பரிசு…

author
0 minutes, 6 seconds Read
This entry is part 5 of 14 in the series 13 நவம்பர் 2022

 

                                                                                       

ச.சிவபிரகாஷ்

பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு.

இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும் வருகிறார். பல கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல எழுதி, சொந்த செலவில் புத்தகங்கள்  வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இவரது இலக்கிய சேவையை பாராட்டி அண்டை நாடான மலேசியாவில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்று . ‘வந்து, திரும்ப’ இரு வழிக்கும் என பயண ஏற்பாடு செய்து, இவரை அழைத்து கௌரவப்படுத்தி, பணமுடிப்பும் வழங்கியிருந்தது.

இவர் வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதியுடன் பத்து தினங்கள் விடுப்பு எடுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அப்படியே ஊரையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு திரும்பியிருந்தார்.

“கா.சு“ – இவரது மனைவி திரிபுரசுந்தரி, மகன் செந்தமிழன், மகள் இலக்கியா, என ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தர்.

இவரது(கா.சு) தாய் பர்வதம்மாளுக்கும், மனைவி திரிபுரசுந்தரிக்கும் ஏழாம் பொருத்தம்.என்பதால்.,நாடாறு மாதம்,காடாறு மாதம் என்பது போல்.  திண்டிவனத்தில் இருக்கும் பெண் வீட்டில் (“கா.சு”–வின் தங்கை வீட்டில்) சில நாள் இருந்து விட்டு வருவாள்.

 மகன் செந்தமிழன் டிகிரி முடித்து விட்டு, சமீபத்தில் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவன். மகள் இலக்கியா இவ்வருடம் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி. மனைவி திரிபுரசுந்தரி இல்லத்தரசி.

“……”

‘நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலை பொழுதில்’

 

… ம்… ஆபிஸ்,பத்திரிக்கை,எழுத்து,பாராட்டு விழா, அது, இதுன்னு நேரம் சரியா இருக்கு.ஆபிஸுக்கு லீவு போட்டு பத்து நாள் மேலாக போகுது. இன்னீக்காவது வேலைக்கு போகலாம்னு பார்த்தால்…அம்மாவை வீட்டிற்கு அழைத்து வருவதாக தங்கையிடமிருந்து தகவல் வந்துள்ளது, அம்மாவை கொண்டு விட்டதும், தங்கையும் வழக்கம் போல உடனே கிளம்பிடுவா. அதனால்…எப்படி பார்க்காம ஆபிஸ் கிளம்புவது ?

ஆபிஸ்-ல,வேற, பழைய மேனேஜர் மாற்றலாகி புதுசா யாரோ வந்திருக்காராம். இந்த நேரத்தில இன்னும் இப்படி லீவு போட வேண்டியதாயிருக்கே? – என்ன செய்யுறது ? –

சரி…. என்ன தலையையா வாங்கப்போறான்,? பார்த்துக்கலாம். – என தன்னைத்தானே கேள்விகேட்டு, சமாதானமடைந்து, எதிரே இருந்த நாற்காலியில் போய் அமர்ந்து, அன்றைய தினசரியை புரட்ட ஆரம்பித்தார். “கா.சு”. தினசரியின் கடைசி பக்கத்தில் சிறிய செய்தியாக, மலேசியாவில் தான் கௌரவிக்கப்பட்ட நிகழ்ச்சியை படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். இதை கண்ணுற்றவர் தன் மனைவியை அழைத்தார்

சுந்தரி…. சுந்தரி.

… ம்… என்னங்க ? – என்றவாறே வந்தவளிடம்

பார்த்தீயா…! எனக்கு மலேசியாவில் நடந்த பாராட்டு விழாவை செய்தியாக இன்னிக்கு பேப்பர்ல வந்திருக்கு. – என காண்பித்துக்கொண்டிருக்கும் போது

சுழற்றும் தொலைபேசியிலிருந்து   “ ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங் “ – என ஒலி வந்துக்கொண்டிருந்தது.

யாராக இருக்கும்? – போய் எடு என தன் மனைவிக்கு கட்டளையிட்டார்.

ஹலோ.. யாரு?

எதிர்முனையில் இருந்து  – வணக்கம்!…மா,  ஐயா இருக்காங்களா?

