
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
அ டேயப்பா …. படிக்கிறதுக்கு ஆவலா இருக்குறீங்க போலிருக்கே…ஒருத்தருக்குத் தோல்வி மேல் தோல்வி வந்தா அவரு என்னதாங்க செய்வாரு?..ஒன்னு தோல்வியத் தாங்க முடியாம இறந்துடுவாரு…அல்லது அவருக்குப் பைத்தியந்தான் பிடிக்கும்…ஆனால் சிலபேரு அதை சவாலா எடுத்துக்கிட்டு சளைக்காது முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.. அப்படிப்பட்டவங்க சிலபேருதான் உலகத்துல இருப்பாங்க..அந்த வரிசையில முதல்ல இருப்பவருதாங்க இப்ப நான் சொல்லப் போற புகழ் பெற்ற ஏழை…என்ன ஒங்க நினைவுக்கு அவரு வந்துட்டாரா..ம்..ம்..ம்..அவருதான் ஆபிரகாம் லிங்கன்…
1809 ஆம் ஆண்டில் பிப்ரவரி 12-ஆம் நாள் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் தாமஸ் லிங்கன், நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks) ஆகிய இருவருக்கும் மகனாக ஆபிரகாம் லிங்கன்ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாரு.ஆபிரகாம் லிங்கனுடைய தந்தையார் செருப்புத் தைக்கும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் தச்சு வேலையும் செய்து குடும்பத்தை நடத்தினார். வருவாய் போததால் ஆபிரகாம் லிங்கனுடைய தந்தையார் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டார். தந்தையாருக்கு விறகு வெட்டுவதில் உதவியாக இருந்தார் லிங்கன். தாயார் நான்சி லிங்கனுக்குப் பலவிதமான கதைகளைக் கூறினார். சிறுவயதில் கதைகள் கேட்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தாரு லிங்கன்.
அவரு டைய அம்மா நிறையக் கதைகளை லிங்கனுக்குச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. லிங்கனும் ரொம்ப விருப்பத்தோடு கதையைக் கேட்பாரு. அதனால அவருக்கு அவருடைய அம்மா மேல அதீதமான அன்பு ஏற்பட்டது. அதிக நேரம் அம்மாவுடனேயே லிங்கன் இருந்தார். அருகில் பள்ளி இல்லாததால் ஒன்பது மைல் தூரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்து சென்று லிங்கன் படித்தார். வறுமையிருந்தாலும் வாழ்க்கை சுகமாப் போய்க் கொண்டிருந்தது. நான்சியும் தனது மகன் லிங்கன் மீது அதிகமான அன்பக் காட்டினாங்க.
கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள லிங்கனுக்குக் கதைகளைப் படித்துக் காட்டியும், கூறியும் புத்தக வாசிப்பில் லிங்கனின் ஆர்வத்தை லிங்கனின் தாயார் தூண்டினார். மேலும்லிங்கனை எப்போதும் எந்நிலையிலும் அன்புடன் வாரித்தழுவிக் கொள்வார். இப்படி இருந்த லிங்கனுடைய வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது. ஆம் லிங்கனுடைய அம்மா நான்சி இறந்தார். துரதிர்ஷ்டவசமாக 1818-ஆம் ஆண்டில் Milk Sickness என அழைக்கப்பட ஒரு வியாதியால் லிங்கனின் அம்மா மரணத்தை தழுவிக் கொள்ள நேர்ந்தது.
மரணப்படுக்கையில் நான்சியின் அருகில் விலகாது இருந்த லிங்கனுக்கு அவரது தாயார், “மகனே படிப்புத்தான் உலகில் உன்னை உயர்த்தும். அதனால் எவ்வாறேனும் நீ படித்து முன்னேறு. நீ படிக்கும் படிப்பு உலகின் உச்சிக்கு உன்னைக் கொண்டு செல்லப் போகிறது. வாழ்வில் நிச்சயம் நீ உயர்ந்த நிலையை அடைவாய். இதைஎப்போதும் நினைவில் வைத்துக்கொள்” என்று கூறிய இறுதி வார்த்தைகள் லிங்கனின் மரணம்வரை அவர்தன் வாழ்வின் மீது கொண்டிருந்த பிடிப்பை இழக்காதிருக்க உதவின. அன்பு கொண்ட ஒருவரின் மரணம்வாழ்வின் மீதான பிடிப்பை அதிகரிக்க செய்யும். அல்லது அதன் மீதான பிடியை நழுவச் செய்யும். ஆனால் லிங்கன் தன் தாயின் இறுதி வார்த்தைகளுக்காக வாழ்ந்து செல்பவராக இருந்தார்.லிங்கன் எனும் ஆளுமையின் உருவாக்கத்தில் அவரது தாய் வகித்த பங்கு அளப்பரியது.
தனது தாயை நேசித்த அளவிற்குத் தனது தந்தையை லிங்கன் நேசிக்கவில்லை. இதற்குக் காரணம் தனது தந்தை சரியான சிகிச்சை கொடுக்காது தனது தாயை இறக்குமாறு கைவிட்டுவிட்டார் என்று லிங்கன் கருதினார். போதிய வருவாய் இல்லாததால் லிங்கனின் தந்தையால் தனது மனைவியை நோயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதனை நன்கு உணர்ந்து கொண்ட லிங்கன் தனது தாயாரைக் காப்பாற்றாத தந்தையை வெறுத்தார். காலம், லிங்கன் தன் தந்தை மீது கொண்டிருந்த மெலிதான வெறுப்பை அதிகரிக்க அதிகவாய்ப்புக்களைக் கொடுத்தது. பின்னாளில் தன் தந்தை தாமஸின் இறுதிச்சடங்கில்கூட லிங்கன் பங்கேற்கவில்லை எனுமளவிற்கு லிங்கனிற்கு அவரது தந்தையார் முக்கியமற்றவராகமாறிப்போயிருந்தார்.
வறுமையின் காரணமாக லிங்கன் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. லிங்கன் பள்ளி சென்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தைக்கூட தாண்டாது என்பதுகுறிப்பிடத்தக்கது.
நான்சியின் மரணத்தைத் தொடர்ந்து லிங்கனின் தந்தையார் சாரா எனும் பெண்மணியை மறுமணம் செய்து கொண்டார். லிங்கனின் சிற்றன்னையான சாரா லிங்கனைத் தன்சொந்தப் பிள்ளைகளைவிட மிக அதிகமாக நேசித்துப் பரிவுகாட்டினார். வாசிப்பின்மீது லிங்கனுக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்த சாரா அதனை ஊக்குவிக்க தவறியதேயில்லை.பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்த கதைகள் லிங்கனை பெரிதும் கவர்ந்தன. வீட்டின் வறுமையால் படிப்பதற்கு மிகவும் துன்புற்ற லிங்கன், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார்.அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.
ஆபிரகாம் லிங்கனுக்குப் படிப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. அவர் இருந்த இடத்திலிருந்து 13 மைல்கள் தூரத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அங்கிருந்த பாதிரியாரிடம் ராபின்சன் குருசோ குறித்த கதைப் புத்தகம் ஒன்றிருந்தது. வாரத்தின் கடைசி நாளில் வழிபாட்டிற்குச் செல்லும்போது லிங்கன் அவரிடம் இருந்த புத்தகத்தை ஆவலுடன் பார்ப்பார். சிறுவனான லிங்கன் தன்னிடம் இருந்த புத்தகத்தையே பார்ப்பதைப் பார்த்த பாதிரியார், “இதனை நீ படிக்க வேண்டுமா?” என்று கேட்டார். தயங்கித் தயங்கி லிங்கன் தன் ஆசையை வெளிப்படுத்தினார். பாதிரியாரும் உடனே அந்தப் புத்தகத்தை லிங்கனிடம் கொடுத்துவிட்டு புத்தகத்தைப் படித்துவிட்டு இன்று மாலைக்குள் தன்னிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார்.
லிங்கனும் அதனை ஏற்றுக் கொண்டு ராபின்சன் குருசோ குறித்த புத்தகத்தை வாங்கிக் கோண்டு வந்து படித்தார். மாலைக்குள் அந்தப் புத்தகத்தை அவரால் படிக்க முடியவில்லை. ஆனால் பாதிரியார் கேட்ட நேரத்திற்குள் அதனை அவரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்று கருதி ஓட்டமும் நடையுமாக 13 மைல்கள் ஓடிச் சென்று அப்புத்தகத்தைப் பாதிரியாரிடம் கொடுத்தார். சிறுவனின் நேர்மையைக் கண்ட அப்பாதிரியார் மேலும் ஒருவாரம் அப்புத்தகத்தைப் படித்துவிட்டுத் திரும்பத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிப் புத்தகத்தை லிங்கனிடம் படிப்பதற்குக் கொடுத்தார். லிங்கனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. வீட்டிற்கு எடுத்து வந்த புத்தகத்தை ஒரு வரிகூட விடாது படித்து மகிழ்ந்தார். ஒருவாரம் முடியும் நிலையில் 13 மைல்கள் நடந்து வந்து புத்தகத்தைத் திரும்பவும் பாதிரியாரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் படிக்கும் ஆர்வத்தையும் நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கண்டு வியந்த பாதிரியார் அப்புத்தகத்தை லிங்கனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார்.
லிங்கனுக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அப்புத்தகத்தை எடுத்துப் படித்துத் துன்பத்தைப் போக்கிக் கொள்வார். தன்னைச் செதுக்கி உருவாக்கிய நூலாக ராபின்சன் குருசோ நூலை ஆபிரகாம் லிங்கன் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.
தன் தந்தையைப் போலவே கதைகள் கூறுவதில் சிறப்பான ஆற்றல் கொண்டவராக லிங்கன் உருவாகத் தொடங்கியது இக்காலப்பகுதியில்தான். அதேபோல் பப்டிஸ் மதப்பிரிவைசேர்ந்த தாமஸ் லிங்கன், அமெரிக்க மண்ணில் புழக்கத்திலிருந்த அடிமைமுறை குறித்து எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். அதை தீமையின் ஒரு வடிவாகவே அவர் கருதினார்.லிங்கன் தன் தந்தையிடமிருந்து மேற்குறிப்பிட்ட இரண்டு பண்புகளையும் உள்வாங்கிக் கொண்டார். இதைத் தவிர்த்து தன் தந்தைக்கு நேர் எதிரான உருவமாகவே உருமாறினார் லிங்கன்.
ஒருமுறை தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் நாம் அனைவரும் சொர்க்கம் செல்பதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்று போதனை செய்தார். அவர்தன்உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். அங்கிருந்த லிங்கன் மட்டும் கைதூக்கவில்லை.
உடனே அந்த பாதிரியார் லிங்கனிடம் தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் தொன் செல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு லிங்கன் சொர்க்கத்தையும்விரும்பவில்லை. நரகத்தையும் விரும்பவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் இந்த சிறிய வயதில் உன் மனம்கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா? என்று வெறுப்பாக லிங்கனைப் பார்த்துக் கூறினார். அந்த சிறுவனோ அமைதியாக இங்கே கறுப்பு இன மக்களை நாயைவிடக் கேவலமாகக்கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியான இருக்கும் என்று கூறினான். அடிமைத்தலையை அறுக்கத் துடிக்கும் லிங்கனின் உயர்ந்த உள்ளம் பிற்காலத்தில் அதனை சாதனையாக்கிக் காட்டியது.
ஒருமுறை நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார்.அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும்ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு மனம் பதைபதைத்தார். தான் என்றாவது ஒருநாள் இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு முடிவுகட்டுவதாக மனதில் உறுதி எடுத்துக் கொண்டார்.
லிங்கனின் தந்தை 1830-ஆம் ஆண்டுகளில் இலினாய்ஸிற்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். தன் தந்தையுடன் இலினாய்ஸில் மேலும் இருஆண்டுகள் வாழ்ந்த லிங்கன், தனது இருபத்தி இரண்டாவது வயதில் தன் வழியில் தனித்து சென்று வாழத் தொடங்கினார். தான் ஏற்றுக் கொண்ட வேலைகளில்கவனமுடன் உழைக்கும் லிங்கனது திறமையை கண்டு வியந்த டெண்டன் ஒஃபுட் எனும் வியாபாரி நீயூ சலேம் எனும் குடியேற்றத்தில் அவர் உருவாக்கும்பல்பொருள் அங்காடியில் லிங்கனை பணியாளாகப் பணிக்கு அமர்த்திக் கொண்டார். இங்குதான் லிங்கனுக்கு வில்லியம் மெண்டெர் கிரஹாம் என்ற பள்ளிஆசிரியரின் நட்பு கிடைத்தது. பிற்காலத்தில் மிகச் சிறந்த ஒரு பேச்சாளராக லிங்கன் திகழ்வதற்குரிய தொடக்ககட்ட பணிகளுக்கு மெண்டெர் கிரஹாம் அதிகபங்களிப்பு செய்திருக்கிறார் என்பது நோக்கத்தக்கது.
அடிமைமுறைக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்துமூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து கொண்டு தலைவனாகப் பணியாற்றியது அவருக்கு புதியதோர்பாதையை காட்டியது.
லிங்கன் 1833-ஆம் ஆண்டில் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அப்பெண்மணிநோய்வாய்ப்பட்டு இறந்தார். “இந்த உலகைப் பாழாக்கும் அனைத்து இருள்மைகளுக்கும் எதிரான ஒரு மருந்தாக அவள் இருந்தாள்” என்று தன் காதலியான ஆண் ருட்லெட்ஜ் பற்றி லிங்கன் தனது நாட்குறிப்பில் குறித்திருப்பது அவரது ஆழமான காதலைப் புலப்படுத்துவதாக உள்ளது.
லிங்கனின் வாழ்க்கையில் இரண்டாவது இடியாக இது அமைந்தது. தனது காதல் வாழ்க்கை முழுமை பெறவில்லையே என்று மனம் நொந்தார். தாய், காதலி ஆகிய இருவரின் அன்பையும் தன்னிடமிருந்து பறித்த விதியை நினைத்து நொந்து கொண்ட லிங்கன் அதிலிருந்து மீள முடியாது துடித்தார். இருப்பினும் தனது தாய் இறக்கும்போது தன்னிடம் கூறிய வார்த்தைகள் அவரது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்ததால் காதலி இறந்த துயரத்திலிருந்து மீண்டு வந்தார் லிங்கன். காதலி இறந்த பின் 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் (1842) மேரி டாட்(mary todd )எனும் பெண்ணைமணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. மேரிடாட்டினுடனான அவரது மண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. இருப்பினும் அதனை லிங்கன் பொறுத்துக் கொண்டார்.
லிங்கன் அமைதியானவர். ஆனால் இவரது மனைவியோ இவருடன் எப்போதும் முரண்பட்டுக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் மனதைப் புண்படுத்திக் கொண்டும் இருந்தாள். இவரது இல்லற வாழ்வு கசப்பானதாக இருந்தது. இருந்தும் அவற்றை எல்லாம் லிங்கன் சகித்துக் கொண்டார். ஒரு நாள் லிங்கன் ஆழ்ந்த கவனமுடன் ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி அவரை அழைத்தார். வேலையில் மூழ்கி இருந்ததால் அதனைக் கவனிக்காது இருந்துவிட்டார் லிங்கன். மேரிடாட்டிற்குக் கோபம் தலைக்கேறியது. கொதிக்கின்ற சூப்புக் கோப்பையுடன் வெளியில் வந்த லிங்கனின் மனைவி சுடுகின்ற சூப்பினை வேலை பார்த்துக் கொண்டிருந்த லிங்கனின் முகத்தில் ஊற்றிவிட்டாள்.
தி கைத்துவிட்ட லிங்கன் அதனை அமைதியாகப் பொறுத்துக் கொண்டார். அடுத்த வினாடியில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போன்று வேலையைத் தொடர்ந்தார். இதைப் போன்று பல நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். தனது குடும்பத்தை அவர் வெறுக்கவில்லை மாறாக தனது மனைவியிடமும் குழந்தைகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார்.
லிங்கனின் கடிதம்
ஆபிரகாம் லிங்கன் தன் மகனை பள்ளியில் சேர்க்கும் போது ஆசிரியரிடம் கொடுத்த கடிதத்தில்,
அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால்,பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.
பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் எனப்புரியவையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும்அவனுக்குகற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின்வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.
ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றைமட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.
சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும்அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...
இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.
என்று எழுதிக் கொடுத்தார். இக்கடிதத்தில் இடம் பெற்ற வரிகள் புகழ் பெற்ற வரிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விகளால் துவளாத உள்ளம்
1816-ஆம் ஆண்டில் குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். 1818-ஆம் ஆண்டில் அவரது தாய் மரணமடைதல். 1831-ஆம் ஆண்டில் அவரது தொழில் தோல்வி. 1832-ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் தோல்வி. 1832-ஆம் ஆண்டில் அவர் பார்த்த சட்டமன்றப் பணி பறிக்கப்பட்டது. 1833-ஆம் ஆண்டில் தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக 17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தல். 1834-ஆம் ஆண்டில் மறுபடியும் சட்டசபைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைதல், 1835-ஆம் ஆண்டில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் இறத்தல், 1836-ஆம் ஆண்டில் லிங்கன் நரம்புத் தளர்சியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படல், 1838-ஆம் ஆண்டில் சபாநாயகர் தேர்தலில் தோல்வி, 1843-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி 1848-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி, 1849-ஆம் ஆண்டில் சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு 1854-ஆம் ஆண்டில் செனட் தேர்தலில் தோல்வி1856-ஆம் ஆண்டில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைபாக வாக்குச் சேகரித்துத் தோல்வி எனப் பல்வேறு விதமான தோல்விகளைச் சந்தித்த ஆபிரகாம் லிங்கன் அவற்றை எல்லாம் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றிப் படிக்கற்களாக்கினார்.
வள்ளுவரின்,
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாத வர்”
“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றி
தாளாது உஞற்று பவர்”
என்ற திருக்குறள்களுக்கு ஏற்ப ஆபிரகாம் லிங்கன் முயன்று உழைத்தார். தோல்விகளால் துவளாத உள்ளம் கொண்டவராக விளங்கினார். மேற்குறிப்பிட்டுள்ள திருக்குறள்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் ஆபிரகாம் லிங்கன்.
லிங்கனின் வெற்றிப் பயணம்
ஆபிரகாம் லிங்கனுடைய உள்ளத்தில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எண்ணம் மேலோங்கிய வண்ணம் இருந்தது. அதற்கு அரசியலில் ஈடுபடுவதே சிறந்த வழி என்று உணர்ந்தார் லிங்கன். 1834 -ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப்பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். இவ்வெற்றியிலிருந்து லிங்கனின் வெற்றிப் பயணம் தொடங்கியது.
அமெரிக்கக் குடியரசின் தொடக்க காலத்தில் நிலப்பரப்பின் பரந்ததன்மை அடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பற்றியபிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பியது. தெற்கு பண்ணை வகுப்பு அதன் சலுகை பெற்ற அரசியல் நிலையை உறுதியுடன் பாதுகாக்கப் போராடும் வகையில் புதியஅடிமைப் பகுதிகள் (பிராந்தியங்கள்) குறைந்தபட்ச எண்ணிக்கையிலும் மற்றும் வாக்களிக்கும் வலிமையிலும் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒப்பாகஇருக்குமாறு பார்த்துக் கொண்டனர். தெற்கில் இருந்த அதிகரித்தளவில் சிதைவடைந்த உயரடுக்கின் சில பிரிவுகள் கரிபியன் தீவுகள் வரை படர்ந்திருக்கக்கூடிய ஒருஅடிமைப் பேரரசு பற்றிய கற்பனைகளைக் கூட கொண்டிருந்தன.
1846-ஆம் ஆண்டு மெக்சிகோ மீது அமெரிக்க நடத்திய ஆத்திரமூட்டும் போர், டெக்ஸாஸில் இருந்து பசிபிக் பெருங்கடல் வரை பரந்த புதிய பகுதியில் இருக்கும்”அடிமைகளைக் கொண்ட சக்திக்கு” பலன் அளிக்கும் நோக்கத்தை கொண்ட பல நிகழ்வுகளை தொடக்கி வைத்தது. இறுதியில் உள்நாட்டு போருக்கு வழிவகுத்தன.இந்தப் போருக்கு விடையளிக்கும் வகையில்தான் அப்பொழுது இல்லிநோய்சில் தேசிய சட்ட மன்ற உறுப்பினராக இருந்த லிங்கன் தன்னுடைய மிகக் குறிப்பிடத்தக்கஉரைகளில் ஒன்றை நிகழ்த்தினார்; இது ஒரு தவறான “இராணுவப் பெருமை–குருதிப் பெருக்கின் மீது படர்ந்து எழும் அழகிய வானவில்.” என்று அதைக் கண்டித்தார்.
போருக்கான ஜனாதிபதி ஜேம்ஸ் கே. போல்க் கூறிய போலிக்காரணங்கள் அனைத்தையும் லிங்கன் ஆய்விற்கு உட்படுத்தி, அவை தவறு என்றும் போர்அரசியலமைப்பிற்கு பொருந்ததாது என்றும் அம்பலப்படுத்தினார். மெக்சிகோ -அமெரிக்கப் போரை அடுத்து, லிங்கன் காங்கிரஸை வெறுப்புடன் உதறித்தள்ளிவிட்டு,இல்லிநோய்ஸில் உள்ள ஸ்ப்ரிங்பீல்டில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலுக்கு மீண்டும் திரும்பினார்.
1850-ஆம் ஆண்டுகளில் தெற்குப்புற உயரடுக்கானது தன் அரசியல் மேலாதிக்கத்தை அரசாங்க அதிகார நெம்புகோல்களின் மீது பிணைத்து ஜனாதிபதி பதவி,காங்கிரஸ் மற்றும் தலைமை நீதிமன்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வந்தது. இந்த சக்தியை அதன் ஆத்திரமூட்டும் செயல்களாக மாற்றியமைத்து வடக்கில் வாழும் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் சீற்றமுற செய்தது.
1854-ஆம் ஆண்டு கன்சாஸ்-நெப்ரஸ்கா சட்டம் இல்லிநோய்சின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஸ்டீபன் டக்ளஸால் சட்ட மன்றத்தில்கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அடிப்படையில் 1820-ஆம் ஆண்டு மிசூரி சமரசத்தை மாற்றி வடக்கு பகுதியிலும் “மக்கள் இறைமையின்” அடிப்படையில் அடிமைமுறை விரிவாக்கப்பட அனுமதித்தது; இதையொட்டி கன்சாஸ் பகுதியில் அடிமைமுறை எதிர்ப்புப் பெரும்பான்மைக்கும் அடிமை முறை ஆதரவு சக்திகளுக்கும்இடையே மிசூரியில் அண்மைப்புறங்களில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
1857-ஆம் ஆண்டு இழிவான Dred Scott வழக்கு வந்தது; இதில் தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகர் டானி அடிமையாயினும் சுதந்திர மனிதராயினும் ஆதிஇனவழி மக்கள், மக்கள் என்ற முறையிலோ அல்லது குடிமக்கள் என்ற முறையிலோ உரிமையற்றவர்கள் என்றும் காங்கிரசிற்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும்அடிமை முறையை சட்ட விரோதமாக்குவதற்கான அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு அளித்தார்.
கன்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம் லிங்கனை மீண்டும் அரசியல் வாழ்விற்குக் கொண்டுவந்து குடியரசுக் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கு உந்ததுல் கொடுத்தது. 1854-ஆம் ஆண்டில் நிகழ்த்திய Peoria உரையில் லிங்கன் புதிய பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தக்கட்டத்தில் இருந்து, அவருடைய அரசியல் நட்சத்திரம் குடியரசுக் கட்சியுடன் இணைந்து உயர்ந்தது; டிரெட் ஸ்காட் தீர்ப்பிற்குப் பிறகு அதிகரித்தளவில் வடமாநிலங்களின் அடிமை முறைக்கான எதிர்ப்பு மிகவும் உறுதியடைந்தது.
1858-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்காக செனட் வேட்பாளர் நியமனத்தை ஒப்புக் கொண்ட லிங்கன் இல்லிநோய்சில் பெரும் புகழ் பெற்ற விவாதத் தொடர்களைஸ்டீபன் டக்ளசுக்கு எதிராக நடத்தினார். பல ஆயிரக்கணக்கான இல்லிநோய்ஸ் மக்கள் பல நாட்கள் பயணித்து இந்த பல மணிநேர விவாதங்களைக் கேட்டனர்.அடிமைப் பிரச்சினைதான் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக இருந்தது. தெற்கின்பால் சமரசக் கொள்கை வேண்டும் என்று டக்ளஸ் விரும்பினார்; ஆனால்லிங்கன் அடிமை முறை மேலும் விரிவாக்கம் செய்யப்படுவதையும் மற்றும் கன்சாஸ்-நெப்ரஸ்கா சட்டத்தையும் எதிர்த்தார். லிங்கன்-டக்ளஸ் விவாதங்கள் நாடுமுழுவதும் மக்களால் கவனமாகக் கேட்கப்பட்டது.
வரலாறு ஆபிரகாம் லிங்கனை ஈர்த்தது என்பது மட்டுமின்றி வடக்கில் வாழ்ந்த மக்களையும் ஈர்த்தது என்பது நோக்கத்தக்கது. தேர்தலில் அவர் சிறுஎண்ணிக்கையின் அளவு வாக்கெடுப்பில் தோற்றாலும், ஒரு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக லிங்கன் வெளிப்பட்டார்.
1860-ஆம் ஆண்டு பெப்ருவரி மாத இறுதியில் நியூயார்க் நகரத்தில் Cooper Unionஉரை நிகழ்த்தியதுதான் குடியரசுக் கட்சியின் தலைமையை நோக்கி லிங்கன்உயர்வதற்கு காரணமாயிற்று. அந்த உரை டக்ளஸின் கருத்தான மக்கள் இறைமை பற்றிய பயனற்ற தன்மை பற்றி நன்கு கவனத்துடன் ஆராய்ந்து தொகுத்துக்கூறப்பட்ட கருத்துத் தொகுப்பு ஆகும். லிங்கனுடைய அறிவார்ந்த தன்மையின் ஆற்றலை இப்பேச்சு நிரூபணம் செய்தது மட்டும் இல்லாமல் அவருடைய மகத்தானஅரசியல் திறமைகளையும் வெளிப்படுத்தியது. இந்தத் திறன்கள் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களான நியூயார்க்செனட்டர் வில்லியன் சீவர்ட், ஒகையோவின் ஆளுனர் சால்மன் சேஸ் போன்றோரை 1860-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தில்தோற்கடிக்க உதவின.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார். ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து,அதில் ஒல்லியான முகஅமைப்புக் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, ஏற்றுக் கொண்டு அச்சிறுமிக்கு நன்றிகூறி அவள் கூறியவாறே செய்தார்.
1860-ஆம் ஆண்டு நால்வர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் மகத்தான வெற்றி பெற்றார்; ஜனநாயகக் கட்சியின் ஸ்டீபர் டக்ளஸைத்தோற்கடித்தார்; டக்ளஸ் சமரசத்திற்காகக் கொண்டிருந்த கனவுகள் தெற்கு ஜனநாயகவாதி கென்டக்கியின் ஜோன் பிரெக்கென்ரிட்ஜ் விருப்பத்திற்கு ஆதரவாகஅவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே இருந்ததால் சிதைந்து போயின.
எஞ்சியிருந்த விக் கட்சியைச்(Whig Party) சேர்ந்தவர்கள் ஜோன் பெல்லை வேட்பாளராக்கினர். நாட்டின் இருந்த இத்தகைய துருவமுனைப்படுத்தப்பட்டநிலையால் லிங்கன் நியூ ஜெர்சியைத் தவிர அனைத்து வடக்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்றார்; ஆனால் இரு தெற்கு மாநிலங்களைத் தவிர மற்ற இடங்களில்வாக்கெடுப்பில் இருந்து தடைக்கு உட்பட்டார்.
அடிமை முறை ஒழிப்பு
ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862-ஆம் ஆண்டில் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்துஅனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின்தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.
லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலை பிரகடனம்”(emancipation proclamation)ஒன்றை வெளியிட்டார்.
அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்டபோராட்டமாகியது.
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோதொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடுஉள்நாட்டுக் கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து தொடக்க காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக்கலவரங்கள் ஏற்பட்டன.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்துசெல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர்.அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார். உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வைஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராடவேண்டியதாயிற்று.
நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்துமாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865-ஆம் ஆண்டில்அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன்நிறைவேற்றப்பட்டது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணி யராகப் பெறின்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப ஆபிரகாம் லிங்கன் தான் நீண்ட காலமாக எண்ணியதைச் செய்து முடித்தார். அடிமைத் தளையறுத்த ஆபிரகாம் லிங்கனை உலகம் அவரைப் போற்றியது.
ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சி குறித்த விளக்கம்
1863-ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettyburg speech) “விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர். எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அராசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது” எனக்குறிப்பிட்டார்.‘ “மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி” |
|
|
என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தனஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
பொறுமை மிக்க சிறந்த தலைவர்
ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன்மிகச்சிறந்த சான்றாக விளங்கினார்.
லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.
வழியில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப்பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர்.
ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம் லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்தபன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார்.
ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்”என்று கூறியவாறு பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார்.
ஆபிரகாம் லிங்கனின் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….அதைக் கண்டு அனைவருடைய முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன்வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார்.
அப்போது, ”ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.
“இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர். பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன் மூலம் என்மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது. அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப்பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின்காட்சியே என் கண்ணில் தெரியும்.
தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகையசூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”.
ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்!
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒருவர் அவரை அவமதிக்கும் நோக்கில், “சார், உங்கள் ஷீவிற்குநீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?” என்று கேட்டார்.
அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்ட லிங்கன், ” ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? ” என்று திருப்பிக் கேட்டார். கேள்வி கேட்டவர் எதுவும் பேசமுடியாது நாணமுற்று அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின்உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.
யார் தன்னை அவமானப்படுத்திப் பேசினாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்குத் தக்க பதில் அளிக்கும் திறம் வாய்ந்தவராக விளங்கினார் ஆபிரகாம் லிங்கன்.
“கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்” (643)
என்ற திருக்குறளுக்கு ஏற்ப பல்வேறு அவமதிப்புகளைச் செய்பவரும் முடிவில் ஆபிரகாம் லிங்கனின் கூற்றை ஏற்று நடக்கும் நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் லிங்கனின் அறிவுத்திறனை எடுத்துரைக்கும் நிகழ்வுகளாக அமைந்திலங்குகின்றன.
ஜனாதிபதியானவுடன் பத்திரிக்கையாளர்கள் லிங்கனிடம், “நீங்கள் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம் லிங்கன்,””study..study…study…” என்று கூறினார். மேலும் எனக்கு என் தாயார் கூறிய இந்தக் கருத்தையே இளைஞர்களுக்கு நான் கூறுகிறேன். என்தாயார் கூறிய இந்த மந்திரச் சொல் என்னை உயர்த்தியது. அதுபோன்று இளைஞர்கள் வாழ்க்கை உயர இதையே நான் அறிவுரையாகக் கூறுகிறேன்” என்றார். ஆம் படிப்புத்தான் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்துகிறது என்பது எவ்வளவு வெள்ளிடை மலைபோன்ற உண்மை.
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படல்
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில்போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்புசரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.
ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய இரண்டாவது ஆட்சியின் தொடக்க உரையில், “இரு பகுதியினரும் ஒரே விவிலியத்தைப் படிக்கின்றனர், ஒரே கடவுளைவழிபடுகின்றனர்; மற்றவருக்கு எதிராக ஒரே கடவுளின் துணையைத்தான் நாடுகின்றனர். மற்றவர்களுடைய முகத்தில் இருந்து கசியும் வியர்வையில் இருந்து வரும்ரொட்டியை அபகரிப்பதற்கு மனிதர்கள் ஒரு நியாயமான கடவுளின் உதவியைக் கோருதல் விந்தையாக உள்ளது; ஆனால் நாம் எவர் பற்றியும் தீர்ப்புக் கூற வேண்டாம்,ஏனெனில் நாமும் தீர்ப்பிற்கு உட்பட்டர்கள்தாம்.” என லிங்கன் உள்நாட்டுப் போரில் இருந்த சமயக் குறிப்புக்கள் பற்றி அவநம்பிக்கையுடன் கூடிய ஒவ்வாத நிலையைக்குறிப்பிட்டார்.
லிங்கன் உண்மையான மனிதநேயம் நிறைந்தவராக இருந்தார். அவருடைய தளபதிகள் அதிர்ச்சியுறும் வகையில் போரில் ஈடுபடாமல் ஓடிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அவர் நிறுத்திவைத்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒற்றைநிர்வாகத்துறை கருணை மன்னிப்பில் அவர் சொந்த முறையில் 269 சியோக்ஸ், 1862ல் மின்னிசோடா எழுச்சியின் போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தஅமெரிக்கப் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மரண தண்டனையையும் குறைத்தார்.
உள்நாட்டுப் போரின்போது ஆபிரகாம் லிங்கன் போர்களில், இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய முடிவுகளை அறிவதற்கு வாஷிங்டனில் இருந்த ஒரு தந்திஅலுவலகத்தில் காத்திருப்பார். இந்த உள்நாட்டுப் போர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. இந்தப் போரானது லிங்கனுடைய குடும்பத்தை தனிப்பட்டசோகங்களையும் கொந்தளிப்பையும் நிறைத்து தாக்கியது. குடிமக்களின் 600,000 உயிர்களைக் குடித்து லிங்கனின் மனத்தில் பெரும் சுமையைக் கொடுத்தது. லிங்கன் தம்பதியினரிடம் இருந்து மரணம் இரு குழந்தைகளை எடுத்துக் கொண்டது; 1862-ஆம் ஆண்டில் 11-ஆவது வயதில் லிங்கனின் இரண்டாவது குழந்தை வில்லி இறந்தது. லிங்கன் கலங்கினார். இச்சோகம் லிங்கனின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியது.
1865 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் வாஷிங்டனில் இருந்த போர்ட்ஸ் நாடக அரங்கில் “அவர் அமெரிக்கன்கசின்” என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (john wilkes booth) என்ற ஒரு நடிகன்பார்வையாளர் அறையில் நுழைந்து அதிபர் லிங்கனைத் தலையின் பின்புறம் குறிவைத்துச் சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது. அமெரிக்காவின் அடிமை முறைக்கு முடிவு கட்டிய ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஒரு கவித்துவப் பெரும் சோகம்போல் இது உலகை உலுக்கியது.
பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது.ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடுஇல்லை. ஒன்றுபட்ட அமெரிக்கா உதயமானது. மக்கள் சுதந்திரப் பெருமூச்சு விட்டனர்.
எந்த நாட்டின் மக்களாட்சி முறைக்கு அடித்தளமிட்டாரோ அந்த நாட்டு மக்களில் ஒருவனாலேயே ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டது கொடுமையிலும் கொடுமையானது. நண்டின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் குஞ்சுகள் தனது தாயின் உடலைத் தின்று வளர்வதைப் போன்று அமெக்க மக்களில் ஒருவனே லிங்கனின் உயிரைக் குடித்தான். அடிமைகளின் விலங்கொடித்த தியாக தீபமாகிய லிங்கன் மறைந்தாலும் அவர் உலகில் ஏற்றி வைத்த சுதந்திர தீபம் இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அது என்றும் மறையாது.
லிங்கனின் படுகொலையை அடுத்து ஐரோப்பிய சோசலிச தொழிலாளர்களின் சார்பில் மார்க்ஸ் துணை ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்சனுக்கு, “கடுமையானசூழ்நிலைகளினால் லிங்கன் பாதிப்புறவில்லை; அதேபோன்று வெற்றியினால் பெரும் களிப்பையும் அடையவில்லை; தன்னுடைய பெரிய இலக்கை அசைவுறாமல்அடைய முற்பட்டார்; குருட்டுத்தன அவசரசத்தினால் அந்த இலக்கை அவர் சமரசத்திற்கு உட்படுத்தியதில்லை; மெதுவாகத் தன்னுடைய நடவடிக்கைகளைக்கனியவிட்டார்; அவற்றில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை; மக்களுடைய ஆதரவு என்ற நிலையில் அதிக எழுச்சி பெற்று எதையும் செய்ததும் இல்லை;மக்களுடைய உணர்வு மங்கிய நேரத்தில் அதற்காக தன்னுடைய ஊக்கத்தைக் கைவிட்டதும் இல்லை; கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போதுகூட அவற்றைஒரு குழந்தையின் இதயத்தின் கருத்துக்களால் இளக வைத்தார்; இருண்ட காட்சிகளைக்கூட நகைச்சுவை என்ற சிரிப்பால் ஒளிர வைத்தார்; தன்னுடைய மகத்தானபணியை ஏதோ ஆகாயத்தில் இருந்து தோன்றியவர்கள் போன்ற ஆட்சியாளர்கள் பெரும் ஆடம்பரத்துடனும் அலங்காரத்துடனும் செய்ததை இவரோ பணிவுடனும்எளிமையுடன் செய்து முடித்தார்; சுருங்கக்கூறின், பெரும் செயல்கள் புரிதலில் வெற்றிகண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர்; ஒரு பொழுதும் நன்மையை விட்டுக்கொடுத்ததில்லை. இந்த பெரிய, சிறந்த மனிதனின் அடக்கம் மிகப் பெரியது; ஒரு தியாகியாக அவர் மடிந்தபின்தான் உலகம் அவரை ஒரு தலைவர் எனக்கண்டுகொண்டது.” என்று எழுதினார்.
ஆபிரகாம் லிங்கன் உலக மக்கள் அனைவரது உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். சுதந்திரத்திற்காகப் பாடுபடும் வீரர்களின் உந்துசக்தியாகவும் இருந்து அவ்வீரர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றார். தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கலங்காது அவற்றையே படிக் கற்களாக்கி உலகத்தில் புகழ் பெற்ற ஏழையாகிய ஆபிரகாம் லிங்கனின் வரலாறு முன்னேறத் துடிக்கின்ற அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். என்ன இதைப் படிச்சீங்கள்ள… ஏழ்மை சாபமல்லன்னு புரிஞ்சுகிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. ஏழ்மையைப் பத்தி நெனக்காதீங்க…ஒங்ககிட்ட இருக்கிற திறமைகளைப் பற்றி நெனங்க..முயற்சி பண்ணுங்க..முடிவில் இன்பந்தான்… எதையும் நெனச்சு கலங்கக் கூடாது. நம்முடைய இலக்கினை நோக்கி நாம பயணித்துக் கொண்டே இருக்கணும்னு தெரிஞ்சுகிட்டீங்கள்ள….
சரி…சரி…துன்பம் வர்ற போதெல்லாம் ஆபிரகாம் லிங்கனை நெனச்சுக்குங்க.. வாழ்க்கையில முன்னேறிடுவீங்க.. இதவிட ஒருத்தரு ரொம்ப ரொம்ப ஏழ்மையில இருந்தாங்க…பிறந்தது என்னமோ அனைவரும் வெறுக்கின்ற குலம்..இளம் வயதில் வறுமையினால அந்தப் பெண்குழந்தையைப் பெற்ற தாய் தந்தையர் ஒருத்தருக்கிட்ட வித்துட்டாங்க….அந்தக் குழந்தை பிறந்தது ஓரிடம்..வளர்ந்தது ஓரிடம்…போன இடம்..ஒழுக்கத்தைப் பெரிதாக நினைக்காத இடம்…இந்தப் பெண்குழந்தை வளர்ந்த உடன் ஒரு வயசானவருக்குத் திருமணம் செஞ்சு வைக்க நெனச்சாங்க..
அந்தப் பொண்ணு புரட்சிகரமா ஒரு முடிவு எடுத்தாங்க..தான் விரும்பிய ஒருத்தர திருமணம் செஞ்சிகிட்டது…பலத்த எதிர்ப்பு…அந்தப் பொண்ணு கலங்கல..போராடினாங்க…..தனக்காக மட்டுமல்ல…தன்னைப் போன்று பொட்டுக்கட்டும் குலத்தில் உதித்த பெண்களுக்காகப் போரடினாங்க… ஏழ்மை நிலையில இருந்துகொண்டே சமுதாயத்திற்காகப் போராடினாங்க..நெனச்சத சாதிச்சாங்க…..சமுதாயத்திற்கே வாழ வழிகாட்டுனாங்க…யாருங்க அந்த அம்மா… நம்ம தமிழகத்தைச் சேர்ந்தவங்க..இன்னும் அந்தம்மா பெயரால அரசாங்கம் ஒரு பெண்கள் முன்னேற்றத் திட்டத்தினை அறிவிச்சு அதைச் சிறப்பா செயல்படுத்திக்கிட்டு வருது… என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா?….. அட.ட….டா….இல்லையா?…ம்..ம்…ம்…அடுத்தவாரம் வரைக்கும் காத்திருங்க…. (தொடரும்…- 8)