மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன்

(*350க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கவிஞரின் பல கோட்டோவியங்களையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பிலிருந்து 200 கவிதைகளும் கவிஞரின் அற்புதக் கோட்டோவியங்களும் கொண்ட முதல் மின் நூல்அமேஸான்கிண்டில் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நூலிலிருந்து……

சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் மூலம் அவருடைய எழுத்தாக்கங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன; வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

முன்பொரு காலத்திலே, ஒரே ஒரு ஊரிலே, …………………. என்ற மாபெரும் கவிஞர் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை யாருமே கவனிக்கவில்லை……’ என்பதாய்த் தொடங்கும் உண்மைக்கதைகள் எவ்வளவோ கேட்டாயிற்று. அப்படி அங்கலாய்த்தபடியே, அவ்விதமாய்த் தொடர்ந்திருப்பதே இன்றளவுமான, பரவலான நடப்புண்மையாக இருந்துவருகிறது.

கவிஞர் வைதீஸ்வரனுக்கு கவனமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உரிய கவனமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது. (ஒரு படைப்பாளியாக, படைக்கும்போது கிட்டும் மன நிறைவே அவருக்குப் பெரிது என்று உறுதியாகச் சொல்ல முடியும். சக படைப்பாளியாக, எனக்கும்கூட. ஆனால், ஒரு வாசகராக, மேற்குறிப்பிட்ட வருத்தம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது.)

1935-ம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.. இவ்வருடம் அவருடைய பிறந்தநாளின்போது அவருக்கு செய்யும் எளிய மரியாதையாக அவருடைய முழுநிறைவான கவிதைத்தொகுப்பை வெளியிடுவதில் மனநிறை வடைகிறேன். அனுமதியளித்த கவிஞர் வைதீஸ்வரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:

293. எதிராளி

பேசுவதற்கு 
யாராவது இருக்கவேண்டும்
அதில் ஒருவன் பேசாமலிருந்தால்கூட.

பேசுவதைக் கேட்பதற்கு 
ஒருவன் இருந்தாகவேண்டும்
அதுதான் யதார்த்தம்.

தனியாகப் பேசிக்கொள்வது
ஆபத்தில் கொண்டுவிடும்…..
ஆனாலும்
இக்காலத்தில்
கேட்பதற்கு ஆள்
எப்போதும் கிடைப்பதில்லை.

எதையாவது கேட்டுப் பெறுவதற்குத்தான்
எவனும் வருகிறான் _
அசம்பாவித விளைவையும் பொருட்படுத்தாமல்
ஆளில்லாமல்தான்
பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
பல சமயம்….

அஞ்சறைப்பெட்டி உலகத்தில்
மனிதன் அப்படியும் இப்படியுமாக
ஒளிந்து விலையாடுகிரான்.பேச்சுக்கு
இடங்கொடுக்காமல்…. கேட்பதற்கு
தப்பித்துக்கொண்டவனாய்.

முழுநேரப் பொழுதுபோக்காக
யந்திரங்களையும் வாகனங்களையும்
முடுக்கிவிட்டு
ஊரை பயங்கர இரைச்சலாக்கி வைக்கிறான்.

அவனவன் ஆளற்றுப் பேசிக்கொள்ள
வசதியான சுற்றுச்சூழல் இதுதான் போல….
அப்படி இல்லாத நேரத்தில்
சகமனிதன் பேச்சை எப்போதும்
ஒளிந்துகொண்டுதான்
ஒட்டுக் கேட்கிறான்
தோழமை ஒரு அநாகரீகம் போல்.

61. ரிஷிகேஸ்

உச்சி மரத்தில்
பாரமற்றுக் கிடந்த நிலவு
இலைகள் சிலிர்க்க
மெல்ல உருண்டது.

வானம் கொள்ளா வரை படமாய்
விடியல் நிறைய முகில்கள்
மலைகளின் நீலக் கோடுகள்
வானத்தில் கடலை வரைய….

செத்த பின் சிரித்த
ராட்சஸ பற்கலாய்
கங்கை கரையில் கூழாங்கற்கள்

காலத்தை விழுங்கி
வானுக்கும் பூமிக்குமாய் நீண்டு கிடக்கும்
கங்கையின் விஸ்வரூபம்

மலை வாய் தொடங்கி
மண்ணுக்கு தொங்கி வளையும் நாக்குகளாய்
சிவந்த பாதைகள்

அதன் வழி ஒவ்வாத உறுமலுடன்
ஊருக்கு இறங்குகின்ற பேருந்துக்குள்
மூட்டைகளை இன்னும் கைவிடாத
யாத்திரீகர் கூட்டம்

அருகே பக்கவாட்டுப் பைகளில்
நாகரீகமாய் ஆடிக்கொண்டுவரும்
நம்ம ஊர் தண்ணி பாட்டில்.

62. தட்டை மனிதன்

சொர்க்கத்திலேறும் முயற்சியை
தற்காலிகமாய் தள்ளிவைத்தாற்போல்
சாத்தி வைத்த ஏணிகள்
மொட்டை மாடியில்.

காகங்கள் எச்சமிட்டு
தோல்வியை எக்காளமிட்டு
சிறகடிக்கின்றன ஏறாதவரைப் பார்த்து.

அணில்கள் ஏணியே சொர்க்கமென்று நம்பி
ஏறி இறங்கி வாலடிக்கின்றன.

இல்லாத ஒன்றை தேடுவதின்
வியர்த்தத்தால்
உடலும் மனமும் ஓய்ந்து வியர்க்கின்றன.

தருக்கங்கள் சொர்க்கத்தை
மேலும் கீழுமாய் காலுதைத்து
திசைக்கொரு துண்டாய் பந்தாடுகின்றன.

ஏறினால் இறங்கவேண்டுமென்ற நியதியால்
ஏறினால் இறங்காமலிருக்கும்
உபாயங்களையும் மூளை தேடுகின்றது.

எவரும் சீண்டாத ஏணி
நீட்டிப் படுத்துவிட்டது மண்ணில்
குறுக்கும் நெடுக்குமாய் சில
பள்ளங்கள் கடப்பதற்கும்
வாகாய் கிடக்கிறது இப்போது
தன் அர்த்தத்தை தட்டையாக்கிக்கொண்டு

மனிதன் சொர்க்கத்தின் பெயரை
மண்ணில் புதைத்துவிட்டு
நகராமல் நட்டு நிற்கிறான்
வருவது வரட்டுமென்று…

Series Navigationநாடகம் நடக்குது