பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

This entry is part 46 of 46 in the series 26 ஜூன் 2011

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்”  ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது.  இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை.  அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் வாழ்க்கையிலிருந்த ” மண் என்னைக் கைவிடாது”  என்ற வார்த்தை,  நம்பிக்கை அவனைக் காப்பாற்றுகிறது.வந்து போகும் பூகம்பம் இறந்து போகிற குடும்ப உறவுகளின் சடலத்திற்காய் பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கிற போது  அவன் மீது அருவருப்படையாமல் கதையை முடிப்பது வெறும் எதார்த்த நிகழ்வாக காட்டி முடிந்து போகிறது. வெளிநாடு செல்வதாக  சென்று விட்ட மகன் திரும்பி வராத போது  அவன் மீதான எதிர்ப்புணர்வை கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலியை கழற்றி போடுவதில் எதிர்ப்பு வெளிப்படுவது ஆறுதல் தருகிறது. முந்தின கதையின் சமரசம் கொள்ள வைத்த எரிச்சலை இக்கதைத் தணிக்க வைக்கிறது.  அம்மாக்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அனுபவங்கள் பல கதைகளில் வியாபித்திருக்கின்றன.தங்கள் ஊர்களிலோ, கிராமங்களிலோ உறவுகளோடு கொள்ளும் தொடர்பு மகிழ்ச்சி வெளிநாடுகளில் இல்லாமல் போகிற முதியவர்களைக் காட்டுகிறார்.சொந்தப் பையன்களிடம் காணப்படும் திருட்டு குணமும், வெளியில் சாதாரணத் தொழில் செய்து அலையும் பையன்களின் உலகமும் சில கதைகளில் பதிவாகியிருக்கிறது. பழைய தலைமுறைப் பெண்கள் தங்கள்  குழந்தைகளை  பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள்.ஆனால் அவர்கள் வளர்ந்து உலகத்தை எதிர்கொள்ளும் துணிச்சலான நடைமுறைகள் அம்மாக்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும் தங்கள் சுதந்திரத்தை பேணுபவர்களாக மகள்கள் இருக்கிறார்கள்.பணம் சம்பாதிக்கிற ஆசையில் தங்கள் முகங்களை இழந்து போகிற ஆண்கள் பற்றிய சரியான பார்வையும் இக்கதைகளில் இருக்கிறது.முகமற்ற ஆண்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்ற “   நோ பேஸ்புக் .காம் ” இதிலுள்ள வித்தியாசமான ஒரு கதை. எது நாகரீகம் என்பதைக் கேள்விக்குறியாக்கி பரிசீலிக்க வைக்கும் கதைகளும் உண்டு.குறை கண்டவிட்டு வெகுண்டெழுந்து குறையை முறையிட வேண்டிய இட்த்தில்  முறையிட்டு குறை போக்கும் முயற்சி  எத்தனை நவீன பெண்களிடம் இருக்கிறது. இதுவே எண்ணெய் பிசுக்குடன் தலைவாரி, மலிவு புடவை கட்டி, கிராமத்து தமிழ் பேசும் பெண்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் கதைகளும் இதிலுள்ளன,அட்சயதிதியை முதல் பூனை குறுக்கே போவது, எந்த சட்டை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது வரை தினசரி வாழ்க்கையில் தென்படும் மூடநம்பிக்கையை பெண்கள் பக்கமிருந்து சுட்டிக்காட்டுவது சில கதைகளில் அனுபவங்களாய் விரிந்திருக்கிறது. சற்றே பெரிய கதையாய் விரிந்திருக்கும்            ” தாமரைப்பூக்கோலத்தில் ”  அம்சவல்லியின் வாழ்க்கை தாறுமாறாகத்தான் மாறிப்போகிறது . அம்மாவிடம் திரும்பும் ஆசையை அவள் தெரிவிக்கிறாள். தாமரைக் கோலத்தை வாசலில் போட்டு குறிப்பாய் காட்டி விடச் சொல்கிறாள் அம்மா வீடு முழுக்க தாமரைக்கோலங்களாய் நிறைத்து விடுகிறாள். அம்மாக்களின் பாசம் பெரும் வலையாய் நீண்டு விரிவாவதை அக்கதை சொல்கிறது.  “ வாழ்க்கை  நேர்கோடாய் போவது இல்லை. திருப்பங்கள் நிறைந்தது. திருப்பங்களை எதிர் கொண்டு சமாளிப்பதே வாழ்க்கை “   என்று அக்கதையில் அம்மா கதாபாத்திரம் சொல்கிறது. அவ்வகை வாழ்க்கையில் தென்படும் பெண்பாத்திரங்களை இச்சிறுகதைகளில் நுணுக்கமாக்க் காட்டுகிறார் வனஜா டேவிட்.

 

( ” மகளே , உன் பார்வை வேறு, என் பார்வை வேறு ”  வனஜா டேவிட் சிறுகதைகள் – மணிமேகலை , சென்னை. ரூ 95 / 9448149010 )

Series Navigationபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *