பிரம்மக்குயவனின் கலயங்கள்

Spread the love

சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில்
தனக்கான அழுத்தங்களைப்
பதித்து கோடுகளில் கலயங்களின்
தலைவிதி எழுதினான் குயவன்.

பின்பு நிலவின் இரவொன்றில்
காந்தர்வக் கண்ணன்களை
ராதைகளோடு உலவ விட்டான்
உலக வீதிகளின் ஆடை விலக்கி.

குயவ‌னுள் எழுந்த செறித்த
வண்ணங்களை அப்பிக்
கொண்டு கண்ணன்கள்
தங்கள் கோகுலங்களில்
ராதைகளைச் சிறை வைத்தனர்.

அவனின் வியர்வையை
உள்ளிளுத்து வட்டம் தறித்த‌
கலயக்கோடுகள் கண்ணன்களின்
வயிறுகளுக்குப் பொங்கிப்
போட அனுப்பப்பட்டன.

கோகுலக்களிப்பின் மிகுதியில்
மஞ்சள் சிவப்பு பச்சையென‌
ராட்சசக் கண்ணன்கள் ஒன்று கூடி
கலயங்களை உடைக்கலாயினர்.

கோதைகள் பிரகலாதன்களை
சுமக்கத் தொடங்கினர்
குயவன் நரசிம்மன்களுக்கான‌
மண்தேடிப் புறப்படலானான்.

-சோமா

Series Navigationமழையும்..மனிதனும்..சொல்லவந்த ஏகாதசி