பாலச்சந்திரன்

 

கண்களில் கூடக்

கபடில்லையே.

 

மிரளும் பார்வையில்

மிருகமும்

இரங்குமே.

 

என்ன செய்தான்

பாலகன்?

 

என்ன செய்யமுடியும்

சிறகுகள் பிணிக்கப்பட்ட

சின்னப் பறவை?

 

தொடும் தூரத்தில் நிறுத்தி

துப்பாக்கி ரவைகளால்

துளைத்து விட்டான்களே

‘தேவதத்தன்கள்’.

 

தொடும் தூரம்

சுடும் தூரமா?

உள்ளத்தைத்

‘தொடும் தூரம்’ இல்லையா?

 

விகாரையிலிருந்து

பதறி ஓடி வந்து

பாலகன் மார்பின்

புண்களை மெல்லத் தொடுவான்

புத்தன்.

 

கொலையுண்டது

மனிதமென்று

சில்லிடும் அவன் விரல்கள்

சொல்லும்.

 

கருணை வழியும்

புத்தன் கண்களில்

பாலகன்

குருதி வழியும்.

 

பாலகன் புதைந்த மண்ணில்

’போதியும்’

துளிர்க்குமா?

 

விகாரையிலும்

வெறும் கற்சிலையே

வெளிறிக் கிடக்கும்.

 

 

Series Navigationநிழல் தேடும் நிஜங்கள்பொது மேடை : இலக்கிய நிகழ்வு