பா. சத்தியமோகன் கவிதைகள்

என் சொற்கள் எனக்குப்போதும்

கொஞ்ச காலமல்ல —

நீண்ட வருடமாய்

நான் ஒரு மெல்லிய இறகு வைத்திருந்தேன்

அதன் எடை மிகவும் இலகுவானது

காற்றைவிடவும் மெலிசானதால்

ஊதித் தள்ளப்பட்டு பள்ளத்தாக்கில் போய் ஆழத்தில் பறந்து விழுந்தது

என்றாலும் பாருங்கள்

அதன் எடையை இந்த உலகம் இழந்தபோது

உலகத்தால் தாங்கமுடியவில்லை

பறக்க என் சிறகைத் தேடுகிறது அது!

நிச்சயமாய் எனக்குத்தெரியும் –

மீண்டும் என் இறகு கிடைத்த பிறகுதான்

உலகம் உருண்டையாகி

தன் இயல்பில் இயங்குகிறது1

.

*****

பயம் என்றால் என்ன!

நான் அஞ்சக்கூடாது

ஏன் எனில்

அச்சம் ஒரு மூளைகொல்லி

அச்சமே சாவு

அச்சமே பிறசக்தி அனைத்தும் புதைக்கும் இடம் ஆகையால்

அச்சத்தின் நுழைவாயிலை

கண்டுபிடித்தே தீருவேன்

அச்சத்தை

நான் அனுமதித்த வழியில் மட்டுமே செல்ல அனுமதிப்பேன்

என் மேல் அது எங்கும் பரவுக

அட ! அது ஏன் உள்ளேயும் புகட்டும் !

அச்சம் கடந்து ஓய்ந்த பின்

என் உட்கண்ணால்

பயம் பதித்த தடத்தை ஆழமாக உற்றுப் பார்ப்பேன்

அப்போது

நான் மட்டுமே மிச்சம் இருப்பேன்!

*****

ஏன்

ஓயாத இரைச்சல் குறையா வெயில் அந்தியில்

நெஞ்சே ஏன் சோகமாகிறாய்

தளரும் பறவையின் இறகைப் போல ஏன் மெல்லத் தளர்கிறாய் ?

உனது தழல் அணைய சம்மதமோ?

வீழ்ச்சி குறித்தான குறிப்பு உன்னையறியாமலே

ஏதேனும் உட்புகுந்ததோ?

மந்திரச் சொல் ஒன்று கூறு நெஞ்சே –

எரி தழல் பீனீக்ஸ் ஒன்று

மீண்டும் சிறகு வீசி எழுந்து உயரப் பறந்திட!

*****

சங்கடம்

கவிதைத் தலைப்பு கேட்டு

கவிதை எழுதிக் காட்டும் நண்பனை அறிவேன்

கொடுத்த தலைப்பில் எழுதுவான்

எழுதிக் காட்டுவான்

அவனிடம் காட்ட

என்னிடமுள்ள கவிதைகளோடு அலைகிறேன்

இருவரும் ஒரு புள்ளியில்

சந்திக்க முடிவதில்லை

என் கவிதை என்னோடு

அவன் கவிதை பேப்பரோடு.

—————

Series Navigationமஹாளயத்தில் பொன்னம்மா யார்?2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி