பாலைவனங்களும் தேவை

This entry is part 7 of 10 in the series 29 ஜூலை 2018

ஒரு மாணவன் கணவனாகிறான். கணவன் அப்பாவாகிறான். அப்பா தாத்தாவாகிறான். பிள்ளைகள், பேரர்கள். வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு கூடுகள் குஞ்சுகள் என்று எல்லாரும் சிதறியபின் தாத்தாவுக்கு ஓர் ஆசை. மீண்டும் எல்லாரையும் ஒருசேரப் பார்க்கவேண்டுமாம். குறிஞ்சி பூப்பதுபோல், அரிய சூரிய கிரகணம் காணக் கிடைப்பதுபோல் யாருக்காவதுதான் அது சாத்தியமாகிறது. அந்த ஆசை எனக்கு சாத்தியமாகி யிருக்கிறது. எல்லாரும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரின் விளிம்பில் இருக்கும் டப்ளின் நகரில் என் மகள் வீட்டில் ஒன்று கூடினோம். இதோ எல்லாரும் கூடி மகிழ்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டிருக்கிறோம். (பார்பிகியூ). கோழித்துண்டுகளை திருப்புவது ஒரு பேரன். எண்ணெய் விடுவது ஒரு பேத்தி. கரி சேர்ப்பது, ஊதுவது, எடுப்பது, கடிப்பது, என்று ஆளாளுக்கு ஒரு வேலை. ஒரு கடி நான். மறுகடி மகள் அடுத்த கடி பேத்தி. ஒரு துண்டு கோழி உலா வருகிறது. அட்டா! நாளையே செத்துவிட்டாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இந்த டப்ளின் நகரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரிய நிலப்பரப்பு. தனித்தனி வீடுகள். வீடுகளுக்கு வெளியில் சாலைகளின் விளிம்பில், செம்மண் பாதைகளில் எங்குபார்த்தாலும் வண்ண வண்ண ரோஜாப்பூக்கள். இதுவரை எங்குமே காணாத பூ வகைகள். எங்கு திரும்பினாலும் தனித்தனியாக நிற்கும் கம்பீர மலைகள் மஞ்சள் நிறமாய் இப்போது. நவம்பர் டிசம்பரில் பாம்பு சட்டை உரிப்பதுபோல் மஞ்சளை உரித்துவிட்டு பச்சையை உடுத்திக் கொள்ளும். மண் சாலையில் நடக்கிறோம். பெருச்சாளி பெரிதில் அணில்கள் புதர்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து விட்டு ஒளிந்துகொள்கிறது. நடுச் சாலையில் முன்னங்கால்களைத் தூக்கிவைத்துக் கொண்டு ‘என்ன சேதி, சௌக்கியமா?’ என்று கேட்டுவிட்டு ஒளிந்துகொள்கின்றன முயல்கள். நெளியாமல் நகரும் பாம்பை இங்குதான் பார்க்கிறேன். ஒரு பாகம் நீளத்தில் நடுரோட்டில் அந்த மஞ்சள் பாம்பு. நெளிந்தால் எதிரே தெரியும் சுண்டெலி சுதாரித்துக் கொள்ளுமாம். நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அந்தப் பாம்புக்கு. பாம்பு கடந்து சென்றபின் நாங்கள் கடக்கிறோம். கேட்பாரற்றுக் கிடக்குதண்ணே சிவப்பாய்க் கனிந்த ப்ளம்ஸ். பறி. கடி என்கிறது. தரையில் படர்ந்து கிடக்கும் இது என்ன? மணத்தக்காளியா? கொஞ்சம் தூக்கிப் பார்க்கிறேன். உனக்காகத்தான் காத்திருக்கிறேன். என்கிறது ஸ்ட்ராபெர்ரி. தூரத்தில் அந்த மரத்துக்குக் கீழே கழுகு மாதிரிப் பறவைகள். அவைகள் வான்கோழியாம். என் மகள் சொன்னார். அறந்தாங்கியில் உடையாரம்மா வீட்டில் வான்கோழி பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம் வேலியோரம் நின்று கூகூ என்றால். கோ..கோ..கோ என்று எல்லாமுமாகக் கூவும். இந்த வான்கோழிகள் கூவுமா? கூகூ…. அத்தனையும் சேர்த்து கோ..கோ…கோ என்று கூவிவிட்டு செங்குத்தாய்ப் பறந்து மரத்தில் அமர்ந்துகொண்டன. நாடுகள் மாறினாலும் குணங்கள் மாறவில்லை வான்கோழிகளுக்கு. இதோ 60 அடி ஆழத்துக்கு இறங்குகிறது ஒரு பள்ளத்தாக்கு. இறங்கி அடுத்த பக்கம் உயர்கிறது. ஆளுயரக் கோரைப்புற்கள். கூர்ந்து பார்த்தால் ‘என்ன ஆளு புதுசா இருக்கான்’ என்று ஒரு மான் எட்டிப் பார்க்கிறது. இப்படியே நடந்துபோனால் மலையடிவாரம் சென்றுவிடலாம். மலையைச் சுற்றி கருப்பு மரச்சட்டங்களால் வேலி கட்டியிருக்கிறார்கள். எளிதாகத் தாண்டிவிடலாம். உள்ளே காப்பித்தூளை அப்பிக் கொண்டதுபோல் ஒரே மாதிரியான மாடுகள் மேய்கின்றன. வேலிகளைத் தாண்டாது மாடுகள். திமில்கள் இல்லாமலேயே என்ன அழகு! அருகில் சென்றேன். ஒரு மாடு என்னை நோக்கி வருகிறது. அது நட்பா பகையா. யோசித்துக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பின்னால் ஒரு வாகனம் வந்து நிற்பதுபோல் இருக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். மெக்கன்னாஸ் கோல்டு படத்தில் வரும் கிரிகிரிபெக் மாதிரி நாலைந்து சட்டைகள், குடை மாதிரி தொப்பி, தூசியில் குளித்த காலணிகளுடன் என்னை நோக்கி வருகிறார்.
ஹாய் காலை வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?
நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள்?
அமெரிக்கர்களின் அற்புதப்பண்பு இது. பலநாள் பழகியதுபோல் புதுமுகங்களை விசாரிப்பார்கள். என்னிடம் கேட்டார். ‘அந்த மாட்டைத் தொடவேண்டுமா?’
எட என் ஆசை இவருக்கு எப்படித் தெரிகிறது.
‘ஆம்’ என்றேன். கை சொடுக்கினார். அந்த மாடு ஓடிவந்தது.
நெற்றியைத் தடவினேன். கன்னத்தோடு கன்னம் பதித்து தன்படம் எடுத்துக்கொண்டேன். முதுகைத் தடவி வயிற்றில் சாய்ந்து கொண்டேன். ‘மாடு என்றால் அவ்வளவு பிரியமா?’
‘ஆம். சிங்கப்பூர் வந்துவிட்டேன். மாடுகளை நினைத்து ஏங்க மட்டுமே முடியும்’
11 கன்றுகளைப் பெற்றுவிட்டு செத்துப்போன எங்க லட்சுமிப் பசுவை ஒரு மனிதனை அடக்கம் செய்வதுபோல் சகல மரியாதையுடன் களத்துமேட்டில் அடக்கம் செய்துவிட்டு ஒரு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுத அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். சிலிர்க்கிறேன்.
சரி. நாளை சந்திப்போம். வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். என்று மலையுச்சியில் இருந்த வீட்டைக் காண்பிக்கிறார். ‘வருகிறேன்’ என்று சொல்லிச் சென்றேன்.
அன்று மாலை வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் அந்தப் பூங்காவில் அமர்ந்திருக்கிறேன். அங்கு 60 அடி நீதளத்துக்கு ஒரு கம்பி வடம் கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு தொங்கு கம்பி. அதன் அடியில் தோசைக்கல் மாதிரி ஒரு தட்டு. அதில் ஏறி உட்கார்ந்து காலை உதைத்தால் அந்த வடத்திலேயே அந்தக் கம்பி வேகமாக ஓடி ஒரு ஸ்ப்ரிங்கில் மோதி அதே வேகத்தில் திரும்புகிறது. என் மனைவி என் பேரப்பிள்ளைகளை ஒவ்வொருவராக ஏற்றிவிட்டு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அட! பின்னால் அந்த கிரிகிரிபெக் வருவதுபோல் இருக்கிறதே. ஆம். அவர்தான் வருகிறார். என்னைப் பார்த்துவிட்டார். கையசைக்கிறார். என்னை நோக்கியே வருகிறார்
‘எப்படி இருக்கிறீர்கள் சகோதரரே! மாலையே சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை.’
‘நானும் நினைக்கவில்லை’
‘நான் தொடர்ந்தேன். அந்தப் பிள்ளைகள் எல்லாம் என் பேரப்பிள்ளைகள். அவர்களை அந்தக் கம்பியில் ஏற்றிவிடுகிறாரே அவர்தான் என் மனைவி’.
‘அத்தனை பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளா? உங்கள் பிள்ளைகள்?’
‘அதோ பின்னால் என் மகள்களும் மகனும் வந்துகொண்டிருக்கிறார்கள்’
‘அடேங்கப்பா! ஒரு பள்ளிக்கூடத்தையே வைத்திருக்கிறீர்கள். ஹஹ்ஹா’
‘அது சரி. உங்கள் மனைவி பிள்ளைகள் இங்குதானே?
‘என் கதையைக் கேட்கிறீர்களா?’
‘கதையைக் கேட்கவில்லை. குடும்பத்தைக் கேட்கிறேன்.’
‘என் குடும்பமா? கேட்காதீர்கள். என் மேல் உங்களுக்கு மரியாதை இருக்காது. தவிர்க்க நினைப்பீர்கள்’
‘பரவாயில்லை. சொல்லுங்கள். எனக்குக் கொஞ்சம் எழுதத் தெரியும். கொஞ்சம் சொஞ்சம் மாற்றி எழுதிவிடுவேன். சொல்லுங்கள்.’
‘மாற்றாதீர்கள். அப்படியே எழுதுங்கள்.இழப்பதற்கென்று எதுவுமில்லை. ஹ..ஹ்..ஹா’
‘என்னைக் கருவிலேயே கலைக்க என்னைப் பெற்றவளிடம் பணம் இல்லை. அதனால் பெற்றுவிட்டாள் ஒரு காப்பகத்தில் பெற்றுவிட்டு விலையாக என்னையே விற்றுவிட்டாள். ஆம். அவள் அப்படிப்பட்டவள்தான். என்னை ஒரு தம்பதி வாங்கினார்கள். அவன் அந்த அம்மாவின் இரண்டாவது கணவன். அவன் என்னை சிகரெட்டால் சுடுவான். குளிர்ப்பெட்டிக்குள் என்னை அடைத்து நான் துடிப்பதை ரசிப்பான். அடுத்த விநாடி உயிர் போய்விடும் என்று உணர்வேன். திறந்துவிடுவான். அம்மாவிடம் சொன்னால் கொன்றுவிடுவேன் என்பான். ஒருநாள் கடவுளிடம் கேட்டேன். இவனைக் கொன்றுவிடு. இல்லையேல் என்னைக் கொன்றுவிடு. அன்று மாலையே ஒரு கார் விபத்தில் அந்த அரக்கனோடு அம்மாவும் செத்துவிட்டார். ஹ..ஹ்..ஹா. ‘
‘செத்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறீர்களே’
‘வேறு என்ன செய்வது? நான் கடவுளைக் கேட்டேன். அவனைத்தானே கொல்லச் சொன்னேன். அம்மாவை ஏன் கொன்றாய்?’
கடவுள் சொன்னார். ‘அந்த அம்மா உயிரோடிருந்து மீண்டும் ஒரு அரக்கனைத் திருமணம் செய்து கொண்டால்? ‘
‘கடவுள் ரொம்பப் புத்திசாலி. ஹ..ஹ்..ஹா’
அவர் மீண்டும் சிரிக்கிறார்.
‘இந்த மலையும் மாடுகளும் என் அம்மாவுடையதுதான். அவனுக்குத் தெரியாமல் என் பெயருக்கு அம்மா மாற்றி எழுதி வைத்துவிட்டார். ஒரு எத்தியோப்பியா பையன் என்னிடம் வேலை பார்க்கிறான். வாங்கும் சம்பளத்தை அப்படியே எத்தியோப்பியாவில் இருக்கும் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் அனுப்பிவிடுவான். இப்போது சொல்கிறேன். இந்த மலையும் மாடுகளும் அவனுக்குத்தான். இங்கு மலையை வாங்குவது ஒரு வீடு வாங்குவது மாதிரிதான். காசிருந்தால் தரை மட்டமாக்கி வீடு கட்டிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் என்போல் மாடு வளர்க்கலாம். ஒரு மில்லியன்தான். உங்களுக்கு ஒன்று வாங்கித் தரவா?
‘கிண்டலா? அது சரி ..ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது?’
‘எனக்கும் பெண் நண்பர்கள் உண்டு. எல்லாருமே என் மலையையும் மாடுகளையும்தான் விசாரிக்கிறார்கள். பெண்களையே பிடிக்கவில்லை சகோதரா. என்னைப்போல் சிலர் இருக்கத்தான் வேண்டும் எல்லா மான்களும் வாழ நினைத்தால் புல்லுக்கு எங்கே போவது.? அதனால்தான் கடவுள் புலியைப் படைத்தார். ஒரு மான் கொல்லப்படவேண்டும். அந்த இடத்தில் புற்கள் மண்டவேண்டும். அதை மற்ற மான்கள் உண்ணவேண்டும். மாமிய மிச்சத்தில் சில கழுகுகள் பசியாறவேண்டும். எல்லா நிலங்களும் விளைய நினைத்தால் தண்ணீருக்கு எங்கே போவது? சில நிலங்கள் தன்னை பாலைவனமாக்கிக் கொள்ள சம்மதிக்க வேண்டும். உங்களைப்போல் எல்லாருமே ஒரு பள்ளிக்கூடத்தை வைத்துக் கொண்டிருந்தால் உணவுக்கு எங்கே போவது? என்னைப்போல் பாலைவனமாய் சிலர் இருக்கத்தான் வேண்டும் சகோதரா. ‘
மீண்டும் சிரிக்கிறார். எவ்வளவு பெரிய சோகத்தை தத்துவமாக்கிவிட்டார்.
‘தாங்கள் படிக்கவில்லையா?’
நான் படித்தால் கடவுள் என்னோடு பேசுவதைக் கேட்கமுடியாது சகோதரா. எப்போதும் அவர் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். அதை அறுத்துவிட்டா படிக்கச் சொல்கிறீர்கள்? அது சரி. நீங்கள் எப்போது சிங்கப்பூர் போகிறீர்கள்?
‘நாளை மறுநாள் நாங்கள் யோசேமிடே, லாஸ் வேகாஸ், கிராண்டு கென்யான் போக இருக்கிறோம். நாலைந்து நாட்களில் திரும்புவோம். பிறகு சிங்கப்பூர்தான்.’
முடிந்தால் நாளை காலை நாம் சந்தித்த இடத்துக்கு வாருங்கள். உங்களை வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்.’
என்ன வீடு வீடு என்கிறார். அது என்ன அவசியம் பார்க்கவேண்டிய இடமா? இல்லை நமக்கு ஏற்படும் புதிய அனுபவத்தை நாம் ரசிப்போம் என்ற அவரின் எதிர்பார்ப்பா?
அடுத்த நாள் காலை அதே காட்சிகள். பாம்பு தவிர. எல்லாவற்றையும தாண்டி வந்துகொண்டிருக்கிறேன். காப்பித்தூளை அப்பிக் கொண்ட பசுமாடுகள். எல்லாம் அப்படி அப்படியே. அந்த கிரிகிரிபெக் அந்த வீட்டிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார். ‘ஹாய்’ கையசைத்தேன். அவரும் அசைக்கிறார். இன்னும் வேகமாக இறங்குகிறார். நான் ஏறுகிறேன். அந்த மாடு என் அருகில் வந்தது. என் முகத்தைப் பார்த்து நாக்கை வெளியே நீட்டி மூக்கை நக்கிக் கொண்டது. ‘உங்களை என் மாட்டுக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டதாம்’ அந்தச் செய்கைக்கு அவர் அப்படி ஒரு விளக்கம் தந்தார். ‘என் பாரம்பரியம் மாடு வளர்த்த பாரம்பரியம் என்பது அவைகளுக்குத் தெரியாமல் இருக்குமா?’ ‘ஹ்ஹஹா சரியாகச் சொன்னீர்கள்.’ இருவரும் அந்த மலைச்சரிவில் உயர்கிறோம். அந்த எதியோப்பியாச் சிறுவன் மாடுகளுக்கு தீவனம் எடுத்துக் கொண்டு போகிறான். ‘ஒரு நாள் மாடுகளைப் பார்க்காவிட்டால் செத்துவிடுவான். சமீபத்தில் அவன் அப்பா இறந்துவிட்டார். இவர்களைப் பிரிந்து என்னால் இருக்கமுடியாது என்று ஊர் போக மறுத்துவிட்டான். அவ்வளவு ஈடுபாடு அவனுக்கு என் மாடுகள் மீது’ இதோ வீட்டை நெருங்கிவிட்டோம். அருகில் பார்த்தால் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. குடிசை மாதிரித் தெரிந்த அந்த வீடா இது. உள்ளே போகிறேன். பிரமித்துவிட்டேன். வசந்தமாளிகை செட்டிங்ஸ் மாதிரி அத்தனை பளபளப்பு (மன்னித்துவிடுங்கள். புதுப்படங்கள் எதுவுமே நான் பார்த்ததில்லை) சுவற்றில் ஒரு பெரிய மாட்டு ஓவியம். பின்னனியில் அந்த வானம். எங்கிருந்தோ சில பறவைகள். ஒன்று மாட்டின் முதுகில் உட்காரப் போகிறது. கண்களை என்னால் திருப்பமுடியவில்லை. அத்தனை அழகு. இயற்கை எத்தனை ஒத்துழைப்புடன் இணைந்து வாழ்கிறது. பிரமிப்பு அடங்குவதற்குள் ஓர் ஏணியை எடுத்து உயரத்தில் எங்கோ இருக்கும் அழகான கண்ணாடி குவளையை எடுக்கிறார். அதெல்லாம் அந்த அம்மாவுடைய பாரம்பரியச் சொத்தோ? அந்தக் குவளையை நன்றாகக் கழுவிவிட்டு அவனில் சுடவைத்த அப்போது கறந்த பாலை எனக்குத் தருகிறார். இந்தக் கண்ணாடிக் குவளையை இத்தனை சிரமப்பட்டு எடுத்தது என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைக் காட்டவா? இருக்கலாம். அந்தப் பாலை ருசிக்கிறேன். என் உதடுகளை அந்த குவளையின் விளிம்பிலிருந்து எடுக்க முடியவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். என் வாழ்க்கையில் அத்தனை ருசியான பாலை சுவைத்ததே இல்லை. சுவைத்துக் கொண்டே சொல்கிறேன். யோசமிட்டே போய்விட்டு திரும்பியதும் என் பள்ளிக்கூடத்தை அழைத்துக் கொண்டு கண்டிப்பாக இங்கே வருவேன. இந்த வீடு, இந்த மாடுகள் என் பேரப்பிள்ளைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ரொம்பவும் பிடிக்கும். எல்லாரும் வரலாமா?’
‘தாராளமாக’
இருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். வலது கையில் எதையோ பொத்திக்கொண்டு வெளியே வந்தார். பொத்திய கையை என் உள்ளங்கையில் வைத்து விரித்தார். அது ஒரு நெளிந்துபோன மோதிரம். அதிலிருந்த ஒரு பச்சைக்கல் ஒரு கீறலுமின்றி தகத்தகவென்று மின்னியது. அந்த மோதிரம் ஒரு சுத்தியலால் அடித்த மாதிரி இருந்தது. அவ்வளவு பெரிய அடியிலும் அந்தக் கல்லில் கீறல் இல்லை.
‘அம்மா இறந்துபோன அந்த வாகனத்திலிருந்து என் அம்மாவின் பொருளென்று இது ஒன்றைத்தான் என்னிடம் கொடுத்தார்கள். அப்போது வாங்கி வைத்ததுதான். இப்போதுதான் எடுக்கிறேன். திடீரென்று ஞாபகம் வந்தது’
‘கடவுள் என்னிடம் காட்டச் சொன்னாரா?’
‘இல்லை. கொடுக்கச் சொன்னார்’
‘அவ்வளவு பெரிய விபத்தில் எவ்வளவு பெரிய அடியை இந்த மோதிரம் வாங்கியிருந்தால் இப்படி நெளிந்திருக்கும். அந்தக் கல்லில் எப்படி ஒரு ஊனமும் இல்லை. நிச்சயமாக இது ஜாதிக்கல்லாகத்தான் இருக்கவேண்டும். அம்மாவின் ஞாபகார்த்தமாக நீங்களே அணிந்துகொள்ளுங்கள் சகோதரரே. கடவுள் சில சமயம் பொய் சொல்வார். எனக்கு அவர் கொடுக்கச் சொல்லியிருக்க மாட்டார். தயவுசெய்து எனக்குத் தராதீர்கள்.’
‘நான்தான் சொன்னேனே. நான் பாலைவனம். பாலைவனத்திற்கு எதற்கு பச்சை. இந்தப் பச்சை பச்சையோடுதான் இருக்கவேண்டும். இப்போது புரிகிறதா? பாலைவனங்களூம் தேவை என்றதன் அர்த்தம் ஹ..ஹ் ஹா. எதுவும் நினைக்காதீர்கள். ஏற்றுக் கொள்ளுங்கள் சகோதரரே.’
அந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டேன். அந்தப் பால் இன்னும் உதடுகளில் இனித்துக் கொண்டே இருக்கிறது.
சிங்கை திரும்பிவிட்டேன். முதல் வேலையாய் ஒரு நகைக்கடையில் கொடுத்து அந்தப் பச்சைக்கல்லை பிளாட்டினத்தில் கட்டச் சொன்னேன். அந்த நகைக்கடைக்காரர் சொன்னார். இது மிக உயர்ந்த மரகதக்கல். மரகதம் என்று பார்த்தால் விலை இரண்டாயிரம் வெள்ளிதான். நீங்கள் 20000 வெள்ளி கொடுத்தாலும் இந்தப் பச்சை உங்களுக்குக் கிடைக்காது. இது ஒரு ராஜ பச்சை. அது எல்லாருக்கும் தெரியாது. இப்படி ஒரு மரகதப் பச்சையை நான் கடியாபட்டியில் ஒரு ஜமீன் வீட்டில் பார்த்த ஞாபகம். விரலைவிட்டு கழற்றாதீர்கள். உங்கள் பிறந்த தேதியைக் கூட்டினால் இரண்டு வருகிறா?.’ ஆம். என் பிறந்த தேதி 29. பார்த்தீர்களா! அதனால்தான் இது உங்களைத் தேடி வந்திருக்கிறது. ‘சுகங்கள் பெருகும் என்று சொல்லமாட்டேன். ஆனால் சோகம் தீண்டாது. உங்களை மற்றவர்கள் ரசிப்பார்கள். ஒரு பஞ்சவர்ணக் கிளிக்குத் தெரியாது அதை எல்லாரும் ரசிக்கிறார்கள் என்று. நீங்கள் ஒரு பஞ்சவர்ணக்கிளி யாகிவிடுவீர்கள்.’ என்று வாழ்த்தி அந்த நகைக்கடைக்காரர் அந்த மோதிரத்தைக் கொடுத்தார். கல்ராசி சொல்வதில் அவர் ஓர் அற்புதக் கலைஞர். அறிஞர். பார்ப்பவர்களுக்கெல்லாம் அது பச்சையாகத்தான் தெரிகிறது. எனக்கு அது பாலைவனமாகத் தெரிகிறது. என்ன ஆச்சரியம். அந்தக் கல் என் விரலில் ஏறியதிலிருந்து நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்றைய நாள் என்னுடைய நாள் என்று சொல்லிக் கொண்டுதான் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறேன். ஹாய் கிரிகிரி பெக். நீங்கள் வாழ்க. விரைவில் சந்திக்கிறேன். பாலைவனங்களும் தேவைதானோ?
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationநிஜத்தைச் சொல்லிவிட்டுதொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *