பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை

சிறகு இரவிச்சந்திரன்.

வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி, புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த “ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை.
தகப்பன் ஓடிப்போய், தாய் வேறொருவனுடன் துணை தேடிப் போனபின், அற்புதமரி என்கிற பதினெட்டு வயதுப் பெண், அன்புக்கு ஏங்கி, கிடைக்காத விரக்தியில் சமூகத்தின் பால் வன்மம் கொண்டு, நினைத்தபடி வாழும் கதை.
கதை ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஏங்காணும், என்னவோய் என்கிற நடை, கதையை தி.ஜ. காலத்துக்குக் கொண்டு செல்கிறது. ஒரு குறும்படமோ அல்லது மேடை நாடகமோ எழுதக்கூடிய அளவிற்கு உணர்ச்சிக் குவியல்களும், பாத்திரங்களின் பல வண்ணக் கலவைகளும் கதைக்குப் பெரும் பலம்.
தலைமை ஆசிரியர் மரியை பள்ளியை விட்டு நீக்க எண்ணுகிறார். மரி செய்த தவறு? ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை. பதினெட்டு வயதில் பத்தாம் கிளாஸ், அதி கவர்ச்சியான உடை அணிந்து வருவது இத்யாதி, இத்யதி. இதில் நெருடும் விசயம், அந்தப் பள்ளி சீருடை இல்லாத பள்ளி.
எடுத்தெறிந்து பேசுவதும், ஆசிரியர்களை அவமானப்படுத்துவதும், பையன்களின் கூட்டத்தில் தனியொரு ஆளாக நின்று பேசுவதும் மரி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். விலக்குவதற்கு முன் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கும்படி கேட்டு, கதை சொல்லி, மரி வீட்டுக்குப் போகிறார். சுமதி என்கிற அவரது மனைவி, முதலில் தடுத்தாலும், பின் கூட வருகிறாள். தனியாக, ஒழுங்கற்ற, பொருட்கள் இறைந்து கிடக்கும் ஒரு வீட்டில் மரி வசிக்கிறாள். வெளியே கேட்கும் குரலுக்கு பதில் சொல்ல அவள் வரும்போது, அவளது உடை லுங்கியும் மேல் பட்டன்கள் போடாத சட்டையும்!
மரியின் கதையைக் கேட்கும் ஆசிரியர், அவளைத் தங்களுடன் கடற்கரைக்கு அழைக்கிறார். ஒரு கன்னுக்குட்டியைப் போல் துள்ளி குதித்து, உடை மாற்றி அவர்களுடன் மரி கடற்கரைக்கு வருகிறாள். சுண்டல் சாப்பிடுகிறாள். சுமதியுடன் கை கோர்த்துப் பேசிக் கொண்டே வருகிறாள். யாருடைய அன்புக்கோ அவள் ஏங்குவது, கதையில் பளிச்சென்று பதிவு செய்யப்படுகிறது. அன்பு கிடைக்கும்போது அவளுக்கு ஏற்படும் மாற்றம் கதை படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தைத் தந்து விடுகிறது.
மரி இப்போதெல்லாம் ஆசிரியர் வீட்டில்தான் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடுகிறாள். இரவு உணவும் அங்கேயே. மரி ஒழுங்காக உடை உடுத்துகிறாள். பள்ளிக்கு நேரத்துக்கு வருகிறாள். நன்றாகப் படிக்கிறாள். அவளை ஆசிரியர் கேட்கும் ஒற்றைக் கேள்வி: “ இன்னிலேர்ந்து பத்தாம் வகுப்பு பாடத்தை ஆரம்பிச்சுடலாமா? “
கதை வர்ணனையில் குறிப்பிடத்தக்க அம்சம், மரியின் நடவடிக்கைகளைப் பற்றி போகிற போக்கில் கோடிட்டு காட்டும் பிரபஞ்சன், எங்கேயும் விரசம் வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார். கொஞ்சம் கோடு தாண்டியிருந்தால் குமுதம் கதை போல ஆகியிருக்கும். ஜெயராஜ் படம் சேர்க்கப்பட்டிருக்கும்.
இன்னொரு விசயம். எங்கேயும் பாத்திரங்களின் உருவ அமைப்பைப் பற்றிய வர்ணனைகளே இல்லை. இன்னொரு எழுத்தாளராக இருந்தால் மரியை தோலுரித்து இருப்பார். அந்தளவுக்கு கவர்ச்சி சேர்க்க வாய்ப்பிருக்கிறது கதையில்! அப்படிச் செய்யாததால், நாமே ஒரு உருவத்தைக் கற்பனை செய்து படிக்கையில் நமக்குப் பரிச்சயமான முகங்கள் கண் முன்னே நிற்பது கதாசிரியரின் வெற்றி.
பிரபஞ்சனின் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, பத்தாண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன். “ தட்டு வேட்டியை முதன்முதலாகக் கட்டுபவன், தடுக்கி தடுக்கி நடப்பது போல இருக்கிறது பிரபஞ்சனின் நடை “ பிரபஞ்சன் சொன்னார்: “ அது உங்கள் கருத்து.. இதற்கு நான் என்ன சொல்ல முடியும்? “
பத்தாண்டுகள் ஏற்படுத்திய மெச்சூரிட்டி, இந்தக் கதையைப் படித்த அனுபவம் எல்லாம் என் கருத்தை மாற்றி இருக்கிறது. “ பத்தாறு வேட்டியை பஞ்சக்கச்சம் போல் கட்டிக் கொண்டு, அவிழ்ந்த குடுமி காற்றில் ஆட, நடக்கும் ஒரு சாணக்கியன் போல் இருக்கிறது பிரபஞ்சனின் நடை. “
இதில் என் தவறு ஏதுமில்லை. ஒன்று, இந்தக் கதை, என் கண்ணில், பத்தாண்டுகளுக்கு முன் படவில்லை. அல்லது பத்தாண்டுகளில், பிரபஞ்சனின் கதைகளில் கனம் ஏறியிருக்கிறது. எதுவானாலும், இலக்கிய உலகுக்கு கிடைத்த அழியாச்சுடர்தான் இந்தக் கதை.
இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. பிரபஞ்சன் சன்னமாகப் பேசுவார். உன்னதமாக எழுதுவார்.
0

Series Navigationபொன்னாத்தா அம்படவேயில்ல…100 கிலோ நினைவுகள்