பிள்ளை கனியமுதே

Spread the love

 

சந்தோஷ்                                                         

ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும் நினைவின் பெருக்கை நிறுத்த முடியமால் தடுமாறினார் மஹாதேவன்.

 

 என்ன நடந்தது? ஏன் நடந்தது?ஒவ்வொரு முறையும் நினைவின் எடையிலிருந்து நழுவ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் பேரெடையுடன் வந்து நிற்கிறது அந்த காட்சி.

 

ஒரு எழுபது வயது முதியவரை ஒரு நாற்பதை வயத்துக்காரன் வேகமாக நெருங்குவதும் பின்னர் அவன் கைகளை சுழற்ற அது அந்த முதியவர் கன்னத்தை  தாக்கி அவர் நிலை குலைந்து  வீழ்ந்து கால்கள் காற்றில் சுழல ஒரு பக்கமாக தலை சாய்ந்து கீழே கிடைக்கும் காட்சி.

 

மறக்க நினைக்கும் போதெல்லாம் காட்சி துளிகள் மேலும் துல்லியமாக  பல விதமான கோணங்களோடு விரிந்து விரிந்து மனக்கண் முன் நிற்கிறது.

 

அடிபட்ட மனிதன் தான் அடித்தவன் தன் பிள்ளை, இந்த  உண்மையை  இரண்டு வாரங்களாகியும் ஏற்க முடியமால் மருகுகிறது மனம். இன்னும்  அதே வீட்டில் தான் வாசம் அவன் அவரை எந்த சலனமும் இல்லாமல் கண் கொண்டு பார்க்கிறான் அவரால் தான் முடியவில்லை.

 

இன்னும் கூட வாயை எதன் பொருட்டேனும் திறக்க முயற்சிக்கும் போதெல்லாம் தாடையின் கீழ் பகுதியில் வலி தெறிக்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு மேலாக உணவையும் மருந்தையும் மறுக்க முடியவில்லை, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழிந்த பிறகு இன்று தான்  எங்கேனும் சென்று வர வேண்டும் என தோன்றியது மகாதேவனுக்கு .

 

மிகவும் முயன்று  சட்டையை அணிந்து கொண்டு அவர் கிளம்பிய போது மருமகளிடம் வெளியே சென்று வர சொல்ல முயன்று முடியாமல் போனது, சொல்லாமலேயேஅவள் அதை புரிந்து கொண்டதை உணர முடிந்தது.

 

வாசலில் வந்து  நின்றார், மின்தூக்கி ஒரு பாம்பு போல் நெளிந்து கீழே போனது, மேலே வர  நேரமாகும் அது மேலும் கீழும் 

 கடக்கும் போதெல்லாம் ஏதோ பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கிறோம் என்கிற பய உணர்வை அவரால் தவிர்க்க முடியவில்லை.

 

கண்களை மூடிக்கொண்டு இயந்திர கதியில் உள்ளே நுழைந்து கீழே போவதற்கான பித்தானை  அமுக்கி கண்களை மூடிக் கொண்டார் ஒரு சில நிமிடங்களில்  கீழே வந்து விட்டார் இப்படி தான் வாழ்க்கை நகர்கிறது.

 

அவருடைய  வீட்டிலிருந்து சில காலடிகளுக்கு பின்னர் முக்கிய சாலை தொடங்குகிறது இது நகரின் முக்கிய பகுதி அந்த சாலையில் இல்லாத கடைகளே இல்லை ஒரே சாலையில் அத்தனை விதமான உணவகங்கள்.முக்கிய அங்காடிகள்,கோவில்கள் என விரிந்து பரந்த சாலை.

 

இந்த இடத்தில் தன பிள்ளை வீடு  கட்டி குடியேறி தன்னையும்  அழைத்து வந்த நாள் இன்னும் நினைவில் இருந்தது அவருக்கு.

 

ஏனோ அந்த சாலை வழியாக போக மனம் பிரியப்படவில்லை தன் வழியில் அது அவரை எங்கோ கூட்டி சென்றது.

 

கண்கள் தானாக சுருங்கி கன்னத்தில் சுள்ளென வெயில் தாக்கிய போது தான் எவ்வளவு நாட்கள் வெளியே வராமல் இருந்திருக்கிறோம் என்பதே அவருக்கு புரிந்தது  தன் உடலுக்கும் மனதுக்கும் வெயிலும் காற்றும் அவ்வளவு தூரம் வேண்டி இருந்ததும்  அப்போது தான் புரிந்தது.

 

வயோதிகத்தை தாண்டி கால்கள் விரைவாக நடை போடுவதையும் வியர்வை உள்ளுக்குள் கசிவதையும் முகத்திலிருந்து வியர்வை சொட்டு சொட்டாக அரும்புவதும் அயர்ச்சியை மீறி பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

 

என் பிள்ளை அவன், நான் திட்டமிட்டபடி தான் வளர்ந்தான் எங்கே தவறு நிகழ்ந்தது.

 

 

அவன் பிறக்கும் போது அவருக்கு  வயது முப்பது, தன்னுடைய முடி அழகாக சுருட்டையாக இருந்ததும் அதன் பொருட்டே ஆணோ பெண்ணோ எவராய்  இருப்பினும் ஒரு முறை தன்னை பார்ப்பவர்கள் தன் முடியின் பொருட்டு தன்னை மறு முறையும் பார்ப்பது அவருக்கு தெரியும் பெண்கள் கண்டிப்பாக ஒரு முறைக்கு இரு முறையாக தன்னை பார்க்கிறார்கள் என அவர் நம்பி கொண்டிருந்த காலம் அது.

 

இருபத்தெட்டு வயதில் தனக்கு திருமணம் நிகழ்ந்ததும் இரண்டு ஆண்டுகள் கழித்து மனைவி கருவுற்றதும் , குழந்தை பிறந்ததும்.

 

மனைவியையும் பிள்ளையையும் எப்படி கையாள்வது என்பதை தன்  தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தார் மஹாதேவன் .

 

தன்னுடைய தொடர்ச்சியாக பிள்ளையின் எதிர் காலத்தை  துல்லியமாக திட்டமிட்டிருந்தார் மஹாதேவன் அவனோடு எவ்வளவு பேச வேண்டும், தன்னுடைய பேச்சை ஒரு அரிதான பொருளாக மாற்றி வைப்பதன் மூலம் தான் சொல்லும் எதையும் மறுத்து விட முடியாத மன நிலைக்கு அவனை கொண்டு வந்திருந்தார்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியை வெல்வதற்கு உதவிய வழிமுறை அது,மெல்ல மெல்ல அவளை அவள் சுற்றத்திலிருந்து விலக்கி தன் அதிகாரத்தை மெல்ல மெல்ல அவள் மேல் சுமத்தி தன் மேல் சுமத்தப்படுவது அதிகாரம் தான் என அவளே அறியாமல் அதை ஏற்க வைத்து மோதிர விரலுக்கு பக்கத்தில் சுண்டு விரலில் அணியும் மோதிரமாக மனைவியை அணிந்து கொண்டவர் அவர்.

 

கணிதத்தில் பெரும் ஆர்வத்தோடு இருந்தவன்  அவன் மற்ற பாடங்களில்  நல்ல மதிப்பெண்ணும் கணிதத்தில் உச்சம் தொடுவதும்,கணிதம் தொடர்பான புத்தகங்கள் வாசிப்பதும் புதிர்களை விடுவிப்பதும் அவனுடைய இளமையை நிறைத்தது.

 

ஆரம்பத்தில் அவர் ஒன்றும் சொல்லவில்லை அவருக்கும் பெருமை தான் ஆனால் கணிதத்தில் உயர் ஆய்வு என்கிற அவனுடைய திட்டங்கள் சிறு பிள்ளை தனமாக பட்டது அவருக்கு.

 

அப்பா சொல்றேன் கேளு,அப்பறம் உன் இஷ்டம் இந்த இரண்டே சொற்களில் ஒரு கணித ஆர்வலனை பொறியியல் நோக்கி திருப்ப முடிந்தது பின்னர்  வணிக மேலாண்மை இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி ஸ்தாபனத்தில் சந்தைப்படுத்துதலில் தேர்ச்சி பெற்று வளாக நேர்காணலில் மிக உயர்ந்த நிறுவனத்தில் வேலைக்கு  சேர வைத்தார்.

 

தன்னுடைய அலுவலகத்தில் சக ஊழியர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து பேசி புலம்பும் போதெல்லாம் ஒரு சிறு எள்ளலோடு அவர்களை எதிர் கொள்வார் மஹாதேவன்.

வேலையில் சேர்ந்தவனை  கிட்டத்தட்ட ஓராண்டு கழித்தே பார்க்க முடிந்தது அவரால்.

 

மழை காலத்தில் சேர்ந்தாற்  போல் பெய்கிற மழையில் செடி திடீரென வளர்வதை போன்ற உணர்வு அவனை பார்த்த போது அவருக்கு ஏற்பட்டது.

 

இனி அவனிடம் அப்பாவாக நடந்து கொள்ள முடியாது என புரிந்தது அவனிடம்  கலந்து கொண்டு என்ன பேசுவது எப்படி பேசுவது என புரியவில்லை அவர் பேசும்போது அவனுடைய கண்களை பார்க்க நேரும் போதெல்லாம் அவருடைய பேச்சை அவர் நிறுத்த நேர்ந்தது.

 

அப்பா என்கிற அந்தஸ்து கொஞ்சம் எஞ்சி நிற்கும் போதே அவன் திருமணத்தையும் முடித்து விடுவது என தீர்மானித்தார் மஹாதேவன் அவன் ஒப்பு கொள்வானோ அவன் ஒரு சொல்லும் பேசாமல் ஒப்பு  கொண்டதில் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அவரை சூழ்ந்து மறைந்தன.

 

அவர் பணி ஓய்வு பெற்று அவனோடு வாழ துவங்கிய போது அந்த வீட்டில் அவர் உட்பட அனைத்தும் அவன் ஆளுகைக்கு உட்பட்ட வெறும் பொருட்கள் என தன்  ஒவ்வொரு செயலிலும் உணர்த்தி கொண்டே   இருந்தான்.

 

நகரின் முக்கிய   இடத்தில் பெறுமதியான வீடு, மகிழுந்தில் பயணம் ,வார கடைசியில் விலை உயர்ந்த  உணவகத்தில் விருந்து என எல்லாமே கிடைத்தது ஆனால் எங்கு போவது என்ன சாப்பிடுவது வீட்டின் மனநிலை என்ன  என்பதை தீர்மானிப்பவன் அவனே.

 

அவனை அவதானிக்கும் போது  ஒன்று புரிந்தது அவனுடைய வேலை தான் அவன்,அவனுடைய நிறுவனம் சந்தைப்படுத்தும் பொருட்களுக்கு தீர்மானிக்கப்படுகிற இலக்குகளை எப்படியேனும் அடைந்தே தீர வேண்டும் என  அவனை நிர்வாகம் விரட்டுகிறது அதற்க்கு ஈடாக தன்னுடைய ஊழியர்களை அவன் அடித்து விரட்டுகிறான்.

 

சில நேரங்களில் தன்னுடைய ஊழியர்களிடம் அவன் தொலைபேசியில் பேசி வேலை வாங்குவதை அவர் கேட்டிருக்கிறார் ஆங்கிலத்தில் அப்பட்டமான வசை, அப்படி என்றால் தன்  மேலதிகாரிகளிடம் அவன் என்ன வசைகளை பெற நேர்கிறதோ என திகைத்துப் போனார்.

அவரும் அதிகாரியாக இருந்தவர் தான் ஆனால் அவர் காலத்தில் அவர் ஊழியரகளை கடிந்து கொண்டது உண்டு தண்டித்ததும் உண்டு,   ஆனால் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்கிற இன்றைய சூழல் அவரை திகைக்க வைத்தது

 

அவன் மனைவியை வசை பாடுவதையும் சமயங்களில் அறைவதும்  அவருக்கு தெரியும், ஆனால் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் அவரும் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் ஆனால் உடல் ரீதியாக துன்புறுத்தியவர் அல்ல அவளுக்கு வேண்டியது என அவர் நினைத்த அனைத்தையும் செய்தவர் அவர்.

 

இவன் தன் பணி நாளின் மனநிலைக்கேற்ப ஒரு நாள் விருந்துக்கு அழைத்து செல்வதும் அடுத்த நாளே நிலைமை மாறியவுடன் அவளை இழுத்து போட்டு அறைவதையும்  அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

இந்த காலத்து பெண்கள் உடனடியாக மணவிலக்கு கேட்டு விலகி விடுகிறார்கள் இவள் ஏன் இத்தனை தூரம் இவனை சகித்து கொள்கிறாள், அவர்  மனைவியை போல் அல்ல அவள் அவளும் நன்கு படித்தவள்.

 

ஏன் தான் தன் மகன் பக்கம் இல்லாமல் தன் மருமகளின் நிலைக்கு வருந்துகிறோம்? அவர் மனைவி மறைந்ததிலிருந்து மருமகளை ஏன் அப்படி பிடித்து போனது ஒரு வேளை தன்னை அறியாமல் ஒரு பெண் குழந்தைக்கான ஆசை தனக்குள் இருந்து இப்போது இந்த நிலையில் இவளை பார்க்கும் போது அவள் தன் பிள்ளையை விட தனக்கு நெருக்கமாய் ஆகி விட்டாளோ ஒரு வேளை  நம் மேல் அப்படி ஒரு ஓட்டுதல் அவளுக்கும் இருப்பதால் தான் அவனை சகித்துக் கொள்கிறாளோ அப்படியெல்லாம் இருக்குமா என்ன?.

 

யோசித்துக் கொண்டே அரசு இடுகாடு வரை வந்து சேர்ந்திருந்தார் இந்த மாதிரி இடத்தில் இப்படி நேரம் செலவழிக்கக் கூடியவர் அல்ல, ஆனால்  ஏனோ அன்று  ஒவ்வொரு கல்லறைக்கு முன்பும் சென்று பிறந்த தேதி இறந்த நாள் கீழே எழுதியிருந்த குறிப்பு உட்பட ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்தார் திடீரென பல நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியில் வந்து   செய்த இந்த காரியம் அவருக்கு பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

 

நான் தான் எல்லாவற்றுக்கும் காரணம் அவனது திறமைகளின் மேல் அவனை நம்பிக்கை இழக்க வைத்தேன் இந்த உலகத்தின் தீமை குறித்து எச்சரிக்கை செய்ய  வேண்டியது என் பொறுப்பு ஆனால் இந்த  உலகமே தீமையானது என அவனை நம்ப வைத்தேன் அதன் ஒரு பகுதியாக  அவனையும் மாற்றினேன்.

 

 என் காலம் முடிந்து விட்டது  ஆனால் அந்த பெண்ணை  இவனை நம்பி திருமணம் செய்து வைத்தேனே, இப்போது அவளுக்குள் என் அடுத்த தலைமுறை வேறு விதைக்கப்பட்டிருக்கிறதே நல்ல வேளை  மனைவி மகராசியாய்  போய் சேர்ந்து விட்டாள்.

 

மேலே இருந்து இவரை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கக் கூடும் அனுபவி அனுபவி என.

 

மீண்டும் மறக்க நினைக்கிற அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது அன்று காலை உணவு அருந்திக் கொண்டிருந்த போது  மேசையில் உண்பதற்கான கரண்டியில் முள் கரண்டி இல்லை என அவன் அவளை நோக்கி திட்டிய போது என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை.

 

இந்த மாதிரி சூழ்நிலைகளில் பனி போல் அமைதியில் ஆழ்ந்திருப்பவர் அவனை நோக்கி எதுக்குடா மாசமா இருக்கிற பொண்ணை இப்படி திட்றயே நீயே போய்  எடுத்துக்கயேன்  என அவர் இரைந்ததும்  அவன் இகழ்ச்சியாக ஆமாம் அவளை இப்ப வேலை செய்ய  சொன்னா  உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்  என சொல்ல போக என்னடா சொன்ன என இவர் அவனை நோக்கி  பாய்வதற்குள்  அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

 

வெகு நேரம் ஆகி விட்டது வீடு திரும்ப வேண்டும் அவன் கண்டிப்பாக அவரை பற்றி நினைக்க போவது கூட இல்லை.

அந்த வீட்டுக்குள் திரும்பவும் நுழைய வேண்டும் சுற்றி சுற்றி கிடைக்கும் சூன்யத்தையும் வெறுமையையும் அள்ளி அள்ளி குடிக்க வேண்டும் என்ன வாழ்க்கை இது? உடல் தளர்ந்து கொண்டிருப்பதையும் மெல்ல மெல்ல உள்ளுறுப்புகள் சிதைவைதையும் சாட்சியை போல பார்த்துக் கொண்டே வாழ்வது என விதிக்கப்பட்டிருக்கிறது,யாருடைய திட்டம் இது நினைக்க நினைக்க வாய் வழியே பெருமூச்சும் ,மார்பின் ஒரு பகுதியில் ஒரு சிறு குத்தல் வலியையும் உணர்ந்தார்.

இந்த  சாலையை தாண்டினால் பிரதான சாலைக்கான இணைப்பு அங்கிருந்து வீடு.

இந்த பகுதியில் ஒரு பெரிய அம்மன் கோயில் உண்டு நண்பகல் நேரமானதால் கோவில் மூடி இருந்தது, ஒன்று புரிந்தது என்ன நடந்தாலும் வெகு நாட்கள் தான் இருக்க போவதில்லை, ஆசுவாசத்தோடு மீண்டும் தன விதிக்குள் புகுந்து கொள்ள வேண்டி வீடு நோக்கி நடை நீண்டது.

——————————-

Series Navigation   ஆர்.வி கதைகள்….பெண் விடுதலை – நூல் அறிமுகம்