இருக்காங்க… நீங்க யாரு?

நான் அவங்க ஆபிஸ் staff கோபால் பேசுறேன்.

இருங்க கூப்பிடறேன். – என்றவளிடம்.

வேண்டாம்மா… ஐயாவை புதுசா வந்திருக்கிற மேனேஜர் பார்க்கணும்னு, சொல்றார். வந்து பார்க்க சொன்னா போதும். என்றபடி  போனை துண்டித்தான்.

என்ன சுந்தரி… யாரு போன்ல?

உங்க பாங்க் staff கோபாலாம்.

என்னவாம்?

ஒன்னுமில்லை… புதுசா வந்திருக்கிற மேனேஜர் உங்கள பார்க்கனுமாம், வந்து பார்க்க சொல்லுங்கன்னு  சொன்னார்.

எப்போவான்?

அதை சொல்லல… அதுக்குள்ள வெச்சிட்டார்.

சரி… நான் பார்த்துக்கறேன். – என்று தொடர்ந்தவர், நெனச்சேன்.. ஆடிட் நேரம், வேலை கிடக்கு, அவங்க கொடுத்த பத்து நாள் மேலே லீவு ஆயிடுச்சு, புதுசா வந்திருக்கிற மேனேஜருக்கு பைல் அனுப்பனும், சில விஷயங்கள் புரியவைக்கணும். கூப்பிடுவாங்கன்னு தெரியும். என சொல்லிக்கொண்டு.

சரி…. சுந்தரி, இப்போ ஒன்னும் பெருசா நேரம் ஆகல, நான் ஆபிஸ் கிளம்புறேன்.அம்மா, தங்கை வந்தாங்கன்னா, சொல்லிடு,            தங்கச்சியை வேணும்னா, நாளைக்கு கிளம்ப சொல்லு, இல்லைன்னா.. நான் சாயங்காலம் வரும் வரை இருக்க சொல்லு.  என சட்டையை மாட்டிக் கொண்டு, தனது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் கிளம்பினார்.

“…. “

அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நண்பர்கள், மலேசியாவில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வந்ததுக்காக, இவரை (“கா.சு”)உற்சாகமாக வரவேற்றார்கள். அவர்களிடத்தில் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துவிட்டு, நேராக புதிய மேனேஜரை சந்திக்க அவர் அறைக்கு சென்றார் “கா.சு”

ஐயா… உள்ளே வரலாமா,? – என குரல் கொடுத்ததும்.

எஸ்… வாங்க, நீங்க…? – இது மேனேஜர். (நேரடியாக கா. சு வை பார்த்ததில்லாத காரணத்தால் இக்கேள்வி)

ஐயா…. நான் “கா.சு”

ஓ… சுப்பிரமணி, வாங்க…. வாங்க…. எழுந்து நின்று, வெல்கம் என்றதும்,

 “கா.சு”  – ஐயா….நான் தான் உங்களை வெல்கம் பண்ணனும்,  ஏன்னா? நீங்க தான் இப்போ புதுசா இங்கு வந்துருக்கீங்க. So…. Welcome, அப்புறம் தாமதமாக நான் உங்களை வரவேற்றதுக்கு சாரி… – என்றதும் இருவரும் சிரித்தபடியே ஆர தழுவிக்கொண்டனர்.

சுப்பிரமணி…. தோ பாருங்க, உங்களுக்கு முதல்ல வாழ்த்து சொல்லாம, ஏதேதோ பேசிக்கிட்டிருக்கேன். வாழ்த்துகள். பை த பை என்னோட பேரு கண்ணன் என அறிமுகப்படுத்திக்கொண்டு, உட்காருங்கள் என எதிரே இருந்த நாற்காலியை  – மேனேஜர் காட்டி,அவரது இருக்கையில் அமர.,

நன்றி…. என்றபடியே கா.சு வும் அமர்ந்தார்.

ஆமா… நீங்க லீவுல இருப்பதாக சொன்னார்கள்.  உங்களுக்கு லீவு முடிஞ்சிடுச்சா?

….. ம்…. லீவு முடிந்து இரண்டு நாள் மேலே ஆகுது. தங்கை வீட்டில் இருந்து அம்மா இன்னைக்கு கிளம்பி வராங்க, தங்கச்சி தான் கூட்டிட்டு வராங்க. அம்மாவை விட்டதும் உடனே கிளம்பிடுவாள், பார்த்து…. குடும்ப விஷயமெல்லாம் பேசவேண்டி இருக்கிறதால, இன்னைக்கு ஒரு நாள் லீவு எக்ஸ்டண் பண்ணிட்டு நாளை வரலாம்னு தான் பார்த்தேன்.

அப்புறம் எதுக்கு உடனே வந்தீங்க …? – இது மேனேஜர்.

இல்ல… நீங்க என்னை பார்க்கணும்னு நம்ம staff கோபால் வீட்டுக்கு பண்ணியிருந்தாராம். அதான் பார்க்கலாம்னு உடனே கிளம்பி வந்திட்டேன்.

ஒன்னும் அர்ஜெண்ட் இல்லே, நான் உங்களை உடனே பார்க்கணும்னு சொல்லல, சுப்பிரமணி டியூட்டி ஜாயின் பண்ணிட்டார்னா, வந்து பார்க்க சொல்லுங்கன்னு ஜஸ்ட் ஒரு ரிக்வஸ்டா தான் சொன்னேன். நான் சொன்னது கோபால் சரியா கவனிக்கலையான்னு தெரியல எனி அவ்… வந்துட்டீங்க, நன்றி என்றவரிடம்,

ஏதாவது விஷயமா….? நான் அனுப்ப வேண்டிய பைல் எல்லாம் இன்னும் இரண்டு நாள்-ல பார்த்திட்டு அனுப்பிடுறேன் சார். – என்றார்  கா.சு

நோ…. நோ…. அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் பார்க்க சொன்ன விஷயமே வேற. அதை அப்புறமா… நம்ம போர்டு மீட்டிங்கல சொல்லுறேன். ஆமா… உங்க அம்மா தங்கச்சி வீட்ல இருக்கிறதாகவும், இன்னிக்கு வீட்டுக்கு வருவதாகவும் சொல்றீங்க அப்போ….. அப்பா?

இல்ல சார்…. அப்பா காலமாகி இருபது வருடமாச்சு, அம்மா மட்டும் தான்

உங்க கூட பிறந்தவங்க?

நானும், எனது தங்கை மட்டும்

அம்மாவுக்கு என்ன வயசாகுது? –  நடக்க முடியுமா, நடக்கிறாங்களா? என கேள்வியை தொடர்ந்து எழுப்பினார் மேனேஜர்.

ஒ.. நடக்கிறார்கள்,  எழுபத்தைந்து வயது ஆகுது, இருந்தாலும் கொஞ்சம் ஆக்டிவாக தான் இருக்காங்க. – என்ற கா.சு விடம்

ஒ… காட் (oh! god) எழுபத்தைந்தா? இந்த வயசுல ஏன் அலையுறாங்க. நீங்க மூத்த பிள்ளை, அதுவும் ஒரே பையன். பேசாம உங்க வீட்லயே வெச்சுக்கிட வேண்டியது தானே?

சார்…. என் மனைவிக்கும், அம்மாவுக்கும் எப்பவுமே சரிபட்டு வராது, இவங்க ஒன்னு சொல்ல, அவங்க ஒன்னு சொல்ல, சாதாரண விஷயமாக தான் இருக்கும் ஆனால் இருவரும் சேர்ந்து பூதாகாரமாக ஆக்கிடுவாங்க,

 நான் இவங்க இரண்டு பேரையும் பாலன்ஸ் (balance)  பண்ண முடியாம, கண்டுக்காம போயிடுவேன்.

அம்மா கோபித்து கொண்டு, தங்கை வீட்ல விட சொல்லுவாங்க, அப்புறம்…. அங்க தங்கச்சி வீட்ல, பேரன், பேத்திக்கிட்டேயும் காரணமே இல்லாமல், அது எதுக்கு, இது எதுக்கு கேள்வி கேட்க, அவங்க ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்ல, அங்கே சண்டை போட்டு விட்டு இங்கே விட சொல்லுவாங்க  இது தான் ரொம்ப வருஷமா நடக்குது என்றார் கா.சு

 

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர். சரி…. சுப்பிரமணி சாரி… உங்களை பார்த்த முதல் நாள் அன்னிக்கே, குடும்ப விஷயமெல்லாம் கேட்டுவிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க  என்றார் மேனேஜர்.

அதெல்லாம் ஒன்னுமில்லை சார். உலகத்துல நடக்காததையா நான் சொல்லிட்டேன். என்ற கா.சு விடம்

தொடர்ந்தார் மேனேஜர்

 வேண்டுமென்றால், நீங்க இன்னிக்கும், நாளைக்கும் லீவு எடுத்துக்குங்க, நாளை மறுநாள் வந்தால் போதும். இன்னிக்கு திங்கள்கிழமை, நாளை செவ்வாய், புதன் கிழமை காலை வழக்கம் போல வந்திருங்க, காலை பதினோரு மணிக்கு மீட்டிங் வெச்சுக்கலாம் – என கா.சு வை அனுப்பி வைத்தார்.

விடைபெற்று வீட்டுக்கு திரும்பினார்.

மதிய உணவு நேரத்துக்கு, அம்மாவும், தங்கையும் வீட்டிற்கு வந்தனர், பரஸ்பர நல விசாரிப்புக்கு பின்னர் அண்ணன் மலேசியாவில் நடந்த பாராட்டு விழாவை அறிந்து, தங்கை மகிழ்ச்சியை தெரிவித்து, பேசிக்கொண்டிருக்க அண்ணி சாப்பிட அழைத்தாள். பின்னர், அனைவரும் ஒன்றுகூடி மதிய உணவு அருந்தினர். அன்று மாலையே கிளம்ப இருந்த தங்கையை, நாளைக்கு போகும்படி கட்டளையிட்டார். சரியென ஒப்புக்கொண்டு மறு நாள் கிளம்பியவளிடம் மலேசியாவில் இருந்து தான் வாங்கி வந்த சாக்லெட்களை, கொஞ்சம் கொடுத்து அனுப்பினார்.

 

“…… “

புதன்கிழமை காலை வழக்கம் போல அலுவலகம் சென்றார் கா.சு,

உடன் பணியாற்றுபவர்களும், அலுவலக பணிகளும் மும்முரமாக தொடர்ந்தது. மேனேஜர் தெரிவித்தது போல் சரியாக பதினோரு மணிக்கு கம்பெனி மீட்டிங்காக பணியாளர்கள் அழைக்கப்பட்டனர். கம்பனி நிர்வாக சீரமைப்பு, நிதி, கடன், நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்திட்ங்களை பற்றிய விவாதங்களை தொடர்ந்து,  பணியாளர் கா.சு – வின் இலக்கிய சேவையையும், வெளிநாட்டில் அவருக்கு கிடைத்த கௌரவத்தையும், பாராட்டி, ஒரு பாராட்டு விழா நடத்த, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும், உணவு ஏற்பாடு செய்து, கூட்டம் நிறைவடைந்தது.

அன்று மாலை இவ்விஷயத்தை தன் மனைவியிடம் பறிமாறிக்கொண்டார்.,”கா.சு”

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,.. நீங்களும் ரொம்ப வருஷமா தான் எழுதுறீங்க, இதுல ஒன்னும் வருமானம் இல்லை, சொந்த காசை வேற செலவழிச்சு புத்தகமெல்லாம் போடுறீங்க. எந்த பலனும் இல்லாம, இருக்கே உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கனும்னு, கடவுள்க்கிட்ட தினமும் கேட்பேன். அதுக்கு இப்போ பலன் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

நன்றி கடனா நாம.. நம்ம, குல தெய்வ கோயிலுக்கு ஒருநாள் பசங்களையும். கூட்டிட்டு குடும்பத்தோட போயிட்டு வருவோம். அப்படியே அம்பாளுக்கு புடவை சாத்துவோம். குலதெய்வ கோயிலுக்கு,போயிட்டு வந்து ரொம்ப வருஷமாச்சு – என்றாள் கா.சு வின் மனைவி சுந்தரி.

ஒ.கே….போயிடலாம் – என்றார் கா.சு

“……”

சில வாரங்களுக்கு பிறகு,

வழக்கம் போல, கா.சு வின் மனைவிக்கும், அவரது அம்மாவுக்கும், ஏதோ சிறு வாக்குவாதம் தொடங்கி, சண்டையில் முடிய தங்கை வீட்டில் கொண்டு விட சொல்லி பணிக்க,

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான்-மா  வந்தே! அதுக்குள்ள என்னம்மா பிரச்சனை ? -என தாயை சமாதானப்படுத்த முயன்றும்

முடியாமல்,

தங்கையை தொடர்புக்கொள்ள, அவளும் ஏதோ காரணம் சொல்லி  அம்மாவை அழைத்து வரவேண்டாம் என்பதாக பேச்சில் மழுப்ப, வேறு வழியின்றி, யாருக்கும் தொந்திரவு இல்லாம இருக்கட்டும் என கருதி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்.

“…… “

வழக்கம் போல,.. கா.சு வும் வேலைக்கு செல்கிறார், அலுவல்கிடையே நாளை மறுநாள் ஒரு ஹோட்டலில் பாராட்டு விழா நடக்க இருப்பதாக தகவலும், முறைப்படியான அழைப்பையும் கிடைக்க பெற்று.

சொன்னபடி விழா இனிதே துவங்குகிறது, தலைமை அலுவலகத்திலிருந்து, மூத்த அதிகாரிகள் வந்து சிறப்பிக்க,

குடும்பத்தோடு கலந்து கொண்டவர்கள். விழாவில் எல்லோரும் கா.சு வை, புகழ்ந்து பாராட்டியதை கண்டும், கேட்டும் மெய்சிலிர்த்து போகிறார்கள்.

மேடையிலிருந்து போனஸாக, உடன் பணியாற்றும் நண்பர்கள் மூலம் பணமும், வேலை செய்யும் கிளை அலுவலகத்தில் கா.சு வுக்கு உதவி மேலாளர் பதவிக்கான அறிவிப்பும் கிடைக்கபெற திக்குமுக்காடி போகிறார்கள். நிகழ்ச்சி முடிந்து, தயாராக இருந்த உணவு உபசரிப்புக்கு பின், தன் மனைவி, மகன், மற்றும் மகளை மேலாளர் கண்ணனிடம் கா.சு அறிமுகம் செய்து வைக்கிறார்.

மரியாதை நிமித்தமாக வணக்கங்கள் தெரிவிட்டு, இன்று நடந்த பாராட்டு விழாவையும், உணவு தரத்தையும், ருசியையும் கேட்டறிகிறார். பின்னர்.. இந்த சந்தோஷமான அனுபவத்தை ஒரு வாரம் அசைபோடுங்கள், ரிலாக்ஸ் பண்ணிட்டு அடுத்த வாரம் வந்து உதவி மேலாளர் சீட்டில் அமருங்கள் என்றவர், திடீரென

இன்னிக்கு அம்மாவை அழைச்சிட்டு வந்திருக்கலாமே, அவங்களும் இதை பார்த்திட்டு சந்தோஷப்பட்டிருப்பாங்களே, ஏன் அழைச்சிட்டு வரல? – என்று மேலாளர் கண்ணன் வினவ.

நடந்த விஷயத்தையும், தற்போது அம்மா முதியோர் இல்லத்தில் சேர்த்ததால், அனைவரும் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவிக்க., மனம் வெதும்பி அமைதியாகிறார்.

ஓ…கே இது உங்கள் குடும்ப விஷயம். என்று சொல்லி விட்டு கா.சு வின் மகள் இலக்கியாவிடம்

ஒரு வாரம் ஜாலியாக அப்பாவை கூட்டிட்டு, ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் பிக்னிக் போயிட்டு வாங்க என இவள் தோளைதட்டி மானேஜர் கண்ணன் சொல்ல.

நீங்க வேற அங்கிள்… அப்பாவும், அம்மாவும் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு சொல்லியிருக்காங்க.  லீவுன்னாலே சுத்த போரு. அப்பா எப்பவுமே, எதாவது எழுதிக்கிட்டே இருப்பாரு, அம்மா சமையல் முடிச்சிட்டு டிவியை பார்த்திட்டிருப்பாங்க, பாட்டி இருந்தாங்கன்னா,  அம்மாகிட்ட ஏதாவது சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க, அண்ணன் அவன் பிரண்ட்ஸோட சுத்த போயிடுவான். என வருத்தமாக சொல்ல

என்ன சுப்பிரமணி இது ?…. என சிரிப்புடன் கேட்க

அனைவரும் சிரிக்க,

கா.சு மனைவி தொடர்ந்தார்.

