புரட்சிக்கவி – ஒரு பார்வை

This entry is part 22 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

கோவை எழிலன்

கடந்த நூற்றாண்டின் தலைச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பது ஆகும். பாவேந்தர் அவர்களுக்கு இக்காவியத்தின் பெயரே ஒரு சிறப்புப் பெயராகவும் அமைந்தது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார்.
இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். இருவரும் காதல் வயப்படாமல் இருக்கத் தன் மகள் அமுதவல்லிக்குத் தொழு நோய் என்று உதாரனிடமும் உதாரனுக்குக் கண் பார்வையில்லை என்று அமுதவல்லியிடமும் கூறுகின்றான்.
ஒரு நாள் இரவு உதாரன் வானத்தில் நிலவைக் கண்டு பாட, அமுதவல்லி கண்பார்வை அற்றவன் எவ்வாறு நிலவைப் பாடுகின்றான் என ஐயம் கொண்டு உதாரனைக் காண, இருவரும் காதல் கொள்கின்றனர்.
இச்செய்தி அறிந்த மன்னவன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கின்றான். மூலக்கதையில் அரசி தலையிட்டு இருவரையும் காத்து சேர்த்து வைப்பதாக இருக்கின்றது. ஆனால் அதைப் பாவேந்தர் பாரதிதாசன் மக்கள் புரட்சி செய்து, அரசனைத் துரத்தி விட்டு கவிஞனுக்கும் இளவரசிக்கும் மீட்சி தருவதாகவும் அங்கு மக்களாட்சி அமைவதாகவும் காட்டிக் காவியத்தை நிறைவு செய்கின்றார்.
இக்காவியத்தின் தொடக்கத்தில் அரசன் தன் அமைச்சரிடம் அமுதவல்லிக்குத் தமிழ் கற்றுத்தர ஓர் ஆசிரியனைப் பரிந்துரைக்குமாறு கூறுகின்றான். அப்பாடலில் அமுதவல்லி படித்த படிப்புகளைப் பட்டியிலிடுகின்றான். இப்பாடலில் பாவேந்தர் தம் உள்ளக்கிடக்கையான பெண் கல்வியை வெளிப்படுத்துகிறார். அமுதவல்லி,
“தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள்
ஆன்ற ஒழுக்கநூல் நீதிநூல் உணர்ந்தாள்”

என்று அரசன் கூறுகின்றான். ஆனால் அனைத்தும் உணர்ந்த அமுதவல்லி இதுவரை கவிதை புனையக் கற்றாளில்லை. இவ்விடத்தில் கவிதை புனையச் செய்யுள் யாப்பிலக்கிணம் தெரிய வேண்டும் என்பதைப் பாவேந்தர்,
“என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்கு
செய்யுள் இலக்கணம் தெரிய வேண்டுமாம்”

என அரசன் மொழிவதாகக் காட்டுகிறார். அக்காலத்தில் பெரும்பாலான கவிஞர்கள் புதுக்கவிதையை ஏற்காதவர்களாகவே இருந்தனர். பாவேந்தரும் இதற்கு விலக்கில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அரசனின் உரையைக் கேட்ட அமைச்சன் உதாரனைப் பரிந்துரைக்கின்றான். அவனே உதாரன் இளவயதும் அழகும் வாய்ந்தவனாக இருப்பதால் இருவரும் காதல் வயப்படக்கூடும் என்றும் அதைத் தவிர்ப்பதற்காக இருவருக்கும் இடையே திரை விடுக்கவும் அறிவுறுத்துகின்றான். மேலும் உதாரனிடம் அமுதவல்லி குஷ்டரோகி என்றும் அமுதவல்லியிடம் உதாரன் குருடன் என்றும் சொல்லவும் அறிவுரை கூறுகிறான்.

மன்னன் உதாரனை சகல மரியாதைகளும் கொடுத்து அழைத்து வருகின்றான். பல அமைச்சர்களும் சென்று அவனை ஒரு அரசனைப் போல் அழைத்து வருகின்றனர்.
இதை பாவேந்தர்

பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார்
தேர்வாய்ந்த புவிராஜன் போலே அந்தச்
செந்தமிழ்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்
என்று பாடுகிறார்.
உதாரன் தமிழ்ப்பணி ஆற்ற ஒப்புக் கொண்டபின் மன்னவன் கன்னிமாடத்தில் ஒரு மேடை அமைத்து அமுதவல்லிக்கு யாப்பிலக்கணம் கற்றுத் தர ஏற்பாடு செய்கிறான். இருவருக்கும் நடுவே திரை இடப்படுகின்றது.

