மனமென்னும் மாயம்

               

                  எஸ்.ஜெயஸ்ரீ

     ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழி வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில்i வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “சுழலும் சக்கரங்கள்’. இதன் மூல ஆசிரியர் ரியுனொசுகே அகுதாகவா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கே..கணேஷ்ராம். அகுதாகவா பெரும் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என முன்னுரையில் ஹாருகி முரகாமி குறிப்பிட்டுள்ளார்.அந்த மனநிலையை வெல்வதற்கோ, அல்லது அந்த மனநிலையோடோ அகுதாகவா பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஜப்பானிய இலக்கிய உலகில் ஒரு தனி நட்சத்திரமாக திகழ்ந்தார். அவர் தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் தன்னை மாய்த்துக் கொண்டார். பனிரெண்டு வருடங்களே எழுதியிருக்கிறார். ஆனாலும், ஜப்பானிய உலகில் இன்றளவும் போற்றப்படுகிறார். 

        தலைப்புக் கதையான சுழலும் சக்கரங்கள் மனநோயால் பீடிக்கப்பட்டவன் ஒருவனுடைய நாள் நகர்வதை விவரிக்கிறது. நம் நாட்டில் அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படாத விஷயம் மனநோய். மனநோய் என்றால் பைத்தியம் என்றோ பித்து என்று மட்டுமே சொல்லி ஒதுக்கி வைத்து விடுகிறோம். பிறழ் மன நோய் அல்லது இரட்டை மனநிலை நோய் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறோம். அதை ஒரு சினிமாதானே என்று கடந்து போகிறோம். ஒரு புறம் பைத்தியம் என்று ஒதுக்குகிறோம்; மறு புறம் வெறும் காட்சியாக கடந்து போகிறோம். இன்னும் ஒரு புறமோ மாந்தீரிகம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று முழுக்க முழுக்க மூடத்தனமாகவே நம்பிக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பேய் ஓட்டுகிறோம், சூனியம் எடுக்கிறோம் என்றெல்லாம் மக்கள் அலைவதைக் காண முடிகிறது. ஆனால். மனப் பிறழ்வு என்பதும் ஒரு நோய் என்ற புரிதல் நம் தேசத்தில் வரவேயில்லை. மேலை நாடுகளில் இது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உடலுக்கு வரும் நோய்களை மருந்து மாத்திரைகளால் தீர்க்க முடியும் என்பது போல மனநோயும் சரி செய்து கொள்ள முடிகிற நோய்தான் என்ற புரிதல் நம்மிடம் இல்லவே இல்லை. இப்படியும் இருக்கிறது என்று சொல்வதாலேயே இந்தக் கதை வாசகர் மனதைப் பிடித்து இழுத்து வைக்கிறது.

இந்தக் கதையின் நாயகன், இது போல ஒரு இருமனநிலைப் பிறழ்வால் அவஸ்தைப்படுகிறான். அவனுக்கே அவனுள் நடக்கும் மாற்றங்கள் தெரிகிறது. O.C.D(Obcessive Compulsory Disorder) என்ற வகை மன நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கே அவர்கள் மனது வேறு சிந்தனைகளில் போகிறது என்பது புரிந்துவிடும். அதை மாற்றிக் கொள்வதற்காக வேறு வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முனைவார்கள். ஆனால், எந்த வேலையையும் அவர்களால் பொருந்திச் செய்யவும் முடியாது. யாரோ காதருகில் பேசுவது போலவே இருக்கும். இத்தனை கஷ்டங்களோடும் இவர்கள் ஒரு தினசரி வாழ்க்கையும் வாழ்கிறார்கள். இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டவர்களால், இவற்றை இந்தக் கதையில் மிகத் துல்லியமாக காட்டுகிறார் அகுதாகவோ என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  ஏதோ அவர்கள் மனதைப் பாதிக்கும் விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது, அதனால் அவர்கள் மனம் நோயால் பீடிக்கப்படுகிறது. நடந்த விஷயங்களே மீண்டும் மீண்டும் சுழலும் சக்கரங்களாக அவர்களை மனதை ஆட்டி வைக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் பிரக்ஞையும் அவர்களூக்கு இருக்கிறது. இதற்கு மேலும் அவர்களுக்குத் தேவை, அவர்களை வித்தியாசமான மனிதர்களாகப் பார்க்காமல், அவர்கள் மேல் காட்டப்படும் பரிவும், பாசமும், அன்பும்தான். கதாநாயகன் மேல் அன்பு காட்டும் கிழவன் அவனுடன் பரிவோடு பேசுகிறான். அப்போது சொல்கிறான். கடவுளை நம்பு என்று. ஆனால்., அவனோ அவனால் சாத்தானை நம்ப முடிகிறது என்று. அப்போது கிழவன், நிழலை நம்பும் உன்னால் ஒளியை ஏன் நம்ப முடியாது என்று கேட்கிறான். அதற்கு அவன் ஒளியற்ற இருட்டு என்று ஒன்று இருக்கிறது என்கிறான். இதுதான் நோயால் பீடிக்கப்பட்டவரின் மனநிலை. இதை மாற்றுவதற்கு அவர்களுக்கு அன்பும், பொறுமையும் மட்டுமே தேவை. ஒரு மனநோயாளியின் வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  அவர்களுக்கான பிடித்த நிறம், பிடிக்காத நிறம், அவர்களை அச்சமூட்டும் நிறம் என கதை நம்மோடு ஒரு உரையாடலையே நிகழ்த்துகிறது. இப்படிப்பட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இந்தக் கதை உதவி செய்யும்.

    ராஷோமோன் என்றொரு கதை. வறுமையின் கோரத்தை மிகச் சிறப்பாகக் காட்டும் கதை. வேலையுமில்லாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல், செத்து விழும் பிணங்களை வெட்ட வெளியில் எறிந்து விடும் ஒரு தேசம். அப்படி வீசப்படும் பிணங்களின் உடைகளைக் களைந்தும், அவற்றின் தலை முடியைப் பிய்த்து விற்றும் பிழைப்பு நடத்தும் ஒரு சித்திரத்தை இந்தக் கதையில் தீட்டிக் காட்டுகிறார் அகுதாகவோ. ஒரு பெண் பிணத்தின் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒரு கிழவியை மற்றொருவன் அடித்துக் கீழே தள்ளுகிறான். அவள் செய்வது தவறு என்கிறான். அதற்கு அந்தக் கிழவி, இறந்து கிடப்பவள், பாம்புக் கறியை மீன் கறி என்று பொய் சொல்லி விற்றவள். அதனால், அவளுடைய முடியை தான் பிய்த்தெடுப்பது தவறில்லை என்கிறாள். அவளை அடித்து அவளது ஆடையைப் பறித்துக் கொண்டு அவளை நிர்வாணமாக்கிச் செல்கிறான் அவன். அந்தக் கிழவி, தன்னுடைய நீண்ட நரைத்த தலைமுடியுடன் அவன் சென்ற பாதையைப் பார்த்து நிற்கிறாள். இந்தக் கதை ஒரு புறம் வறுமையின் தாக்கத்தைச் சொல்வது போல் இருந்தாலும், நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும் என்கின்ற தத்துவத்தைச் சொல்வதாகவே இருக்கிறது.

         சிலந்தி இழை என்ற கதை ஏதோ குழந்தைகளுக்குச் சொல்வது போல உள்ளது. ஆனால், ஓர் அழகான தத்துவத்தை வாசிக்கும் அனைவருக்கும் கடத்துகிறார். வாழ்க்கையில் நல்லதே செய்யாத ஒருவனுக்கு, அவன் ஒரே ஒரு முறை ஒரு பூச்சியைக் கொல்லாமல் விட்டதற்காக, அவனை நரகக் குழியிலிருந்து தப்புவிக்க முயல்கிறார் ஒரு புத்த பிட்ஷீ. ஒரு சிலந்தி இழையைப் பிடித்துக் கொண்டு அவன் வெகுதூரம் மேலே ஏறி விடுகிறான். தான் எவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிறான். அப்போது, அவன் தான் வெகு தொலைவு கடந்து தப்பி விட்டோம் என்று நினைப்பதற்குப் பதிலாக, இன்னும் அந்த நூலிழையைப் பிடித்துக் கொண்டு நிறைய பேர் ஏறி வருவதைப் பார்த்து, இது தனக்கு மட்டுமானது, எப்படி மற்றவர்கள் ஏறி வரலாம் என்று சத்தமிடுகிறான். அந்த நொடியில் அந்தக் கயிறு அறுந்துபடுகிறது. அவன் மீண்டும் நரகக் குழிக்குப் போகிறான். ஒரு சிறிய நன்மை செய்ததற்காக தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை அவன் தான் பெற்ற பேறாக ஏன் கருதவில்லை? தான் மட்டுமே பிழைக்க வேண்டும், மற்றவர்கள் கூடாது என்று ஏன் அவன் நினைக்க வேண்டும்?

       மனநோய் என்று மருந்துகள் எடுத்துக் கொள்பவன் மட்டுமா உண்மையிலேயே மனநோயாளி? அடுத்தவரைச் சுரண்டி பிழைக்க வேண்டும் என்பது ஒரு வித மனநோய். பிறர் கெட, தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பது ஒரு மனநோய். மனநோயால் பீடிக்கப்பட்டவனுக்கு மட்டுமா காதில் ஏதோ குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது? அவன் கண்கள் முன்னால் மட்டுமா சக்கரங்கள் சுழல்கின்றன? ஒவ்வொருவரும் ஒரு மாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். அன்பும், கருணையும், நேர்மையும், விட்டுக் கொடுத்தலும்தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டு

வாழுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கத் தவறுகிறோம்.

       ஞானி என்ற கதையும் ஒரு தத்துவ விசாரத்தைச் சொல்வதாகவே இருக்கிறது. சமையல் தொழில் தெரிந்த ஒருவன் ஞானியாக வேண்டும் என்று விரும்புகிறான். ஞானி என்பது என்பது ஏதோ ஒரு நிலை என்றுதான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கந்தர் அனுபூதியில் ஒரு வரி “ சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலமே” என்பது. என் முயற்சி அல்ல எதுவுமே என்ற பற்றற்ற நிலை எப்போது ஒருவனுக்கு வருகிறதோ அப்போது அவன் ஞானியாகிறான்.  இந்தக் கதையில் கொன்சுகே பைன் மரத்தில் ஏறி இரு கைகளையும் விட்டு விடுவது ஒரு குறியீடுதான். மனிதப் பிரயத்தனங்களின் பகட்டும் பேரிரைச்சலும் மறைந்து விடும் தன்மையுடையது என்று உணர்ந்தேன் என்று கொன்சுகே உணர்ந்து கொண்டதால்தான் அவனால் பைன் மரத்தில் ஏறவும் முடிந்தது; கையையும் விட முடிந்தது.

      மூங்கில் காட்டினுள்ளே கதை ஒரு திகில் கதை போலவும் உள்ளது. அது ஒரு வித்தியாசமான நடையில் அமைந்துள்ளதும் சுவாரசியமானது. பெண் என்பவளை ஆள நினைக்கும் ஆண்களுக்கிடையேயான போட்டியில்

பெண் ஒரு பகடைக்காயாகிறாள். அப்படி ஆக்குகிற ஆண்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மரணத்தைத்தான் ஏற்கிறார்கள். மூங்கில் வளைந்து கொடுக்கக் கூடியது. அதில் இருக்கும் சிறிய துளைகள் வழியே மெல்லிய காற்று நுழையும்போது அழகிய இசையாகிறது. அதே மூங்கிலில் ஒரு தீப்பொறி படும்போது அது நெருப்புப் பற்றி எரிகிறது. இந்தக்

கதையை வாசிக்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. பெண் என்பவள் அழகான் மூங்கில்.

         இப்படி தொகுப்பின் அத்தனை கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமாகவும், உள்மனச் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருப்பது தொகுப்பின் சிறப்பு.அப்படிப்பட்ட சிறுகதைகளைத் தெரிவு செய்து மொழிபெயர்த்துள்ள கணேஷ்ராம் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதிகம் உறுத்தாத வகையிலும், வாசிப்போட்டம் தடைபடாமலும் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்துள்ள நூல்வனம் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

(சுழலும் சக்கரங்கள்- நூல்வனம் வெளியீடு ,ரூ.180/- ப்க்:144)

Series Navigationயாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்வைரஸ்