பீப் பாடலும் பெண்ணியமும்

Spread the love
குமரன்

முன் குறிப்பு: பெண்கள் நிறைந்த பெருங்குடும்ப மரமொன்றின் ஒரு கிளையாய் பிறந்து, அவர்கள் கைப்பிடித்தும் செவி மடுத்தும் வளர்ந்து, புத்தகங்கள் வாயிலாக பெண்மை குறித்த மேன்மையுறு படிமங்கள் கற்று அவற்றை குடும்பத்து மற்றும் சமூகவெளியில் பழகிய பெண்களுடன் ஒற்று, அவ்வாறு பெற்ற பிம்பங்கள், வயதின் வாயில்கள் வழியே ஆங்காங்கே உடைபட்டு அல்லது உடைக்கப்பட்டு, எந்த ஒரு பாலினத்தவரையும், வயதினரையும் பொதுவாய் எடை போட்டு ஒரே தராசில் நிறுத்த இயலாது என்பதையும், ஆண் பெண் இருவரிடத்திலும் நல்லவை தீயவை தனிமனித இயல்பாய் பொதுவானது என்பதையும் அனுபவம் வாயிலாய் ஓரளவு அறிந்து தெளிந்த, பெண்கள் பற்றிய அதீத பிம்பங்கள் இருந்து தேய்ந்த,  பெண்ணியவாதிகளின் மொழியில் “பிற்போக்கான‌ சராசரி ஆண்” எழுதும் கட்டுரை இது.

கட்டுரைக்குள் புகுமுன் குப்பையை அதன் இருப்பிடத்திற்கு அனுப்பி விடுவோம். அதாவது குப்பைத்தொட்டிக்கு…அதுவே குப்பை அகற்ற நாம் முதலில் செய்தாக வேண்டியது. எனவே, அப்பாடல் பற்றிய‌ எந்தவொரு நாட்டமும் இக்கட்டுரையை எழுதும் எனக்கும், வாசிக்கும் உங்களுக்கும் இருக்கத் தேவையில்லை. பெண்களை மதிக்கும் அனைவரின் அடிப்படை குணம், பெண்கள் மீது வீசப்படும் குப்பைகளை மட்கச் செய்வதாக இருக்குமேயன்றி அவற்றைக் கிளறி மேலும் நாற்றம் பரப்புவதாக இருக்காது. “குப்பை” சேர்ப்பதும் அதன் “நாற்றத்தை” ஊரெங்கும் பரப்புவதும் பொறுப்பின்மை மற்றும் குற்றமென்றால் இன்று இங்கு நடப்பது என்ன? இருவர் வீசிய நாற்றமெடுக்கும் குப்பையை அள்ளி தூர வீசியெறிவதை விடுத்து அதை கிளறிக் கிளறி, மீண்டும் மீண்டும், அதன் நாற்றம் அறியாதவரையும் அதன் வீச்சு அடையுமாறு செய்தல் குப்பை உண்டாக்கியதை காட்டிலும் அசிங்கமான செயல் அன்றோ? அதுவும் ஒரு குறிப்பிட்ட வகை குப்பை மட்டுமே பெண்ணுரிமை வாதிகளின் மூக்கை எட்டும் மர்மம் ஏன்? நாற்றம் குப்பையில் இருந்தாலும் அதை பகுத்தறியும் பக்குவம் மூக்கிற்கு வேண்டுமே? அத்தகைய பகுத்தறிதல் இல்லையென்றால் பாதிப்பு குப்பைக்கா இல்லை அதை நுகரும் நாசிக்கா?

இந்த பெண்ணுரிமை சிங்கங்களும் மாதர் குலத் தங்கங்களும் எதை எதிர்க்கிறார்கள்? முதலில் அதை தங்களுக்குள்ளும் பிறகு நமக்கும் தெளிவுபடுத்தினால் பயனுள்ளதாய் இருக்கும். பெண்களின் அங்கங்களை முன்னிறுத்துவதையா? அப்படியானால் இவர்கள் நடத்த வேண்டிய போராட்டங்களை கணக்கிட முடியுமா? அதற்கு முன் அவர்களுக்கு (பெண்களுக்கு) எதிராகவே அல்லவா போராட வேண்டும்? ஒரு ஆண், பெண்ணின் அங்கம் குறித்து ஆபாசமாய் சொல்லாற்றுதல் அல்லது செயலாற்றுதல் அசிங்கம் என்றால் பெண்களே அவர்களின் அங்கங்களை கீழ்தரமான சிந்தனைக்கு விதையாய் இடுதல் அசிங்கமா? அறிவீனமா? இல்லை பெண் விடுதலையா? இவர்களின் கண்களுக்கு சன்னி லியோன் போன்றவர்கள் சமுதாயத்தில் சன்மார்க்கம் தழைத்தோங்க கலைச்சேவை புரிய மண்ணில் தோன்றிய மாதரசிகளாய் தெரிகின்றனரோ? முதலில் இவர்களின் குழுவில் முக்கிய “பணியாற்றும்” பெண் கவிஞர்கள் எத்தகைய தரத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று கண்டதுண்டா? இன்று நம்மூரில் பெண் கவிஞர் என்று அழைக்கப்படும் (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) அனைவரின் படைப்புகளிலும் பெண் விடுதலையின் முகமாக இருப்பது அங்கங்களின் சொல்லாடலில் இருக்கும் வெளிப்படைத்தன்மையே…இதையே சுதந்திரம் என்று அவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் நினைத்திருப்பது தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு சாபக்கேடு. மனப்பாடம் செய்யப்பட்ட பாரதியின் வரிகளை மேடையில் முழுங்குதல் தவிர்த்து பெண்ணியம் பற்றிய‌ இவர்களின் ஆழமும் ஞானமும் என்ன? பெண்ணுரிமை கோஷம் போடும் எத்தனை பேர் ஆவுடையக்காள் படித்திருப்பார்கள்? அல்லது அப்பெயரையேனும் கேள்விப்பட்டிருப்பார்களா? இவர்களின் “விடுதலை” பற்றிய புரிதல் அத்தனை சிறிது. சிறுமையும் உடையது.

பெண்ணியம் பேசுவோரின் அபத்தம் நிறைந்த இரட்டைத் தன்மை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது…! இன்று வாசனைத் திரவிய விளம்பரங்களில் எல்லாம், முன்பின் தெரியாத ஆண் அடித்துக் கொள்ளும் திரவியங்கள் அவனின் காலர் பிடித்து பெண்களை கொஞ்ச வைத்து ஆணின் பின் செல்ல வைக்கும் என்று காட்டப்படுகின்றனவே…பெண்ணியவாதிகள் கம் என்று இருக்கின்றீரே…? நம் பெண்கள் அத்தனை அற்ப சலனம் கொண்டவர்கள் என்று நினைக்கின்றீர்களோ? ஒரு பெண் தன்னுடன் இருக்கும் ஆணை தன் அப்பாவிடம் இருந்து மறைக்க ஒரு நாலாயிரம் ரூபாய் போன் மாடலைக் காட்டினால் போதும் என்று நினைக்கிறார் ஒரு விளம்பரத்தில். அப்பா பெண் உறவு அத்தனை மலிவானது என்று மகள் நினைப்பாள் என்று  நினைத்துத்தான் பெண் விடுதலை பேசும் வீரமங்கையர்கள் இவற்றிற்கு வாய் திறவாமல் உள்ளீரோ? இதற்கு நேர் மாறாக, ஒரு நகை விளம்பரத்தில் “திருமண வயதில் பெண் இருந்தால் டென்ஷன் தான்” என்று அப்பா சொல்லி விட்டார் என்பதற்காக போராடுகிறீர்களே…நீங்கள் என்னதான் சிந்திக்கிறீர்கள்? உங்களைப் போலவே பொறுப்பின்றி இருந்தால் எதற்கு டென்ஷன் என்று யோசிக்கச் சொல்கிறீர்களோ? ஓ…புரிகிறது. உங்களுக்கு உடல் பாகங்களை குறிக்கும் சொல் பயன்படுத்தினால் மட்டும் தான் பெண்ணுரிமை சார்ந்த ரத்தக் கொதிப்பு ஏற்படும் போலும். வேறுவித இழிவுகள் அனைத்தும் சரியோ? உடல் குறித்த சொற்பிரயோகம் அசிங்கம் எனின் உணர்வுகள் குறித்த மலின எண்ணங்கள் அதனினும் அசிங்கம் என்ற அடிப்படை புரிதல் கூட உங்களுக்கு இல்லையா?

சரி, உங்களின் சொல் சார்ந்த கொதிப்பேனும் முழுமையாக இருக்கிறதா? சமீப வருடங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் நிரம்பிய பேருந்திலோ அல்லது அவர்கள் கூட்டம் இருக்கும் இடத்திலோ இருக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு வாய்த்ததுண்டா? அவர்களில் நிறைய பேர் தங்கள் கோபங்களை காட்ட இப்போதெல்லாம் நான்கெழுத்து ஆங்கிய வார்த்தையை சர்வசாதாரணமாக பயண்படுத்துவது உங்களுக்கு தெரியுமா? இதற்கு நீங்கள் என்ன யோசனையை முன் வைக்கிறீர்கள்? அல்லது,
ஆங்கிலத்தில் எதை சொன்னாலும் நாவும் மனதும் மணக்கும்  அதே சொல்லை தமிழில் சொன்னால் மட்டுமே மனம் கொதிக்கும் என்ற புதிய கோட்பாடு எதையேனும் உருவாக்கி வைத்திருக்கிறீர்களா?

ஒரு அரசு பள்ளியில், வகுப்பறையிலேயே மாணவிகள் மது அருந்தும் அவலம் கண்டு தமிழ் சமூகமே பதைபதைத்து நின்றபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒரு வேளை மதுக்கடையில் மதுவாங்கும் புதுமைப்பெண்ணாய் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமீபத்திய படத்தில் கதாநாயகி செய்த புரட்சி பார்த்து மகிழ்ந்தீரோ? யார் கண்டது? “எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்வது எங்கள் உரிமை” என்று புதியதொரு பெண்ணிய சிந்தாந்தம் நீங்கள் உருவாக்கினால் கூட ஆச்சரியபட வேண்டியதில்லை.

சரி, நீங்கள் பெண்களை எதிர்க்க மாட்டீர்கள். பாரபட்சம் உடையவர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.. ஆண்களையேனும் சரியாக எதிர்க்கிறீர்களா? சமீபத்தில் வந்த குப்பைதான் திரையுலகம் உங்கள் மீது வீசும் முதல் குப்பையோ?  நம் சமூகத்தில் எப்போதும் குப்பைகள் தானே முன்னிறுத்தப்படுகின்றன்? பீப் சாங் குப்பையை கொட்டியவர் தவிர மற்ற அனைத்து கதாநாயகர்களும் நாம் புத்தனாவது எப்படி என்றா படங்களில் படிப்பினை தருகின்றனர்? பொறுக்கியாவது எப்படி என்றல்லவா சொல்லித் தருகின்றனர்… படங்கள் மட்டுமல்ல…கலைகளின் அனைத்து வடிவங்களிலும் எளிதில் விற்பனை ஆகிறது. முன்னிறுத்தப்படுகிறது. அவை பயணிக்கும் ஊடகங்கள் வழியே நம் வீட்டின் அறைகள் எங்கும் பரவி நம் மனதுக்குள் விரவி நாற்றம் அடிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் நாம் உள்ளோம். ஆணும் பெண்ணும் அவரவர் முதிர்ச்சியின் வழி இக்குப்பைகளை விலக்கி பயணித்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய சந்தன மணத்தின் சாயல் தெரிகிறது. இதுதான் இன்றைய லட்சணம்…மூக்கை பிடித்தபடி குப்பைகளை கடந்தால் மட்டுமே அத்தகைய சந்தனத்தை நம்மால் கண்டடைய முடிகிறது.  நம் இலக்கு எதுவோ அதில்தான் நம் பாதையும் இருக்கும் கவனமும் இருக்கும். பெண்ணுரிமை வாதிகளின் இலக்கும் கவனமும் என்ன? குப்பையின் நாற்றம் அறிதலா? அல்லது அது தவிர்த்து சந்தன மணம் தேடுதலா?

அத்தனை சேனல்களிலும் ஆளுக்கொன்றாய் நடத்தும் பாட்டுப்போட்டிகளில் “உன் வயசுக்கு இந்த பாட்டு புரியுமா? ஆனாலும் என்ன ஒரு எக்ஸ்பிரஷன்” என்று வயதுக்கு ஒவ்வாத பாடல்களை பாராட்டி பிஞ்சுகளின் மனதில் நஞ்சை வளர்க்கும் பைத்தியக்காரத்தனங்கள் உங்கள் பார்வையில் படுவதில்லையோ? அருவருக்கத்தக்க அங்க அசைவுகளை கால நேரமின்றி காணொளிகள் காண்பித்த வண்ணம் இருக்கின்றனவே… இவை உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையோ? தெரியாது. ஏனென்றால் உங்கள் சிந்தனை பக்குவமும் பெண்ணுரிமை தத்துவமும் அத்தகையது. பெண், பெண்மை, பெண்ணுரிமை என்னும் மூன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய இழைகளை விட, அவற்றிற்கு இன்றைய பெண்ணுரிமை இயக்கங்களும் பெண் விடுதலை பேசுவோரும் உருவாக்கிய பொருட் பிழைகளே அதிகம். எனவே தான் ஆடை குறைப்பும் பொறுப்புத் துறப்பும் பெண் விடுதலைக்கான அடையாளம் என ஆகிப்போயின.

சமீபத்தில் ஒரு மந்திரி “பெண்கள் நள்ளிரவில் வெளியில் தனியே செல்வதை தவிர்க்கலாம்” என்றார். அவ்வளவு தான்…தொலைந்தார் மந்திரி. எப்படி சொல்லப் போச்சு என்று எத்தனை கூப்பாடுகள்…! மந்திரி மட்டுமல்ல… அனுபவம் மற்றும் சமூகவியல் தரும் முதிர்ச்சி பெற்ற ஆண்களும் பெண்களும் இதையே தான் தாங்கள் அக்கறை கொண்ட பெண்களிடம் சொல்வார்கள். ஆனால் உங்கள் யோசனை எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவர் உங்களிடம் “இருட்டில் புதரில் நடக்காதீர்கள். விஷப் பூச்சிகள் இருக்கும்” என்று சொன்னால், “என்ன தைரியம் இருந்தால் புதரில் நடக்காதீர்கள் என்று சொல்வீர்கள்? விஷப் பூச்சிகள் எங்களை எப்படி கடிக்கலாம்? விஷப்பூச்சிகளிடம் போய் கடிக்காதீர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு எங்களை தடுக்கிறீர்களே…என்ன ஒரு ஆதிக்க மனோபாவம்” என்று கேட்பது போலிருக்கிறது…

நம்மூரில் நடக்கும் குப்பை சார்ந்த கூத்துக்கள் சொல்லி மாளுமா? பெயர் பெற்ற புத்தக நிறுவனம் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு ஒரு “புரட்சி” நாவல் வெளியிடுகிறது. அதற்கு “முன் வெளியீட்டு” திட்டம் வேறு. பெண்களை இத்தனை கேவலமாக எழுத இயலுமா என்று திகட்ட வைக்கும் எழுத்தாளருக்கு இப்படி ஒரு வெளியீட்டுத் திட்டம்! அவர் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து சிறப்புரை வேறு ஆற்றுகிறார். பெண்கள் அவரிடம் கையெழுத்திட்ட பிரதி வாங்க வரிசையில் நிற்கின்றனர். எங்கே போயினர் நம் போராட்ட மாந்தர்கள்? இத்துடன் முடியவில்லை தமாஷ். சமீபத்திய குப்பை குறித்து வீராவேசம் கொண்டு கொதிக்கிறார் அதே எழுத்தாளர். ஆஹா…எங்கும் எவரிலும் நீக்கமற நிறைந்த போலித்தனத்தை விட வேறென்ன உண்டு இச்சமூகத்தின் பாசாங்கு நிறைந்த போராட்டங்களில்…

இக்குப்பையை கிளறுவதை பொழுது போக்கு போல் செய்யும் பொறுப்பற்ற போராட்டக் குழுக்களுக்கு அதே சமயத்தில் வெளிவந்த நிர்பையா வழக்கில் விடுதலையான குற்றவாளி குறித்த சிந்தனை எழவே இல்லையா? அவ்வழக்கில் வெளிப்பட்ட சட்டத்தின் இயலாமை சகித்துக் கொள்ளக்கூடியதா? அதை மாற்றுவதற்கான போராட்டம் வேண்டாமா? ஒட்டு மொத்த பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சட்டத்தை விட ஒரு தனி நபர் பொதுவெளியில் வீசிய குப்பை பெரிதாகத் தெரிந்தால் சிந்தனையை ஒழுங்கு செய்ய வேண்டிய நேரம் என்று பொருள். பெண்ணிய போர்வையில் வரும் பொறுப்பற்ற போதனைகளினால் குடும்ப உறவுகளில் எத்தனை சிக்கல்கள் சமீபகாலங்களில் தோன்றியிருக்கின்றன? எப்படி ஆண்டுக்கு ஆண்டு விவகாரத்து வழக்குகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன? இதைப்பற்றியெல்லாம் நீங்கள் என்றேனும் யோசிப்பது உண்டா?

காலவிரயம் மட்டுமே தரும் குப்பைகளுக்கு எதிரான போராட்டங்களை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக சிந்திக்கலாமே…?

நம் சமூகத்தின் பெரும்பான்மை ஆண்களும் பெண்களும் குப்பைகள் எங்கு வைக்கப்பட வேண்டும் என்பதை நன்கு அறிவர். அதற்கு “பெண்ணியம்” என்ற லேபிளும், பக்குவமின்மையும், யதார்த்தம் மீறிய போலித்தனமும் தேவையில்லை. புரட்சிக் கொடி பிடிக்காது, போராட்டம் தேவையின்றி அக‌ விடுதலை நோக்கி நடைபயிலும் ஏராளமான பெண்களும், அவர்களை உள்ளார்ந்து மதித்து நடக்கும் ஆண்களுமாய் வீடு தோறும் மாற்றத்தின் விதை வீரியத்துடன் வளர்ந்து வருகிறது. அதன் வழி, பெண்ணியம் என்பதன் பேசு பொருளின் அடர்த்தி மிகும். அதில் “பீப்” வகையறாக்கள் எத்தகைய கவனமும் பெறாமல் தானே குப்பைத் தொட்டியை சென்றடையும்.

Series Navigationதொலைந்து போன கடிதம்இலை மறை காய் மறை