பழிபரப்பிகள்: இனாம் கொடுத்த ஸிஐஏவுக்கு இளித்த இந்திய ஸஞ்சிகைகளும், அவற்றுக்கு உழைத்த உத்தம எழுத்தாளர்களும்

author
1
0 minutes, 30 seconds Read
This entry is part 1 of 11 in the series 14 மே 2017

[மொழிபெயர்ப்பாளர் முன்னுரை: ஒரு அரசு சாரா அமைப்பை மறைக்க அதன் முன் இன்னொரு அரசு சாரா அமைப்பை மறைப்பு அமைப்பாக வைத்து, அந்த அரசு சாரா மறைப்பு அமைப்பின் முன்பாகப் பல அரசு சாரா அமைப்புகளை உருவாக்கி, கயிறாட்டும் சூத்ரதாரி யார் என்பது தெரியாதபடி மிக எச்சரிக்கையாக ஸிஐஏ தனது பொம்மலாட்ட சதிகளை நிறைவேற்றி வருகிறது. அங்கனம், நேருவிய காலத்தில், அமெரிக்க ஸிஐஏவால் உருவாக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகளில் ஒன்றுதான் “கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸ்”. கம்யூனிஸ, ஸோஷியலிஸ சிந்தனையாளர்கள் மட்டுமே கொண்டுள்ள இந்தியாவில், அந்தச் சிந்தனையாளர்களைப் புதியதொரு பார்வையில் பார்க்க வைக்க, இவ்வமைப்பின் மூலம் ஸி.ஐ.ஏ முயன்று, தோற்றும் விட்டது. ஸி.ஐ.ஏவின் இம்முயற்சிகள் குறித்து வெளியான நூல் ஒன்றின் ஒரு அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு இப் படைப்பு. இதில் “காங்கிரஸ்” என்று குறிப்பிடப்படுவது ஸிஐஏவால் உருவாக்கப்பட்ட அமைப்பான “கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸ்”. மொழிபெயர்ப்பாளரின் சேர்க்கைகள் [ ]க்கு உள்ளும், மூல அத்யாயத்தில் ஆசிரியரே சேர்த்தவை ( )க்கு உள்ளும் இம்மொழிபெயர்ப்பில் கையாளப்பட்டு உள்ளன.]


மூலக் கட்டுரையின் தலைப்பு: Flinks: How CIA sponsored Indian magazines that engaged the country’s best writers

உரலி: business-standard.com

எழுதியவர்: Joel Whitney

மொழிபெயர்த்தவர்: ஆதிவாஸி

Finks_CVR_3இந்திய சிந்தனையாளர்களின் வெளியை ஊடுருவ, கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸ் அமைப்பு செய்த முயற்சிகளை ஒரு புத்தகமானது நினைவுகூர்கிறது.

ஜோஹ்ல் விட்னீ எழுதிய “பழிபரப்பிகள்: நாட்டின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களை பணியமர்த்திய இந்திய ஸஞ்சிகைகளுக்கு ஸிஐஏ புரவலரானது எப்படி” எனும் நூலில் இருந்து ஒரு எடுபகுதி.

“கொர்னிகா: உலக கலைகள் மற்றும் அரசியலுக்கான ஒரு பத்திரிகை”யின் துணை நிறுவனர் ஜோஹ்ல் விட்னீ எழுதிய நூல் இது. அவருடைய கவிதை புலமைக்காக அவருக்கு டிஸ்கவரி அவார்ட் வழங்கப்பட்டது.


[நூலாசிரியரான ஜோஹ்ல் விட்னீ சொல்வதாகவே படியுங்கள். மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கிறது இனி.]

Whitney-picயுஎஸ்ஏவானது தன்னைத்தானே விஞ்சிவிட்டது என்பதை சிந்தனையாளர் உலகின் பெரும்பான்மை 1967ல் அறிந்துகொண்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பே, இரகஸிய கலாச்சார ஆதரவுக்கான பல ஊடுருவு ஊர்திகளை அந்நாடு சத்தமின்றி உருவாக்கி விட்டது. இந்தச் சூழ்ச்சித் திட்டமானது, ஸோவியத் வகையறாவைச் சேர்ந்தக் கலாச்சார ஊடுருவல்கள் மற்றும் இரக்ஷிப்புகளுடன் — இவை எதிர்பார்த்தது போல வெறும் பிரச்சாரங்களுக்குப் பின்னே மட்டும் இல்லாமல், மாணவ மற்றும் தொழிலாளர் யூனியன்களாலும், உலக அமைதிக்கான மாநாடுகளாலும், இவை போன்ற மேலும் பல வழிகளின் பின்னாலும் இருப்பதால், [அவற்றுடன்] சண்டை போடுவதற்கான அவசியச் செலவாகக் காட்டப்பட்டது. இதன் இரகஸியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, அடுத்தாற்போல், “கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸ் அமைப்பு” போன்ற அமெரிக்க ஊடுருவு ஊர்திகள் ஸிஐஏவின் ஒளிவுமறைவு நிர்வாகத்துறைகளின் கீழ் ஏவப்பட்டன. ஏஜன்ஸியின் இந்த இரகசிய பட்ஜெட்டானது, யு.எஸ். சட்டசபையின் — அங்கிருந்த கடும்போக்கு வலதுசாரிகளை “அறிவுசீவி” ஸஞ்சிகைகளுக்கோ, அல்லது ஒரு பேச்சுக்கு சொல்வதென்றால், பாரம்பரிய இசைக்கோ, அல்லது ஜாக்ஸன் போலாக்கின் (Jackson Pollock) ஏடாகூட பெய்ண்ட் தெறிப்புகளுக்கோ நிதியளிக்கும்படி ஏற்கச் செய்வது கடினம் என்பதால், விவாதங்களைத் [தவிர்த்து] சுற்றி வளைந்து செல்வதற்கான ஒரு போக்கிடமாகப் பார்க்கப்பட்டது.

அத்துடன், இந்த இரகசியமே இரண்டாவது போனஸையும் சேர்த்துத் தந்தது – இந்தக் கலாச்சாரக் கருத்துப்பரப்பலானது அதிக “நாஸுக்கானதாக” –- உண்மையைச் சொன்னால், நயமற்ற ஸோவியத் வகையறாவைப் போல இல்லாமல், சிலபேரால் கண்டே பிடிக்க முடியாத வகையில் இருந்தது. அதாவது, 1967ல் மிக வெளிப்படையாக அம்பலமாகும்வரையில். என்னுடைய புதிய நூலான, Flinks: How CIA Sponsored Indian Magazines that Engaged the Country’s Best Writers (இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை) வாதிடுவது போல, என்னென்ன நன்மதிப்புகளை இந்த நாசூக்கான கலாச்சார முயற்சிகள் சம்பாதித்தனவோ, அவை ஸி.ஐ.ஏ. தொடர்பெனும் கறைபட்டபோது மிக வேகமாகக் கரைந்து வெளியேறின. இதற்கான ஆதரவுத்தளமானது மிகப் பரவலாக விரிந்துவிட்டதாலும், இத்தகைய ஸஞ்சிகைகளும் அவற்றின் புறக்கடை வழிகளும் எண்ணமுடியாதவையாக இருந்ததாலும், பல உலகமறிந்த அறிவுசீவிகள் — இப்பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசியவர்களும் சரி மௌனமாக இருந்தவர்களும் சரி, இந்தச் சர்ச்சையால் தீண்டப்பட்டனர். இந்தப் பத்திரிகைகளில் லத்தீன் அமெரிக்கா குறித்த ஸஞ்சிகை ஒன்றிற்கு படைப்புகள் அளித்துவந்த காப்ரியேல் கர்ஸ்ஸீயா மார்கெஸ் (Gabriel Garcia Marquez), அவருடைய ஸஞ்சிகையாசிரியருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், சோரம்போகிறவளின் புருஷனாகத் தன்னை உணர்ந்ததாகக் தெரிவித்து, அந்த ஸஞ்சிகைக்கு இனி எப்போதும் படைப்பளிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிவைத்து வெளியான இந்தக் காங்கிரஸின் பத்திரிகைகளில் ஒன்றான “க்வெஸ்ட்” (Quest) (இன்னொரு ஸஞ்சிகை Imprint) உடன் இழைந்துவந்த இந்திய அறிவுசீவிகளோ, மாட்டிக்கொள்ளும்படி செய்துவிட்ட இந்தச் சூழ்ச்சித் திட்டத்தைச் சொதப்பி விட்டதன்மேல், இதேபோன்ற மனக்கடுப்பைக் காட்டினர். “கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸின்” இந்திய வடிவான ஒரு ஸஞ்சிகையில் வேலை பார்த்திருந்த ஜெயப்ரகாஷ் நாராயணன், அவரோடு தொடர்பில் இருந்த நண்பர்களுக்கு எழுதினார்,

“காங்கிரஸானது சுதந்திரமாகச் செயல்பட்டதா என்பதை மட்டும் கணிப்பது போதாது….இந்த ஏவலமைப்பானது தனக்கு எது உபயோகம் என்று கருதியதோ அவற்றை மட்டுமே செய்துகொண்டு இருந்திருக்கிறது”.

அவருடைய சகபணியாளரான கே.கே. சின்ஹா, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதை அறிவித்து எழுதியதில்,

“… பாரீஸ் தலைமையகத்தில் ஒரு டைம்பாம் மறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, … ஒரே ஒரு தகவலானது எனக்குக் கிடைத்திருக்குமானால், …. காங்கிரஸை தீண்டக்கூடச் செய்திருக்க மாட்டேன்” என்றார்.

கீழேயுள்ள படம்: கலாச்சார சுதந்திரத்துக்கான காங்கிரஸ் அமைப்பின் இரண்டாவது பெர்லின் மாநாடு, 1960. பட மூலம்: Wikimedia Commons
conference

Finksல் இருந்து தரப்பட்டிருக்கும் பின்வரும் சிறு எடுபகுதியானது, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும், இந்தியாவும் மற்ற வளர்ந்துவரும் உலகப் பகுதிகளும் ஸ்டாலினியத்தின் சாத்தான்களைக் கண்டறிய “உதவ” வலியச் சென்றது, உண்மையில் தங்களுடைய ஏவலமைப்புக்கும் தங்களுக்கும் “பயனுள்ளதாகத்” தெரிகின்ற செயல்களை, அவர்களுடைய சர்வதேச சகாக்களின் [இந்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின்] கலாச்சார பரிவர்த்தனை குறித்த எதிர்பார்ப்புகள் பற்றிச் சிறு புரிதலும் இன்றி மீண்டும் மீண்டும் செயல்பட்டதைக் காட்டுகிறது.

என்கவுண்டர் (ஸஞ்சிகை) இங்கிலாந்திலும், த பாரிஸ் ரெவ்யூவானது நியூ யார்க் மற்றும் பாரிஸிலும் ஏவப்பட்ட அதே காலகட்டத்தில் ஜெயப்ரகாஷ் நாராயணன் தனது கவனத்தை [அரசியலில் இருந்து] திருப்பிக் கொண்டார். சுதந்திரமடைந்த இந்தியாவின் ஸ்தாபகர்களோ சார்பின்மை கடைபிடிப்பவர்களில் முதன்மையானவர்களாக இருந்தார்கள். இதற்குக் காரணங்கள் நேருவின் ஸோஷியலிஸமும், ஸோஷியலிஸ்ட்டுகளின் விமர்சனங்களை நியாயப்படுத்திய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பும். ஆனால், இந்தப் பார்வைகளை சமன்செய்வதாக இருந்தன ஆங்கிலம்-பேசும் உலகத்தோடு இருந்த கலாச்சார இணைப்புகள். அவ்வகையில், யுனைட்டட் ஸ்டேட்ஸுடன் மட்டுமோ அல்லது யு.எஸ்.எஸ்.ஆருடன் மட்டுமோ சேர்ந்துகொள்ள இந்தியாவின் தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, இந்தியாவுக்குள் ஊடுருவத் தேவையானவற்றைத் தேட ஆரம்பித்தது ஸி.ஐ.ஏ. இதைச் செய்வதற்காகக் கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸ் அமைப்பின் உள்ளூர் கூட்டாளி அமைப்பை கால்வைக்கும் படியாக உபயோகித்துக்கொண்டு, அந்தக் கூட்டாளி அமைப்பில் ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மினூ மஸானி போன்றோரை உறுப்பினர்களாக்கியது அது (ஸி.ஐ.ஏ). இருந்த போதிலும், இந்தியாவானது மாறும் காற்றுக்கேற்ப திசைமாறும் பாய்மரமாக அந்தப் பக்கத்திற்கும் இந்தப் பக்கத்திற்குமாக ஊசலாடிக் கொண்டுதான் இருந்தது. நடுநிலமை வகிப்பதை, “நன்னெறியற்றதும், கிட்டப்பார்வையுமான” என்று யு.எஸ்.ஸின் அரசுச் செயலாளரான ஜான் ஃபாஸ்டர் டல்லஸோ கண்ட சமயத்தில், நேருவோ, “அதிகார அரசியலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காகவும், ஒரு கூட்டத்துக்கு எதிராக வேறு எந்த ஒரு வல்லான்களின் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளாதிருப்பதையும்” வேண்டினார்.

ஏப்ரல் 18, 1955ல் ஆரம்பித்த, பிற்காலத்தில் அணிசேரா இயக்கம் என அறியப்பட்ட, சார்பில்லாத மூன்றாம் நாடுகளின் எழுச்சியை முன்னறிவித்த நிகழ்வுகளில், பாண்டுவுங் மாநாடு (Bandung conference) போல வேறில்லை. இந்தோனேஷிய ஜனாதிபதி ஸுகர்னோவின் பேச்சுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில், அவர் “உலக அதிகார அமைப்புகள் [மற்ற நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில்] தலையிடும் மீளாவேட்கையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக “வாழு வாழவிடு” எனும் பதத்தில் சுருக்கமாகச் சொல்லப்படும் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மன்றாடினார். இந்த மனப்போக்கை ஒதுங்குதல் என அழைப்பதே யுனைட்டட் ஸ்டேட்ஸின் சம்பிரதாயமாக இருந்தது. இதற்குப் பின்பு சுகர்ணோவை மிகக் கடுமையாக வெறுக்க ஆரம்பித்த ஸி.ஐ.ஏ, ஒரு ரஷ்ய விமானப் பணிப்பெண்ணுடன் [அவருக்குத்] தகாத உறவு இருப்பதாக ஒரு பொய்ச் செய்தியை நட்டதுடன், ஒரு ஆபாச வீடியோவை தயாரித்து, அந்த வீடியோவிற்கு “இன்ப நாட்கள்” என்று பெயரும் வைத்தது. [சுகர்ணோவைப் போலவே] நன்கு ஒத்துப்போகும் தோற்றமுடையவர் கிடைக்காததால், ஒரு நடிகரை கூலிக்கமர்த்தி ஸி.ஐ.ஏவின் டெக்னிக்கல் ஸெர்வீஸ் டிவிஷனால் தயாரிக்கப்பட்ட லேட்டக்ஸால் ஆன ஒரு சுகர்ணோ முகமூடியை அணிவிக்கச் செய்து, அந்த வீடியோவை தென்கிழக்காசிய முழுவதும் விநியோகித்தது.

[மொழிபெயர்ப்பாளர் கருத்து: ஸ்வாமி நித்யானந்தரை மிரட்ட ஸன் டிவி தயாரித்த போலி ஆபாச வீடியோ உங்கள் நினைவுக்கு வரலாம்.]

இத்தகைய கண்ணியமற்ற கபடுகள், யுனைட்டட் ஸ்டேட்ஸிடம் இருந்து அணிசேரா இயக்கத்தினை வெறுத்தொதுங்கச் செய்தவற்றின் ஒரு பகுதியாக இருந்ததுடன், பாண்டுவுங் மாநாட்டில் தனிக்கவனம் பெற்றவரான சீனாவின் சௌஉ வென்-லாயி யின் (Zhou En-lai) பின்னால் அணிசேரா நாடுகள் அணி திரளவும் உதவி செய்தன (அவரை வரும் வழியிலேயே தீர்த்துக்கட்ட யு.எஸ். முயற்சித்ததாகப் பரவிய கிசுகிசு இந்த அணிதிரட்டலில் ஆற்றிய பணியானது கொஞ்சநஞ்சமல்ல). இருந்த போதிலும், “கம்யூனிச வழியையோ கம்யூனிசத்துக்கு எதிரான வழியையோ நான் நம்பவில்லை !” என அவருடைய சார்பின்மைக் கோட்பாட்டை நேரு முழங்கியபோது, பாண்டுவுங் பிரதிநிதிகள் கர்ஜித்தனர் ஆதரவாக. எகிப்தின் நாஸர், அவரும் வந்திருந்தார், “அதிகார அரசியல் விளையாட்டின் கருவிகளாக சிறிய நாடுகளை பயன்படுத்த முடியும் என்பது முடிவடைந்தே தீர வேண்டும்” என்று அறிவித்த போது இன்னும் அதிகமாக அவர்கள் ஆரவாரம் எழுப்பினர். ஆனால், சில இந்தியர்களோ இந்தச் சார்பின்மையானது இரண்டு பக்கமும் வெட்டக்கூடியதெனக் கண்டார்கள்.

1956ல் நடந்த ஹங்கேரியப் புரட்சியின்போது ரத்தம்வடித்த ஸோவியத்தின் முன்னர் நேரு முதலில் மௌனமாக இருந்தபோது, CCFன் (கலாச்சார சுதந்திரத்துக்கான காங்கிரஸின்) இந்தியக் கிளையும், நாராயணனும் அதிர்ச்சி அடைந்தனர். நாராயணன் அவருடைய வாழ்க்கையை – அச்சமயத்தில் – அரசியல் அமளிதுமளிகளில் இருந்து வெளியே இருப்பவர் போல, ஒப்பீட்டில் அமைதியான அடித்தளப் (grassroot) பிரச்சாரங்களுக்கு அர்ப்பணித்திருந்தாலும், நடைமுறை அரசியலின் அவலக்ஷணமான உலகில் இருந்து முற்றிலும் ஒதுங்கிக்கொள்ளவில்லை என்பதால், இந்நிகழ்வானது பூதான இயக்கத்தில் இருந்து அவரது கவனத்தைச் சற்றே திருப்பக் கோரியது. ஸோவியத்தின் இந்த நடத்தையை ஃப்ரெஞ்ச்-இங்கிலாந்துகளின் எகிப்திய ஆக்கிரமிப்போடு — அந்த ஆக்கிரமிப்பை எகிப்து மற்றும் நாஸருக்கு ஆதரவாக மிகப் பெரிய முழக்கமிட்டு குற்றம்சாட்டியிருந்தார் நேரு, ஒப்பிடக் கூடியதாகக் கண்டார் நாராயணன். இந்திய CCFன் கௌரவ ப்ரெஸிடெண்டாக, நாராயணன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்:

“ஹங்ரீயில் (Hungary) இருக்க றஸ்ஸீயாவுக்கு (Russia) எந்த உரிமையும் கிடையாது. ஹங்ரீய ஜனங்களாகட்டும் அல்லது – இந்திய ஜனங்கள் உட்பட – வேறு எந்த ஜனங்களாகவும் இருக்கட்டும், ஒரு கம்யூனிஸ வடிவம் கொண்ட அரசை அவர்கள் விரும்பித் தொலைத்தால், அதைத் தேர்ந்தெடுப்பதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.

நாராயணன் தொடர்ந்து,

“அந்நிகழ்வு உள்நாட்டு விவகாரமாக இருக்கும். ஆனால், எப்போது ஒரு பெரிய வல்லான் ஆயுதங்களோடு தலையிட்டு மற்றொரு நாட்டில் தன்னுடைய பொம்மைகளை அதிகாரத்தில் ஏற்றித் திணிக்கிறதோ, அது ஒரு உள்நாட்டு விவகாரமாக அதற்குப் பின்பும் இராமல், இருப்பதிலேயே அதிமுக்கியமான ஒரு பன்னாட்டு விவகாரமாக ஆகிறது.”

இந்த அறிக்கைகள், கலாச்சார சுதந்திரத்திற்கான காங்கிரஸின் பல்வேறு தேசிய அளவிலான செய்திமடல்களில் பிரம்மாண்ட தலைப்புகளாக ஓடிவந்ததுடன், நேரு இங்கனம் வெளிப்படையாகக் கண்டிக்கப்படுவது கண்டு களிப்படைந்து [நாராயணனின் கண்டன] மேற்கோள்களை ஊடக வெளியீடுகளில் மறுபடி மறுபடி எடுத்துக் கூறிய அமெரிக்க உறுப்பினர்களோ, ஒரு தேசியத்தின் இறையாண்மைக்கான தனிஉரிமையை மற்ற அனைத்திற்கும் மேலாகக் கருதியதாலேயே நாராயணன் அந்த இந்தியத் தலைவரும் தனது நண்பருமானவரை வெளிப்படையாகக் கண்டித்தார் என்பதைப் புரிந்துகொள்ளாமல் விட்டார்கள். எனினும், “ஒரு பெரிய வல்லானின் ஆயுதமேந்திய தலையீடு” என்ற அவரது சொற்றொடரானது அமெரிக்காவுக்கும் சேர்த்தே என்பதைக் காட்டியது. CCFன் கௌரவ சபாபதியாக, நேருவின் விடாப்பிடியான நடுநிலமைக்கு எதிராக, கம்யூனிஸத்துக்கு எதிரான ஆக்ஷேபணைகளுக்கு நீர்வார்ப்பவராகவே இன்னும் இருந்தார் நாராயணன். ஆனால், இந்தக் கம்யூனிஸ எதிர்ப்பானது, தேசிய இறையாண்மைக் கொள்கைகளை — நாடுகளின் அடிப்படை உரிமையான இறையாண்மையை கொஞ்சம்தான் பிளந்தது எனச் சொல்ல முடியாத பெரிய குற்றவாளியாக யுனைட்டட் ஸ்டேட்ஸ் இருந்தபோதிலும், மீண்டும் பயன்படுத்துவதற்காகவே எனச் சொல்லிக் காப்பாற்றப்பட்டது. “நேருவின் முன்னணி விமர்சகர்” என்று அறியப்படுபவராகவே ஆக்கப்பட்டார் நாராயணன். ஆனால், ஏழைகளுக்காக அவர் ஏற்ற கடமைக்கும் வெளிப்படையான [விமர்சன] குடைச்சல்ப்பூச்சி எனும் சமூகப் பங்கிற்கும் இடையேயும், அரசியல் ஆட்டத்தினருடனும் நண்பர்களுடனும் — நேரு உட்பட, அவருடன் 1950களிலும் 60களிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார் — தொட்டு உறவாடுதலுக்கு இடையேயும் அவர் ஊசலாடிக்கொண்டு இருந்தார்.

இந்த நிகழ்வுகளும், மற்றும் இந்தியாவுக்கான பனிப்போர் சார்ந்த உள்நோக்கத் திட்டங்களும் (mission), என்கவுண்டர் (ஸஞ்சிகையின்) ஆசிரியர்களின் நினைவில் இருந்து தூரப் போய்விடவில்லை. “என்கவுண்டரின் முதல் அமெரிக்க துணை ஆசிரியரான இர்விங் க்ரிஸ்டல் (Irving Kristol), இந்தியா குறித்த அந்த ஸஞ்சிகையின் தகவல் சேகரிப்புகள் தூண்டுதலற்றவை எனச் சொல்ல முடியாது என்பதை, ஆசியாவை, அதிலும் முக்கியமாக, “சுதந்திர உலகின்” இறுதி நம்பிக்கையான இந்தியாவைக் குறித்து கவனம் வைக்குமாறு காங்கிரஸ் தலைமையகத்தில் (பாரிஸ்) இருந்து அவருக்கு “மென்மையான தலையீடுகள்” வந்தன” என சூசகமாக அவருடைய (நினைவுக் குறிப்பில்) நினைவுகூர்வதாக அறிஞர் மார்ஜரி ஸேபின் (Margery Sabin) நினைவுகூர்கிறார். உள்நோக்கத் திட்டங்களில் இந்தியாவானது அதிஅவசியமானது என்பதை என்கவுண்டரின் ஆசிரியர்கள் அறிந்திருந்ததுடன் தலைமையகத்தால் அறிவுறுத்தவும் பட்டிருந்தார்கள். த பாரீஸ் ரெவ்யூவோ, இன்னொரு புறம், அட்லாண்டிக் கடலோர கலாச்சார கூட்டுறவுக்கு ஆதரவாக, இந்தியாவையும் வளரும் நாடுகளையும் அநேகமாக முற்றிலுமாகவே உதாஸீனம் செய்தது.

இருப்பினும், இந்த ஸஞ்சிகையின் ஸ்தாபன மேலாண்மை ஆசிரியரான ஜான் ட்ரைன் (John Train), ஆசிரியர் ஜார்ஜ் ப்ளிம்ப்டனிடம் (George Plimpton) இந்தியா குறித்த நாட்டமின்மை பற்றித் தன்னுடைய ஆசிரிய மதிப்புரைகளில் புலம்பி இருக்கிறார். ட்ரைன், 1950களின் இறுதிப் பாகங்களில், ஒரு சிறிய விடுப்பில் இருந்து திரும்பி வந்து, நியூ யார்க் மற்றும் பாரீஸ் அலுவலகங்களுக்கு இடையே, இந்த இரண்டு அலுவலகங்களும் திறன்மையுடன் தகவல்த் தொடர்பு கொண்டு விளங்க, அங்கும் இங்குமாக போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார். த ரெவ்யூ (ஸஞ்சிகையானது) கலாச்சார சுதந்திரத்துக்கான காங்கிரஸுடன் நெருக்கமாக வேலை செய்த காலங்களில் தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலம் இந்த ஸஞ்சிகையை பொருளாதார ரீதியாகவும் ஆதரித்தார் அவர். மேற்கத்தியரின் தேர்ச்சி பெற்ற பொத்தாம் பொதுவான புரிதல்களினால், உள்நோக்க செயல்திட்டத்தில் அப்போதைய இந்தியாவின் அதிஅவசிய நிலை குறித்து ட்ரைனுக்கு தெரிந்திருந்தது.

“அனுப்புவதாகச் சொன்ன உறுதிமொழியின்படி சில இந்திய எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் 18ஆவது இதழை அனுப்பவேண்டுமா என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கையில், இது திடீரென்று எனக்குத் தோன்றியது”,

என எழுதினார் ட்ரைன்.

“இந்திய எழுத்துகளில் இருக்கும் மக்கள் தொடர்பின் நறுமணச்சுவை வேறெதிலும் இல்லை, அத்துடன் அவர்கள் [இந்த ஸஞ்சிகை குறித்து] ஆர்வமடைவார்களா இல்லை எச்சரிக்கையடைவார்களா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.”

1958களின் இறுதியில் ப்ளிம்ப்டனிடம் (Plimpton) தொடர்ந்து சொல்லிப் போனார்:

“இந்திய எழுத்தானது நிறைய நோதல்கள் நிறைந்தது, ஆனால் ஒரு நிலையான சட்டகத்துக்குள் உட்பட்டது; நிச்சயமாக, அந்த இனத்தின் நினைவுப்படுகையில் இருந்து கொஞ்சம்கூட மாறாத சட்டகமே அது. (மிக எளிதாக உட்கரைக்கப்பட்ட, நடைவழிப் பறவைகளாக மட்டுமே இருந்த மொகலாயருடன் ஒப்பிடுகையில் பிரிட்டிஷாரோ வெறும் உட்கதையாகத்தான் இருந்தனர்.) இந்த நிலத்தில் வாழும் எண்பது சதவீத மக்கள்த்தொகைக்கோ விஷயங்கள் மாறுதல் இன்றித் தொடர்கின்றன; அத்துடன் விவஸாயிகளின் வாழ்வு குறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்கவே இந்திய எழுத்தாளர்கள் முயல்கிறார்கள். இந்தப் பேசுபொருளிலேயே சகிக்கமுடியாத யதார்த்த நாவல்களைப் புனைகிறார்கள். இங்கனம் அவர்கள் இருக்கையில் … … … பொதுவாகவே லௌகீக துறைகளில் மேற்கத்திய வழிகாட்டுதலையே நோக்குறும் இவர்கள் (த பாரீஸ் ரெவ்யூவின் சில சமீபத்திய புனைவுகளை) எப்படி எடுத்துக்கொள்வார்கள் ?”

குறிப்பாக, சமீபத்தைய ஃபிலிப் ராத் (Philip Roth)ன் கதையை மேற்கோள்காட்டும் ட்ரைன், “அது அவர்களிடம் முடிவில்லாத மனக்குலைவை ஏற்படுத்தும்”, என எழுதுகிறார் அவர். இந்தியாவுக்கும் அதன் ஆசிய அண்டை நாடுகளுக்கும் என்ன தேவை என்பது குறித்த ட்ரைனின் அந்த ஒரு நுண் உணர்வானது, அங்கே ஸோவியத்தின் ஆக்கிரமிப்புக்குப் பின்பு ட்ரைன் நிறுவிய ஒரு அகதிகள் ஆதரவு அமைப்பின் மூலம் ஆரம்ப மற்றும் 1980களின் நடுக்காலங்களில் ஸோவியத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் செய்வதற்கான நிதிஉதவி திட்டமாக உய்வடைந்தது.

சில அளவீடுகளின்படி, இந்தியா குறித்த என்கவுண்டரின் தகவல்களும் அரைவேக்காடானவை. CCFனுடைய பெரும்பாலான உள்ளூர் ஸஞ்சிகைகள் CCFன் உள்ளூர் ஊடுருவி ஊர்திகளாக அந்தந்த நாடுகளில் மட்டுமே செயல்படும் நோக்கத்திற்கானவையாக இருக்கையில், என்கவுண்டரோ விஸேஷமானது. அந்த ஸஞ்சிகையின் பெயரான “என்கவுண்டர்” என்பது முதலில் ”ஈஸ்ட் வெஸ்ட் ரெவ்யூ” என்றே வழங்கப்பட்டது என்பதை நினைவுகொள்ளுங்கள், அதன் காரணமாக அது “ஈஸ்ட் வெஸ்ட் என்கவுண்டர்”. ஆனால், இங்கிலாந்துடனான யுஎஸ்ஸின் தனிச்சிறப்பு வாய்ந்த நட்பை கவனத்தில் கொண்டு, இந்த உபகண்டத்தை இரக்கமின்றி ஒதுக்கித் தள்ளியது அது. உதாரணமாக, என்கவுண்டரின் முதல் பத்தாண்டுகளில் உலகப் புகழ்பெற்ற இந்திய இயக்குநரான ஸத்யஜித் ரே குறித்து வெளியான கட்டுரைகளின் எண்ணிக்கை பூஜ்யமே.

இந்தப் பிறழ்வுகளைச் சமன் செய்வதற்காக, க்வெஸ்ட் எனும் புதிய இந்திய ஸஞ்சிகையை ஆகஸ்ட் 1955ல் வெளியிட்டது CCF. இந்தியாவுக்கான யு.எஸ். தூதரான ஜான் கென்னத் கால்ப்ரீத் (John Kenneth Galbraith), 1961ல் அவருடைய பதவியேற்புக்குப் பின்பு அந்த ஸஞ்சிகையைப் பார்த்தபோது, ஒவ்வாமை அடைந்த அவர், “கவர்ச்சியற்ற அறிவிலித்தனத்தில் இருப்பதிலேயே தாழ்ந்து போவதில் புதிய இடத்தைப் பெற்றது” என்று சூசகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளோ அதை “நயவஞ்சக” அமெரிக்க பிரச்சாரம் என்றனர். ஆனால், அது ஒரு புலப்படாத இணைப்பை தூதர் கால்ப்ரீத்துடனும், பனிப்போருக்கான அறிவுசீவித் தலைமையகத்துடனும் (காங்கிரஸின் பாரிஸ் அலுவலகத்தை இப்படித்தான் நெல்ஸன் அல்ட்ரிச் (Nelson Aldrich) அழைத்தார்.) உருவாக்கியதோடு, பாரீஸ் ரெவ்யூ போன்ற ஸஞ்சிகைகளை [க்வெஸ்டையும்] அதனுடன் சேர்த்து, அல்ரிச் பெயர்சூட்டிய “காங்கிரஸ்த்துவ” ஸஞ்சிகைகள் எனும் பெரிய குடையின் கீழ் சேர்த்தது. என்கவுண்டருக்காக க்வெஸ்ட் விளம்பரங்கள்கூட செய்து, “உங்களுடைய பிரச்சினைகளும் தூரக் கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளும் என்கவுண்டர் கட்டுரைகளால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன என்பதை காலந்தோறும் மீண்டும் மீண்டும் நீங்கள் கண்டறிவீர்கள்” என்று இந்தியர்களிடமும் ஆசியர்களிடமும் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தது. அதனுடைய ஆரம்ப இதழ்களில் மாபெரும் அமெரிக்க பன்கூட்டு எண்ணை ஸ்தாபனங்களான மொபில் (Mobil) மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில்களுக்கு விளம்பரங்களை ஓட்டியது. அமெரிக்கக் கமிட்டியானது க்வெஸ்ட்டின் பிறப்பை விளம்பரம் செயத்தோடு ஸி.ஐ.ஏவின் மறைமுகங்களான மற்ற அமைப்புகளிடம், உதாரணமாக ஏஷியா ஃபவுண்டேஷனிடம் இருந்து, இந்த ஸஞ்சிகைக்கான நிதியாதரவையும் கோரியது; ஃபவுண்டேஷனுக்கான ஒரு மிகப் பெரிய வேண்டுகோளில் அதன் உள்நோக்கத் திட்ட அறிக்கையாக ஜேம்ஸ் ஃபேரல் (James Farrell) பதிகிறார்: “எதேச்சதிகார அச்சுறுத்தல் முகத்தின் முன்னால் தார்மீக நடுநிலையானது மனிதகுலத்துக்குத் துரோகம் செய்வது என்பதைச் சிந்திக்கும்போது, மறைவாகவோ செயலுடனோ இருக்கிற “சிந்தனை கட்டுப்பாட்டை” காங்கிரஸானது எதிர்த்தது”. அத்துடன், க்வெஸ்ட்டினுடைய தொடர்பத்தியாளர்களில் ஒருவரான திலீப் சித்ரெ (Dilip Chitre), தலையங்க விஷயங்கள் பற்றி த பாரீஸ் ரெவ்யூவுடன் தொடர்பில் இருந்தார். அந்த சமூகத் தொடர்புவலை பெரிதாகிக் கொண்டிருந்தது.

யுனைட்டட் ஸ்டேட்ஸின் நனிசிறந்த முயற்சிகள் தொடர்ந்த போதிலும் நேருவோ, ஒரு பிரஹ்ம்மச்சாரி அவனுடைய சுதந்திரத்தை எப்படி இறுக்கிப் பற்றிக்கொள்வானோ, அது போல நடுநிலையைப் பிடித்துக் கொண்டிருந்தார். 1951ல், CCFனுடைய இரண்டாவது பன்னாட்டு மாநாடு இந்தியாவின் தலைநகரில் நடத்த அனுமதி மறுத்துவிட்டார். இந்த அமைப்பு ஒரு “அமெரிக்க மறைமுகம்” என்பது உள்ளூர அவருக்குத் தெரிந்திருந்தது. இருப்பினும், உலகில் மாபெரும் மக்கள்த்தொகை நிறைந்த ஜனநாயகத்தின், வளர்ந்துவரும் வியூக முக்கியத்துவத்தினால், CCFன் திட்டமிடுபவர்களோ, சொலவடையாகிப்போன, “இந்தியாவைவிட்டு வெளியேற” வில்லை. அவர்கள் அந்த மாநாட்டை வெறுமனே தில்லியில் இருந்து பாம்பேக்கு (இப்போது மும்பை) கொண்டு போயினர்.

இந்தியாவின் சார்பின்மைக்கு எதிராக முட்டித்தள்ளும் முக்கியம் வாய்ந்த ஸோஷியலிஸ்ட்டுகளின் வேலைப்பட்டியலையே தன்னைச் சுற்றி எழுப்பியிருந்த கலாச்சார சுதந்திரத்துக்கான காங்கிரஸ் காரியக் கமிட்டியின் இந்திய இணைப்பகத்தை, நாராயணனுடன் மினூ மஸானி சேர்ந்து உண்டாக்கினார். பாம்பேயின் முன்னாள் மேயரான மஸானி, மூன்றுமுறை பாராளுமன்ற உறுப்பினரும், ஏகபோக முதலாளித்துவத்துக்கு எதிரான ஜனநாயக ஸோஷியலிஸவாதியுமான அவர், வலது சாய்வுடைய சுதந்திரா பார்ட்டியை நிறுவியவர்களில் ஒருவராக ஆனதில் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதை எதிர்த்த காரணமும் ஓரளவு உண்டு. 1950களின் ஆரம்பத்திலேயே எப்படியெல்லாமோ ஒரு சிறப்பான வரவேற்பினை, வெளிநாட்டு வருகையாளருக்கான அமெரிக்கக் கமிட்டிக்கான மையமானது (American Committee’s center for foreign visitors) மஸானிக்கு தந்தது என நாம் ஆரம்பத்தில் பார்த்தது போலவே, ந்யூ யார்க் போஸ்ட்டின் மூலம் பத்திரிகை பிரஸித்தம் தருவதற்காக யுனைட்டட் ஸ்டேட்ஸுக்கே அவர் பயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தது அமெரிக்கன் கமிட்டி. (அந்த “வரவேற்பு மையமே” அமெரிக்கக் கமிட்டியுடன் ஸி.ஐ.ஏவின் மறைப்பு அமைப்பான ஏஷியா ஃபௌண்டேஷனுக்கு இருந்த இணைப்பை வலிமைப்படுத்தியது.) வலதுபுறம் திரும்புவதற்கு முன்னால், மஸானியும் கூட, இந்தியாவின் சார்பின்மைக்கு ஆதரவாக சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்தான்.

இந்தியாவில் கலாச்சார சுதந்திரத்துக்கான காங்கிரஸின் முயற்சிகளில் நாராயணனும், மஸானியும் இணைக்கப்பட்டது நிஸிம் எட்ஸெக்கியல் (Nissim Ezekiel) எனும், பிற்காலத்தில் ஒரு கவிஞராகப் புகழ்பெற்ற ஒரு இந்திய-யூதரான எழுத்தாளராலேயே. நிராத் சௌத்ரி, CCFஉடன் தொடர்புடைய இன்னொரு எழுத்தாளர், அவருடைய சர்ச்சைக்குரிய சுயசரிதையான “யாருமறியா இந்தியன் ஒருவனின் சுயசரிதையை” (Autobiography of an Unknown Indian) வெளியிட்டு, புது தில்லியில் நேருவிற்காகப் பணி செய்யும் “கலாச்சாரவாலா”க்களுக்கு எதிராக வேலை செய்துகொண்டிருக்கும் “ஒரு குடைச்சல்ப்பூச்சி” என ஒரு அறிஞரால் விவரிக்கப்பட்டார்.

க்வெஸ்ட்டின் ஆசிரியராக, எட்ஸெக்கியல், இந்தியாவின் சர்ச்சைக்குரிய நீரோட்டங்களில் படகோட்டுவதற்கு முயன்று இந்தியாவுக்கும் யுஎஸ்ஸின் செயல்த்திட்டத்துக்கும் இடையே உள்ள பொதுத் திட்டுகளைக் கண்டறிந்து வலியுறுத்தினார். எங்கெல்லாம் அந்தப் பொதுத் திட்டானது ஆட்டம் கண்டதோ, அதை அப்படியே சொல்ல அவர் வெட்கப்பட்டதே இல்லை. உதாரணமாக, க்வெஸ்ட்டில் அவருடைய முதல் தலையங்கத்தில், “அமைதி” மற்றும் ”சமூக நீதி” போன்றவற்றுடன் “கலாச்சார சுதந்திரம்” போன்ற பதங்கள் அனைத்தும் உலகளாவிய பிரச்சினைகள் சார்ந்தவையே அன்றி இந்தியாவின் சுதந்திர வேட்கைகளை முன்வைப்பவை அல்ல” என அவர் எழுதினார். எட்ஸெக்கியலின் ஸஞ்சிகையானது அமெரிக்கத் தரப்பில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இருந்தது, ஒருவித மேற்கத்திய சார்ந்தொழுகலை சூசகமாகச் சொன்னது. ஆனால், அதே சமயம், அமெரிக்க மற்றும் ஸோவியத் சார்புகளைக் காட்டும் குழுமொழிகளைத் துறந்தாலும், இந்தச் சார்ந்தொழுகலை அது [தலையங்கம்] மறுதலித்துவிடவில்லை.

இதுவும், மாநாடுகளில் ஏற்பட்ட நேரடி சந்திப்புகளும் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கூட்டாளிகளுக்கு இடையேயான காயங்கள் இரண்டு தரப்பாரும் விரும்பாத அளவு புதிதானவையாக இருந்ததை சூசகமாகத் தெரிவித்தன. அக்காலத்திய ஒரு அவதானியின் கருத்துப்படி: “மேற்கத்திய உபயதாரர்களை ஏற்றுக்கொண்டு. . . . . . . . ., க்வெஸ்ட்டானது தேர்ந்தெடுத்துக்கொண்ட கூட்டணியானது இந்தியாவுக்கும் இந்தியாவுக்கு உள்ளேயும் அதிமுக்கியமான ஒரு வகையான கலாச்சார சுதந்திரத்தை, பெயரிட்டுச் சொன்னால் அந்த நாட்டுக்கு உள்ளே நிலைநாட்டப்பட்ட அதிகாரத்தையும் விமர்சிக்கும் சுதந்திரத்தை, ஆதரித்தது. உள்நாட்டில் “அதிகார அமைப்புகளை எதிர்த்தெழுதல்” எனும் குறிப்பிட்ட இந்திய பணித்திட்டத்திற்காகக் க்வெஸ்ட்டினை பயன்படுத்த விரும்பிய . . . . . . . . . எட்ஸெக்கியல், சமீபத்திய ஆப்பிரிக்க விமர்சகர்களால் வாதாடப்பட்ட நிலைப்பாட்டுக்கு இசைவாக, . . . . . . . . . காலனியத்திடமிருந்து விடுதலை பெற்ற போராட்டத்தின் பின்பு. நாட்டுக்கு உள்ளேயே காலனியத்துக்குப் பிந்தைய நாடுகள் அவர்களாகவே விவாதங்கள் நடத்த வேண்டிய “இரண்டாம் கட்டத்தின்” அவசியம் அங்கே வந்துவிடுகிறது.

எட்ஸெக்கியல் நிறுவிய கொள்கைகள் க்வெஸ்ட்டினை அதன் வாழ்க்கை முழுவதும் வரையறுத்தன: “அது குறித்த அனைத்தும் இந்தியா குறித்த தொடர்புடையதாக இருக்க வேண்டும். அது இந்தியர்களுக்காக இந்தியர்களால் எழுதப்படுவதாக இருக்க வேண்டும்—ஏனெனில் அந்தக் காலங்களில், அந்நியமான அனைத்தினாலும், எழுத்தாளர்கள் உட்பட, நாம் வசீகரிக்கப்பட்டோம். எட்ஸெக்கியலுடைய ஆளுமையானது, க்வெஸ்ட்டின் மறைவுக்குப் பின்பும், அவருடன் வேலைபார்த்தவர்களைக் கவர்வதாக இருந்தது. இளைய கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு தளராத வழிகாட்டியான அவர், சிகாகோவில் காலம் கழித்ததுடன், பெல்லோவின் நாவலான ஹெர்ஸாகில் (Herzog) அவர் கண்ட அவருடைய சொந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஸால் பெல்லோவிடம் (Saul Bellow) ஒப்பிக்கவும் செய்தார்.

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! அத்யாயம் 12
author

Similar Posts

Comments

  1. Avatar
    O. Natarasan says:

    நேருவை ஏளனம் செய்யாத கட்டுரையை ஆதிவாசி மொழிபெயர்த்து இருப்பது ஆச்சரியம் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *