பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்


கோவை எழிலன்

புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற பட்டம் அறிஞர் அண்ணாவால் வழங்கப் பட்டது. இப்பட்டத்திற்கு ஏற்ப அவரின் பாடல்கள் சமூக அவலங்களை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பவையாக அமைந்தன.
அவரின் காலத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தை மணமும், கைம்பெண் கொடுமையும் பெரிதாக இருந்தன. பாவேந்தர் பல பாடல்களில் இவற்றை நேர்மறையாகவும் சில பாடல்களில் எதிர்மறையாகவும் கண்டித்து இருக்கின்றார். அவ்வாறு அமைந்த ஒரு பாடலே காதற் குற்றவாளிகள் எனும் இந்தப் பாடலாகும்.
பாவேந்தரின் காதற் குற்றவாளிகள் ஆறே ஆறு செய்யுள்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் வரும் கதை மாந்தர்கள் சொர்ணம், சுந்தரன், அவர்களின் தாயார் என நால்வரே ஆவர். இதனின் கதையை சொர்ணமும் சுந்தரனும் ஒருவருவரை ஒருவர் கண்டு காதல் கொள்கின்றனர், ஆனால் அதை சொர்ணம் கைம்பெண் என்ற காரணத்தால் அவர்களின் பெற்றோர் எதிர்க்கின்றனர் என்று ஒரு சொற்றொடரில் அடக்கி விடலாம். ஆனால் பாவேந்தர் இப்பாடலை ஒரு அழகிய நாடகமாக அமைத்துக் காட்டியுள்ளார்.
இக்கதை ஒரு அழகிய கிராமத்தில் நடைபெறுகிறது. அக்கிராமத்தில் வீடுகள் தனித்தனி வாயில்களைக் கொண்டிருந்தாலும் வீட்டின் பின்புறத்தில் தனித்தனி வேலிகளைக் கொள்ளவில்லை. அதனால் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து அடுத்த வீட்டிற்கு தடையில்லாமல் செல்லலாம். இதுபோன்ற வீடுகள் சில ஆண்டுகள் முன்பு வரை கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்தன.
அக்கிராமத்தில் சொர்ணமும் சுந்தரனும் அடுத்த அடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இருவரும் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பவர்கள். நன்றாகப் படித்தவர்கள் என்பதை “கற்றவை யாவையும் நெஞ்சத்திலே” என்ற அடிகளால் அறியலாம். சொர்ணம் பால்ய விவாகத்தால் கைம்பெண் ஆக்கப் பட்டவள்.
சொர்ணம் கைம்பெண் என்பதால் ஊரில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படவில்லை. அவளின் ஒரே பொழுதுபோக்கு சுந்தரத்தின் வீட்டிற்கு வந்து சுந்தரத்தின் தாயாரோடு சிறிது நேரம் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டிருப்பது தான். அதுவும் வீட்டின் பின்புறத்தில் வரவேண்டும். வீட்டின் முன்புற வாயில் வழியாக வர அவள் அனுமதிக்கப் படவில்லை. ஒருவேளை இவ்வாறு கைம்பெண்கள் வருவதற்காகவேதானோ என்னவோ அக்காலத்தில் தோட்டத்தில் வேலிகள் போடப்பட வில்லை. சொர்ணத்தின் வழக்கமான இந்த உரையாடலோடு பாரதிதாசனார் இப்பாடலைத் தொடங்குகிறார்.
தோட்டத்து வாசல் திறக்கும் – சொர்ணம்
வந்தால் கொஞ்ச நேரம் மட்டும்
வீட்டுக் கதைகள் பேசிடுவாள் – பின்பு
வீடு செல்வாள் இது வாடிக்கையாம்.
அவ்வாறு சொர்ணம் ஒருநாள் சுந்தரத்தின் வீட்டிற்கு வருகிறாள். அப்போது சுந்தரத்தின் தாயார் பட்டுத் துணி வாங்கச் சென்றிருந்தாள். கிராமங்களில் பெரும்பாலும் சில கடைகளே இருப்பது வழக்கம். அக்கடைகள் அக்கடைகளை நடத்தும் முதலாளிகளின் சாதிப்பெயரைக் கொண்டே வழங்கப்படும். அம்முறையைப் பின்பற்றியே பாவேந்தர் இவ்விடத்தில்
சேட்டுக் கடைதனில் பட்டுத்துணி – வாங்கச்
சென்றனள் சுந்தரன் தாய் ஒருநாள்
என்று பாடுகிறார். சொர்ணம் வரும்போது சுந்தரன் கூடத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருக்கிறான்.
இப்போதுதான் சொர்ணம் முதன்முதலாக ஒரு இளம் ஆணழகனைத் தனிமையில் சந்திக்கின்றாள். அவள் அவனின் அழகை இரசிக்க முற்படுகிறாள். இதை கவிஞர்
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே
என்று கூறுகிறார். அப்போது சுந்தரன் பாடம் படித்துத் தற்செயலாக நிமிர்ந்து பார்க்கிறான். இருவரின் பார்வையும் சந்திக்கின்றன. இதை எதிர்பார்க்காத சொர்ணம் தன் பார்வையைச் சற்றென மாற்றுகிறாள். இதைப் பாவேந்தர்
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
என்கிறார். இருவரும் இந்த எதிர்பாராத சந்திப்பை எதிர்கொள்ள முடியாமல் ஏதேதோ செய்கின்றனர். சுந்தரம் புத்தகத்தை திருப்புகிறான். சொர்ணம் ஆடையைத் திருத்துகிறாள்.
இருவரும் தனிமையில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. சுந்தரன் முதலில் பேசத் தொடங்குகிறான். “என்னைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் சென்ற என் அம்மா இன்னும் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை” என்று கூறுகிறான். அதற்குச் சொர்ணம் நேரடியாகவே “நீ தனிமையில் இருக்கும் பொது எந்தப் பெண் உன்னைக் கவர்ந்து விட்டாள்” என்று கேட்கிறாள். சுந்தரனும் “அந்தப் பெண் நீ தான்” என்று கூறுகிறான்.
அதன் பின்னும் சொர்ணமே துணிவோடு பேசுகிறாள்.
உள்ளம் பறித்தது நான் என்பதும் – என்
உயிர் பறித்தது நீ என்பதும்
கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் – இன்பக்
கேணியில் கண்டிட வேண்டும்
என்று கூறுகிறாள். அதைக் கேட்ட சுந்தரனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுகிறான். சொர்ணமும் சுந்தரனும் காதல் உலகில் இரண்டறக் கலந்து விடுகின்றனர்.
காதல் உலகின் சிறப்பை பாவேந்தர் இவ்வாறு கூறுகிறார். பக்தி இலக்கியத்தில் காட்டப்படும் பேரின்பத்திற்கு ஈடாகக் காதல் உலகைப் பாவேந்தர் காட்டுகிறார்.
சாதலும் வாழ்தலும் அற்ற இடம் – அணுச்
சஞ்சல மேனும் இலாத இடம்.
மோதலும் மேவலும் அற்ற இடம் – மனம்
மொய்த்தலும் நீங்கலும் அற்ற இடம்
என்று பாடுகிறார். காதல் உலகில் இவ்வாறு அவர்கள் இவ்வுலகக் கவலைகளை மறந்து களித்திருந்தனர். அப்போது இருவரின் தாய்மார்களும் வந்து விடுகின்றனர்.
சுந்தரத்தின் தாய் துணியை வாங்கிக் கொண்டும், சொர்ணத்தின் தாய் தன் மகளைத் தேடிக்கொண்டும் வந்து விடுகின்றனர். சுந்தரத்தின் தாயை வீட்டு வாயிலில் கண்ட சொர்ணத்தின் தாய் சொர்ணம் பின் யாருடன் இத்தனை நேரம் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று ஐயுற்று வந்ததாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். வந்த இருவரும் சொர்ணம் மற்றும் சுந்தரத்தின் நிலை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
சொர்ணத்தின் தாய் சொர்ணத்திடம் “நீ ஒரு கைம்பெண்” என்று கூறுகிறாள். சுந்தரத்தின் தாய் அவள் எவ்வாறு கைம்பெண் ஆனாள் என்று விளக்குகிறாள். சில ஆண்டுகள் முன்பு ஒரு சின்னக்குழந்தையை சொர்ணம் மணந்ததாகவும் அக்குழந்தை இறந்ததால் சொர்ணம் கைம்பெண் ஆனதாகவும் தெரிவிக்கின்றாள்.
சொர்ணம் மணந்ததே ஒரு சின்னக் குழந்தையை என்றால் சொர்ணம் அப்போது இன்னும் சிறு குழந்தையாக இருந்திருப்பாள் என்பதை உணரலாம். சொர்ணத்திற்கு இவற்றை அவர்களின் தாய்மார்கள் விளக்குவதில் இருந்து அவளுக்கு நடந்தது எதுவுமே தெரியாது என்பதை நாம் உணரலாம். அவளுக்கு நினைவு தெரியாத நாளில் இத்திருமணம் நடந்து விட்டதை பாவேந்தர் இவ்வாறு உணர்த்துகிறார்.
இரு தாயரும் பேசுவதில் இருந்து அவர்கள் பழைய கட்டுப்பாடுகளில் சிக்குண்டவர் என்பது நமக்குப் புலனாகிறது. அவ்வாறு இருக்கும் போது சொர்ணமும் அக்காலத்தில் கைம்பெண்ணிற்கு இருந்த கட்டுப்பாடுகளை அனுபவித்து இருப்பாள். அவ்வாறிருக்க அவளுக்குத் தான் ஒரு கைம்பெண் என்பது எவ்வாறு தெரியாமலிருந்தது என்பது புதிராக இருக்கிறது.
சொர்ணம் மற்றும் சுந்தரன் இருவரும் கல்வி அறிவு உடையவர்களாக இருந்தும் கற்ற கல்வியை உள்ளத்தில் புதைத்து விட்டு பெற்றோர்களை எதிர்த்துப் பேசாமல் கண்ணீர் விட்டனர் என்பதை இவ்விடத்தில் பாவேந்தர்
கற்றவை யாவையும் உள்ளத்திலே – வைத்து
கண்ணில் பெருக்கினர் நீரருவி
என்று கூறி அவர்கள் செய்ததில் தவறேதும் உண்டோ என்ற கேள்வியுடன் கதையை முடிக்கின்றார்.
இப்பாடலில் பல இடங்களில் பாவேந்தரின் சொல்லாட்சியைக் காணலாம்.
“கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடக்கும் ஆணழகை“
“பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி இருந்தாள் அவள்தான் – அவன்
ஆயிரம் ஏடு திருப்புகிறான்.”
“துள்ளி எழுந்தனன் சுந்தரன் தான் – பசுந்
தோகை பறந்தனள் காதலன் மேல் “
“புற்றறவு ஒத்தது தாயர் உள்ளம் – அங்கு
புன்னகை கொண்டது மூடத்தனம்”
போன்ற அடிகளை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
மேலும் பாவேந்தர் இப்பாடலின் தலைப்பில் காதற் குற்றவாளிகள் என்று யாரைக் கூறுகிறார் என்பதும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
தாயாரின் நோக்கில் காதல் செய்த சொர்ணமும் சுந்தரனும் காதற் குற்றவாளிகளாகத் தெரிகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரின் தாயரும் காதலருக்குக் குற்றவாளிகளாகத் தெரிகின்றனர். பாவேந்தரின் கூற்றான
“குற்றம் மறுத்திடக் காரணங்கள் – ஒரு
கோடி இருக்கையில் காதலர்கள்
கற்றவை யாவையும் உள்ளத்திலே வைத்து
கண்ணில் பெருக்கினர் நீரருவி”
என்ற அடிகளை நோக்கும் போது பாவேந்தர் தாயரை எதிர்த்துப் பேசாத காதலரைத் தான் குற்றவாளிகளாக்குவதாகத் தோன்றுகிறது.

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்முக்கோணம்