மனசு

This entry is part 5 of 14 in the series 12 ஜூன் 2022

யூசுப் ராவுத்தர் ரஜித்

நீண்ட காம்புடன் ஒற்றை ரோஜாவை யாராவது தந்தால், ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த ரோஜாவை வைத்து சாப்பாட்டு மேசையில் அதன் கடைசி இதழ் உதிரும்வரை  அழகுபார்ப்போம். அதுவே நாலைந்து ரோஜாவாக இருந்து, அதுவும் நம் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தால், அதைவிடச் சிறந்த பரிசு வேறு எதுவும் இல்லை என்று சொல்வோம். ஒற்றை ரோஜாவை இடது காதுக்கு மேலே செருகிக்கொண்டு ஒரு பெண் நடந்துபோனால், திரும்பிப் பார்க்கலாம். அந்த முகத்தைப் பார்க்க அல்ல. அந்த ரோஜாவைப் பார்க்க. தேக்கா பூக்கடைகளில் எத்தனையோ மாலைகள் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். ரோஜாவை மட்டுமே வைத்துக் கட்டிய மாலை அதிலும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ரோஜாக்களை கலைநயமாகக் கலந்து கட்டிய மாலையை கேட்கும் விலை கொடுத்து வாங்கத் தயாராகவே இருப்பார்கள் பலர். ரோஜாவுக்கு அவ்வளவு மரியாதை சிங்கப்பூரில்.

அதே ரோஜா கேட்பாரற்று மண்டிக் கிடந்தால் எப்படி இருக்கும்? சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டப்ளின் என்ற ஊரை வந்து பாருங்கள். தெருவோரங்கள், நடைபாதைகள், பூங்காக்கள், வீடுகளின் சுற்றுச்சுவர்களின் வெளிப் பகுதிகள், வீட்டின் முகப்புப் பகுதிகள் என்று எங்குபார்த்தாலும் ரோஜாதான். எல்லா நிறங்களிலும். இந்த ரோஜாக்கள் இங்கு, பார்ப்பதற்கு மட்டும்தானோ? ஆம். அதைப் பறிக்கவோ பயன்படுத்தவோ இங்கு ஆட்களே இல்லை. அவைகள் செடிகளிலேயே உதிர்ந்து உதிர்ந்து, பின் புதிய ரோஜாக்களுக்கு வழிவிட்டு காணாமல் போகும்

இந்த ஊரில்தான் இப்போது நான் இருக்கிறேன். காலையில் 3 மனிநேரம், மாலையில் 3 மணிநேரம் என்று இந்தக் காட்சிகளுக்கிடையே, என்னை மறந்து நடப்பதே என் முக்கிய வேலை. பெரிய பெரிய பள்ளத்தாக்குகள், மலைகள், சோலைகள் எல்லாம் அழகோ அழகு. எல்லாத் திசைகளிலும் வானம் மலை முகடுகளில் இணைகின்றன. பிடித்த இடத்தில்  நின்றுகொண்டு எட்டுத் திசைகளிலும் பார்த்தால், காணும் ஒவ்வொரு காட்சியும் கம்பீரமான அழகு, ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத அழகு. ஓர் ஊரையே அல்லவா பூங்காவனமாக சோலையாக, ஆக்கியிருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகளில் இதுபோன்ற காட்சிகளை வண்ணஓவியமாக சட்டமிட்டு தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஓவியங்கள் அழகான கற்பனை என்று அப்போது நினைத்தேன். அவைகளெல்லாம் கற்பனையல்ல. உண்மைதான் என்று இந்த டப்ளின் நிரூபிக்கிறது. பள்ளத்தாக்குகளில் மான்கள் மேய்கின்றன. கிட்டப்போக முடியாது. ‘வனவிலங்களின் சரணாலயம். அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற எச்சரிக்கை பயமுறுத்துகிறது. சாலையோரங்களில் வான்கோழிகள் தன் குஞ்சுகளுடன் மேய்கின்றன. அவைகள் எந்தத் தனிமனிதருக்கும் சொந்தமானதல்ல. காட்டுக் கோழிகள். சாலையின் குறுக்கே அவ்வப்போது நமக்கு முன்னால் முயல்கள் கடக்கின்றன. நம்மைப் பார்த்ததும் புதர்களில் ஒளிந்துகொண்டு திருட்டுத் தனமாய்ப் பார்க்கின்றன. அதன் பளிங்குக் கண்கள் பளபளக்கின்றன.

சிங்கப்பூரில் என்டியூஸியிலும், கோல்ட் ஸ்டோரோஜிலும் நாம் அதிக விலைகொடுத்து வாங்கும் செர்ரி, ஸ்ட்ராபெரி, பீச், ப்ளம்ஸ் பழங்கள், மரங்களில் கொத்துக்கொத்தாய்த் தொங்குவதை இங்கே காணலாம். இந்த மரங்கள், எல்லார் வீடுகளின் கொல்லைப்புறத்தில், சுற்றுச்சுவருக்கு உள் அடங்கலாக காணப்படுகின்றன. இந்தப் பழங்களையெல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி எழாமல் இல்லை. நிச்சயமாக அவர்களால் சாப்பிட்டு முடிக்க முடியாது. நண்பர்கள் வீடுகளுக்கு நாம் பழங்கள் வாங்கிப்போவது மாதிரி, இங்கே வீட்டுப் பழங்களை நண்பர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த மரங்களையெல்லாம் பார்த்தபடிதான் காலையும் மாலையும் 3 மணிநேரம் நடக்கிறேன். பரந்த சோலை வெளிகள். மனிதர்களைப் பார்ப்பது அரிது. எப்போதாவது யாராவது ஒருவர் செல்லநாயோடு வருவதைப் பார்க்கலாம். ஒரு சில கார்கள் நம்மைக் கடந்துபோவதைப் பார்க்கலாம். சிலர் மெதுவோட்டம் ஓடுவார்கள். நம்மைக் கடக்கும்போது ஏதோ தெரிந்த மனிதரைப் பார்ப்பதுபோல் புன்சிரிப்புடன் காலைவணக்கம் சொல்வார்கள். எல்லாரும் சாலைகளைப் பார்த்துத்தான் நடப்பார்கள். ஓடுவார்கள். நான் மட்டும்தான் வீடுகளிலுள்ள மரங்களைப் பார்த்தபடி நடக்கிறேன். மரத்திலிருந்து பறித்து சாப்பிட்டிருக்கிறாயா? சாப்பிட்டுப்பார். அவர்களுக்கு இந்தப் பழங்கள் அனாவசியம். அவர்கள் பார்த்தால், அவர்களே கூட பறித்துத் தருவார்கள். ம்… பறி.. பறி.. என் மனசு ஆசை காட்டியது. அதில் காய்த்துத் தொங்கும் பழங்கள் சுற்றுச்சுவருக்கு வெளியே எங்காவது எட்டிப் பார்க்கலாம், அதைப் பறிக்கலாம் என்று எதிர்பார்த்தேதான் நடந்தேன்.

அன்றுதான் ஒரு வீட்டில் கண்டேன். அந்த வீட்டில் இருந்த பீச் பழ மரக்கிளைகள் கொத்துக் கொத்தாக பழங்களுடன் சுற்றுச்சுவருக்கு வெளியே தலையை நீட்டிக் கொண்டிருந்தன. அந்த சுற்றுச்சுவருக்கு வெளியே ரோஜாக்கள் புதர்களாக மண்டிக்கிடக்கின்றன. அவைகளைக் கடந்துதான் அந்தப் பழங்களை எட்டமுடியும். அந்தப் பழங்கள் என்னை நகரவிடவில்லை. பாரதிதாசன் சொன்னானே, ‘கேட்பாரற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா’. அது இதுதானோ? சுற்றிலும் யாருமே இல்லை. அதைப் பறிப்பது சரியா என்பதைக்கூட என் அறிவு சிந்திக்க மனசு விடவில்லை.

இதோ அந்த ரோஜாப்புதர்களைத் தாண்டிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். ஆள்நடமாட்டமே இல்லை. அந்தப் பழங்களை நெருங்கிவிட்டேன். பழத்தைத் தொட்டதும் உள்ளங்கையில் விழுந்துவிட்டது. ஒரு கைக்குள் அடங்காத கனி. இரண்டு பழங்களைப் பறித்தேன். ஒன்றை என் கால்சட்டைப் பைக்குள் மெதுவாக ஒளித்தேன். இன்னொன்றை கடிப்பதற்குத் தயாராய் கையில் வைத்துக் கொண்டேன். மீண்டும் சுற்றிப் பார்த்தேன். சற்று தூரத்தில் ஒருவர் தன் செல்லநாயுடன் வந்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட என் வயதுக்காரர். நான் அவரைப் பார்த்தபோது அவர் என்னைப் பார்க்கவில்லை. அதற்குமுன் பறிக்கும்போது பார்த்திருப்பாரோ? பார்த்திருக்கலாம் அதனாலென்ன? மனசு சமாதானம் சொன்னது. ஆனாலும் ஒரு பயம் கவ்விக்கொண்டது. அப்போதுதான் அங்கே காணப்பட்ட ஒரு செய்திப் பலகையைப் பார்த்தேன். ‘இந்தப் பகுதி கண்காணிக்கப்படுகிறது. அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. நாம் அத்துமீறிவிட்டோமா? யாராவது நம்மைத் தொடர்கிறார்களா? ஜாக்கெட்டுக்குள்ளிருந்த என் கைவிரல்கள் சில்லிட்டன. மனம் தன் வேலையை முடித்துவிட்ட திருப்தியில் மௌனம் காத்தது. அந்த இன்னொரு கனியையும் கால்சட்டைப் பைக்குள் ஒளித்துக்கொண்டு அந்த ரோஜாப்புதரிலிருந்து வெளியேறினேன். அந்த வீட்டின் முகப்பைக் கடந்துதான் நான் செல்லவேண்டும். நான் பாதையை மாற்றமுடியாது. ‘இப்படிப்போனால் அப்படி வந்துவிடலாம்’ என்ற கணக்கெல்லாம் இங்கு செல்லாது. அடையாளம் வைத்துக் கொண்டுதான் நடக்கவேண்டும். வேறு பாதை மாறினால், இந்த இடத்தில் நிற்கிறேன், வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று வீட்டுக்குத் தெரிவிக்கவேண்டும். அது தேவையா? அந்த முகப்பை நான் கவனித்தேன். அது ஓர் இந்தியரின் வீடுதான். இங்கு எல்லா வீடுகளிலுமே கதவுகள், சாளரங்கள் எல்லாம் காற்றுப் புகாமல் அடைக்கப்பட்டுதான் இருக்கும். வீடு மொத்தமும் வெப்பக்கட்டுப்பாட்டில் இருக்கும். நிலைக்கதவின் மேல்புரம் நெகிழி மாவிலைத் தோரணம் தொங்கியது. அதில் சிவன், முருகன், விநாயகர் படங்கள் இருந்தன. அட! தமிழராகத்தான் இருக்கவேண்டும்.

திரும்பிப் பார்த்தேன். செல்லநாயோடு வந்தவர் எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தார். இந்த வீட்டுக்காரராய்  இருப்பாரோ? மீண்டும் கேட்டுக்கொண்டேன். பழம் பறித்ததை அவர் பார்த்திருப்பாரோ? மனசு சொன்னதை ஏன் கேட்டேன்? என்னை நானே அறைந்துகொண்டேன். தவறு என்று தெரிந்தும் ஏன் செய்தேன்? முட்டாள்.. முட்டாள். மனசு அப்படித்தான் சொல்லும். உனக்கு அறிவில்லையா? என்று மீண்டும் திட்டிக்கொண்டேன். எதிரே ஒருவர் மெதுவோட்டத்தில் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். சற்று இளையர். தமிழர்போல்தான் இருந்தார். இருவருமே அந்த வீட்டுக்காரர்களோ? நடையை கொஞ்சம் வேகப்படுத்தினேன். திரும்பிப்பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். அந்த வீட்டுக்கு முன் இருவரும் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் பறித்ததைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்களோ? ஆம் என்று மனம் சிரித்தது. இது என்னடா பெரிய சனியனாக இருக்கிறது. ஏதோ ஒரு தைரியத்தில் ஏதோ பெரிய சாதனையைச் செய்துவிட்டதுபோல் இந்த முட்டாள்தனமான காரியத்தை ஏன் செய்தேன். தவறு என்றுதான் தெரியுமே. மடையா உனக்கு வயது 74. மனசு சொன்னாலும் செய்யலாமா? மனம் மௌனித்தது. இனிமேல் என்ன நடந்தாலும் சந்திக்கவேண்டியதுதான. முடிவெடுத்தேன். வேறு வழி இல்லை. மனக்குரல் என்னை புரட்டி எடுத்தது. வேகவேகமாக நடந்து அடுத்த திருப்பத்தில் நின்று இரண்டு பழங்களையும் கடித்து, ருசித்து முடித்தேன். என்ன இருந்தாலும் திருட்டுப்பழத்திற்கு ஒரு ருசிதான். சின்ன வயதில் கொலுசம்மா வீட்டுச் சுவரேறி, கொய்யாப்பழம் பறித்த ஞாபகம் வந்தது. வரும்டா வரும். மீண்டும் அந்தப் பாதையில்தான் வரவேண்டும். அந்த வீட்டு முகப்பைக் கடக்கவேண்டும். வேறு வழியில்லை. திரும்பினேன். நெருங்கும்போது தெரிந்தது. அந்த இருவரும் அந்த வீட்டின் முகப்பில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள் இப்போது ஒரு பெண் சேர்ந்துகொண்டார். ஒரு சிறுமியும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். ஏன் குடும்பத்தோடு நிற்கிறார்கள்?

