பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)

Spread the love

இந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

(வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.)

 

 

 

நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள்.

 

1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது.

 

2.பாரதியார் புதுச்சேரிக்குப் போனதால் அவர் கோழை என்று சிலரால் முன்னிறுத்தப் படும் வாதம் பொய் என்று காட்டியது.

 

3.பாரதியாரின் வறிய நிலை என்பதையே பெரிதுபடுத்திக் காட்டுவதில் முனையாதது.

 

4.பாரதியாரின் மனைவி செல்லாம்மாவை வெறும் இல்லைப்பாட்டு பாடும் மனைவி யாகக் காண்பிக்காதது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் இயல்பாகச் செய்தார்.

 

5.ஒவ்வொரு காட்சிக்குமான பின்புலத்தை திரையாக அல்லாமல் நிழற்படமாக அமைத்திருந்த விதம்.

 

6.நடனங்களின் அசைவுகளிலும், பாடல்களின் இசையிலும் சினிமாத்தனம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது.

 

 

கொஞ்சம் நெருடல்களை மனதில் ஏற்படுத்திய அம்சங்கள்:

 

1.பாரதியாராக நடித்திருந்தவர் சமயங்களில் மிகைநடிப்பை வெளிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக, பாரதியின் தன்மதிப்பை, கவிதாகர்வத்தை சற்று மிகைப்படுத்திக் காட்டினாலும் அது வெற்று கர்வமாகி விடும் அபாயமுண்டு. அப்படி சில இடங்களில் ஆயிற்று.

 

2.ஏழு வயது செல்லம்மாவைப் பார்த்து பாரதி நினைப்பதாக ஒலித்த பாரதியார் பாட்டு (பாரதி அந்தக் கவிதையை தன் பதின்ம வயதில் எழுதவில்லை) தற்காலச் சூழலில் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியது.

 

3.ஓராசிரியர் பள்ளிகள் குறித்து அறிய வாய்ப்பு கிடைத்தது மனதிற்கு நிறைவளித்தது. அதேசமயம், விருதுபெற்ற ஆசிரியைகள் அனைவரும் அந்தப் பொதுமேடையில் விருது வழங்கியோர் காலில் விழுந்து வணங்கியது சிறிது நெருடலாக இருந்தது. பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது தவறில்லை – ஆனால் அந்த ஆசிரியைகள் அனைவரும் நலிந்த பிரிவினர் என்பதை எண்ணாதிருக்க முடிய வில்லை. அல்லது, அந்த ஆசிரியைகள் காலில் மாணாக்கர்களை விழுந்து வணங்கச் செய்திருந்தால் மேடையில் அந்த ஆசிரியைகளுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் பூரணமாகியிருந்திருக்கும்.

 

4.மேடையில் பேசிய பெண்மணி ஒருவர் தமிழில் பாரதிக்குப் பிறகு கவிஞரேயில்லை என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துரைத்தது கண்டனத்திற்குரியது. பாரதியாராக நடித்தவர் நவீன தமிழ்க்கவிதை அறிந்தவர். அவருக்குத் தெரியும் நான் சொல்வதில் உள்ள உண்மையும் என் ஆதங்கத்தின் நியாயமும்.

 

நாடக ஆக்கத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், ஓராசிரியர் பள்ளி இயக்கத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

 

Series Navigationஉயிரைக் கழுவபையன் அமெரிக்கன்