பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்

This entry is part 19 of 34 in the series 28அக்டோபர் 2012


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     கற்களைக் குறித்த பல்வேறு கதைகள் மக்களின் வழக்காறுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கதையினை நமக்கு எடுத்துரைக்கின்றன. நடைபாதையில் இரு கற்களை நட்டு அதன் மீது ஒரு கல்லைப் படுக்க வைத்திருப்பார்கள். இது சூலோடு இறந்து போன பெண்ணின் நினைவாக நடப்பட்ட கல்லாகும். இதனைச் சுமைதாங்கிக் கல் என்று கூறுவர். நிலத்தின் நான்கு எல்லைகளைக் குறிப்பிட ஊன்றப்படும் எல்லைக்கல் அளவுக் கல் என்று வழங்கப்படுகின்றது.

அதுபோன்று ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிடுவதற்கு ஊன்றப்படும் மைல்கல் எனப்படுகின்றது. ஏதாவது அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக நிலத்தின் ஓரிடத்தில் ஊன்றப்படும் கல் அடையாளக் கல் எனப்படும்.

அந்தக் காலத்தில் வீரர்கள் போரிட்டு இறந்தபோது அவர்களின் நினைவாகக் கல் ஊன்றப்படும். அத்தகைய கல்லிற்கு நடுகல் என்று பெயர். அவ்வாறு நடப்படும் கல்லில் அவ்வீரன் எதற்காக இறந்தான்? அவனது செயல் என்ன? என்பன பற்றிய செய்திகள் எல்லாம் அக்கல்லில் எழுத்துக்களாகவோ, படமாகவோ கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். இங்ஙனம் பல்வேறு வகையான கற்கள் மக்களிடையே வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. இக்கற்களை வைத்து பல்வேறு பழமொழிகளை மக்கள் வழங்கி வருகின்றனர். இப்பழமொழிகள் பண்பாட்டு நெறியை விளக்குவதுடன், இறைச் சித்தாந்தத்தையும் நமக்குத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன.

கல்லும் நாயும்

கிராமப்புறங்களில் ஏதேனும் ஒன்று இருந்து மற்றொன்று இருக்காத நிலைவரும்போது,

‘‘நாயக்கண்டாக் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டா நாயக்காணோம்’’ங்கற மாதிரி இங்கு ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது என்று கூறுவர்.

மேலும் நாய் ஒன்றுஒருவரைப் பார்த்து விரட்டி விரட்டிக் குரைக்கும்போது அதனைத் துரத்தியடிப்பதற்குக் கல்லைப் பார்த்தால் அச்சமயத்தில் கல் கிடைக்காது கல் அகப்படும்பொது நாய் இராது என்று இதற்கு விளக்கம் கூறுவாருமுளர். ஆனால் இப்பழமொழி மிகப்பெரிய சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

நாயினைப் பைரவர் என்று நினைத்து வழிபடும் பழக்கம் மக்களிடையே காணப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்த கதைஒன்று வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

ஒரு கல்லில் நாயின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்ப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக மூவர் வருகின்றனர். வந்தவர்களுள் ஒருவன் அச்சிலையைப் பார்த்த முதலாமவன் ‘‘அடடா என்ன அருமையான பைரவர் சிலை என்று கூறி அதற்குத் தான் கொண்டுவந்த மலரைப் போட்டு வணங்கிச் சென்றான். அதற்கு அடுத்ததாக வந்த ஒருவன் அடமுட்டாப் பயல்களா எவனோ ஒருத்தன் இங்கு வந்து இந்தக் கல்லுக்கு மாலை போட்டுள்ளானே… இவனுகள்ளலாம் என்ன மனுஷங்களோ’’ என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டான். மூன்றாவதாக வந்த ஒருவன் அதனைப் பார்த்து, ‘‘அஹா.. என்ன அற்புதமாக இந்த நாயின் சிலையை வடித்துள்ளான் சிற்பி. அச்சிற்பி ஒரு மஹா கலைஞன்தான். என்ன நேர்த்தியாக இச்சிலை உள்ளது’’ என்று பாராட்டிவிட்டுச் சென்றான்.

இம்மூவரில் வந்த முதலாமவன் பக்தன். இரண்டாமவன் நாத்திகன். மூன்றாமவன் சிற்பி. நாயின் சிலை ஒருவனது கண்களுக்குக் கல்லாகவும், மற்றொருவனுக்கு வெறும் சிலையாகவும், பிறிதொருவனுக்குக் கடவுளாகவும் தெரிகின்றது. ஒவ்வொருவர் பார்வையின் நோக்கமே இவ்வாறு பலவாறாகக் காட்சியளி்ப்பதற்குக் காரணமாகும். இதனைத் திருமூலர்,

‘‘மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தால் மறைந்தது மாமத யானை’’

என்று அழகுறக் காட்சிப்படுத்துகிறார். யானை என்று நினைத்துப் பார்த்தால் அது யானையாகக் காட்சிதரும். அங்கு மரம் இருக்காது. மரம் என்று கருதிப் பார்த்தால் அங்கு மரம் மட்டும் இருக்கும். யானை இருக்காது. அதுபோன்றுதான் இறைவனும். இறைவனை நம்பிச் செயல்பட்டால் நம்முடன் இறைவனும் அச்செயலில் பங்கு கொண்டு நமக்கு அருள்புரிவான் என்ற கருத்தை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

இருவர் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சற்று முன்னர் பளபளக்கும் வைரம் ஒன்று கிடந்து மின்னிக் கொண்டிருக்கின்றது. முதலாவதாகச் சென்றவன் அதைப் பார்க்கிறான். பார்த்துவிட்டு இது ஏதோ கண்ணாடிக் கல் என்று அதனை அங்கேயே போட்டுவிட்டுச் செல்கிறான். இரண்டாவதாக வந்தவன் அதைப் பார்த்து அதை வைரமென்று அறிந்து கொண்டு அதனை எடுத்துக் கொள்கிறான். இருவரும் பார்த்த பார்வையிலும் புரிந்து கொண்ட விதத்திலும்தான் உள்ளது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இறையருள் பெற்ற ஞானிகளுக்கு அனைத்தும் ஒன்றாகவே தெரியும். அவர்கள் மனதில் இறைவனைப் பார்த்து மகிழ்வார்கள். உருவ வழிபாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். பக்தன் பக்குவப்படப் பக்குவப்பட அனைத்தையும் சமநிலையில் நோக்கும் ஞானியின் நிலையினை அடைவான். அதாவது பரிபக்குவ நிலையினை அடைவான் என்ற அரிய சித்தாந்த மறைபொருளை மிகவும் எளிதாக விளக்குகிறது.

கல்லெறியும் கண்ணெறியும்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்ப்பர். ஒருவரது பார்வை பட்டால் எதுவும் துன்பம் நேராது. சிலரின் பார்வை பட்டால் அது மிகுந்த துன்பத்தைத் தரும். சிலரின் பார்வை மகிழ்வைத் தரும். இவ்வாறு பார்வையால் ஏற்படும் தீங்கினைக் கண்ணெறி என்று கூறுவர். இக்கண்ணெறிக்கு யாரும் தப்ப முடியாது. கண்பார்வையினால் துன்பம் ஏற்படும் என்ற இத்தகைய மக்களின் நம்பிக்கையை,

‘‘கல்லெறிக்குத் தப்பினாலும் தப்பலாம்

கண்ணெறிக்குத் தப்ப முடியாது’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

ஒருவர் நம்மைப் பார்த்துக் கல்லெறிந்தால் அதிலிருந்து நாம் ஒதுங்கி கல்லடி படாது தப்பி விடலாம். ஆனால் ஒருவர் வயிறெரிந்து பார்க்கும் பார்வையானது தரும் அடியிலிருந்து(துன்பத்திலிருந்து) நாம் தப்ப முடியாது என்பதை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

இதனை விளக்கும் வகையில் மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. ஒரு மரத்தடியில் இறையருள் பெற்ற முனிவர் ஒருவர் யோக நிஷ்டையில் இருந்தார். அப்போது அம்மரத்தின் மீது ஒரு கொக்கு ஒன்றும் அமர்ந்திருந்தது. அக்கொக்கு அம்முனிவரின் மீது எச்சத்தை இட்டுவிட்டது. அப்போது நிஷ்டை களைந்து நிமிர்ந்து பார்த்தார் முனிவர். தன் மீது எச்சமிட்டு தன்னை அசுத்தப்படுத்திவிட்ட கொக்கின் மீது முனிவருக்குக் கோபம் வந்துவிட்டது. அக்கோபத்துடன் கொக்கினை  அவர் முறைத்துப் பார்த்தார். அவர் பார்த்த அளவிலேயே அக்கொக்கு எரிந்து சாம்பலாகக் கீழே விழுந்தது. அவர் தன்னுடைய ஆற்றலை நினைத்து மகிழ்ச்சியடைந்தார். தான் அனைத்து ஆற்றல்களையும் பெற்றுவிட்டதாகக் கருதினார்.

அந்த நினைப்புடன் அருகில் உள்ள கிராமத்திற்குப் பிச்சை ஏற்று உண்பதற்குச் சென்றார். ஒரு வீட்டின் முன்னர் நின்று அம்மா ஏதாவது உணவு கொடுங்கள் என்று அவ்வீட்டிலிருந்த பெண்மணியை அழைத்தார். அப்பெண்ணோ சற்று இருங்கள் இதோ வருகிறேன் என்று கூறினாள். அவரும் வாசலில்நின்று கொண்டே இருந்தார். அந்தப் பெண் வர வெகுநேரமாகியது. முனிவருக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் நம்மை அவமானப் படுத்துகிறாள் என்று கருதினார். அப்போது அப்பெண்ணானவள் தட்டில் உணவை எடுத்துக் கொண்டுவந்து கொண்டிருந்தாள்.

முனிவர் அப்பெண்ணைக் கோபமாக முறைத்துப் பார்த்தார். அதைப் பார்த்த பெண், ‘‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’’ என்று கூறி நீ எரிப்பதற்கு நான் ஒன்றும் கொக்கல்ல’’ என்று கூறினாள். அம்முனிவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தான் எங்கோ காட்டில் இருந்து கொண்டு செய்த செயலை இந்தப் பெண் எவ்வாறு சரியாகக் கூறுகிறாள் என்று வியந்து, அந்தப் பெண்ணை வணங்கி நின்று, தனக்கு உபதேசிக்குமாறு கூறினார். அப்பெண் அம்முனிவரைப் பார்த்து, ‘‘ஐயா முனிவரே நீர் இன்னும் பக்குவமடையவில்லை. நானும் உமக்கு உபதேசம் செய்ய முடியாது. என்னைவிடப் பெரியவர் அடுத்த ஊரில் இருக்கிறார். அவரிடம் சென்று அவர் செய்யும் உபதேசங்களைப் பெற்றுக் கொள்’’ என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.

பக்கத்து ஊருக்கு வந்த அந்த முனிவர் அந்தப் பெண் கூறியவரை தேடிக் கண்டு பிடித்தார். முனிவர் தேடிவந்த மனிதர் ஆட்டை அறுத்து கறியினை எடைபோட்டு வெட்டி விற்றுக் கொண்டிருந்தார். முனிவருக்கு அவரைப் பார்த்தவுடன் இந்தக் கொலைகாரனிடமா அந்தப் பெண் என்னை அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த மனிதரிடம் தன்னைப் பற்றிக் கூறுவதற்கு எத்தனித்தார். அப்போது அந்த மனிதர் அம்முனிவரை நிமிர்ந்து பார்த்து, ‘‘அடடே ஐயா நீங்களா.. அந்தம்மா அனுப்பினாங்களா? கொஞ்சம் பொறுங்க…இதோ வந்துவிடுகிறேன்..அந்தக் கல்லில் அமருங்கள்’’ என்று கூறிவிட்டுத் தனது வேலையில் மூழ்கினார்.

கறிக்கடைக்காரர் வேலையை முடிக்கும் வரை முனிவர் காத்துக் கொண்டே இருந்தார். பின்னர் வேலையை முடித்த கறிக்கடைக்காரர் முனிவரை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றார். அங்கு அந்த முனிவரை அமர வைத்துவிட்டுத் தனது தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தார் இங்ஙனம் அனைத்துச் செயல்களையும் முடித்தபின்னர் முனிவரை நாடி வந்தார். முனிவர் உடன் எழுந்து தாம் வந்த வேலை முடிந்து விட்டதாகவும் அதனால் தான் செல்கிறேன் என்று கூறிவிட்டுக் கறிக்கடைக்காரரை வணங்கிவிட்டுச் சென்றார்.

உடனே கறிக்கடைக்காரர் முனிவரைப் பார்த்து, ‘‘ஐயா, மன்னிக்கவும், தாங்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் எதுவும் கூறவில்லை. ஆனால் தாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டதாகக் கூறிச் செல்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனைத் தாங்கள் எனக்குத் தயை கூர்ந்து புரிய வைக்க வேண்டும்’’ என்று பணிவுடன் கேட்டார்.

அதற்கு முனிவர், ‘‘ஐயா இதுவரை தவம், யோகம் என்ன வென்று எனக்குப் புரியவில்லை. தாங்களும் என்னைத் தங்களிடம் அனுப்பிய அம்மையாரும் எது தவம், யோகம் என்பதைப் புரிய வைத்து விட்டீர்கள். தாய் தந்தையருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் தங்களது பணிவிடைகளைச் செய்து, தனது கடமையையும் எவனொருவன் செய்து வருகின்றானோ அவன்தான் யோகி. அவன்தான் தவசி என்பதைத் தாங்களிருவரும் உணர்த்திவிட்டீர்கள். நான் எனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டேன். தற்போது எனக்குப் புத்தி வந்துவிட்டது. எனது கடமைகளை நிறைவேற்ற இப்போதே நான் செல்கிறேன்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆகக் கண்ணெறிக்குத்(கண் திருஷ்டி) யாரும் தப்ப முடியாது என்பதைஇப்பழமொழி நமக்குத் தெளிவுற எடுத்துரைக்கின்றது. இராவணன் நவகிரகங்களை குப்புறப் படுக்கப்போட்டு அவர்களின் முதுகின் மேல் மிதித்துக் கொண்டு சென்று அரியணையில் ஏறுவான். இதனைக் கண்ட நாரதர் இராவணனது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு, அவனிடம், ‘‘இராவணா நீ பெரிய வீரன். இந்நவக்கிரகங்களைச் சும்மா விடக்கூடாது. அவர்கள் பின்பக்கம் மிதிப்பது மட்டும் போதாது அவர்களது மார்பில் நீ காலடிபதித்து உனது அரியணையில் ஏறி அமர்ந்தால் மட்டுமே அவர்களது ஆணவம் அடங்கும். நான் கூறுவதை உடனே நிறைவேற்று. அவர்களுக்குப் புத்தி வரட்டும்’’ என்று கூறினார்.

ஆணவத்தின் உச்சத்தில் நின்ற இராவணன், ‘‘ஆமாம் நாரதரே நன்றாகச் சொன்னீர்கள். இதை உடனே நிறைவேற்றுகின்றேன். இந்த இராவணனிடம் அவர்களது அகந்தை செல்லாது என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறேன்’’ என்று கூறி அந்நவக்கிரகங்களை முகம் திரியத் திருப்பிப்போட்டு அவர்களது மார்பின் மேல் ஏறி நடந்து சென்று அரியணையில் அமர்ந்தான். அவ்வாறு நடக்கும்போது அவனை சனிபகவான் முறைத்துப் பார்த்தார். அச்சனீஸ்வர பகவான் அவ்வாறு பார்த்தவுடன் இராவணனுக்குச் சரிவும் துன்பமும் ஏற்படத் தொடங்கியது. படிப்படியாக அவனது அனைத்து அதிகாரங்களும், செல்வங்களும் அழிந்து முடிவில் அவனும் அழிந்தான். இவையெல்லாம் சனீஸ்வரபகவானின் கண்ணெறியின் காரணமாகவே நிகழ்ந்தது என்பது நோக்கத்தக்கது.

கல்லும் கரையும்

கல்லைக் கரைக்க முடியுமா? என்று கேட்டால் கரைக்க முடியாது என்ற பதிலே அனைவரிடமிருந்தும் வரும். ஆனால் சிலர் கல்லையும் கரைய வைக்க முடியும் என்பர். கரைக்க முடியும் என்பவர் கரைப்பர். இரக்கம், கருணை இல்லாதவர்களைப் பார்த்து, ‘‘உன்னுடைய மனது என்ன கல்லா?’’ என்றும், ‘‘உன்னுடைய மனசை என்ன கல்லிலா படைத்துள்ளான் இறைவன்’’ எனவும் வழக்கத்தில் கூறுவர். அப்படிப்பட்ட கல்மனதையும் சிலர் கரைத்துவிடுவர். அத்தகைய தன்மை சிலருக்கு மட்டுமே உண்டு. இதனை,

‘‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கம்ப இராமாயணத்தில் வரும் கைகேயி மிகவும் நல்ல உள்ளம் படைத்தவள். இராமன் அவளைத் தன் தாய்க்கும் மேலாகக் கருதுகிறான். இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்பதை அறிவித்த மந்தரைக்கு மனமுவந்து முத்தாரத்தைக் கொடுக்கின்றாள். ஆனால் அவளோ அவளுடைய மனதைப் பலவாறுகூறிக் கலைக்கின்றாள் (கரைக்கின்றாள்) அதுவரை மனம் மாறாத கைகேயி மந்தரையின் பேச்சில் மனம் கரைந்து தசரதன் வரும்போது வரம் கேட்டு இராமனைக் காட்டுக்கனுப்புகிறாள். தசரதன் இறந்துவிடுவான் எனத் தெரிந்தும் அவள் தனது மனதை மாற்றிக் கொள்ளவில்லை. நல்லவளான கைகேயியை மந்தரை கொடியவளாக மாற்றிவிடுகின்றாள். மேற்குறிப்பிட்ட பழமொழிக்குப் பொருத்தமான விளக்கமாக இராமாயணத்தில் வரும் இந்நிகழ்வு அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

அதுபோன்றே மகாபாரதத்தில் சகுனியும் மிகவும் தந்திரம் நிறைந்த சூழ்ச்சிக்காரன் ஆவான். மண்டபத்தைப் பார்க்க வந்த தருமனிடம் சூதாட்டம் ஆடுவோம் என அழைக்கிறான். முதலில் மறுத்த தருமன் சகுனியின் பேச்சில் மனம்மாறி சூதாடி அனைத்தையும் இழக்கின்றான். சூழ்ச்சிக்காரர்கள் எவ்வாறேனும் நல்லவர்கள் மனதையும் மாற்றிவிடுவார்கள் என்பதை இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

இளம் வயதில் சிலர் உணவு உண்பதில் எனக்கு இது பிடிக்காது, அது பிடிக்காது என்று கூறி ஒதுக்குவர். அவ்வாறு உணவைப் பிடிக்காது என்று ஒதுக்குவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்காது நோய்த் தொற்று ஏற்பட வழி ஏற்படுகின்றது. இளம் சிறார்கள் பெரும்பாலோனோருக்கு இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நோய்கள் வருகின்றன. இவர்களை உண்ணச் செய்வதற்காக நமது முன்னோர்கள் அவர்களிடம்,

‘‘கல்லைத் தின்னாலும் கரையிற வயசு’’

எதையும் ஒதுக்காமல் சாப்பிடு என்று கூறுவர். இளம் வயதில் எதை உண்டாலும் செரிமானம் ஆகிவிடும். அப்படி இருக்கும்போது எனக்கு அது வேண்டாம் இது வேண்டாம் என்று உணவினை ஒதுக்கிவிடுதல் கூடாது என்பதை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

கோழியானது அதிகமாக உண்ணும் இயல்புடையது. கழுத்தை நெளித்து நெளித்துக் கொண்டே உண்டு கொண்டே இருக்கும். அவ்வாறு உண்டவுடன் சிறுசிறு கற்களையும் அவ்வுணவுப் பொருள் செரிமானம் ஆவதற்காக உண்ணும். அவ்வாறு உண்ணட கற்கள் உணவுப் பொருள் எளிதில் செரிக்க கோழிக்கு உதவுகின்றது. கோழியின் இரைப்பையில் சிறுசிறு கற்கள் உணவுடன் சேர்ந்து இருப்பது நோக்கத்தக்கது. கோழிக்கே கல்லைக் கரைக்கக் கூடிய திறன் இருப்பது போன்று கல் போன்று கடினமாக உள்ள உணவுப் பொருளும் இளம் வயதினர் உண்டால் (ஆட்டுக் கறி எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவை) எளிதில் செரிமானம் ஆகி அவர்களது உடலுக்கு நல்ல வலுவைத் தரும் இதை உணர்ந்து உணவுகளை ஒதுக்காது அவர்கள் உண்ண வேண்டும் என்ற உணவு உண்ணும்  முறையை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.

எறும்பும் கல்லும்

எறும்பு சிறியது. மென்மையானது. எடை குறைவானது. இது ஊறும்போது எதுவும் பாதிப்பு வராது. இருப்பினும் கல்லில் தொடர்ந்து பலகாலம் எறும்பு ஏறி இறங்கும்போது அதில் தடம் ஏற்படும். இது இயற்கை. மென்மையானதுகூட தொடர்நிகழ்வினால் தடத்தை ஒரு பொருள் மீது ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதுபோன்று எளியது சிறியது, மென்மையானது என்று ஒன்றை நாம் குறைவாக எடைபோட்டுவிடுதல் கூடாது. ஏனெனில் அவை ஒன்றன் அழிவுக்கும் வழிவகுக்கும்.

பெரிய வலிமையான இரும்புக் கடப்பாறையால் பிளக்க முடியாத பாறையானது, சிறிய மர வேரால் பிளக்கப்படுவது நோக்கத்தக்கது. மலை பெரியது. சிற்றுளி சிறியது. அப்பெரிய மலையை சிற்றுளி சிதைத்து உடைத்தெரிந்து விடுகின்றதல்லவா? அது போன்றே பகையும் ஆகும். பகை சிறிது, எளிது என்று கருதி வாளாவிருக்கக் கூடாது. அதனை கவனித்துச் சமயம் நேரும்போது அழித்துவிட வேண்டும். எளிதானது இழிவாகக் கருதி பகையைக் கண்காணிக்காது இருத்தல் கூடாது. விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என்ற அரிய கருத்தை,

‘‘எறும்பூறக் கல்லும் தேயும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

கல்லும் தலையும்

எந்தச் சூழ்நிலையிலும் நாம் பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது. அது போன்று பிறருக்கு எதிராகத் தீங்கு செய்யத் துணைபோதலும் கூடாது. அங்ஙனம் துணைபோவதும் தீங்கு செய்வதற்கு ஒப்பானதாகும். தமக்கு ஒன்று தெரியவில்லை என்று வழி கேட்பவருக்குத் தவறான வழி காட்டுவதோடு, அவரைக் கொண்டு தமக்குப் பிடிக்காதவருக்குத் தீங்கு செய்வது தனக்கே கேடு தேடிக்கொள்வது போன்றதாகும். அத்தகைய செயல்களில் மனிதர்கள் ஈடுபடக் கூடாது என்பதை,

‘‘செஞ்சவினைத் தனக்குத் தூக்குற கல்லு தலைக்கு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தான் செய்த வினை தனக்கே கேடு விளைவிக்கும். அதுபோன்று கனமான கல்லைத் தூக்கிக் கீழே போட முடியாத போது அக்கல் தூக்கியவன் தலையிலேயே விழுந்து அவனுக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் மறந்துகூட பிறருக்குக் கேடுநினைக்கக் கூடாது என்பதை இப்பழமொழி வாயிலாக நமக்கு நமது முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்பழமொழியானது,

‘‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு’’

என்ற திருக்குறளின் விளக்கமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எந்தப் பொருளையும் கீழே வந்து விழும். இது இயற்கை. புவியீர்ப்புவிசையும் இதற்குக் காரணமாகும். அப்படியே அந்தரத்தில் அப்பொருளானது நிற்காது. அதுபோன்றே நாம் பிறருக்கு எத்தகைய செயலைச் செய்கின்றோமோ அச் செயல் நமக்குப் பின்னொரு நாளில் உடனே வந்து நம்மக்குத் தொல்லை தரும். அதனால் எந்தவிதமான தீங்கினையும் நாம் பிறருக்குச் செய்தல் கூடாது. பிறருக்கு நாம் செய்தால் அடுத்து நமக்குத் திரும்பி வரும் என்பதை உணர்ந்து மக்கள் செயல்படுதல் வேண்டும் என்பதை,

‘‘மேலே எறிஞ்ச கல்லு கீழே விழுந்துதானே ஆகணும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

பிறருக்கு நாம் எந்தவிதமான தீங்கினையும் செய்யாது, நினைக்காது தூய்மையான வாழ்வை வாழவேண்டும். ஆணவம் கொள்ளாது, பிறருக்குத் தீங்கிழைக்காது வாழும் வாழ்வே சிறந்த புனித வாழ்வாகும். அத்தகைய புனித வாழ்வே நம்மை வாழ்வியல் ஞானியாக மாற்றும். இத்தகைய தூய்மையான வாழ்வியல் ஞானியரே இறையருள் பெறுவர். வாழ்வியல் ஞானியரால் சமுதாயம் மேன்மை அடையும். அதனால் தூய வாழ்வு வாழ்ந்து நம்மையும் சமுதாயத்தையும் முன்னேற்றுவோம். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி தங்கும். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து மனநிறைவு கொள்வோம். வாழ்வு வளமுறும்.

——————–

Series Navigationகவிதைகள்மணலும், நுரையும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *