பாவண்ணன் கவிதைகள்

1.வேண்டுதல்
சாக்கடைக்குள் என்றோ
தவறி விழுந்து
இறந்துபோன குழந்தையை
காப்பாற்றச் சொல்லி
கதறி யாசிக்கிறாள்
பைத்தியக்காரி

அவசரத்திலும் பதற்றத்திலும்
நடமாடும்
ஆயிரக்கணக்கான
முகங்களை நோக்கி

2. உயிர்மை

நிறுத்தி வைத்த குழலென
செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின்
ஏழாவது மாடியின் சன்னலருகே
காற்றின் இன்னிசை பரவத் தொடங்குகிறது

அலைஅலையாய்த் தவழும் இசையில்
அறையே நனைகிறது
அறையின் ஒவ்வொரு புள்ளியிலும்
உயிர்மையின் முளை சுடர்விடுகிறது
எங்கெங்கும் உறைகிறது
இன்பத்தின் ஈரம்
சுவர்கள் கதவுகள் மாடங்கள்
மேசைகள் நாற்காலிகள்
நிலைமறந்து நினைவிழந்து
நெக்குருகி நிற்கின்றன

அந்தரத்தின் யாழ்நரம்புகள் அதிர
வெள்ளமென நிரம்பும் இசைக்கு
வீடே மடியென மாறுகிறது
தாவித்திரிந்த களைப்பில்
வருடலில் குளிர்ந்து
கண்மூடி உறக்கம் கொள்கிறது
காற்று

3.காத்திருத்தல்
கவ்விச் சென்ற குச்சியை
தவற விடுகிறது காகம்

அச்சத்தில் பதறி
அந்தரத்தில் வட்டமடிக்கிறது
ஒரு விமானத்தைப்போல இறங்குகிறது
அதன் உடல்

எதிர்பாராமல் நேர்கிற  நடமாட்டம்
அதற்கு பீதியை ஊட்டுகிறது
நாலு அடி முன்வைத்து
ஆறு அடி பின்வைத்து
நடுங்கிநடுங்கி விழிக்கிறது
எதையோ சொல்ல நினைப்பதுபோல
இரண்டுமூன்று முறை கரைகிறது
போகட்டும் போ என்று
உதறிப் பறக்கவும் நினைக்கிறது
இறுதிப் பார்வை பார்த்தபிறகு
இறகுகளை அடித்துக்கொள்கிறது

அமைதி பரவும்
அதிசயக் கணத்துக்குக் காத்திருந்து
குச்சியைக் கவ்விக்கொண்டு
மீண்டும் பறக்கத் தொடங்குகிறது

4.சாபத்தின் மொழி

மழையின் யுத்தம் தொடங்கி
ஆறு நாட்களாகின்றன
விடாது பாயும் அதன் அம்புகளை
நெஞ்சில் ஏந்தி
மல்லாந்து கிடக்கிறது பூமி
கடைசியாய்ப் பார்த்த சூரியனின் முகம்
ஒரு கனவென ஆழ்ந்திருக்கிறது

நகரின் சிறுசிறு அழகுகளை
மிதித்து நடக்கின்றன அதன் கால்கள்
சீற்றத்தில் இமைகள் படபடக்க
அது பிடுங்கி வீசிய மரங்கள்
வழியெங்கும் கைவிரித்துக் கிடக்கின்றன

அதன் ஆவேசத்தைத் தாளாது
துவண்ட கொடிகளின் தளிர்கள்
காற்றில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன

காணும் இடமெங்கும் வெள்ளக்காடு
எந்தச் சாலையிலும்
வாகனத்தின் நடமாட்டமில்லை
மண்ணில் விளையாடாத குழந்தைகள்
பொம்மைகள்போல உட்கார்ந்திருக்கிறார்கள்
மேம்பாலங்கள் அறுபட்டுத் தொங்க
தரைப்பாலங்கள் உடைந்து குழியாக
சிறுசிறு தீவுகளாக
உருமாறத் தொடங்குகிறது நகரம்

அதன்  மூச்சில்
கம்பீரம் குலைந்த கட்டடங்கள்
அட்டைப்பெட்டிகளாக நொறுங்கிச் சரிகின்றன

எட்டுத் திசைகளிலும்
ஓங்கி ஒலிக்கிறது அதன் கர்ஜனை
அதன் சாபத்தின் மொழியை
அதிர்ந்து எதிரொலிக்கிறது பூமி

5.பிச்சிப்பூ

புதரோரம் பூத்திருக்கிறது
பிச்சிப்பூ

அருகில்
இரவில் காய்ச்சிய பானைகளில்
தளும்புகிறது சாராயம்
மறைந்துவரும்
வாடிக்கையாளர் எண்ணிக்கை
இன்று கூடுதலாக இருக்கிறது
போதை கூடிவரும் காலத்தில்
எல்லோரும் பறவைகளாகிறார்கள்
அவர்கள் கண்களில்
ஆனந்தம் சுடர்விடுகிறது

ஆவல் துடிக்கும் விரலொன்று
பறித்துச் செல்லுமென
புதரோரம் பூத்திருக்கிறது
பிச்சிப்பூ

Series Navigationசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்குஅதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1வாக்குமூலம்