மனச்சோர்வு( Depression )

Spread the love

டாக்டர் ஜி. ஜான்சன்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த ” டிப்ரஷன் “.என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது.
” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் அந்த கவலையை மறந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறோம்.அன்புக்குரியவர்களை பிரிய நேர்ந்தால் அல்லது அவர்களை மரணம் காரணமாக நிரந்தரமாக இழக்க நேர்ந்தாலும்கூட கொஞ்ச நாட்கள் கவலைப்பட்டு பின்பு காலப்போக்கில் அதிலிருந்து விடுபடுகிறோம்.இத்தகைய தற்காலிக கவலைப் படுவதை மனநோய் என்று சொல்லமுடியாது.

அறிகுறிகள்

மனச்சோர்வு என்பது ஜனத்தொகையில் 15 சதவிகிதத்தினருக்கு உண்டாகிறது. இதை சில அறிகுறிகளை வைத்து நிர்ணயம் செய்யலாம். பின்வரும் அறிகுறிகளில் ஐந்துக்கு மேல் இரண்டு வாரங்களுக்குமேல் காணப்பட்டால் அதை மனச்சோர்வு எனலாம்.
* மனச்சோர்வு அல்லது மன அழுத்தம்.
* எதிலும் ஆர்வமின்மை அல்லது கேளிக்கைகளில் பங்கு பெறாத நிலை.
* பசியின்மை அல்லது எடை குறைதல்.
* தூக்கமின்மை அல்லது அதிகம் தூங்குதல்.
* களைப்பு அல்லது சக்தியின்மை.
* அமைதியின்மை அல்லது சோம்பல்
* குற்ற உணர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
* முடிவெடுப்பதில் தடுமாற்றம்.
* அடிக்கடி சாவு பற்றியும் தற்கொலை பற்றியும் எண்ணம்.
இவை தவிர மனச்சோர்வு உள்ளவர்கள் பாலியல் உறவில் நாட்டம் இல்லாதவர்களாகவும், அதிகம் நண்பர்களிடம் பழகாதவர்களாகவும், மதுவை நாடுபவர்களாகவும் இருக்கலாம்.

முழுமையான மனச்சோர்வால் பாதிப்புக்கு உள்ளான சிலருக்கு மனநோய்களில் உண்டாகும் டெலூசன், ஹாலுசினேசன் என்று கூறப்படும் மருட்சி , மாயத் தோற்றங்கள் உண்டாகலாம். குறிப்பாக வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில அதிர்ச்சியான சம்பவங்கள் மனச்சோர்வை உண்டுபண்ணினாலும், ஒருவரின் மரபணு காரணமாகவும் அதற்கு அளவுக்கு அதிகமான மனச்சோர்வை உண்டுபண்ணலாம். மனச்சோர்வு இதனால் பரம்பரை காரணமாகவும் உண்டாகலாம்.
பெரும்பாலும் மனச்சோர்வு நடுத்தர வயதில் ஏற்படும். சிலருக்கு இது சில மாதங்களிலிருந்து ஒரு வருடத்தில் தானாக குறைந்துவிடும். ஆனால் வேறு சிலருக்கோ மனச்சோர்வு தொடர்ந்து திரும்பத் திரும்ப ஏற்படலாம். முழுமையான சிகிச்சைப் பெறாமல் பாதியில் நிறுத்துபவர்களுக்கும் இதே நிலைதான்.
மனச்சோர்வும் தற்கொலையும்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் 4 முதல் 5 சதவிகிதத்தினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு வருடத்தில் மருத்துவரைப் பார்த்திருப்பார்கள். இதனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும் மருத்துவர்கள் அவர்களிடம் பேசி அவர்களிடம் தற்கொலை பற்றிய எண்ணம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வார்கள்.

மனச்சோர்வும் வேறு நோய்களும்

பல்வேறு நீண்ட நாட்கள் கொண்ட நோய்களாலும், தீராத நோய்களாலும், வலியை உண்டுபண்ணக்கூடிய நோய்களாலும்கூட மனச்சோர்வு உண்டாகலாம்.அவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளும் மனச்சோர்வை அதிகமாகலாம்.
* இரத்தக் கொதிப்பு மாத்திரைகள், கொழுப்பு குறைக்கும் மாத்திரைகள், இருதய நோய் தொடர்புடைய மாத்திரைகள் மனச்சோர்வை உண்டுபண்ணலாம்.
* ஸ்டீராய்ட் மாத்திரைகள், எண்டிபையாட்டிக் மாத்திரைகள், வலிப்பு மாத்திரைகள், வலி குறைக்கும் மாத்திரைகளும் மனச்சோர்வை உண்டுபண்ணலாம்.
* 20 முதல் 30 சதவிகித இருதய நோயாளிகள் மனச்சோர்வை எதிர்நோக்கலாம்.
* புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவிகிதத்தினருக்கு மனச்சோர்வு உண்டாகலாம்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பின் அளவுக்கு ஏற்ப மனச்சோர்வு உண்டாகும்.
* தைராய்டு சுரப்பி கோளாறிலும் மனச்சோர்வு உண்டாகும்.

சிகிச்சை முறைகள்

தற்கொலை எண்ணங்கள் கொண்ட நோயாளிகள் மனோவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்.அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெறுவதே நல்லது.
மனச்சோர்வைக் குணமாக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உட்கொள்ளலாம்.அதில் குணம் காணாவிடில் மனோவியல் மருத்துவரை நடுவதே நல்லது.
மனச்சோர்வு உள்ளவர்கள் மனோவியல் மருத்துவரைப் பார்ப்பதில் அச்சப் படவேண்டாம். தங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதாக மற்றவர் நினைப்பார்கள் என்று காலத்தை வீணாக்கவேண்டாம். இது மனம் தொடர்புடைய ஒரு நோய் என்பதை ஏற்று இதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொள்வதே நல்லது.

( முடிந்தது )

Series Navigationபிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது   என்பது பற்றிப் புதிய யூகிப்புஎன் வீட்டுத் தோட்டத்தில்