பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 14 in the series 3 ஜூலை 2022

 

            ஜனநேசன்

 

 புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது  இப்பணியை  சேலம் நகரில் இயங்கிவரும் , கவிஞரும், விமர்சகருமான  பொன்.குமார் செய்து வருகிறார்.

 இவர் ஐந்துக்கு மேற்பட்ட  கவிதை நூல்களையும், பதினைந்துக்கு மேற்பட்ட,கவிதை, கதை, நாவல் , கட்டுரைகள் போன்ற இலக்கிய              வகைமைகளைப் பற்றிய  விமர்சன தொகுப்பு நூல்களை  எழுதியுள்ளார். இவர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி  இலக்கியங்கள்  எப்படி பதிவு செய்கின்றன  என்பதை தொகுத்து சொல்வதில் வல்லவர். இந்த வரிசையில் பொன்.குமார் தொகுத்த ,”தலித்தியத்தை முன் வைத்து “ என்னும் கட்டுரை நூல் முக்கியமானது.

 இந்த வரிசையில் , அரவாணிகள் பற்றிய முக்கிய  கவிதைகளின் பரல்களைத் தொகுத்து “சந்ததிப் பிழை “ எனும் தொகுப்பு நூலை கொணர்ந்துள்ளார். இந்நூலில்  தொல்காப்பியர்  தொடங்கி  இன்று புதுகவிதை , ஹைக்கூ, முகநூல்  கவிதைகள்  எழுதும்  நவீன படைப்பாளிகள் வரை  அரவாணிகளை  எப்படி தம்படைப்புகளில் பதிவு செய்துள்ளார்கள்  என்பதை  இந்நூலில் தொகுத்துள்ளார்.

 சந்ததிப் பிழை  என்று அரவாணிகளுக்காக உரக்க குரல் கொடுத்த நா.காமராசன், கவிஞர்.மீரா, கவிக்கோ அப்துல்ரகுமான்,இன்குலாப் தொடங்கி இன்று எழுதிவரும்,ரவிசுப்ரமணியன்,தமிழ்ப்பித்தன், கவின்மலர் , ரேவதி, கோமகள், கருனைச்சாமி,என நூற்றுகணக்கான கவிஞர்களின் அரவாணிகள் மீதான பார்வைகளை  முத்தாய்ப்பான சொற்ப்பூக்களாக  இத்தொகுப்பில்  பொன்.குமார்   தொடுத்துள்ளார்.

  உரைநடையாளர்கள் க.நா.சுப்பிரமணியன், சு.சமுத்திரம் போன்றோரின் கருத்தீடுகளை மட்டுமல்ல, நாடறிந்த திருநங்கைகள் நர்த்தகி நடராஜ், லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, போன்றோரின்  உணர்வோட்டமான படைப்புகளின் சாரத்தையும் இந்த , “சந்ததிப் பிழை “தொகுப்பு உள்ளடக்கியுள்ளது .இது ஒருவகையில் அவலப்பட்ட அரவாணிகளின்

 அகநானூறு என்று  சொல்லலாம்.

 இந்தப்படைப்புகள  அரவாணிகளின் ரணம் மிகுந்த வாழ்க்கைப்பாடுகள், அவலங்கள், அவமானங்கள், அவர்களிடையே பொதிந்துள்ள  திறமைகள்  எல்லாம்  பதிவு செய்யப்பட்டு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக குரல் தருகிறது. இந்நூல், அரவாணிகள் குறித்த சமூகவியல் ஆய்வாளர்கள் மட்டுமல்ல, மனிதநேயமிக்கவர்கள் அனைவரும்  வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது..

  “சந்ததிப் பிழை “ [தொகுப்பு நூல் ]

  ஆசிரியர்; பொன்.குமார்.

  பக்; 120 ;விலை ;120,/.

  வெளியீடு ;நளம் பதிப்பகம் .சேலம்.636030

   தொடர்பெண் ;9629974766.

 

Series Navigationஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *