பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி நகருக்கு ( Paris – பிரஞ்சு ஒலிப்பு ‘பரி’ ) 50 கி .மீ தொலைவில் உள்ள ‘மோ’ (Meaux) என்னும் ஊரில் கடந்த ஏழு ஆண்டுகளாய் இயங்கி வருகிறது பிரானசு தமிழ் கண்ணதாசன் கழகம். இக்கழகத்தின் மகளிரணி, கடந்த இரண்டு ஆண்டுகளாய்க் காந்தி விழாவையும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஒக்தொபர்த் திங்கள் 23 -ஆம் நாள் (23.10.2011) மதியம் 3 .30 மணி அளவில் முழுக்க முழுக்க மகளிரால் நடத்தப் பெற்ற காந்தி விழா இது.

‘மோ’ நகரின் துணை மேயர் திருமதி எரிச்சே (Mme. HERICHER – கலை பண்பாட்டுத் துறைத் தலைவி) மங்கல விளக்கு ஏற்ற, செல்விகள் ரம்யா, ரெபேக்கா, சந்தியா , சோபனா, லோனானா, வலேரி, அனுசா, விபிதா மனப்பாடமாய்த் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட விழா கோலாகலமாய்த் தொடங்கியது.

முன்னர்ச் சொன்ன செல்வியருள் நால்வர் இக்காலத் திரைப்படப் பாடல் ஒன்றுக்குச் சுழன்று சுழன்று அழகாக ஆடினார்கள். பார்க்கும் நமக்குத்தான் தலை சுற்றியது. தொடர்ந்து, மேடையில் ஏறினார்கள் தலைமை தாங்கிய திருமதி லூசியா லெபோ, திருமதி எரிச்சே, திருமதி செயந்தி பிரான்சிசு. துணை மேயர் தம் உரையைப் பிரஞ்சு மொழியில் நிகழ்த்தினார். கண்ணதாசன் கழகத்தை வாழ்த்தினார். ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். வேண்டிய உதவிகளைச் செய்ய மேயர் அவர்களும் தானும் தயாராய் இருப்பதாக உறுதி கூறினார். (அடுத்த் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறதே . இங்கெல்லாம் குடியரசுத் தலைவரை மக்களே தேர்ந்து எடுப்பர். எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதாங்க!). நம்ம ஊர் அரசியல்வாதிகள் போலவே பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிட்டுப் பொன்னாடையைப் போர்த்திக்கொண்டு பறந்துவிட்டார்.

தலைமை தாங்கிய திருமதி லூசியா லெபோ, மிக அற்புதமானது எனக் காந்தி கொண்டாடிய குசராத்திப் பாடலின் தமிழாக்கத்தை வாசித்து அப்பாடலின் கருத்துகள் நம் சங்கப் பாடல்களில் உள்ளவைதான் என்று விளக்கினார் ; காந்தி அடிகளின் பெருமைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.”அரை நிர்வாணப் பக்கிரி ஆகிய காந்தி, கத்தி கொண்டு வந்திருந்தால், நான் துப்பாக்கி கொண்டு போராடி இருப்பேன் ; துப்பாக்கி கொண்டுவந்திருந்தால் பீரங்கி வைத்துப் போராடி இருப்பேன்! பீரங்கி கொண்டு வந்தால் குண்டு மழை பொழிந்திருப்பேன். அவரோ, சத்தியம் என்ற ஆயுதத்தை அல்லவா தாங்கி வந்துவிட்டார். ” என ஆனானப்பட்ட சர்ச்சிலே அரை நிர்வாணப் பக்கிரி இடம் சரணடைந்துவிட்டார் என்று சொல்லி மக்கள் கைத்தட்டலைப் பெற்று அமர்ந்தார்.

அடுத்துப் பேசிய திருமதி செயந்தி பிரான்சிசு, காந்தி அடிகளின் பொன் மொழிகளை மாலையாக்கி அழகிய விளக்கம் அளித்துப் பேசியதை மக்கள் ரசித்தனர். தலைமை உரை ஆற்றியவர் காந்தியைப் பற்றித்தானே பேசினார்! கண்ணதாசனைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே என மக்கள் திகைத்த போது, மைக்கைப் பிடித்த திருமதி லூசியா லெபோ , “முன்னர்ச் சொன்னது காந்தி பற்றிய முன்னுரை! இதோ கண்ணதாசன் பற்றிய என் தலைமை உரை ” எனத் தொடங்கியதும் அவை அமைதி ஆனது. அவர் பேச வந்த தலைப்பு ‘கண்ணதாசன் கண்ட காந்தி’. கண்ணதாசன் கண்ட ஒரே காந்தி கண்ணதாசனின் பிள்ளைகளுள் ஒருவரான ‘காந்திதான் ‘ என்று கூறியதும் அவை கலகலத்தது.

பல வகைப் பாடல்களைப் பாடிய கவியரசு, சந்திரோதயம் என்ற படத்திற்காகப் ‘புத்தர், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ? எனப் பாடல் எழுதினார். புத்தர், ஏசு வரிசையில் காந்தியை ஏன் வைத்தார் கண்ணதாசன் என்று அவர் கேட்க அவையினர் பலவித பதில்கள் கூறினர். திருமதி லூசியா லெபோ தன் கருத்தை இப்படிக் கூறினர் : ” புத்தர், ஏசு இருவரும் மதத் தலைவர்கள், கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் ; உலகளாவிய புகழ் பெற்றவர்கள். காந்தி அடிகளும் அவர்களைப் போலவே மகாத்மா நிலைக்கு உயர்த்தப்பட்டவர், வணங்கப்பட்டவர், உலகம் நெடுகத் தன் புகழ் பரப்பியவர் . அதனால் தான் புத்தர், ஏசுவுக்குச் சமமாக அவரை வைத்தார் கண்ணதாசன். அவர்தான் கண்ணதாசன் கண்ட காந்தி எனச் சொல்லி முடித்ததும் அரங்கின் கையொலி வெளியிலும் எதிர் ஒலித்தது!

‘சத்திய சோதனை’ என்ற தன்வரலாற்று நூலில் தன் தவறுகளை வெளிப்படையாகச் சொன்னவர் காந்தி. அவரைப் பின்பற்றிக் கண்ணதாசனும் தன் ‘வன வாசம்’, ‘மன வாசம்’ என்ற சுயசரிதை நூல்களில் தன் தவறுகளை ஒப்புக்கொண்டு எழுதி இருக்கிறார்… என்பது போன்ற பல செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொண்ட திருமதி லூசியா லெபோ, “காந்தியும் கண்ணதாசனும் மகளிர் அணியில் உள்ள உங்களுடன் ஒரே மாதிரியான வேண்டுகோளை வைக்கின்றனர். அது என்ன தெரியுமா? ” என்று கேட்டு உரையை நிறுத்தினார். அவையினர் தத்தமக்குத் தோன்றிய பதில்களை உதிர்த்தனர். பொறுமையோடு கேட்டுக்கொண்ட அவர் புன் சிரிப்போடு, “கண்ணதாசன் அவர்கள் தம் இறுதிக் காலத்தில் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோது அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் தமிழ் அறியாமலே வளர்ந்து வருவதை அறிந்து பெரிதும் வருந்தி,

“மனதினில் ஒன்று பட்டு சேர்ந்திடுவீர்! – இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர் !
தமக்கெனக் கொண்டு வந்தது ஏதுமில்லை – பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கை இல்லை ” என எழுதிக் காட்டினார்.
கண் மூடுமுன் அவர் எழுதிய கடைசிக் கவிதை அது. தமிழ்ப் பிள்ளைகள் தமிழைக் கற்க வேண்டியது அவசியம் எனக் காந்தி அடிகளும் வற்புறுத்தினார். ஆகவே கழகப் பெண்மணிகளே, உங்கள் கழகக் கண்மணிகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுங்கள். காந்தி, கண்ணதாசன் வேண்டுகோள் மட்டுமல்ல என வேண்டுகோளும் அதுதான் ” என்று சொல்லிக் கைகூப்பித் தன் தலைமை உரையை நிறையு செய்ய, அவையினர் பலத்த கை தட்டலையும் மீறி, ‘எங்கள் பிள்ளைகள் தமிழ் அறிவார்கள், பேசுவார்கள்’ என்ற குரல்கள் கேட்க மிக மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து, ‘தமிழ் எண் கணிதப் பயிற்சி ‘ என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. நால்வர் நால்வராக இரண்டு அணிகளாக (பச்சை, சிவப்பு அணிகள்) செல்வியர் நால்வர் நின்றனர். ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வோர் அட்டை. அதில் 1,2,3,4 என எண்கள். திருமதி ரேவதி தேவா நாலு இலக்க எண் ஒன்றைத் தமிழில் சொல்ல அதனைப் புரிந்துகொண்டு அந்த எண் அவையினருக்குத் தெரியுமாறு வரிசைப் படுத்திச் செல்வியர் நிற்கவேண்டும். இதுதான் விளையாட்டு. கடகடவென எண்களைச் சொல்லச் சொல்லச் செல்வியர் மாறி மாறி நின்று எண்களைக் காட்டினர். இதில் அதிக முறை சரியான வரிசையில் நின்று காட்டி வெற்றி பெற்ற அணி சிவப்பு அணி. புதுவிதமான இந்த விளையாட்டை மக்கள் நன்கு ரசித்தனர்.

அடுத்து, மகளிர் சொல்லாட்சி அரங்கம். பிரான்சு கம்பன் மகளிரணியின் துணைத் தலைவி திருமதி சரோசா தேவராசு, செயலர் திருமதி ஆதிலட்சுமி, பொருளாளர் திருமதி லூசியா லெபோ, உதவிச் செயலர் திருமதி சுகுணா சமரசம் நால்வரும் மூன்று அமர்வுகளில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர். பங்கேற்பவர்களுக்கு வெவ்வேறு தாள் ஒன்று தரப்படும். அதில் தமிழோடு ஆங்கிலம், பிரஞ்சு , வடமொழிச் சொற்கள் கலந்த உரை நடை இருக்கும். இந்தச் சொற்களுக்கு நல்ல தமிழ்ச் சொல்லைப் பெய்து முழுதும் தமிழாகவே வருமாறு உரத்துப் படிக்கவேண்டும்.இறுதிச் சுற்றில் வருபவர்களிடம் கடகடவெனப் பல கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்குப் பிறமொழி கலவாமல் பதில் தரவேண்டும். இந்தப் போட்டியில் மொத்தம் மகளிர் பதின்மூவர் கலந்துகொண்டனர். அவர்களுள் முதலிடம் பெற்றுப் பட்டுபுடைவையைப் பரிசாகப் பெற்றவர் திருமதி ரேவதி தேவா. கணித முதுகலைப் பட்டதாரியான இவர் ஆடல் , பாடல் கலைகளில் வல்லவர். வெற்றி பெற்ற ஏனையர் : திருமதிகள் செயந்தி பிரான்சிசு,செல்வி பார்த்தசாரதி, செகதீசுவரி சிவப்பிரகாசம், மல்லிகா லிங்கம், ரங்கநாயகி ராசபிரியன், லட்சுமிதேவி சகேர், பத்மினி தனராசா, வச்சலா பார்த்தசாரதி.

அதன்பின் செல்வி வலேரி தர்மன் காந்தி பற்றிச் சிற்றுரை ஒன்றைத் தமிழிலேயே வழங்கி அனைவர் பாராட்டையும் பெறார். இறுதியாக சின்னஞ் சிறு சிட்டு செல்வி விந்தியா லிங்கம் இரண்டு சிறுமிகளோடு நடனம், பின் செல்வியர் நால்வரின் நடனத்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இறுதியாகத் திருமதி ரஞ்சனி ராசு நன்றி நவின்றார்.

வந்திருந்த அனைவருக்கும் கேசரி , பொங்கல், இட்டிலி, சாம்பார், சட்டினி, வடை எனச் சிற்றுண்டி வழங்கப்பட்டன. கண்டு கேட்டு உண்டு மகிழ்ந்த அனைவரும் கண்ணதாசன் கழகத் தலைவர் திரு சிவப்பிரகாசம் அவர்களையும் ஏனைய பொறுப்பாளர்கள், உறுப்பினர்களையும் வாழ்த்தி விடை பெற்றனர்.

நிகழ்சிகளைப் பிரஞ்சில் தொகுத்து வழங்கியவர் திருமதி பாலா பெரதோசு ; தமிழில் : திருமதி லட்சுமி சகேர்.

நேரடி வருணனை & வண்ணப் படங்ககள் : பேரா. பெஞ்சமின் லெபோ

Series Navigationநிர்மால்ய‌ம்துளித்துளி