பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார்.
நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு
அவருக்கிருந்தது.
முன்னூறு வருடங்களுக்கு முன்பு
தன்னோடு விளையாடிய குழந்தைகளும்
விளையாடிய இடமும்
உருத்தெரியாமல் போயிருந்தது.
உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு
பழக்குலைகளை அதன்மேல் முளைக்கச் செய்த
அதிசயத்தை
தன்னால் இன்னமும்
நிகழ்த்தமுடியுமென நம்பியிருந்தார்.
ஒரு சுற்று நடந்துவந்தபோது
தன் பெயரில் தர்காவும்
பிரமாண்ட கட்டிடமும் எழும்பியிருந்த போதும் கூட
பரவசப்பட்டதாய் தெரியவில்லை.
தன் வாசல் முற்றத்தில் உட்கார்ந்திருக்கும்
தப்ஸ் கொட்டும் பக்கிர்களையும்
முஸாபர்களையும் எதிரில் சந்தித்தபோது
மனசு விம்மி வெடித்து சிதறியது.
தானும் அவர்களில் ஒருவராய்
வரிசையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.
போவோர் வருவோர்
பிச்சை போட்டு சென்றனர்.
தன்னைப் பற்றி எதுவும் தெரிந்திராத
பச்சைப் போர்வைப் போர்த்திய பக்கிர் ஒருவர்
பீரப்பாவிற்கு
ஒரு துண்டு பீடி கொடுத்தபோது
துடி துடித்துப் போனார்.
மதுவின் நெடியும் துரத்தியது.
மதுமஸ்து அருந்தினவர் பற்றி
தான் எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதியது
ஞாபகத்திற்கு வந்தது.
சக்தியாய் சிவனாயிந்த தாரணி தன்னிலாக்கியென
அல்லாஹ்வை பேசிய கவிதையில்
பொருள்குற்றம் உள்ளதென
தனக்கு ஏதும் பத்வா த்ந்துவிடுவார்களோவென்ற
அச்சத்தில் உறைந்திருந்தார் பீரப்பா.
நிரந்தர முகவரி எதுவுமில்லாததால்
பீரப்பாவிற்கு வக்கில் நோட்டீஸ் அனுப்ப
யாராலும் முடியவில்லை.
ஞானப்புகழ்ச்சி மஜ்லிசுக்குள் நுழைய முயன்ற
பீரப்பாவை வெளியேபிடித்து நிறுத்தி
காபிருக்கு அனுமதியில்லை என்றார்கள்.
உலமாசபை கூடியது.
நீண்டதாடியை நீவியவாறு
அபுஅபுஆலிம் பேசத் தொடங்கினார்.
காபிராகிவிட்ட இவர்
கலிமா சொன்னால்தான் முஸ்லிம்
அதிர்ந்து போனார் பீரப்பா.
இறைச்சி வெட்டிக் கொண்டிருந்த
அமீது காக்காவிடமிருந்து
கசாப்புக் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு
வேகமாக நடக்கத் தொடங்கினார் பீரப்பா.
அவரது நடையில் வெறித்தனம் தெரிந்தது.
———

பீரப்பா – 18 ம் நூற்றாண்டைச் சார்ந்த சூபிஞானி.
தமிழில் பதினெண்ணாயிரம் பாடல்கள் எழுதியுள்ளார்

Series Navigationதேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !‘காதல் இரவொன்றிற்க்காக