ஆமாங்க சார். அவ சொல்றது உண்மை தான். நான் கல்யாணம் ஆகி வந்த காலத்திலிருந்தே ஏதாவது பத்திரிக்கைக்கு, எழுதி அனுப்புவார். ஒன்னும் பெரிசா வருமானமெல்லாம் இருக்காது. பணம் செலவு பண்ணி புஸ்தகமெல்லாம் போட்டிருக்கார். என சொல்லும் போது

‘மேனேஜர் கண்ணன் குறுக்கிட்டு’

எஸ்…. நானும் இவரை பத்தி புதுசா கேள்விப்பட்டபோது, தெரிஞ்சுக்க இவரோட, நாளைய தேசத்து ராஜாக்கள், பருவமழை, எங்கே தேடுவேன், நாகரீகஉலகம்,  இப்படி நெறைய படிச்சேன், ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருந்தது. – என்றதும்

‘தொடர்கிறார் சுந்தரி’

என்ன பிரியோஜனம் சார்,? இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தம் இருந்துச்சு, இப்போ என் ஆசையும், வீட்டுக்காரர் ஆசையும் நிறைவேறியது. அதற்கு நன்றி கடனாக தான் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு போய் புடவை சாத்திட்டு வரலாம்னு இருக்கோம் – என்றதும்

சத்தமாக சிரித்தார் கண்ணன்.

என்ன சார்…? இவங்க ஜோக் ஒன்னும் சொல்லலையே என்ற கா.சுவிடம்

சுப்பிரமணி சார்…அவங்க ஜோக் எதுவும் தனியா சொல்லலைன்னாலும், சொல்ற விஷயம் ஜோக்காக தான் இருக்கு

சுப்பிரமணி….உங்க அப்பா பெயர் என்ன-ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

கார்த்திகேயன்- என பதிலளித்தார் கா.சு

கா.சு”.. சுப்பிரமணிங்கிற உங்க பேருக்கு முன்னாடி போட்டு இருக்கிற “கா.”ங்கிற உங்க அப்பா பேரை சொல்லிக்கொடுத்ததும், அவரை உங்களுக்கு அடையாளம் காட்டினதும் உங்க அம்மாவாக மட்டும் தான் இருக்க முடியும்,

நீங்க…. இந்த நிலைமைக்கு இருக்கிற காரணம், அவங்களோட அந்த வளர்ப்பு. அவங்களோட ஆசிர்வாதம் இருக்கிறதால தான் இப்படி உயர்ந்து வந்து இருக்கிறீங்க. – என்றபடி

கா.சு வின் மனைவியிடம்

இதோ பாருங்கம்மா, நீங்க… உங்க கணவர், உங்க குழந்தைகள்-ன்னு, உங்கள் குடும்பம் ன்னு உருவாக காரணமே, உங்கள் பெற்றவர்களை தவிர்த்து, உங்க மாமனார், மாமியாரும், அதாவது உங்கள் கணவரோடு அப்பாவும்,அம்மாவும் தான்.

மாமியாரும் உங்கள் அம்மா மாதிரி.,அவங்க மனசு நோகாம பார்த்துக்க வேண்டியது உங்கள் பொறுப்பு, அது கடமையும் கூட, உங்க அம்மாவுக்கும் இந்த மாதிரி நிலைமை வந்தால்?   அது ஏன்? நாளைக்கு நமக்கும் வயசாகும், அப்போ… உங்கள் மருமகள் சண்டை போட்டாள்னு, உங்கள் மகன் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பானா?

வயசாகிட்டாலே…. பெரியவங்க எல்லோரும் குழந்தைங்க மாதிரி, நமக்கு வயசாகி போச்சு, நம்மள மதிப்பாங்களா, கவனிப்பார்களா, நம்ம பேச்சுக்கு மரியாதை கொடுப்பாங்களா? நாம தனியா தான் இருக்க வேண்டி இருக்கனுமா? நாம கேட்கிறது கிடைக்குமா? அப்படிங்கற               மாதிரியான சைக்காலஜி பயத்துல தான் நம்பள படுத்துவாங்க, நாம தான் இதை புரிஞ்சிக்கிட்டு அனுசரித்து போகணும்.

இப்பவே யோசித்து பாருங்க… நம்ம குடும்பத்தில இவ்வளவு பேர் இருக்கோம், இவங்களையெல்லாம் விட்டுட்டு அனாதையாக தனியா நாம ஒரு இடத்துல, இருக்க முடியுமா?

 

 மகன், மருமகள், பேரன், பேத்திகள், பொண்ணு, மாப்பிள்ளைன்னு இவ்வளவு பேர் உங்க குடும்பத்துல இருந்தும், யாரும் இல்லாத அனாதை மாதிரி அம்மாவை, உங்கள் சுயநலத்துனால, முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டீங்க பாருங்க, அது எவ்வளவு பெரிய மகாபாவம். அவங்களோட கணவர் இருந்திருந்தால், இதுவெல்லாம் நடந்திருக்குமா?

குலதெய்வ கோயிலுக்கு போங்க, புடவை சாத்துங்க, வேண்டாம்னு சொல்லலை, மாதா, பிதா, குரு அப்புறமா தான் தெய்வம்.

முதல் தெய்வம் தாய்., அவங்களுக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்து, இந்த மாதிரி ஒரு விருதும், பாராட்டும், எனக்கு கிடைச்சிருக்கு அம்மா அப்படின்னு சொல்லியிருந்தீங்கன்னா, எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க.

அவங்க ஆசிர்வாதம் இன்னும் உங்களை மேலோங்கி கொண்டு போகும். அவங்க இருக்கும் போதே அனாதையாக விட்டுட்டு, குல தெய்வம்னு இல்லை எந்த தெய்வத்தை நீங்கள் வழிபட்டாலும் அது பிரியோஜனமும் இல்லை பலனும் அளிக்க போவதும் இல்லை.

நீங்களே.!

ஒரு பெரியஎழுத்தாளர்,பார்த்ததை,கேட்டதை,அனுபவத்தை,எழுதுபவர், நீங்க எழுதின, எழுதுகிற கதைகள் மத்தவங்களுக்கு ஒரு பாடமாக இருக்கனும், உங்கள் கதைகள் உங்களுக்கே பாடமாக இருக்க கூடாது. – என முடித்தார் மேனேஜர் கண்ணன்.

இதை கேட்டதும் கண்கலங்கிய கா.சு, என் கண்ணை திறந்து விட்ட கண்ணபிரான் தான் சார் நீங்க,  வாழ்க்கையில… செய்ய கூடாத தப்பை நான் செஞ்சுட்டேன். அறிவின்மையா இந்த தப்பை செஞ்சுட்டேன். எனக்கு இந்த ஜென்மத்தில் பாவ மன்னிப்பே கிடையாது சார்.

 நீங்க மேடையில் எனக்கு கொடுத்த கௌரவம், பாராட்டு, பணம், பதவிஉயர்வு இது எதுவுமே எனக்கு கொடுத்தது பரிசு இல்லை சார். என்ன தான் நான் பெரிய எழுத்தாளனாக இருந்தும், இவ்வளவு நேரம் எனக்கும், என் மனைவிக்கும் அன்பையும், பாசத்தையும், வயோதிகத்தையும், வாழ்க்கையையும், சொல்லிக்கொடுத்து புரிய வெச்சீங்க பாருங்க இது தான் உண்மையான “பரிசு”. – என்றபடி விடைபெற்று

குடும்பத்தோடு நேராக முதியோர் இல்லத்துக்கு சென்று, அம்மாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து,

“ மறுநாள் “

அம்மா, மனைவி, மகன், மகள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்து, மறுநாள் எல்லோரும் கொடைக்கானல் போகலாம் என்றபடி இன்று பஸ்ஸில் அனைவரையும் அமரவைத்து விட்டு, இவரும் இருக்கையில் அமர்ந்துபடி புதிய கதை ஒன்று எழுத சட்டை பையிலிருந்த துண்டு காகிதத்தில் “பரிசு“-என தலைப்பை குறிப்பெழுதி க்கொண்டிருந்தார்.

*****முற்றும்*****

 

                                           ச.சிவபிரகாஷ்

Series Navigationகவிதைஅழலேர் வாளின் ஒப்ப
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *