ப.மதியழகன் கவிதைகள்

அர்த்தநாரி

 

 

அவர் பின்னாலேயே

நாய் ஓடியது

அகஸ்மாத்தாக

கல்லெறிய குனிந்தார்

நாய் தன் வாலால்

புட்டத்தை மறைத்துக் கொண்டது

தோட்டத்திலுள்ள

பூவின் வனப்பு

அவரை சுண்டி இழுத்தது

பறவையினங்கள்

விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை

காலனின் சூத்திரம்

இவருக்கு இன்னும்

கைவரவில்லை

வானம்

கறுப்பு ஆடை தரிக்க

பொழியும் மழை

மண்ணை குளிர்விக்க

மரணத்திற்கு பிறகு

நற்சான்றிதழ் அளிப்பவர் யார்

பாற்கடலில் கடைந்தெடுத்த

அமிர்தத்தை

மாறுவேடமணிந்து உண்டவர் யார்

வெற்றுத் தாளுக்கும்

ஓவியத்துக்கும்

வித்தியாசம் தெரியாதா

கண்களுக்கு

ஆதியைக் கண்டேன்

என்ற பிரம்மனுக்கு

கோயில் உண்டா?

 

 

————–

 

இதுவெனவே

 

நீர் எதற்காகும்

குளிக்க

துணி துவைக்க

சாதம் வடிக்க

தாகம் தணிக்க

நெருப்பு எதற்காகும்

வென்னீர் தயாரிக்க

சமையல் தயாராக

இருளை அகற்ற

குளிரை விரட்ட

காற்று எதற்காகும்

சுவாசிக்க

ஒலியலைகளை கடத்த

நிலம் எதற்காகும்

பயிர் விளைய

மரம் வளர

நதி பாய

வெளி எதற்காகும்

ககனவெளியில்

சகலமும் அடக்கம்

எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு

இரவையும்,பகலையும்

ஆடையாக உடுத்திக் கொள்ளும்

கைம்பெண்ணாக

உள்ளத்தில் எழும்

உணர்ச்சிகளை

சம்ஹாரம் செய்து கொள்ளும்.

Series Navigationமாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்