பிரியும் penனே

பிச்சினிக்காடு இளங்கோ

என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ
இருளாய்ச் சூழ்கிறது கவலை
உண்மை
கம்பீரம் பிறக்கிறது
அதனினும் உண்மை

எனக்காக
என்னுடன்
எப்போதும் இருந்தது நீதான்

எனக்கு
முதலில் வந்து
முதலுதவி செய்ததும் நீதான்

உன்னை என்னோடு
வைத்திருந்ததில்
கர்வப்பட்டிருக்கிறேன்

எது
இருந்ததோ இல்லையோ
இல்லாமல் நீ
இருந்ததில்லை நான்

என்னோடு நீ
இருந்ததால்தான்
எனக்குப் புகழ்

நீ வந்தபின்புதான்
பெருமை
என்னிடம் வந்தது

ஒருபோதும் எனக்குப்
பெருமை வந்ததில்லை
பெருமிதம் வந்ததுண்டு

நான் நினைத்ததை
வடித்தது நீதானே
வார்த்தது நீதானே

பிறர் என்னையறிய
உதிரத்தைக் கொட்டியது நீதானே

மெளனபெயர்ப்பை
வடிவப்படுத்தியது நீதானே

மலையிலிருந்து நதியைப்போல
என்னிலிருந்து நான்
கரைய கரைய
கட்டிக்காத்தது நீதான்
காட்சிப்படுத்தியதும் நீதான்

உன்புகழில் எனக்கும்
என்புகழில் உனக்கும்
சரிபாதி
அர்த்தந்நாரீஸ்வரர் ஆனேன் நான்

இன்று
உன் உதிரம் குறைந்து
விடைபெறுகிறாய்
உள்ளம் கனத்து
விடைகொடுக்கிறேன்

காலத்திரையில்
கடலின் அலையில்
கவிதையாய் நாம்.

(21.10.2016 இரவு 11.30க்கு
ஒரு எழுதுகோல் மைதீர்ந்து விடைபெற்றபோது சிங்கப்பூரில் எழுதியது. )

Series Navigationவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்