போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24

ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு நேரம் கழித்தே சூரியன் தென்பட்டான். புத்தர் எழுந்து நீராடி பிட்சைக்குச் சென்று திரும்பிய போது மருத்துவர் அவர்கள் அருகே இருந்தார். “இஞ்சிச் சாறும் வென்னீரும் தேனும் கொடுத்துள்ளேன் புத்த பிரானே! கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அளவை அதிகரித்தால் ஓரிரு நாட்களில் இயல்பாக நடமாடுவார்கள்”. அவர் சென்ற பிறகு புத்தர் இருவருக்கும் நடுவே ஒரு பலகையில் அமர்ந்தார். எழுந்து அவரை வணங்க முற்பட்ட இருவரையும் தடுத்துப் படுக்க வைத்தார். ஆனந்தன் குடிலின் வாயிலில் அமர்ந்து புத்தரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காகக் காத்திருந்தார்.

“பக்குனா.. இந்த உடல் யாருடையது? ”

இருவரும் புத்தரை வியப்போடு நோக்கினர்.

கிரிமானந்தரைத் தொட்டு “நீயும் பதில் சொல்லலாம்” என்றார்.

“என்னுடையது”

“நிச்சயமாக உன்னுடையது தானா கிரிமானந்தா?”

“இதில் ஐயமுண்டா குருதேவரே?”

“சரி அப்படியே வைத்துக் கொள்வோம். இந்த உடல் உன்னுடையது தானென்றால் திடீரென உன்னை ஏன் கைவிட்டது?””

“நோயுறுவது அதன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றில்லையா புத்த தேவரே?”

“சரி பக்குனா. உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று உன்னுடையதாக, அதாவது உனக்கே சொந்தமானதாக இருக்க இயலுமா?’

“இருக்கிறதே”

“அப்படியானால் கிரிமானந்தா, தற்காலிகமாக மருத்துவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?”

இருவரும் பதில் பேசவில்லை.

“சொல்லுங்கள் பிட்சுக்களே. நான் உரைப்பது தவறு என்றால் தைரியமாக மருத்துக் கூறுங்கள்’

“ஆமாம். இப்போதைக்கு மருத்துவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது”

“உடல் நலமடைந்ததும் மீண்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா?”

இருவரும் விழித்தார்கள்.

“சரி. மூப்படையும் போது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமா?”

பதில் தெரியவில்லை இருவருக்கும்.

“வயோதிகமான பின் இந்த உடல் உங்களுக்கு சொந்தமில்லாமல் போய்விடும் என்று அர்த்தமா?”

“………………………..

“பதில் சொல்லுங்கள் பிட்சுக்களே. எதாவது பதில் சொல்லுங்கள். என்றுமே இந்த உடல் உங்களுக்கு சொந்தமாக உங்கள் கட்டுப்பாட்டில் உங்கள் வழி செல்லுமா?”

“மூப்பைப் பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை புத்தரே”

“கிரிமானந்தா..வயோதிகம் பற்றியே யோசிக்கவில்லை என்றால் மரணம் பற்றி?”

“………………”

“ஏன் மௌனமாயிருக்கிறீர்கள்? மரிக்கும் போதும் மரித்த பின்னும் இந்த உடல் நம் சொந்தமாக, நம் வழியில் நம்முடனே வருமா?”

“………………….”

“மரித்த உடன் அதன் பெயர் புத்தர் அல்ல. பிணம். அதை அடக்கம் தான் செய்வார்கள். இல்லையா?”

“…………………”

“பதில் சொல்லியே தீர வேண்டும். சொல்லுங்கள்”

இருவரும் தலையசைத்தார்கள்.

உடல் சிறு வயதில் தாயின் பராமரிப்பில் இருக்கிறது. நோயுறும் போது மருத்துவரிடம் ஒப்படைக்கப் படுகிறது. மூப்புறும் போது யாருடைய ஆதரவையும் ஏற்கத் தயாராய் இருக்கிறது. கூர் தீட்டுவது உளிக்குப் பராமரிப்பு. தேரின் அச்சில் எண்ணை வார்ப்பது அதன் சக்கரத்துக்குப் பராமரிப்பு. ஒரு நிலையில் என்ன பராமரித்தாலும் ப்யனில்லாது ஓய்ந்து வீழ்ந்து மரித்தே போய் விடும் இந்த உடலை இப்போது நீங்கள் அது உங்கள் பணியை இடையூறு செய்யாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு, ஓய்வு, தியானம், வேப்பிலை,மிளகு, துளசி, என உணவிலேயே மூலிகைகளை மருந்தாகச் சேர்த்துக் கொண்டு அதைப் பாதுகாத்து வாழ வேண்டும். உடல் விஷயத்தில் அகந்தையும் கூடாது. அலட்சியமும் கூடாது”

இருவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என் கூற்று விளங்கியதா?”

“ஓரளவே புரிகிறது”

“பக்குனா.. இந்த உடல் ஒரு கருவி. போகத்தில் திளைப்பவருக்குப் போதை தரும் கருவி. ஞானத்தைத் தேடுவோருக்குத் தேடலில் துணை நிற்கும் கருவி. அளவான உணவு, ஓய்வு, தூக்கம் என்று இதைப் பராமரிக்காமல் விட்டு விட்டால் பிறகு பௌத்த வழியில் ஞானம் எப்படி சித்திக்கும் பிட்சுக்களே? எனது உடல் என்னும் எண்ணத்தை நீக்கி என் லட்சியத்துக்குத் துணை நிற்கும் கருவி இது என உணர்ந்து உடல் நலத்தைப் பேணுங்கள்”

இருவரும் புத்தரின் பாதம் பணிந்தனர்.

குடிலுக்கு வெளியே நடந்தபடியே தம்முடன் இணைந்து நடந்த ஆனந்தனிடம் “ஏதோ சொல்ல வருகிறாய் ஆனந்தா. ஆனால் தயக்கம் ஏன்?” என்றார்.

“ஜேதாவனம் சங்கத்துக்கு அர்ப்பணிக்கப் பட்டதைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்”

“நல்லது. அனந்தபிண்டிகாவுக்கு மனம் நிறைவுற்றிருக்கும்”

“அதில் வேறு சில விஷயங்களும் கூற வேண்டும் புத்தரே”

“தயக்கமின்றிப் பேசு ஆனந்தா”

“ஜேதாவனம் வாங்க என, நிறைய சொத்துக்களைக் காசுகளாக மாற்றினார் அனந்த பிண்டிகா. அதில் கணிசமான பணம் எஞ்சியுள்ளது. இங்கிருந்து சவாட்டி செல்ல நடை பயணமாகச் செல்ல இரண்டு மூன்று நாட்கள் ஆகும் புத்தரே”

“கோசலம் என்ன கூப்பிடும் தூரத்திலா இருக்கிறது ஆனந்தா?”

“அதற்கில்லை புத்தரே. செல்லும் வழியில் இளைப்பாறி மேற்செல்ல என்று சில குடில்களை அமைக்க அவர் தங்கள் அனுமதியைக் கோருகிறார்”

“என்னுடைய அனுமதியையா? சங்கத்தின் அனுமதியையா?”

“புத்தரே. தாங்கள் எனக்குப் புரிய வைக்க விரும்புவது?”

“கடைசியாக உபோசதா எப்போது நடந்தது?”

“சென்ற பௌர்ணமி அன்று நடந்தது. அடுத்து வரும் அமாவாசை அன்று. அதற்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. தங்களுக்குத் தெரியாததா புத்தரே?”

“அந்த நாளில் சங்கத்தில் அனைவரிடமும் கேட்டு முடிவு செய்”

அமாவாசையன்று புத்தர் உபோசதாவுக்கு வருவாரா என்று ஆவலாயிருந்த ஆனந்தன் ஏமாற்றம் அடைந்தார். புத்தர் தியானத்தில் இருந்தார். சங்கம் தன்னிலிருந்து தனித்து இயங்கக் கூடியதா என்று புத்தர் சோதிப்பதாகத் தோன்றியது ஆனந்ததுனுக்கு.

அன்று இரவு புத்தர் குடிலில் வெகு நேரம் ஆனந்தன் காத்திருந்தார். புத்தர் ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வரவே இல்லை. ஒவ்வொரு குடிலாகக் கடந்து சென்ற ஆனந்தன் நான்கு பிட்சுக்கள் தியானத்தில் ஒரு குடிலில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தார். நால்வரும் உபோசதாவில் பிறருக்குத் தொந்தரவாகும் அளவு சத்தம் போட்டதற்காக வருத்தம் தெரிவித்தவர்கள். இவர்களா மனம் ஒன்றி தியானம் செய்கிறார்கள்? சில நொடிகள் அங்கே நின்ற ஆனந்தன் “புத்தர் உங்கள் தியானத்தில் மகிழ்ந்தார். உங்களைக் காண வந்துள்ளார்” என்று குரல் கொடுத்தார். உடனே நால்வரும் கண் விழித்து ஆனந்தன் பக்கம் நோக்கினர். அவர்கள் மீது ஒரு பொருள் பொதிந்த பார்வையை வீசி மேலே நடந்தார் ஆனந்தன்.

மறு நாள் காலையில் அவர் வேறு விதமான செய்தியுடன் குரல் கொடுத்தார். தியானம் கலைந்து அசடு வழிந்தனர். நாலைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் பலமுறை முயன்றும் அவர்கள் தியானம் கலையவில்லை. புத்தர் வழியில் மன ஒருமை பெற்றவர்கள் இவர்கள் என மகிழ்ந்தார்.

புத்தரை வணங்கிய ஆனந்தன் ஒரு வாரம் முன்னர் உபோசதாவில் நடந்ததைக் கூறத் துவங்கினார். ஒரு வாரமாக புத்தர் பெரிதும் தியானத்தில் கழித்தார். தியானம் கலைத்த போது மக்கள் சூழ்ந்தனர்.

“உபோசதாவில் அனைவரும் அனந்தபிண்டிகா குடில் அமைக்க விருப்பம் தெரிவித்தனர்”

“சங்கத்தின் முடிவுக்கு புத்தனும் கட்டுப்பட்டவனே”

“அது மட்டுமல்ல புத்தரே. ஜேதாவனத்தில் ஒரு பெரிய பௌத்த விகாரத்தை நிர்மாணிக்க நான் முன் மொழிந்தேன். அதையும் ஏற்றனர்”

“சங்கம் வைதீக வழியில் மடங்களை ஸ்தாபிக்கப் போகிறதா?”

“இல்லை புத்தரே. அது சங்கத்தின் ஒரு பெரிய ஆலயமாக, தியானத்துக்கும் ஆன்மீக உரைகளுக்குமான இடமாக இருக்கும். நாங்கள் இதை லௌகீகமாகக் கொண்டு செல்ல மாட்டோம். பெரிய அளவில் மக்கள் கூடும் போது அவர்களை ஒழுங்கு படுத்தும் பிட்சுக்கள் அதே போல உடல் நலமில்லாத பிட்சுக்கள் பிட்சைக்குப் போக இயலாமற் போகிறது. அவர்களுக்காக சமைக்க ஒரு இடம் தேவையே. மக்கள் அன்புடன் கொண்டுவரும் காய்கறிகள், மாவு, கோதுமை, அரிசி இவைகளை நாம் நிராகரிப்பதில்லை இல்லையா? அவற்றுக்கும் பயன் கிடைக்கும்”

“ஆனந்தா. போதி மரத்தின் நிழலில் இந்த உலகமே உய்யும் மேலான லட்சியத்துக்கான விடையுடன் மட்டுமே நான் புத்தனாக வெளி வந்தேன். சங்கம் எந்த ஒரு நிலையிலும் அந்த லட்சியம் நீர்த்துப் போகாத வழியில் செல்ல உன் போன்ற மூத்த பிட்சுக்கள் மட்டுமே வழிகாட்ட இயலும்”

“அது எங்கள் பொறுப்பு புத்தரே”

ஆனந்தன் கையில் சுருட்டிய பட்டுத்துணியினாலான லிகிதம் இருந்தது. “மாமன்னர் சுத்தோதனர் அனுப்பிய இதைத் தங்களிடம் தர ஒரு வாரமாகக் காத்திருந்தேன்” என்றார் ஆனந்தன்.

“மகான் புத்தருக்கு வணக்கங்கள். கபிலவாஸ்துவுக்குத் தாங்கள் விஜயம் செய்ததை எங்கள் நாட்டு மக்களும் ராஜ குடும்பமும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். பௌத்தத்தின் செய்தியான அன்பு எல்லா தேசங்களிலும் பரவும் என்பது உறுதி. அதே சமயம் பௌத்தத்தில் குழந்தைகளை பிட்சுக்களாக ஏற்பதாயிருந்தால் அவர்களின் பெற்றோர்கள் அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும் என்று தாங்கள் ஆணையிட வேண்டும்.

சாக்கிய வம்ச இளவரசன் ராகுலனை மட்டுமே மனதில் வைத்து இதை வேண்டவில்லை. பெற்றோரிடம் குழந்தைகள் காட்டும் பணிவிலிருந்தும், குடும்ப அமைப்பில் பெரியவர் முடிவே இறுதியானது என்னும் பாரம்பரியத்திலிருந்தும் சமுதாயம் வழுவ பௌத்தம் காரணமாகக் கூடாது என்பதே என் ஆசை. எனவே இதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். வணக்கங்களுடன் சுத்தோதனன்”

“ஆனந்தா. ராகுலனின் நிலை என்ன சங்கத்தில்?”

“புத்தரே. அவர் ஒரு மாணவனாகவே இங்கே வந்துள்ளார். பௌத்த போதனைகளையும், தியானம் முதலிய யோகக் கல்வியையும் அவர் பெறுவார். பிட்சுக்களின் வாழ்க்கை முறையை கவனிக்கும் அவர் இருபது வயது நிறைந்த பிறகு பிட்சுவாகும் ஆர்வம் இருந்தால் மட்டுமே தீட்சை பெறுவார். மேலும் அவரது தாயார் இளவரசி யசோதராவின் ஆணைப்படியே அவர் நம்முடன் ராஜகஹத்துக்கு வந்தார்”

“இவை அனைத்தையும் மன்னருக்கு லிகிதமாக எழுதி அனுப்பு. அத்துடன் இருபது வயதுக்குப் பின் தாய் தந்தையரின் ஒப்புதலோடு மட்டுமே தீட்சை உண்டு என்பதையும் சேர்த்துக் கொள்”

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’நீங்காத நினைவுகள் – 7