பிங்கி என்ற பூனை

எவர் கேட்டாலும்
பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில்
ஐந்து பேர் என்கிறான்
என் பையன்.
ஏதோ ஒரு மலைக்கால மாழையில்
தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு
அவனறிந்த ஆங்கிலத்தில்
பிங்க்கி என பெயரிட்டிருக்கிறான்.
அதற்கு இறைச்சி இஷ்டம் என்பதற்காக
தினமும் கறி எடுக்கச்சொல்லி
அவன் அம்மாவை இம்சிப்பதில்
அவனுக்கு அலாதிப் பிரியம்.
எவரேனும் என்னோடு தெருவில் பார்த்து
நலம் விசாரிக்கையில்
நானும் நலம்
என் பூனைக் குட்டியும் நலமென்கிறான்
அவனிம்சைக்கு அஞ்சி
கட்டிலுக்கு கீழ் ஒளிந்து கொள்ளும் பிங்க்கியை
தன்னோடு அது ஒளிந்து விளையாடுவதாகச் சொல்லிச் சிரிக்கிறான்.
அதன் தலையில் குட்டுகிறான்
காதைத் திருவுகிறான்
சமயங்களில் பேசாதே என செல்லமாய்
கோபித்து கொள்கையில்
மியாவ் மியாவ் என கெஞ்சிக்கொண்டே
அவனைச் சரணடைந்துவிடுகிறது
அந்த பிங்க்கியும்.
இதற்கிடையில்
காலையிலிருந்தே
பிங்க்கியைக் காணவில்லையென
மனைவி புகார் சொல்ல
பள்ளிப் பையை விட்டெறிந்த மாத்திரத்தில்
பிங்க்கியைத் தேடும் பையனுக்கு
என்ன பதில் சொல்வது?
பதறித்தான் விட்டோம்
பையோடு நுழைந்த
என் பையன் கூடவே
மியாவ் எனக் கத்திக்கொண்டு
அதுவும் நுழைந்து
நாங்கள் பால் வார்த்த பூனை
அன்றைக்கு
எங்களுக்கு பால் வார்த்தது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationவெறுப்புபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.