அமுதவல்லி உதாரனை குருடன் என்ற காரணத்தால் பார்ப்பதற்கு விரும்பவில்லை. உதாரனும் அமுதவல்லி குஷ்டரோகி என்பதால் அவளைப் பார்க்க விரும்பவில்லை. இருவரும் இவ்வாறு பார்ப்பதை ஒரு அபசகுனமாக எண்ணுகிறார்கள். கதையில் இதுவரை இருவரும் பகுத்தவறிவு நிறைந்தவர்களாகக் காட்டப்படவில்லை.

உதாரன் யாப்பிலக்கணம் மட்டுமின்றி அணி இலக்கணம் மற்றும் பாப்புனைவதற்கான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறான். இதை
யாப்பு முறை சொல்வான் – அணி
யாவும் உரைத்திடுவான்
பாப்புனை வதற்கான – அனு
பவம்பல புகல்வான்
என பாரதிதாசன் காட்டுகிறார்.

பின்னொரு நாள் வானத்தில் வெண்ணிலா வந்து தோன்றுவதைக் கண்டு உதாரன் உணர்ச்சிப் பெருக்கெடுத்து வெண்ணிலாவைப் பாடுகிறான். இதைப் பாவேந்தர்
……………….வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை மழைபோல் பெய்தான்
என்று பாடுகிறார். பாவேந்தார் கடவுற் மறுப்புக் கொள்கை கொண்டவராக இருந்தாலும் இப்பாடலில் வாணியைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து என்று தொடங்கும் பாடலில் பாவேந்தர் பாட்டாளி மக்களின் வேதனையை இவ்வாறு பாடுகின்றார்.
நித்திய தரித்திராய் உழைத்து உழைத்து
திணைத்துணையும் பயனின்றி பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக்கானும் இன்பம் தானோ

இப்பாடலைக் கேட்டவுடன் அமுதவல்லி உதாரன் குருடனாக இருந்தால் எவ்வாறு நிலவைப் பார்த்துப் பாடுகின்றான் என ஐயம் கொண்டு திரையை விளக்கி அவனைப் பார்க்கிறாள். இவ்விடத்தில் குருடன் என்று எண்ணிக் கொண்டிருந்த உதாரனை அவள்
அவன் தாமரைக் கண்ணுடன் கண்டனள்
என்று குறிப்பிடுவது எண்ணி எண்ணி மகிழத் தக்கது.

உதாரன் எதிரில் நிற்பது அமுதவல்லி என்று அறியாமல் இவள் யார் என ஐயம் கொண்டு நீ யார் என வினாவுகிறான். அவன் நினைப்பில் அமுதவல்லியின் பிம்பம் ஒரு குஷ்டரோகியாகப் பதிந்திருப்பதே இதற்குக் காரணம். பின் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்த பின் உதாரன் உண்மையை நீண்டநாள் மறைத்து வைக்க முடியாதென்பதற்கு பல உவமைகளைக் கூறினாலும் பின்வரும் உவமை நோக்கத் தக்கது.
நேர் இருத்தி தீர்ப்புரைத்து சிறையில் போட்டால்
நிறைதொழிலாளர் களுணுவர்வு மறைந்து போமோ
பின் இருவரும் காதல் வயப்படுகின்றனர். அமுதவல்லிதான் முதலில் காதலைத் தெரிவிக்கின்றாள். பாவேந்தரின் பல பாடல்களில் பெண்கள் தான் முதலில் காதலைத் தெரிவிப்பவர்களாக இருக்கின்றனர். உதாரன் முதலில் பயப்படுகின்றான்.
குன்றுபோல் அன்னம் குவிந்திருக்கு தென்னெதிரில்
உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி
பாளைச் சிரிப்பில் நானின்று பதறிவிட்டால்
நாளை வேந்தன் எனும் நச்சரவிற் கென் செய்வேன்

என்று உயிர்மேல் ஆசை கொண்டு காதலை மறுதலிக்கிறான். அதற்கு
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அன்றோ அணங்கே
என்று காரணத்தையும் கற்பிக்கிறான்.

அமுதவல்லி அவனுக்கு தைரியம் கூறி அவனை வீரனாக மாற்றுகிறாள்.

கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்
சேல்விழியாள் யான் எனது செல்வாக்கால் காத்திடுவேன்.
என்று தைரியம் கூறியவள் மேலும் சமூகத்தைத் திருத்த நம்மிருவர் ஆவிகளை அர்ப்பணம் செய்வோம் என்று காதலின் மேல் சூளுரைக்கிறாள். இம்மொழிகளைக் கேட்டபின்னரே உதாரன் காதலுக்கு உடன்படுகின்றான்.

பின் இவர்களின் காதலை தோழிகள் மூலம் அறிந்த அரசன் வாளில் விஷத்தைப் பூசி வைக்கச் சொல்லிவிட்டு உதாரனை விசாரணைக்கு இழுத்து வர உத்தரவிடுகின்றான். தீர்ப்பு முன்னரே முடிவு செய்தபின் ஒப்புக்கு விசாரணை செய்வதாக பாவேந்தர் காட்டுகிறார். அங்கும் உதாரன் பணிவாகவே பேசுகிறான். அமுதவல்லிக்காக தன் உயிரோடு விடுமாறு கேட்கிறான்.

பழகும் இருட்டினில் நானிருந்தேன் – குளிர்
பால் நிலவாயிரம் போல் – அவள்
அழகு வெளிச்சம் அடித்ததென் மேல்
அடியேன் செய்ததோன்றுமில்லை
பிழைபுரிந்தேன் என்று தண்டனை கூறுமுன்
பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரி சிற்றிடை அமுதவல்லிக்குள்ள
இன்னல் மறப்ப துண்டோ

அரசன் அதை கேளாமல் அவனைக் கொல்ல உத்தரவிடுகின்றான். அச்சமயம் மலையைப் பிளந்த சத்தத்தோடு அமுதவல்லி வந்து அரசனைப் பார்த்து வீரமொழிகளைப் பேசுகிறாள்.

அவளின் முதல் வார்த்தைகளே அரசனின் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இலை உனக்கதிகாரம் அந்த
ஏந்திழையான் பிழை இழைக்கவில்லை.

மேலும் அவள் நாட்டின் வாரிசான தன்னை தண்டிக்க மக்களுக்கே அதிகாரம் என்றும் மன்னனுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடுகின்றாள். ஆனால் அதைக் கேட்காத மன்னன் அமுதவல்லியை சிறையிடவும் உதாரனை கொல்லவும் தீர்ப்பு கூறுகின்றான். அதைக்கேட்ட அமைச்சன் ஒருவன் அமுதவல்லியை மன்னிக்க வேண்டுகின்றான். அதற்கு அமுதவல்லி
சாதலெனின் இருவருவருமே சாதல் வேண்டும்
தவிர்தலெனின் இருவருமே தவிர்த்தல் வேண்டும் என்று கேட்க
மன்னன் இருவரையும் கொல்ல உத்தரவு இடுகின்றான்.

இதைக்கேட்ட நாட்டு மக்கள் பேசாமல் அச்சடித்த பதுமைகள் போல் இருப்பதைப் பார்த்த அமுதவல்லி

எவையும்நமைப் பிரிக்கவில்லை இன்பம் கொண்டோம்
இறப்பதிலும் ஒன்றானோம்

என்று கூறி கொலைக்களத்திற்கு செல்கிறாள்.

நாட்டின் இளவரசியே கொலைக்களத்தில் இருப்பதால் நாட்டு மக்கள் அனைவரும் கொலைக்களத்திற்கு வந்திருந்தனர். இது அமுதவல்லிக்கு நாட்டு மக்கள் மீது இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. கொலைக்களத்தில் பேச வாய்ப்பு கிடைத்த பின் உதாரன் நாட்டு மக்களைப் பார்த்து உரையாடுகின்றான்.

பேரன்பு கொண்டோரே பெரியோரே என்
பெற்றதாய் மாரே நல்லிளம் சிங்கங்காள்

என்று தொடங்கும் தன் உரையில் உதாரன் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்ப முயல்கிறான்.

முதலில் அரசன் மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களையே ஆள்வதாகக் கூறுபவன் பின்
அமிழ்தேன்று சொல்லுமந்தத் தமிழென் ஆவி
அழிவதற்குக் காரணமாய் இருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ
என்று தமிழுணர்வைத் தூண்டுகின்றான். பின் இளவரசியின் செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்கு மக்களாட்சி ஆசைக் காட்டுகிறான்.

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
ஆள்வதற்குப் பிறந்த ஒரு பெண்ணைக் கொல்ல
அரசனுக்கோ அதிகாரம் உங்களுக்கோ

என்றும்

அரசன்மகள் தன்னாளில் குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்

என்றும் பாடுகின்றான்.

இவ்வாறு சமூக உணர்வு, மொழி உணர்வு , ஆதிக்க உணர்வு அனைத்தையும் பாடியவன் இறுதியில் “ஆழ்க என் குருதி வெள்ளம் அன்பு நாட்டில்” என்று கத்தியின் கீழ் தலை குனிகிறான்.
உதாரனின் உரையைக் கேட்டபின்னரும் மக்கள் கூட்டம் பெரும் எழுச்சி கொண்டதாகப் பாவேந்தர் காட்டவில்லை. ஆனால் உதாரனின் நிலையைக் கண்ட அமுதவல்லி அடிசோர்ந்து “அன்பு செய்தோர் படிமீது வாழாரோ” என்று அரற்றியவுடன் மக்கள் கூட்டம் அவளுக்காக எழுச்சி கொண்டு கொலையாளர்களை விரட்டி விட்டு நாட்டில் மக்களாட்சியை மலர வைக்கின்றனர். மக்களாட்சி மலர்ந்ததும் அங்கே நலிவில்லாமல் எல்லா நலமும் வாய்த்ததாகக் காவியத்தை முடிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்

இக்காவியத்தில் உதாரன் புரட்சிக் கவியாகக் கூறப்பட்டாலும் பல இடங்களில் அவன் அச்சப் படுவானாகவும் உயிருக்காக மன்றாடுபவானாகவும் தான் தெரிகின்றான். மாறாக உதாரன் அச்சப்படும் இடங்களில் எல்லாம் அவனுக்கு ஊட்டம் தந்து அவனை புரட்சிப் பாதையில் செலுத்துபவளாகவும் இறுதியில் மக்களைத் தன் செல்வாக்கால் எழுச்சி கொள்ளச் செய்பவளாகவும் அமுதவல்லி காட்டப் படுகின்றாள். இறுதியில் தான் வாக்களித்தபடி உதாரனை தன் செல்வாக்கால் அமுதவல்லியே காக்கிறாள்.

இவ்வாறு பாவேந்தர் இக்காவியத்தில் பெண்கள் நினைத்தால் சாதாரண கவிஞனையும் புரட்சிக்கவியாக்க முடியும் என்று இக்காவியத்தில் நிறுவுகிறார்.

Series Navigationஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடுமுதுமையின் காதல்

2 Comments

  1. Avatar n.baskaran

    கோவை எழிலா..எழில்மிகு கட்டுரை வாழ்க. புரட்சிக்கவியின் படைப்புகளின் மேல் பிடித்தம் என்பது தமிழின் அனலையும் அழகையும் ஒருங்கே ருசிக்கத்தெரிந்தவர்க்கே வசப்படும். புரட்சியின் மையத்தை அமுதவல்லியின் பெண்மையில் வைத்து உணர்ந்திருப்பது அருமை. அதுசரி, அந்த காலத்தில் புதுக்கவிதை இருந்ததா? இன்னும் எழுத வாழ்த்துகள்…

  2. Avatar எழிலன்

    நன்றி ஐயா.

    புரட்சிக் கவி வெளியிடப்பட்ட ஆண்டு 1937. இக்காலத்தில் மணிக்கொடி இயக்கம் புதுக்கவிதையை முன்னிறுத்திக் கொண்டிருந்தனர். மேலும் மரபு – புதுக்கவிதை மோதல்களும் இருந்தன.

Leave a Reply to n.baskaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *