பாவண்ணன் கவிதைகள்

Spread the love

 

 

1. கருணை

 

பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின்

அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே

வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்

 

அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை

அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க

ஒரு குழந்தையும் இல்லை

அதன் வரவால் களிப்பவர்களும் யாருமில்லை

அடர்ந்த குகைபோல

மூடிக் கிடக்கிறது அந்த வீடு

 

ஏற்றுக்கொள்ள யாருமற்ற நிலையிலும்

வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்

 

2. ஒரு பகுதிக் கனவு

 

எல்லாமே மறந்துபோக

நினைவில் தங்கியிருப்பது

மிகநீண்ட கனவின்

ஒரே ஒரு பகுதி

 

மரங்கள் அடர்ந்த காடு

கீச்சுக்கீச்சென இசைக்கும் பறவைகள்

விசித்திரமான வால்களுடைய குரங்குகள்

எங்கோ இடம்பெயர்ந்து செல்லும் யானைகள்

சாரலுடன் விழும் இனிய அருவி

துறுதுறுவென அலையும் வண்ணத்துப்பூச்சிகள்

இரைவிழுங்கிய பின்னர் அசையும் மலைப்பாம்பு

இரு கிளைகளின் இடையே

அசையும் ஓர் ஊஞ்சல்

 

எவ்வளவோ யோசித்துப் பார்த்தும்

வேறு எதையும் காட்சிப்படுத்த இயலவில்லை

ஊஞ்சலின் ஆனந்தம் உணர்ந்தபின்

எஞ்சிய கனவு அவசியப்படவும் இல்லை

 

3. இறுதிப்பயணம்

 

காற்றிழுத்த இழுப்புக்கெல்லாம்

உடல்நெளித்து

விழக்காத்திருக்கும்

கடைசி இலையை

எட்டுத் திசையெங்கும்

கிளைகளை நீட்டி

காலூன்றி நிற்கும் மரத்தால்

எப்படித் தடுக்கமுடியும்?

 

வயதைச் சொல்லி

துணைகோர முடியாது

வலிமையை வெளிப்படுத்தி

அச்சுறுத்தவும் முடியாது

 

துளிர்க்கும் பருவம்

மீண்டும் அரும்புமென்ற

திடமான ஒரு நம்பிக்கையை

தனக்குத்தானே ஊட்டியபடி

இலையின் இறுதிப்பயணத்தை

சங்கடம் கவிந்த மெளனத்துடன்

பார்க்கிறது அந்த மரம்

 

4. பாரம்

 

அருந்தும் ஆவல்

இன்னும் இருக்குமோ என்றறிய

வேப்பங்கொழுந்தின் சாந்து தடவி

கசப்பேற்றிப் பழக்கிய முலைக்காம்பை

உண்ணத் தருகிறாள் அவள்

 

குழந்தையோ

உதடு பதிக்க மறுத்து

வெள்ளைச் சிரிப்பைச் சிந்துகிறது

பூவிரல்களால் பற்றுகிறது

நாக்கை நீட்டியபடி

தொட்டுத்தொட்டுத் தள்ளுகிறது

கடைவாயில் எச்சில் வழிய

மழலைக் குரலால்

மீண்டும் மீண்டும் எதையோ சொல்கிறது

 

அவள் நெஞ்சை அழுத்துகிறது

ஒருபோதும் இனி

ஊட்டமுடியாத முலையின் பாரம்

 

5. எதிரொலி

 

பாடிக்கொண்டே

தள்ளுவண்டியில் பழம்கொண்டு வரும் தாத்தா

திடீரென ஒருநாள் காணவில்லை

 

எங்கே தாத்தா என்று

அம்மாவை நச்சரித்தனர் தெருக்குழந்தைகள்

தாத்தாவோடு பகிர்ந்துகொள்ள

குறும்புக் கதைகட்டு காத்திருந்த இளம்பெண்கள்

எட்டிஎட்டிப் பார்த்து ஏமாந்தார்கள்

கொசுறுப் பழங்களுக்காக

வண்டியைத் தொடரும் சிறுவர்கள்

அங்குமிங்கும்

பத்துநடை நடந்து சலித்துக்கொண்டார்கள்

நாட்டுமருந்து விளக்கத்துக்காகக் காத்திருக்கும்

கர்ப்பிணிப்பெண்கள்

குழப்பத்தோடு முணுமுணுத்துக்கொண்டார்கள்

ஏதோ ஒரு கோடையில்

பலாப்பழத்தை வெட்டி சுளையெடுத்துத் தந்த

தாத்தாவின் கைலாவகத்தை

நினைவுபடுத்திச் சிலாகித்தாள் தொகுப்புவீட்டுப் பாட்டி

 

அடுத்த நாள்

அதற்கும் மறுநாள் என

காலம் நகர்ந்தாலும்

தாத்தாவின் தள்ளுவண்டி வரவேயில்லை

 

நீட்டி முழக்கும் அவர் குரல் மட்டும்

மீண்டும்மீண்டும் எதிரொலிக்கின்றன

காற்றில் மோதி

Series Navigation