம்அன்னையர் தினம்