மரியாதையாகப் பேசுவதுபோல் பேசி, வீட்டுக்குள் அழைத்துச்சென்று காவல்துறைக்குச் சொல்லிவிடுவார்களோ? சே மடையா இரண்டு பழங்கள் பறித்தது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? மனமே தண்டித்தது மனமே சமாதானம் சொன்னது. இப்படிப் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டலாமா மனசே. மீண்டும் முடிவு செய்தேன். சமாளிப்போம். நெருங்கினேன். அந்த மெதுவோட்டம் ஓடியவரின் மனைவியாகத்தான் அந்தப் பெண் இருக்கவேண்டும் அந்த சிறுமி மகளாக இருக்கலாம். நாயோடு வந்தவர் அந்தப் பெண்ணின் அப்பாவாக இருக்கலாம். அவர்கள் யாராக இருந்தாலென்ன? அவர்கள் ஏதாவது கேட்டால் என்ன பேசவேண்டும் என்று யோசிடா? சிங்கப்பூரிலிருந்து வந்து இன்று இரண்டு பழங்களைத் திருடியிருக்கிறாய். அதுவும் அமெரிக்காவில். அதுவும் 74 வயதில். ஒரு பேராசிரியர் என்று வேறு சொல்லிக்கொள்கிறாய். மனசு சாட்டையால் அடித்தது. அவர்களை நெருங்கினேன்.

அந்த மெதுவோட்டம் புன்னகையுடன் காலைவணக்கம் சொன்னது. அந்தப் பெண் என்னிடம் ஏதோ பேசப்போகிறார். அவர் மெதுவாக என்னை நெருங்கினார்.

‘வணக்கம் அப்பா’

அட தமிழ். அப்பாவா? திணறினேன். அந்தப் பெண் தொடர்ந்தார்

‘நீங்கள் ரிஃபாயா அப்பாதானே? சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறீர்கள்.’

‘ஹி ஹி…ஆமாம்’

ரிஃபாயா எவ்வளவு நல்ல பிள்ளை. அவருடைய அப்பா நீங்கள். எப்படி கண்ணியமில்லாமல் பழத்தப் பறிச்சீங்க என்று கேட்கப்போகிறாரோ? அவர்கள் கேட்காவிட்டாலும் மனசு என்னைக்கேட்டுச் சாகடிக்கிறதே.  நல்லவேளை. அப்படியெல்லாம் கேட்கவில்லை. அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.

‘நானும் ரிஃபாயாவும் ஒரே பள்ளியில்தான் வேலை பார்க்கிறோம். நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று ரிஃபாயா சொன்னார். ரிஃபாயாவுடன் உங்களை பல புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பார்த்தவுடன் நீங்கள்தான் ரிஃபாயா அப்பா என்று எல்லாருக்கும் சொல்லிவிட்டேன். இன்னிக்கு ஒங்களப் பாக்க வரலாம்னு இருந்தோம். அதுக்குள்ள இவரு விக்ரம் படத்துக்கு டிக்கட் வாங்கிட்டு வந்துட்டாரு. நாங்க நாளக்கி வர்ரோம். இந்தப் பையில எங்க வீட்ல காச்ச பீச் பழங்கள் இருக்கு. ரிஃபாயாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒங்களுக்கும் பிடிக்கும். இந்தப் பையெ ரிஃபாயாக்கிட்ட கொடுத்திடுங்க. நாங்க நாளக்கி வர்றோம். பறிச்சிட்டோம். ஒடனே சாப்பிட்டா நல்லாயிருக்கும்’

எனக்கும் பிடிக்கும்னு எப்படிச் சொல்றாங்க. பறிச்சதப் பாத்திருப்பாங்களோ. இப்பத்தான் பறிச்சோம்ங்கிறாங்க. நான் ரெண்டு பழம் திருடினேனே, சே நானே எனக்குத் திருட்டுப்பட்டம் சூட்டுவதா? …..பறிச்சேனே. அப்போதான் அவங்களும் பறிச்சிருப்பாங்களோ? சே இது என்ன விரட்டி விரட்டி அடிக்குது. அவங்க பாத்தே இருக்கட்டுமே அதுனால இப்ப என்னா? ஒரு நல்லவன்,  அதுவும் வயதானவன், அதுவும் இங்கே இருக்குற பொண்ணுக்கு அப்பனா இருக்கிறவன், அதுவும் சிங்கப்பூர்லேருந்து வந்தவன், இப்படிச் செய்திருக்கவே கூடாது. மனசு சாட்டையைச் சுழற்றி வாயால் திட்டியது.  ‘செஞ்சாச்சு இப்ப என்னா? இப்ப என்னா?.’ மனத்தை அதட்டினேன்.  ‘ரொம்ப தைரியமா பேசுவேடா. ஏண்டா செஞ்சே?’ மனசு திருப்பித் திட்டியது. ‘சாரிடா. இப்ப என்னதான் செய்யச்சொல்றே?’ மனசிடமே சரணடைந்தேன்.

‘என்னப்பா கேட்டேனே. தப்பா கேட்டுட்டேனோ. சாரிப்பா. நாளக்கி நாங்க வரும்போது கொண்டு வர்றோம்’

என்று சொன்னதைக் கேட்டு சுயநினைவுக்கு வந்தேன்.

‘இதுல என்னம்மா தப்புருக்கு. வீட்டுக்குத்தானே போறேன். ஹி..ஹி…’

பையை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று நடந்தேன். அடுத்த நாள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாரே. வீட்டுக்கு வந்து சொன்னாலும் சொல்லலாம். மீண்டும் மனசின் குரல். அடப்பாவி மனசே. தெரியாமச் செஞ்சிட்டேண்டா.  என்னெக் கொல்லாதேடா. இனிமே செய்யமாட்டேண்டா. மனசை சமாதானப்படுத்தினேன்.

அடுத்த நாள் அவர்கள் சொன்னபடியே வந்துவிட்டார்கள்.

‘அப்பா, கோமளா வந்திருக்காங்க. நேத்து பழம் தந்தாங்களே அவுங்க. கீழே வர்றீங்களா?’

நான் வீட்டில் இல்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது. கீழே இறங்கினேன். கோமளாவும் அவர் கணவரும் வந்திருந்தார்கள். அவர்களின் மகளும்தான். என்னைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். மரியாதை இருக்கிறது. நான் பழத்தைப் பறித்ததை இவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஏன் பார்த்துவிட்டு மரியாதை செலுத்துவதுபோல் நடிக்கக்கூடாதோ? எந்த வகையிலும் நான் சந்தோசப்பட்டுவிடாமல் மனசு பார்த்துக் கொண்டது. அங்கிருந்தால் வேறு ஏதாவது பேச்சு வரும். ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று சோழர் காலத்துப் பொய்யைச் சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினேன். அவர்கள் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதை நான் ஒட்டுக்கேட்டதுதான் என் முக்கியமான வேலை. அவர்கள் பேசியதை எவ்வளவு முயன்றும் கேட்க முடியவில்லை. ஒருவழியாக அந்த கோமளா விடை பெற்றுச் சென்றார். அவர்கள்  காரில் ஏறிச் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டேன். கீழே இறங்கினேன். மகளிடம் கேட்டேன்

‘அவுங்க போயிட்டாங்களாம்மா?’

‘போயிட்டாங்கப்பா.’

‘அவுங்க கொடுத்தாங்கன்னு நானும் வாங்கிட்டு வந்துட்டேன். அதுபத்தி ஏதும் சொன்னாங்களா?’

‘ஆமாம். ஒரு பேராசிரியரிடம் இப்படிக் கொடுத்துவிட்டோமே’ என்று வருத்தப்பட்டார்கள்.

‘ஓ ஹி..ஹி… அப்படியா? வேறு ஏதாச்சும் சொன்னாங்களா?’

‘ஏங்கத்தா தொனத்தொனங்கிறீங்க? வேறே என்ன சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்குறீங்க?’

ஆமடா. நீ திருடன்னுதான் அவங்க சொல்லியிருக்கனும். அதெக் கேட்டு உன் மகள் இப்புடி அசிங்கப்படுத்திட்டாரேன்னு வருத்தப்பட்டிருக்கனும். அவங்க ஒனக்கிட்ட அதெ எப்புடிச் சொல்லுவாங்க? நீ திருடந்தான் திருடந்தான்’

மனசு போட்ட சத்தத்தில் அரண்டுபோய் தட்டுத் தடுமாறி மாடி ஏறினேன்.  

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationசொற்களின் சண்டைதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *