போன்ஸாய்

Spread the love

 

ருத்ரா

மேஜையில் 

ஒரு கண்ணாடி குடுவையில்

விளையாட்டு போல்

ஒரு ஆலங்கன்று நட்டேன்.

அதற்குள்

எப்படி ஒரு முழு வானத்தின்

குடை முளைத்தது?

சூரியனும் எப்படி

அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது?

அமேசானின் அசுர மழையும்

அங்கே

அந்த வேர்த்தூவிகளில்

எப்படியோ ரத்தம் பாய்ச்சியது.

பாருங்கள்

என் காகிதமும் பேனாவும்

என் கூட வர மாட்டேன் என்கிறது

கவிதை எழுத.

அந்த அடையாறு ஆலமரமே

அந்த கண்ணாடிச் சிமிழுக்குள்

கண் சிமிட்டுவதை

என் மேஜை உலகமே 

வெடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

பவளம் போல கொத்தாய் கிடக்கும்

ஆலம்பழங்களை கொத்த‌

பவள மூக்கிகளான கிளிகள் கூட‌

வந்து விட்டன‌

சின்ன சின்ன கொசுக்கள் போல.

அந்த கிளைகளினூடே

“கல்லிவர்ஸ் ட்ராவல்” நாவலின்

பிஞ்சிலும் பிஞ்சான சிறுபயல் ஒருவன்

சிறு வண்டாய் 

விறு விறு என்று

ஏறிக்கொண்டிருக்கிறான்.

Series Navigationஅதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்ப க  பொன்னுசாமியின் படைப்புலகம்