பீமாதாயி

Spread the love

என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல்
ஆணா பெண்ணாவென தெரியவில்லை.
என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை
முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும்
தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும்
மிகவும் தணிந்தகுரலில் சொல்லி
அதை கொடுத்துதவ வேண்டியது.
அந்த ஓலைச் சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த
பீமாதாயிடமிருந்து தெரியவேண்டிய
கதைகள் மிச்சமிருப்பதாகவும்
என்னிடமிருந்து பீமாதாயை மீட்க உத்தேசித்தே
இதை கேட்பதாகவும் சற்று சூடேறிய குரலில்
திரும்பவும் சொன்னது அந்தகுரல்.
எனது பரண்களில் கேட்பாரற்று போட்டிருந்த
அந்த ஓலைச் சுவடி கட்டுகளிலிருந்து
அர்த்த ஜாமங்களில் எழுந்துவந்த
ஒப்பாரி அழுகையைக் கேட்டுப் பதறிப் போனதை
முன்பொருநாள் சொன்னபோது
எனக்கு பேய்பிடித்துவிட்டதாக சந்தேகித்தார்கள்.
நான் இல்லாமல் போவதில்
எல்லோருக்கும் சந்தோசம்.
பீமாதாயின் விசித்திர உலகம்
என்னை வெகுவாய் ஈர்த்தது.
தன் முலைக்காம்பை கிள்ளி வீசினாள்
கடற்பறவையொன்று
அலைகளில் மூழ்கிச் சென்றது.
எங்கிருந்தோ வந்த வனதேவதை
ஓலைச் சுவடியில் வாழ்ந்த பீமாதாயோடு
என்னையும் சிறகில் சுமந்து
தன் ஆதிமாய உலகத்திற்கு
கடத்திக் கொண்டு சென்றபோது
இருள்கவியத் தொடங்கியிருந்தது.

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )