ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

Spread the love
 
ப.தனஞ்ஜெயன்
 
1.
நல்ல பிராண்ட் சார்ட்
நல்ல பிராண்ட் செல்
நல்ல பிராண்ட் வாட்ச்
நல்ல ஓட்டல்
நல்ல உணவு
நல்ல வீடு
நல்ல கம்பெனி வண்டி
பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல்
இதற்கு மேல் ஒரு சிலர்
பிராண்டட் கார்
இப்படி நல்ல நல்ல பட்டியலோடு
வாழ்வு நடத்தும் மனிதர்கள்
ஒரு நாளும்
நல்ல விவசாயத்தை
விரும்பாதது
கவலை கொள்ளவே செய்கிறது
நல்ல விவசாயம் என்று தேடும்பொழுது
விவசாயியைச் சந்திப்பீர்கள்
இந்த சந்திப்பு
ஒவ்வொரு விவசாயியையும்
பிராண்டட் விவசாயியாக மாற்றிவிடும் என்று
ஏதோ சொல்கிறது மனது
அவன் அவள் கைப்பட்டு வீழ்ந்த விதையெல்லாம் நமக்கு
நிபந்தனையற்ற வயல் வாசம்
அவனுக்கும்
அவளுக்கும்
இப்பொழுது சொல்லுங்கள்
நம் விவசாயிகள் யாரென்று.
 
2.
வாக்காளே பெருமக்களே
என்றார்கள்
வீதி வீதியாய் நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்
விளக்கெரியும் என்றார் ஒருவர்
சாலையில் தார் ஊற்றப்படும் என்றார் ஒருவர்
சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் என்றார் மற்றொருவர்
ஓட்டுக்குப் பணம் என்றார்
காலில் வீழ்ந்தார்கள்
காலைவாரி விட்டார்கள்
ஒவ்வொரு ஐந்தாண்டும்
நானே ஆளவேண்டும் என்று திரண்டார்கள் 
மருத்துவம் கைகூட வில்லை
கல்வி விலையேறிப்போனது
சந்தையில் பெட்ரோல் விலை
எகிறிப்போச்சு
எண்ணெய் விலை பிரச்சனைகள் ஏழைகளுக்கு
நியாயவிலைக்கடையில் பொருளே இல்லை
வந்தாலும் தரமில்லை 
வீதியில் அளித்த வாக்குறுதிகளும்
மறந்து போயாயிற்று
வாக்குறுதி அளித்த சொற்களை
மீண்டும்
வெள்ளை காக்கை பொறுக்கிப் போயாயிற்று 
வாக்களித்த விரல்கள் எல்லாம்
கன்னத்தில் கைவைத்து கவலை கொண்டாயிற்று 
வாழ்க்கை கப்பல் தடம் புரண்டு
தத்தளித்தாயிற்று
வாழ்வைத் தள்ளிவிட ஆள் தேட ஆரம்பித்தாயிற்று 
அதற்குள் ஐந்தாண்டு முடிந்தாயிற்று 
மீண்டும் வாக்காள பெருமக்களே என்கிற குரல் ஒலித்து ஓய்ந்தாயிற்று.
 
3.
அந்திரத்தில் பறந்த 
திசை அறியாத
பறவையொன்று
மண் பார்த்து
மரம் பார்த்து
கீழ் இறங்கியாயிற்று
கிட் கிட் இறகசைவில்
இளைப்பாறியது மரம்
கீச் கீச் அலகு இசையில்
மேகம் தொட்டு
புன்னகைத்தது கிளை
மர நிழலில்
ஒரு பறவையின் காணல்
என்னை இளைப்பாறி
பறக்கச்செய்தது.
 
4.
அவ்வப்பொழுது 
கரைகளில் 
மணல் வீடு கட்டி 
விளையாடிச் செல்கிறது 
குழந்தை
அந்த மணல் 
வீட்டிற்குள் நுழைய
இன்று வரை 
கடலை அழைத்து 
வருகிறது அலை.
 
5.
கருமேகங்களைக் காட்டி
மழையை வரைந்துவிட்டேன்
சூரியனைக் காட்டி
வெப்பத்தை
வரைய முடியவில்லை
என்னால்
பறவையைக் காட்டி
இறகினை வரைந்துவிட்டேன்
இறகினை காட்டி
பறத்தலையும் வரைந்துவிட்டேன்
காற்றை வரைய முடியவில்லை
என்னால்
கடலைக்காட்டி 
நீரை வரைந்துவிட்டேன்
கடலின் சுவையை
வரையமுடியவில்லை
என்னால்
ஈரத்தை வரைய 
நம்மால் முடியும்
என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
 
6.
நேசம்
−−−−−−
கரடி பொம்மையை
அணைத்துக் கொண்டே தூங்கும்
குழந்தைக்கு
முத்தமிட்டாள் அம்மா
தூக்கத்தில்
கரடி பொம்மையை
முத்தமிட்டது குழந்தை
முத்தமிட்டவாறே
குழந்தை சொல்லியது
நீ என் கூட
விளையாடு டெடி
நான் உனக்கு
அம்மா என்றது !
கரடி பொம்மையை
நகர்த்திவிட்டு
குழந்தையின் மீது
தன் கைகளால்
அணைத்தவாறே
கண்ணீரோடு முத்தமிட்டாள்
அம்மா.
 
8.விருந்தினர்கள்
இங்கு வருகையில்
அவர்கள் கூடவே
அவர்கள் ஊரையும்
அழைத்துவந்துவிட்டார்கள்
ஆம்
அவர்கள் வசிக்கும் தெருவைப்பற்றிய கதைகள்
இன்று பெய்த மழையைப் பற்றிய
கதைகள்
அவர்கள் செல்லும் கோவிலைப்பற்றிய கதைகள்
அவர்கள் சார்ந்த வயல்வெளிகளின்
குரல்கள்
சில மனிதர்களைப் பற்றிய கதைகள்
என அவர்கள் ஊரையே கொண்டுவந்தார்கள் இங்கு
இங்கிருந்து
அவர்கள் மட்டும் புறப்பட்டார்கள்.
 
8.
தன் கூட்டத்திலிருந்து
உதிரும் ஓர் பூவுக்காக
மலர்ந்து மலர்ந்து
அஞ்சலி செய்து கொண்டே
இருக்கிறது
காம்பு கழன்று
அந்தரத்திலிருந்து நழுவி வரும்
மற்றுமொரு பூ
 
9.
யாரோ சொல்லி
வீட்டுக்கு எதிரே
நிலைக்கண்ணாடி வைத்தான்
மணி பிளான்டை வைத்தான்
சில நாட்கள் கழித்து
கண்ணார் கழியும் என்று
திருஷ்டி தேங்காயும் வைத்தாயிற்று
திருஷ்டி பொம்மையும் வைத்தாயிற்று
போதாததற்கு கையில்
இடுப்பில் தாயத்து ஒன்றும் கட்டியாயிற்று
கை விரல்களில் பல நிற மோதிரங்களையும் அணிந்தாயிற்று
வலது புற பாதத்திற்கு மேல்
கருப்பு கயிறு கட்டியாயிற்று
இப்படி ஏதேதோ  வைத்தும்
கட்டியும்
எந்த குறையும்
நிவர்த்தி ஆகாததைக் கண்டு
ஜோதிடம் பார்த்து நம்பிக்கையோடு காத்திருந்தான்
எந்த காலத்திலும் மாற்றம் இல்லாமல்
நாட்கள் கடந்தது
வாழ்வும் நகர்ந்தது
வறுமையில் திரிந்த
அவனது வாழ்வு 
இறுதியாக எழுதியது
வாழ்வது கலை
வாழ்வில் தோற்பது இன்னொரு வாழ்வு அவ்வளவுதான்
இந்த சிக்காலான புதிரை விடுவிக்க
பழக்கப்படவில்லை உடல் என்று
எழுதியது வாழ்வு
மீண்டும் யாரோ சொன்னார்கள் என்று வீட்டையே இடித்தான்
புதுவீடு கட்டாமல்
வெளியே பறந்தான்.
Series Navigation    கிண்டாகுருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)