பால்

 

அழகர்சாமி சக்திவேல்

 

கோமியம் குடிக்கும் சமூகம்

பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது.

கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால்

 

எருமைப்பால் என்ன பாவம் செய்தது

ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை

கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா?

திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.

 

எருமைப்பால் உற்பத்தியில் எம்நாடு முதல் இடம்..

எருமைக்கறி ஏற்றுமதியிலும் எம்நாடு முதல் இடம்..

இருந்தும் பயன் இல்லை…

எருமையின் பால் இன்றளவும்.எமனுக்கு மட்டுமே கரிசனம்

கோபாலன் குழல்கேட்க கொடுப்பினை பசுவிற்கே.

 

கருப்பால் நிறமான எதுவும்

பிறப்பால் தாழ்ந்ததென்ற மூட

மனப்பால் குடிக்கும் புவியின் பால்

கொதிப்பால் என்மனம் குதிக்கும்.

 

உசிலம்பட்டியில் மட்டும் ஸ்பெஷல் பால்…

அங்கே… கள்ளிப்பாலும் எருக்கம்பாலும்

பெண் சிசுக்குப் பிடித்த பால்.

 

தமிழ்ப் பால் இலக்கணத்தில் தான்

எத்தனை எத்தனை குளறுபடிகள்.

 

உழவனின் நண்பன் என மண்புழு

தவறாய்ப் பால் மாற்றப்பட்டது..

ஆண்  உறுப்பும் பெண் உறுப்பும் கொண்ட

மண்புழு ஒரு மூன்றாம் பால்.

மூன்றாம் பால்  ஊர்ந்து மகிழ்ந்தால்தான்

முதல்பாலும் இரண்டாம்பாலும்

உண்டு மகிழ்வார்.

 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு பிறவிகள் உண்டாமே?

தொல்காப்பியர் இப்போது எங்கு பிறந்தாரோ அங்கு போக வேண்டும்

அவருக்குப் பிடித்தால்..

இறுக்கி ஒரு உம்மையிட்டு

ஓர் சுகமும் தர வேண்டும்.

ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் அப்பால்

மூன்றாம் பாலினையும் உயர்திணையாய் சேர்க்கக் கோரி என்

அணைப்பால் அவர் திணைப்பால் மாற்ற வேண்டும்.

 

பேடியையும் அலிகளையும்

அக்றிணை ஆக்கிய அக்கிரமம் ஏன் செய்தீர்?

குழைந்து கொஞ்சிக் கொண்டே அவர் தலையில்

குட்டு வைக்க வேண்டும்.

 

தாய் என்பது பெண்பால் தந்தை என்பது ஆண்பால்

அது அந்தக் காலம்.

தாயும் தந்தையும் பொதுவின்பால்

இது இந்தக்காலம்.

 

இஸ்ரேலின் ஒரு யூதப் பெண்மணி

சுப்பாயி என்று வைத்துக் கொள்வோமே.

சுப்பாயி மருத்துவத்தால் சுப்பன் என்ற ஆண் ஆனான்.

அப்பால் சுப்பன்…

செயற்கைக் கருத்தரிப்பால் சேயையும் பெற்றுக் கொண்டான்.

சுப்பன் இப்போது தாயா? தந்தையா?

தந்தை இப்போது ஆண்பாலா? பெண்பாலா?

 

குருவம்மா ஒரு சீனப்பெண்.

பிலிப்பினோ நாட்டைச்சேர்ந்த

பாப்பம்மாவை மணம் முடித்தாள்.

குருவம்மாவும் பாப்பம்மாவும்

விந்து வங்கி மூலம் பிள்ளை பெற்றார்.

இரண்டு பிள்ளைகளுக்கும் இப்போது

யார் தந்தை? யார் தாய்?

தாய் இப்போது பெண்பாலா? ஆண்பாலா?

 

இனி ஒரு விதி செய்வோம்

தாயுமானவன்களும் தந்தையானவள்களும்

கூடிக்கொண்டே போவதால்…

தாயையும் தந்தையையும் பொதுவின் பால் ஆக்கிடுவோம்.

 

தாய் யார் தந்தை யார்…

பெற்றோர்க்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவு என்ன

கேள்விக்கு பதிலை இனி…

சமூகம் தீர்மானிக்க வேண்டாம்..

சம்பந்தப்பட்ட மூவரும் தீர்மானிக்கட்டும்.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationகனவு நீங்கிய தருணங்கள்“போந்தாக்குழி”