பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்

கலை அழகியல் பெரும்சக்தியாக எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் கதைகளிலும் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை பற்றியும் சரியான பார்வை கொண்டவர் வாமனன்

என்பதை இக்கதைகளில் தென்படும் அனுபவங்களைக் கொண்டே சொல்லிவிடலாம். வெகுஜன இதழ்களில் தென்படும் கதைகளின் அனுபவங்கள், செய்திகள் போலில்லாமல் தினசரி வாழ்க்கையில் கூர்ந்து பார்க்கும் அவதானிப்புகளாக இக்கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முக்கியமானதாகும் பலவற்றில் செய்திகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன என்பதையும் சொல்லலாம்.கலப்பு மாட்டின் பயன் பற்றி பெருமை கொள்ளும் அப்பிச்சியும் கலப்புத்திருமணம் என்று வருகிற போது தூரம் தள்ளிப் போகிறார். சாமியை விடப்பெரியவங்க யார் இருக்காங்க என்று அதிசயக்கும் சிறுவனுக்கும் மனிதர்களின் மதவாதமும், ஜாதித்திமிரும் மலைக்க வைத்து வாழ்க்கை பற்றி புதிய கோணத்தைக் கொண்டு வருகிறது. கோச்சைக்கறி, சாவல்கட்டு பற்றி பத்துக்கதைகளாவது நான் எழுதியிருப்பேன்.. அந்த கதை அனுபவங்களை வாமனன் இதைல் விவரிக்கும் போது பகை என்பது உயிருக்கும் முன்னால், வாழ்க்கைக்கு முன்னால் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை வலியுறுத்துகிறார். பெண்கள் ஆண்களின் கையில் அகப்பட்ட களிமண் பொம்மைகளாகத்தான் இருக்கிறார்கள். எந்த வகை பொம்மையையும் அவர்களின் கைகளில் உருவாகக் கூடும். மனநிலைப்பாதிபாகிற பெண்கள் இதில் தென்பட்டு ஆண்கள் கையாண்ட களிமண்னின் வித்தை பற்றிச் சொல்கிறார்கள்.குப்பைத் தொட்டி போன்ற கதைகளில் காட்டப்படும் கொஞ்சம் செய்திகள் சார்ந்த அனுபவங்கள் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொண்டு வருகின்றன. நவீன தொழில் நுட்பமும் விஞ்ஞானமும் தரும் எல்லை பல மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. விவசாயிகள் வேளாண்மையிலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஓவியர் பிளக்ஸ்போர்டுகளின் ஆதிக்கத்தால் துரத்தப்படுகிறார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கைக்குப்பின் நிகழும் பிறரின் செயற்கையான செயல்பாடுகளும் அருவருப்படையச்செய்கின்றன. பொருளாதார அம்சங்கள் பற்றிய பல விசாரணைகளும் முடிவுகளும் சில கதைகளில் அமைந்துள்ளன. தஞ்சாவூர் பொம்மையின் தலையாட்டத்திற்குப் பின்னால் அது கொள்ளும் நிலைத்தன்மை போல் இந்திய பொருளாதரத்திற்கு சேமிப்பு தரும் பலம் அலசப்படுகிறது. நடை பயிற்சியின் போது கலந்து கொள்ளும் முதியவர்கள் பல விசயங்களைப் பற்றி ஆலோசிக்கிறார்கள்.அவர்கள் ஓய்வெடுக்கிற நாட்களிலோ வெளியூர் போன நாட்களிலோ பிற நடை பயிற்சி நண்பர்கள் கண்டடைகிற அனுபவங்களை விரிவாய் சொல்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைக்களஞ்சியம் என்பதால் அக்கதையே ஒரு பெரும் கதைக்களஞ்சியமாகிறது.கனவுக்கன்னிகள் வராத இளைஞர்களின் மனங்கள் இருக்குமா. அவர்களும் வருகிறார்கள்.கொங்குமனிதர்களின் இயல்பும் சாதாரணத் தன்மையும் பேச்சு வழக்கு, கலாச்சார சாராம்சங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. வெளியே போய் விட்டபின்னும் ஆட்டிற்கு தண்ணீர் வைக்காதது கொங்கு தாயை மனதில் அலைக்கழிக்கவே வைக்கிறது. பிள்ளை இறந்தது காரணமாக வரும் நட்ட ஈட்டுத் தொகை வேண்டாம். ஆடு வளர்த்து பிழைப்பு நடத்துவதில் வரும் பணமே போதும் என்று புறம் தள்ளும் கொங்கு தாய்களின் தாய்மை இதிலும் சொல்லப்படுகிறது. அனுபவம் கொஞ்சம் கூடுதல் உழைப்பைக்கோருவது ஆபரணமாக இருப்பது. அரக்க வலிமை பெற்று மென்மையையும் உண்மையையும் அறிய வைப்பது. கொங்கு நாட்டு மனிதர்களின் இயல்பை, உண்மையை அழகாகச் சொல்லி வன்முறை கலந்த இன்றைய வாழ்க்கையின் ஒரு பகுதியை ஆபரணமாகவே கோர்க்க முயன்றிருக்கிறார் வாமனன். படைப்புலகில் வாமன அவதாரம் எடுக்க நிறையப் படிக்கட்டுகளை இத்தொகுப்பும் அவருக்கு வழங்குகிறது..

( பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள், கபிலன் பதிப்பகம், பாண்டிச்சேரி, ரூ 110 )

Series Navigationதமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கைஎனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “