மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

manushi1985 – ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர்

ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ‘ குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் ‘ [ 2013 ] இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘ முத்தங்களின் கடவுள் ‘ இரண்டாவது

தொகுப்பு.

இவரது சில கவிதைகள் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளன. எளிமை , சுய சிந்தனை வழிப்புதுப் படிமங்கள் , புனைவு , காதல் , வாழ்க்கை பற்றிய துயரங்கள் என விரிகின்றன.

 

mutham

‘ உன் பாதச் சுவடுகளில்… ‘ — ஓர் எளிய , இனிய காதல் கவிதை !

நீ நடந்து சென்ற பாதையில்

பின் தொடர்ந்து வருகிறேன்

உன் நிழலென

திரும்பிப்பார் எப்பொழுதாவது

என் கண்ணீர் உறைந்திருக்கும்

உன் பாதச் சுவடுகளில்

—– இதில் நீண்ட நாள் வெளிப்படுத்தாத காதல் பதிவாகியுள்ளது.

‘ விட்டு விலகுதல் .. ‘ கவிதையும் காதலைப் பேசுகிறது.

என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்

ஓர் இறகைப் போல

உன்னை விட்டு விலகிப் போகிறேன்

ஓர் உயிரைப் போல

‘ துரோகிகளை எதிர்கொள்ளல் ‘ — மனுஷ்ய புத்திரன் மொழிநடைத் தாக்கம் கொண்டது.

துரோகிகளை எதிர்கொள்வது

சற்று சிரமமானது

அவர்கள் துரோகிகளாக ஆனபின்பும்

சிறு புன்னகையோடு கடந்து போகிறார்கள்

— என்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஒரு நீண்ட வாக்கியம் அமைகிறது.

மாலை நேரத்தில்

ஏதேனும் ஒரு தேநீர்க் கடையிலோ

மதிய வேளையில்

ஏதேனும் ஓர் உணவகத்திலோ

நம்முன் அமரும்பொழுது

அன்றைய நாளின் நிகழ்வுகளை

அல்லது

அடுத்த நாளின் நிகழவிருப்பவற்றை

மிக இயல்பாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்

துரோகத்தின் நிழல் சிறிதும் இன்றி

இதில் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டன. வாசகன் சிந்திக்க ஏதுமில்லை. பிறர் நடையின் தாக்கம்

பெறாத சுயநடை — தனித்தன்மை பெறும் என்பதை மனுஷி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

‘ சமாதானத்திற்கான முகாந்திரங்கள் — 1 ‘ என்ற கவிதையில் அழகான சொல்லாட்சி காணப்படுகிறது.

பிசிறு தட்டாத கருத்தோட்டம் !

என் மொழிக் கிடங்கில் கிடக்கும்

உன்னதமான சொற்கள் அனைத்தையும்

உன் முன்னால் சமர்ப்பித்துவிட்டேன்

பார்வையாளர்கள் அற்ற அரங்கமென

வெறுமை கவ்விக் கிடக்கிறது மனம்

நீ சமாதானம் கொள்ளவில்லை

—- என்று கவிதை தொடங்குகிறது. முதல் படிமமே அழகியல் சார்ந்து அழகூட்டுகிறது. அதில் காதல்

சார்ந்த தன்னை ஒப்படைத்தல் பளிச்சிடுகிறது. ‘ பார்வையாளர்கள் அற்ற அரங்கு ‘ என்ற உவமை

பொருள் பொதிந்தது.

நேசம் பொதிந்த அத்தனை வார்த்தைகளும்

உன் காலடியில் வீழ்ந்து

ஸ்தம்பித்து நிற்கின்றன

இரு கைகளையும் நீட்டித் தூக்கச் சொல்லும்

குழந்தையைப் போல

—– காதல் நிராகரிப்பை நயம்பட உரைக்கிறது முதல் மூன்று வரிகள். குழந்தை சார்ந்த உவமை

கருத்துக்கு வலிமையூட்டுகிறது.

என் சிறு சொல்லும் நுழைந்துவிடாதபடி

கதவை அடைத்து வைத்திருக்கிறாய்

— என்ற வரிகளிலும் படிமம் அமைந்துள்ளது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக

இதை நான் உணர்கிறேன்.

‘ பாம்புப் பிடாரி ‘ வித்தியாசமான அனுபவக் கவிதை ! ஒரு விடுதி அறையில் பாம்பு புகுந்துவிடுகிறது.

விரட்டினால் போகவில்லை. நாளடைவில் அப்பாம்பு அந்தப் பெண்ணுக்குச் செல்லப் பிராணி ஆகிவிடுகிறது. கதைத்தன்மை கொண்ட கவிதை யதார்த்தப் போக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச்

சொல்லும்படியான நயமேதும் இல்லை.

‘ பறவையாகிய அவள் ‘ — வித்தியாசமான புனைவுக் கவிதை. பேச்சு வழக்கில் சொல்லப்பட்டிருந்தால்

குழந்தைக்கு அம்மா சொன்ன கதை போல ஆகியிருக்கும்.

இரண்டொரு நாளாக

பறவையாக மாறிவிட்டிருந்தாள்

அவள்

—- எனக் கவிதை தொடங்குகிறது. பறவையான அவளை – அதை ஒரு மரம் பார்த்துக் கொண்டிருந்ததாம். பின் அந்த மரத்திலேயே அது வசிக்கத் தொடங்கிவிட்டது.

கட்டற்ற வெளியில்

பறந்து திரிந்ததை

மரத்திடம் பகிர்ந்து கொண்டாள்

எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டுத்

துளித்துக் கொண்டிருந்தது

மரம்…

—- என்று கவிதை முடிகிறது. கவிமனம் எப்படியெல்லாம் சிந்திக்கிறது !

‘ முதல் சந்திப்பு ‘ கவிதை காதலைப் பற்றிப் பேசுகிறது.

நாம் சந்தித்துக் கொள்ளும் முதல் நாள்

முதல் கணம் குறித்து

எனக்கொரு ஒத்திகை இருந்தது

—– என்பது நுணுக்கமான பதிவு ! யதார்த்தம் சுய அழகுடன் ஒளிர்கிறது. முதல் எப்படியெல்லாம்

நடை பெற வேண்டும் எனப் பட்டியல் இடப்படுகிறது.

யாருமற்ற கடற்கரை மணற்பரப்பிலெனில்

அதில் உன்னை முத்தத்திலிருந்தும்

குளிரூட்டப்பட்ட உணவகத்திலெனில்

புன்னகை பொங்க

சிறு கை குலுக்கலுடனும்

எனத் தொடங்குகிறது கவிதை. கனவு கண்டதுபோல் சந்திப்பு நடக்கவில்லை ; ஏமாற்றமே மிஞ்சுகிறது.

‘ மரணக் குழந்தை ‘ கற்பனைக் கவிதை !

அறைக்குள் வந்த மரணத்தை

ஒரு குழந்தையாக்கி அமர வைத்துவிட்டேன்

இக்கவிதையில் ஆங்காங்கே குழந்தைமை பதிவாகியுள்ளது. கற்பனை சற்றே தூக்கலாக இருக்கிறது.

‘ வெள்ளிக் கிழமையில் தற்கொலை செய்து கொண்டவள் ‘ — தீக்குளித்த ஒரு பெண்ணைப் பற்றிப்

பேசுகிறது.

‘ உன் அறைக்கு வரும்போது ‘ என்ற கவிதை காதலைப் பற்றிச் சில தகவல்களைச் சொல்கிறது. ஒருவனை நேசிக்கும் ஒருத்தியின் மன ஏக்கம் பல தகவல்களில் நிரம்பி வழிகிறது. அவள் நேசத்தை அவன்

ஏற்பதாகத் தெரியவில்லை.

இத்தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. சில சுமார் ரகம். பொதுப் பார்வையில் இவர்

கவிதைகளில் மன வலிகள் அடிக்கடி காணப்படுகின்றன. காலப்போக்கில் மேலும் பல நல்ல கவிதைகளை

இவர் தரவிருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

Series Navigationமயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல